சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு

இந்த சூழலில் புதிய பட்டுப்பாதை திட்டம், அது பிறந்த கதை ஆகியவற்றை குறித்து விரிவாக காண்போம்.

பட்டுப்பாதை பிறந்தது எப்படி?

அமெரிக்காவின் பிரெளன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டமாரா சின் எழுதியிருக்கும் புத்தகம் “பட்டுப் பாதையின் கண்டுபிடிப்பு” எனப் பொருள்படும் ”தி இன்வெண்ஷன் ஆஃப் சில்க் ரோட்.”

பெய்ஜிங்கில் இருந்து 2000 கி.மீ.ல் உள்ள கோபி பாலைவனம்

காதல் கருத்துகளை போல் அற்புதமானது “பட்டுப் பாதை. ஆனால் வரலாற்று உண்மையுடன் மிகக் குறைந்த தொடர்பையே கொண்டுள்ளது,” என்று கூறும் டமாரா சின், முதலில் பட்டுப் பாதை என்பது ஒற்றைப் பாதை இல்லை என்கிறார்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது பட்டுப் பாதை. அமெரிக்கா, உலக மேலாதிக்க வர்த்தக சக்தியாக உருவெடுத்தபின், 1500ஆம் ஆண்டு வாக்கில், பட்டுப்பாதை பட்டுப்போனது.

சீனாவின் புதிய பட்டுப்பாதை வெறும் அபிலாஷை திட்டமா?

இருந்தாலும், அதன்பிறகு, ஜெர்மனி 1877- இல், ஃபெர்டினண்ட் வொன் ரிச்தோஃபென் என்ற புவியியலாளரை சீனாவுக்கு அனுப்பியது.

சீனாவில் இருக்கும் நிலக்கரி இருப்பு மற்றும் அதை ஐரோப்பாவிற்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதுதான் அவருக்கு பணிக்கப்பட்ட வேலை.

புதிய பட்டுப் பாதை திட்டம்

சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு கண்டங்களை இணைக்கும் ரயில்பாதை என்ற கருத்தின் அடிப்படையில் பெர்டின்ண்ட் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

அதில், சீடென்ஸ்ட்ராப், பட்டுப் பாதை (Seidenstraße, the Silk Road) என்ற வார்த்தைப் பிரயோகத்தை அவர் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.

ஆனால், அவர் கூறிய கருத்துக்கள் அந்த சமயத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. 1920-களில் அவரது மாணவர்களின் ஒருவர் இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார்.

ஸ்வென் ஹெடின், ஸ்வீடன் ஆராய்ச்சியாளர். இவர் பிரபலமானவர். ஜெர்மன் மற்றும் சீன அரசுகளுடன் இணைந்து பணிபுரிந்த இவர் ஒரு விமானி. சீனாவிற்கான விமானப் பாதை ஒன்றையும், சாலை வழி ஒன்றையும் ஸ்வென் ஹெடின் திட்டமிட்டார். ‘பட்டுப் பாதை’ என்று இந்த புதிய வழித்தடங்களை சந்தைப்படுத்தினார்.

ஐரோப்பாவுக்கு மாற்று

சீனாவில், பட்டுச்சாலை என்ற பதத்தை சில கல்வி சஞ்சிகைகள் அவ்வப்போது பயன்படுத்தி வந்தன.

அதன்பிறகு, 1950களில், தங்களுடைய அண்டை நாட்டினர் உடனான உரையாடல்களில் சீனர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

மேற்கத்திய சக்திகளுக்கு மாற்றாக பயன்படுத்த பட்டுப் பாதைத் திட்டம் சீனாவுக்கு உதவியது.

தற்போதும் அதே எண்ணம் மீண்டும் வெளிப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சர்வதேச அளவிலான ஒரு கூட்டத்தில் உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங், பட்டுப் பாதை திட்டம் பற்றி சீனா மற்றும் உலக வங்கி அதிகாரிகள் ஆலோசித்து வருவதை கோடிட்டுக் காட்டினார்.

பட்டுப் பாதை என்பது இனிமேல் ஒரு முத்திரைச் சொல்லாக மட்டுமே இல்லாமல், சீனாவின் மையக் கொள்கையாகவும், முன்னணிக் கொள்கையாகவும் இருக்கும்.

சீனாவின் ஆசியக் கனவு

அடுத்த நிபுணத்துவம் கொண்ட சாட்சியாக நாம் எடுத்துக் கொள்ளும் புத்தகம் ‘சீனாவின் ஆசியக் கனவு’ (China’s Asian Dream). ஆசியா முழுவதும் பயணம் செய்திருக்கும் கஜகஸ்தானின் அல்மட்டியின் மாணவரான டாம் மில்லெர் எழுதிய புத்தகம் அது.

