அடுத்தக்கட்டத்தை நம்புவதற்கு பல நாடுகளும் விரும்பவில்லை. அந்தளவுக்கு மிகமோசமான அணுகுமுறைமையே சீனா கடைப்பிடித்துக்கொண்டிருக்கின்றது. மிக அண்மைய உதாரணமாக பங்களாதேஷில் கண்டுப்பிடிக்கப்பட்ட விடயங்களை அவதானிக்கலாம்.
பங்களாதேஷில் உள்ள சீன நிறுவனங்கள் கட்டுமானத் துறை மற்றும் போலி ஆவணங்களை அச்சிடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தடை செய்யப்பட்ட பொருட்களின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
முதலீடுகள் எனும் பெயரில் ஒரு நாட்டுக்குள் நுழைந்து முக்கிய வளங்களையெல்லாம் சுரண்டிக்கொண்டு, பெரும் வட்டி வீதத்தில் கடனை வழங்கி, தலைநிமிர முடியாமல் செய்யும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றது.
சீனாவில் வேலைத்திட்டங்கள், கண் மூடித்திறப்பதற்குள் மேலெழுந்து நிற்கும் எனினும், அதன் உறுதிப்பாட்டை நீண்ட ஆண்டுகளுக்கு உறுதிப்படுத்த முடியாது.
தடைசெய்யப்பட்ட பொருட்களை ஒரு சீன நிறுவனம் பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சிப்பதை பங்களாதேஷ் அதிகாரிகள் மே மாதத்தில் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த நிறுவனம் சோடா ஆஷ் லைட் என்ற லேபிளின் கீழ், டாக்காவிலுள்ள நிறுவனத்துக்கு மறைத்து அனுப்பிய 19 தொன் (788 பக்கெட்) சோடியம் சைக்லேமேட்டை அதிகாரிகள் மீட்டுள்ளனர். சோடியம் சைக்லேமேட் என்பது ஒரு வகை சீனி எனவும் இது சாதாரண சீனியை விட 30 முதல் 50 மடங்கு இனிமையானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ் அரசாங்கம் சோடியம் சைக்லேமேட்டை சட்டவிரோதமான மற்றும் தடைசெய்யப்பட்ட பொருளாக அறிவித்துள்ளதுடன், அததை ஏற்றுமதி/இறக்குமதி, உற்பத்தி அல்லது எந்த வடிவத்திலும் பயன்படுத்துவது நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இவ்வாறு சீனாவின் விளையாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால், பலநாடுகள் சீன நிறுவனங்களின் முதலீடுகளை கண்டு முகம் சுளிக்கின்றன.
இந்நிலையில், , சீனாவுடனான மோதலை அதிகரிக்க தனது கூட்டாளிகளை வாஷிங்டன் தயார்படுத்துவதாக அறியமுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் பதவியேற்ற பின்னர் வடகிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கு முதன்முறையாக மே 23, 2022 விஜயம் செய்திருந்தார். இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் ஆரம்ப நிகழ்விலும் அவர் பங்கேற்றிருந்தார்.
வடகிழக்கு ஆசியாவிற்கான தனது பயணத்தை நிறைவு செய்யும் முன்னர். தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் மற்றும் ஜப்பானிய பிரதம மந்திரி புமியோ கிஷிடாவுடன் உச்சிமாநாடுகளை நடத்தும் பைடெனின் குறிக்கோளாக இருந்திருக்கின்றது.
சியோல் மற்றும் டோக்கியோவில் அவரது சந்திப்புகள் பல சீன எதிர்ப்பு நிலைப்பாடுகளை பற்றி கலந்துரையாடி, அப்பிராந்தியத்தில் உள்ள பிராந்திய தகராறுகள் தொடர்பாக பெய்ஜிங்கை மூர்க்கத்தனமாக காட்டுவது மற்றும் தைவான் மீது பெய்ஜிங்கிற்கு சவால் விடுவது உட்பட பலவற்றை உள்ளடக்கியுள்ளது.
