மதுரையில், அமெரிக்கன் கல்லுாரி மாணவராக இருந்த சங்கரய்யா, விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். அவரின் நுாறாண்டு வாழ்க்கை, தனித்துவங்கள் நிறைந்த ஒன்று.
கல்லுாரி வாழ்க்கையிலேயே மாணவர் தலைவராக மிளிர்ந்தார் சங்கரய்யா. கல்லுாரி மாணவர்களிடம், நாட்டு விடுதலையை வலியுறுத்தி, ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களை அழைத்து பேச வைத்தார்.அதே ராஜாஜி, ஹிந்தி திணிக்க முற்பட்டபோது, அதற்கு எதிராக போராட்டக்களத்தில் முன் நின்றார்.இப்படியாக, நாட்டு விடுதலையிலும், சுயமரியாதைக் கொள்கைகளிலும் ஈடுபாட்டை வளர்த்துக் கொண்ட மாணவர் சங்கரய்யா, கம்யூனிச இயக்கத்தால் ஈர்க்கப்பட்டது, மிகவும் இயல்பான ஒன்று.
இதனால், விடுதலைப் போரிலும், மக்கள் நலன் காக்கும் போரிலும், காவல் துறையினரால் வேட்டையாடப்பட்டார்.அவரது வாழ்நாட்களில், எட்டு ஆண்டுகள் சிறையிலும், மூன்று ஆண்டுகள் தலைமறைவாகவும் வாழ நேர்ந்தது, அவர் முன்னெடுத்த மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த பரிசாக அமைந்தது.
கம்யூனிஸ்டாக மதுரையின், முதல் கம்யூனிஸ்ட் கிளை உறுப்பினராக அவரும் இடம் பெற்றார். சென்னை, கோல்கட்டா, கான்பூர், மும்பை என, நாலாப்புறமும் செயல்பட்ட குழுக்களை இணைத்து, முதல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், சங்கரய்யாவும் பங்கேற்றுள்ளார். இரண்டாவது மாநாட்டிலும் பங்கேற்றார்.
அடக்குமுறைக்கு எதிராக சைக்கிள் தான் அந்தக் காலத்தில் முக்கிய வாகனமாக இருந்தது. மாநிலம் முழுதும் சைக்கிள் மிதித்து பயணம் செய்தார் சங்கரய்யா. நாடு விடுதலைக்கு முன், மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்கள், விடுதலைக்கு ஒரு நாள் முன்பு தான் வெளியே வந்தனர். சிறை வாசலிலேயே சுதந்திரக் கொண்டாட்டம் நடைபெற்றது.
ஒரு சில நாட்கள் மதுரையில், மருதை என்ற சலவைத் தொழிலாளியின் வீட்டில், அழுக்கு துணி மூட்டைகளுக்குள் தங்கி செயல்பட்டார் சங்கரய்யா. இதனால், அவருக்கு தோல் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவரிடம் சிகிச்சை பெற்றால், போலீஸ் பிடித்து விடும் என்பதால், நீண்ட காலம் சிகிச்சையின்றி, நோயுடன் போராட வேண்டியிருந்தது. பின், அவருக்கு கட்சி ஏற்பாட்டில், சென்னையில் மருத்துவம் பார்க்கப்பட்டது.
சென்னையிலும் தலைமறைவாக, பல கூட்டங்களுக்கு சென்று வந்தார். கைக் குழந்தைக்கு உணவு வாங்குவதற்கு கூட, பொருளாதார உதவி இல்லாத காலமாக அது இருந்தது.
ஜாதி எதிர்ப்பு:
‘இளைஞர்களே காதல் திருமணம் செய்திடுங்கள்’ என்று, அழைப்பு விடுப்பார். தலித் மக்களுக்கு தனிச் சுடுகாடு வேண்டும் என்ற, பிரச்னை எழுந்தபோது, ‘பொதுச் சுடுகாடு கேட்க வேண்டும்’ என, வலியுறுத்தினார், சங்கரய்யா. ஜாதி மறுப்பு, மத வெறி எதிர்ப்பு ஆகிய கொள்கைகளில், எப்போதுமே உறுதியாக இருந்தார். அவரது சொந்த வாழ்க்கையிலும் ஜாதி மறுப்பு – மத மறுப்பு திருமணம் செய்து கொண்டார். அவரது குடும்பத்தில், ஏராளமான ஜாதி மறுப்பு திருமணங்களை செய்துள்ளனர்.
எழுத்தும் பேச்சும்:
என்னைப் போன்றவர்களை, கட்சி ஒழுங்கை சொல்லிக் கொடுத்து வளர்த்ததில், அவருக்கு மிகப்பெரும் பங்கு இருந்தது.’ஜனசக்தி’ இதழ் ஆசிரியர் குழுவில் செயல்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சி உருவான பின், ‘தீக்கதிர்’ இதழின் ஆசிரியராக செயல்பட்டார். சட்டசபையில் அவர் ஆற்றிய உரைகள், தமிழக உழைக்கும் மக்களின் கருத்தை பிரதிபலிப்பதாக அமைந்தன.
மூன்று முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 11 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். கட்சியின் சட்டசபை குழு தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
நினைவாற்றலும்,அக்கறையும்:
யாரைச் சந்தித்தாலும், அவர்கள் குறித்து அக்கறையுடன் விசாரிப்பார், சங்கரய்யா. உடல் நலம், குடும்பத் தேவை என, அனைத்து வகையிலும் இளம் தோழர்கள் குறித்து கவனத்துடன் விசாரிப்பார்.கடந்த கால நிகழ்வுகளை காலக் குறிப்போடு பேசுவதில் சிரத்தை எடுத்து, பிறழாமல் செய்யக் கூடியவர். தோழர் சங்கரய்யாவின் நுாற்றாண்டு, கொள்கைப் பிடிப்பு மிக்க வாழ்க்கையின் நுாறாண்டுகள் ஆகும். கொண்டாடவும், பின்பற்றவும் உறுதியேற்போம்.