பட்டுப் பாதையில் சீனப் படைவீரர்கள் அணிவகுத்து நடப்பதை யாரும் பார்ப்பது சாத்தியமற்றது என்று டாம் மில்லெர் கூறுகிறார்.

1254 – 1324 இடையே பட்டுப்பாதை வழியாக மார்க்கோ போலோ சீனாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் பாதையின் வரைபடம்

அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இந்தப் பட்டுப் பாதை திட்டம் செயல்படுத்துவதாக சீனா சொல்கிறது. ஆனால் இதுபற்றி டாம் மில்லெர் உறுதி கூறவில்லை. அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி, மற்ற நாடுகளுக்கு சீனா பணம் கொடுக்கும்போது, அதை வட்டியும் முதலுமாக எடுக்கத்தானே பார்க்கும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

சீனாவின் தென்பகுதியில் இருக்கும் மலைப்பிராந்திய நாடான லாவோஸில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் கூட, அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பங்களிப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

லாவோஸ் நாட்டு அரசுடன் இணைந்து, அந்த நாட்டின் ஊடாக செல்லும் ரயில் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஏழு பில்லியன் டாலர்கள் செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இது லாவோஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி. லாவோஸ் இதை எப்படி திருப்பச் செலுத்தும்?

மிக மிக மெதுவாக?

தனது இயற்கை வளங்களிலிருந்து மெதுவாக திருப்பச் செலுத்த தொடங்குவதே நடைமுறை வழக்கம். எனவே, இந்த ரயில் திட்டம், லாவோஸில் இருக்கும் விலை மதிப்புமிக்க இயற்கை வளங்களை சீனாவிற்கு கொண்டுச் செல்லும் ஒரு ‘கன்வேயர் பெல்ட்’ ஆக பயன்படும்.

இந்தக் கோணத்தில் ஆராயும் டாம் மில்லெர், சீனாவின் முதலீட்டால் பிற நாடுகள் உடனடி ஊக்கம் பெற்றாலும், நீண்டகால அடிப்படையில் அவை பாதிப்பை சந்திக்க நேரிடும் என்கிறார்.

அண்டை நாடுகளில் பெரிய அளவிலான முதலீடுகளை செய்யும் சீனா, துறைமுகங்கள், சாலைகள், ரயில்பாதைகள் மூலம் அவற்றை தன்னுடன் இணைத்துக்கொள்ளும்.

அடிப்படையில், பட்டவர்த்தனமான லஞ்சம் என்றே இதனைச் சொல்லலாம்.

பாகிஸ்தானுக்கு ஏன் உதவுகிறது?

சாலைகள், ரயில்பாதை, மின் தொகுப்பு, வேளாண் மேம்பாடு என்று பாகிஸ்தானுக்கு சீனா செய்யும் உதவிகளுக்கு பதிலாக, எல்லை தாண்டி வளர்ந்து வரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று சீனா விரும்புவதாக டாம் மில்லெர் கூறுகிறார்.

இமயமலையில், இந்தியா – சீனா இடையே உள்ள நாது லா கணவாய். முந்தைய பட்டுப்பாதையின் அங்கமாக விளங்கியது.

ஆசிய நாடுகள் முழுவதிலும் இதுபோன்ற ஒப்பந்தங்கள் ஏற்படும்.

கிர்கிஸ்தானோ, தஜகிஸ்தானோ, அங்கு மின் தொகுப்பு அமைப்பை நிறுவியிருப்பதே சீனா. அங்கு தனது கண்காணிப்பை பலப்படுத்த உதவியிருக்கிறது. அதேபோல் சீனாவின் உதவியைப் பெற்ற எந்தவொரு நாடாக இருந்தாலும், சீனாவுடன் நெருக்கமாக இருக்கமுடியாது என்று மறுக்கமுடியுமா?

அண்மை ஆண்டுகளில் கட்டமைப்புத் துறைக்காக சீன முதலீடுகளை பெற்ற கம்போடியாவை டாம் மில்லெர் சுட்டிக்காட்டுகிறார். தென்சீனக் கடலில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் குறித்து சீனாவை விமர்சிக்க முடியாமல் இருக்கும் கம்போடியாவுக்கு பிற நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றன.

இந்தியா எப்படிப் பார்க்கிறது?