யூனுடனான பைடெனின் கூட்டறிக்கை சீனாவை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இலக்கு தெளிவாக இருந்தது. பைடென் மற்றும் கிஷிடா தம்மை கட்டுப்படுத்திக்கொள்ளாததுடன், கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் உள்ள பிராந்திய மோதல்கள் குறித்து பெய்ஜிங்கை விமர்சித்ததுடன் மற்றும் ஹாங் காங் இல் ‘மனித உரிமைகள்’ மீதான பாசாங்குத்தனமாக தமது கவலைகளை வெளிப்படுத்தினர்.
பைடெனின் பயணம் சியோலுக்கும் டோக்கியோவிற்கும் இடையே சிறந்த உறவுகளை மேம்படுத்த உதவும் என்று வாஷிங்டன் நம்புகிறது. இப்போது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சியோல் ஜப்பானிய எதிர்ப்பு உணர்வைப் பயன்படுத்தி மோசமடைந்து வரும் உள்நாட்டு நிலைமைகளிலிருந்து திசைதிருப்ப மற்றும் டோக்கியோவின் மறுஇராணுவமயமாக்கலும் கவலைகளை எழுப்புவதால் தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் கசப்பானதாக உள்ளது. யூனின் புதிய நிர்வாகம் டோக்கியோவுடன் உறவுகளை மேம்படுத்த உறுதியளித்துள்ளது.
சியோலில், பைடெனும் யூனும் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தனர். ‘இரு தலைவர்களும் ஒருங்கிணைந்த இராணுவ பயிற்சிகள் மற்றும் கொரிய தீபகற்பத்திலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமான பயிற்சிகளின் நோக்கம் மற்றும் அளவை விரிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல்களை தொடங்க ஒப்புக்கொள்கிறார்கள்.
‘ தென் கொரியாவிற்கு ‘அமெரிக்காவின் நீட்டித்த தடுப்புக்கான அர்ப்பணிப்பு’, ‘அணு, பாரம்பரிய மற்றும் ஏவுகணை பாதுகாப்பு திறன்கள் உட்பட முழு அளவிலான அமெரிக்க பாதுகாப்பு திறன்களைப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியது’ என்றும் பைடென் தெளிவுபடுத்தினார்.
மேலும், பைடென் மற்றும் யூன் விரிவாக்கப்பட்ட தடுப்பு மூலோபாயம் மற்றும் ஆலோசனைக் குழுவை ‘விரைவில்’ மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டனர். ஜனவரி 2018 முதல் சந்திக்காத குழு, அணு ஆயுதங்களின் பயன்பாடு உட்பட நீட்டிக்கப்பட்ட தடுப்பு என்று அழைக்கப்படும் மூலோபாய மற்றும் கொள்கை சிக்கல்களைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு மன்றமாகும். தென் கொரிய ஆளும் வட்டங்களுக்குள் உள்ள பழமைவாதிகள் அமெரிக்க அணு ஆயுதங்களை நாட்டிற்குத் திரும்பக்கொண்டுவரக் கோருகின்றனர்.
டோக்கியோவில் இருந்தபோது கிஷிடாவிடம் பைடென் இதேபோன்ற உறுதிமொழிகளை அளித்தார். இதில் ‘பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஜப்பானை பாதுகாப்பதற்கான அமெரிக்க அர்ப்பணிப்பு, அணுசக்தி உட்பட முழு அளவிலான தகமைகளை வழங்குவதாகும்’. மேலும், ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சி மார்ச் மாதம் அமெரிக்க அணு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய விவாதத்தைத் தொடங்கியது.
இந்த நடவடிக்கைகள் அடிக்கடி கூறப்படுவது போல் வறிய வட கொரியாவை இலக்காகக் கொண்டவை அல்ல, ஆனால் சீனாவை நோக்கியதாகும். வாஷிங்டன் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் அதன் பினாமிப் போரை தீவிரப்படுத்தினாலும், பெய்ஜிங்கை குறிவைக்கும் இராணுவ தயாரிப்புகள் தடையின்றி தொடர்கின்றன என்பதை அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்துகிறது.
உண்மையில், பைடென் மற்றும் யூன் ஆகியோர் பியாங்யாங்கைப் பற்றி தங்கள் வழக்கமான கண்டனங்களை தெரிவித்தாலும், வட கொரியாவில் பாரிய கோவிட்-19 வெடிப்பைச் சமாளிக்க அவர்கள் “மனிதாபிமான உதவியை” வழங்க முன்வருவதாக தெரிவித்தனர்.