சீனாவின் ஒப்பந்தங்களில் சில ஆசிய நாடுகளில் கையெழுத்திட்டால், பல நாடுகள் கையெழுத்திடவில்லை.

இதில் இருந்து விலகியிருக்கும் நாடுகள், குறிப்பாக இந்தியா, சீனாவின் இந்தத் திட்டத்தை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. ஆனால், ஆசியப் பிராந்தியத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அதிலும் குறிப்பாக, இந்தியப் பெருங்கடலை கட்டுப்படுத்தும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக பட்டுப் பாதைத் திட்டத்தை இந்தியா உட்பட பிற நாடுகள் பார்க்கின்றன.

இந்த நோக்கத்திலேயே, பாகிஸ்தான், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் சீனா முதலீடுகளை செய்கிறது. ஆனால் இந்தியர்கள் தற்போதும் இவற்றை, இந்தியாவை சுற்றிவளைக்கும் ராணுவத் தளங்களை கொண்ட ‘முத்துச்சரம்’ என்று கருதுகின்றனர்.

சீனாவுடன் பிராந்தியம் தொடர்பான மோதல்களை கொண்டுள்ள இந்தியா, அதன் உள்நோக்கங்கள் மீது அவநம்பிக்கைக் கொண்டுள்ளது.

புதிய பட்டுப் பாதையானது மாபெரும் பொருளாதார தொடரமைப்பாக மட்டும் இருக்காது, சீனாவை மையப்படுத்திய மிகப்பெரிய அரசியல் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை என்று டாம் மில்லெர் கூறுகிறார்.

டொனால்ட் டிரம்ப் கூறுவதுபோல் அதிபர் ஜின்பிங் சீனாவை மீண்டும் வலுவாக்க விரும்புகிறார். சரி மீண்டும் இத்தாலி ஒப்பந்தத்திற்கு வருவோம்.

ரோமில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்ன?

இத்தாலியின் சார்பாக அந்நாட்டின் துணை பிரதமர் லூஜி டே நியோ கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக புதிய பட்டுப் பாதை திட்டத்தில் முறையாக இத்தாலி இணைகிறது.

இத்தாலி துணை பிரதமர் லூஜி டே நியோ (வலது) உடன் சீன அதிபர் ஷி ஜின்பிங்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆற்றல், நிதி, விவாசாய உற்பத்தி ஆகியவை சீன சந்தையில் நுழையும்.

அதுபோல, சீன தொலைத்தொடர்பு மற்றும் கட்டுமான நிறுவனங்கள் இத்தாலி ட்ரீயஸ்ட் துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும். சீனா இத்தாலியின் ஜெனொ துறைமுகத்தை மேம்படுத்தும்.

சீனாவின் பொருளாதார உதவியை பெறும் முதல் ஜி7 நாடு இத்தாலி.

உலகின் பத்து பெரிய பொருளாதார நாடுகளில் இத்தாலியும் ஒன்று. ஆனால், அந்நாடு கடந்த ஆண்டு பொருளாதார சரிவை சந்தித்தது. அதிலிருந்து மீள போராடி வருகிறது.

சீன புதிய பட்டுப் பாதை திட்டத்தில் இணைவதில் இத்தாலி ஆளும் அரசுக்கு உள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.

இத்தாலியின் மற்றொரு துணை பிரதமர் மாட்டியோ சல்வினி இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.

மற்றொரு நாட்டின் வணிகத்திற்கான காலனி நாடாக இத்தாலி மாற தாம் விரும்பவில்லை என அவர் கூறி உள்ளார்.

தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீன அதிகளவில் கடன்களை வழங்கி அந்நாடுகளை மீள முடியாத சுமையில் சிக்க வைப்பதாக முன்பே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

ஆனால், அதனை சீனா மறுத்து வருகிறது.

பட்டுப் பாதையை சீனா புதுப்பிக்க விரும்புவதற்கான காரணமாகக் கூறப்படுவது என்ன?

• தடையற்ற பொருளாதாரம்

• அனைத்து நாடுகளும் பலனடையும்

• கூட்டாளி நாடுகளின் நலன்கள் ஊக்கமடைவதோடு, சீனாவும் நலம் பெறும்.

இருந்தபோதிலும், பொருளாதாரத்திற்கும் அப்பாற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த விரிவான அரசியல் செல்வாக்கு இதன் அடிப்படை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பட்டுப் பாதைத் திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடிய அளவுக்கு, சீனா கிழக்கத்திய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் மையக் கேந்திரமாக உயரும். அது சீனாவிற்கு மாபெரும் வெற்றியாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

(BBC)