வாஷிங்டன் சீனாவின் ஆதிக்கப்பாதையில் இருந்து வட கொரியாவை பொருளாதார உதவியின் வாக்குறுதிகளுடன் கவர்ந்திழுக்க நம்புகிறது. அதன் மூலம் பெய்ஜிங்குடன் போர் ஏற்பட்டால் பியோங்யாங்கை நடுநிலையாக்குகிறது அல்லது வடக்கை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பக்கம் கொண்டு வரலாம் எனக் கருதுகிறது. அந்த காரணத்திற்காக, வட கொரியாவை வலுப்படுத்தும் யூனின் ‘துணிச்சலான’ திட்டத்திற்கு பைடென் ஆதரவு தெரிவித்தார்.
மறுபுறம், தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று வாஷிங்டனில் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘ஒரே சீனா’ கொள்கையை சவால் செய்வதன் மூலம் டோக்கியோவிலும் சியோலிலும் தைவான் மீதான பதட்டங்களை அதிகரிக்க அமெரிக்கா முயன்றது.
ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, தைவான் மீது அமெரிக்கா இராணுவ ரீதியாக தலையிடுமா என பைடெனிடம் கேட்டதற்கு, அமெரிக்க ஜனாதிபதி, ‘ஆம். அதுதான் நாங்கள் செய்த அர்ப்பணிப்பு’ எனக் கூறினார்.
அமெரிக்க கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறி வெள்ளை மாளிகை இக்கருத்தை குறைத்துக்காட்ட முயன்றது. எவ்வாறாயினும், வாஷிங்டன், முதலில் ட்ரம்பின் கீழும், இப்போது பைடெனின் கீழும், எந்த ஆதாரமும் இல்லாமல் தைவான் மீது படையெடுப்பு நடத்த பெய்ஜிங் திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டுகையில்,
‘ஒரே சீனா’ என்ற கொள்கையில் இருந்து விலகிச் செல்ல விரும்புகிறது என்பது தெளிவாகிறது. ரஷ்யா தொடர்பாக வாஷிங்டன் உக்ரேனில் செய்ததைப் போலவே பெய்ஜிங்கை இராணுவ நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதே இதன் நோக்கமாகும்.
பைடெனின் கருத்துக்கு கூடுதலாக, ‘தைவான் நீரிணையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு’ அழைப்பு விடுத்து, யூன் மற்றும் கிஷிடாவுடனான கூட்டு அறிக்கைகளில் தைவான் பற்றிய குறிப்புகளைச் சேர்ப்பதை அமெரிக்க ஜனாதிபதி உறுதி செய்தார்.
இது ஒரு அப்பாவித்தனமான கருத்து அல்ல. ஆனால் அதன் ‘ஒரே சீனா’ என்ற கொள்கையையும் சீன அரசாங்கமாக பெய்ஜிங்கின் சட்டபூர்வமான தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் கணக்கிடப்பட்ட ஒன்றாகும்.
டோக்கியோ இராணுவமயமாக்கலை நியாயப்படுத்த வாஷிங்டனால் தூண்டப்பட்ட பதட்டங்களையும் பயன்படுத்தியுள்ளது. டோக்கியோ உச்சிமாநாட்டின் அறிக்கையில் பின்வருமாறு அறிவித்தது: ‘ஜப்பானின் பாதுகாப்பு திறன்களை அடிப்படையில் வலுப்படுத்துவது மற்றும் அதன் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தின் கணிசமான அதிகரிப்பை செய்வதற்கான தனது உறுதியை பிரதமர் கிஷிடா தெரிவித்தார். பிரதம மந்திரி கிஷிடாவின் உறுதியை ஜனாதிபதி பைடென் வலுவாக ஆதரித்தார்”.
டோக்கியோ தனது இராணுவச் செலவினங்களை ஏற்கெனவே உள்ள பாரியளவிலான தொகையை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் இராணுவ சக்தியை ‘கூட்டு தற்காப்பு’ என்ற பெயரில் வெளிநாடுகளில் சிறப்பாகத் திட்டமிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சாக்குப்போக்காகும். மீறப்படவேண்டும் எனக் கூறப்படும் அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவு ஜப்பான் தனது படைகளை வைத்திருப்பதையும் தனது ஏகாதிபத்திய நலன்களை மேம்படுத்துவதற்கு அதனை பயன்படுத்துவதை தடுக்கிறது.
விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்திய பைடெனின் பயணத்தின் பொருளாதார அம்சமும் வாஷிங்டனின் போர் தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும். தென் கொரியாவில் இருந்தபோது பைடென் ஒரு குறைக்கடத்தி (semiconductor) ஆலையில் சுற்றுப்பயணம் செய்கையில், பின்னர் வாஷிங்டன் ‘நமது பொருளாதாரம் மற்றும் நமது தேசிய பாதுகாப்பு, நமது மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளாத நாடுகளைச் சார்ந்திருக்காது’ என்பதை உறுதிப்படுத்தும் என்று அறிவித்தார். இது சீனாவைப் பற்றிய ஒரு தெளிவான குறிப்பாகும்.
இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு (Indo-Pacific Economic Framework – IPEF) மற்றோர் அங்கமாகும். ஜப்பான் மற்றும் தென் கொரியா உட்பட 13 நாடுகள் ஆரம்பத்தில் இந்த திட்டத்தில் பங்கேற்கும் என பைடென் கூறினார்.
IPEF என்பது பிராந்தியத்தில் பெய்ஜிங்கின் பொருளாதார செல்வாக்கை கட்டுப்படுத்தவும், சீனப் பொருளாதாரத்தின் மீது தங்கியிருப்பதை குறைக்கவும், ஒட்டுமொத்த போர் உந்துதலுக்கும் வசதியாக்குகின்றது. எவ்வாறாயினும், காங்கிரஸில் இருந்துவரும் எதிர்ப்பு ஏற்படாத வகையில், நிர்வாக உத்தரவுகளின் மூலம் பைடென் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயல்கையில், அமெரிக்க சந்தைகளுக்கான அணுகலை வழங்க முடியாத எந்தவொரு ஒப்பந்தமும் அதில் இணைந்துகொள்வதற்கு ஆர்வம் குறைந்ததாகவே இருக்கும்.
ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய சீனாவை இலக்காகக் கொண்ட அமெரிக்கா தலைமையிலான அரை-இராணுவ கூட்டணியான நாற்கர (Quad) பாதுகாப்பு கலந்துரைடலின் உச்சிமாநாட்டுடன் பைடென் தனது பயணத்தை முடித்துக்கொள்வார்.
பைடெனின் ஆசியப் பயணத்தின் நோக்கம், சீனாவிற்கு எதிரான இராணுவக் கூட்டணிகளை ஒருங்கிணைத்து, உக்ரேனில் அமெரிக்க/நேட்டோ பினாமி போரானது ஆசியாவில் அதன் போருக்கான தயாரிப்புகளில் இருந்து திசைதிருப்பவில்லை என்பதை அதன் நட்பு நாடுகளுக்கு உறுதியளிப்பதாகும்.
இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நடவடிக்கைகள் குறித்து தகவல் வழங்கும் பொது மக்களுக்கு 15,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் சன்மானங்களை சீனா வழங்குகிறது.
அரசுக்கு தெரியாத மற்றும் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும் செயல்களுக்கான தெளிவான இலக்கு அல்லது சரிபார்க்கக்கூடிய தகவல்களை வழங்கும் எவரும், புலனாய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டவுடன் சன்மானத்தைப் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு எதிர்ப்பு சட்டங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் செயல்களை உள்ளடக்கிய போதும், குற்றவாளிகளுக்கான தண்டனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தகவல் தருபவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், தேசிய பாதுகாப்புப் பொலிஸாரிடம் இருந்து பழிவாங்கும் அல்லது சாட்சியங்களை மறைக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், தகவலாளிகளின் பணியிடம் அல்லது ஸ்தாபனம் தண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அபராதம் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
சீனாவுக்கு எதிரான கூட்டணிகளை வலுப்படுத்துகின்றன நிலையில், மறுபுறத்தில் தனது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை சீனா முன்னெடுத்துவருகின்றது. உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை காண்பிக்க முயற்சிக்கும் சீனாவுக்கு எதிரான கூட்டணிகள் வலுவடைகின்றன.
(Tamil Mirror)