தற்போது உலகின் முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கின்றது ரஷ்யா, உக்ரேன், அமெரிக்கா விடயம். சோவியத்தின் உடைவின் பின்னர் உருவான 15 நாடுகளில் மிகப் பெரிய நாடாக ரஷ்யாவும் அதற்கு அடுத்த நிலையில் உக்ரேனும் உள்ளன. நிலப் பரப்பால் அதிகளவில் இணைக்கப்பட்ட நாடுகளாவும் இவை இருக்கின்றன.
இரு நாடுகளின் எல்லையானது 2295 கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது. இதில் 1974 கிலோமீற்றர்கள் தரை இணைப்பையும், 321 கிலோமீற்றர்கள் நீர் இணைப்பையும் தமக்கிடையே கொண்டுள்ளன.
முன்னாள் சோவியத்தின் ஒன்றிய நாடுகள் ரஷ்யா, உக்ரேன் இடையே, 2014 ம் ஆண்டு உக்ரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு அமெரிக்காவின் சித்து விளையாட்டினால் கவிழ்க்கப்பட்டு தனக்கு சார்பான ஆட்சியொன்றை அமெரிக்கா உருவாக்கியதில் இருந்து வீறு கொண்டதன் தொடர்சிதான் தற்போதைய இந்தப் பிரச்சனை.
தனது நாட்டின் எல்லையில் அமைந்த உக்ரேனில் அந்திலாந்து சமுத்திரத்தின் கரையோரத்தில் இருக்கும் அமெரிக்காவின் செயற்பாட்டிற்கும் அதற்கு ஒத்துழைப்பாக செயற்பட்டு உருவான அமெரிகாவின் உக்ரேன் பொம்மை அரசிற்கும் பதிலடியாக…. எச்சரிக்கை… செய்வதாக உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்து கிறீமியாவை அந்த மக்களின் விருப்பு வாக்கு அடிப்படையில் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது ரஷ்யா அன்று.
‘செத்தான் சிங்கன்’ என்று ஒரு சொல்லாடல் எமது பேச்சு வழக்கில் தாயகத்தில் உண்டு. இதனைப் பாவிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள்….?
ஒரு மன்னர் காலம் பற்றிய நாடகம் ஒன்றில் இயல்பில் வலிமையான நடிகன் ஒருவன் எதிரி அரசனாக… தோற்றுப் போகின்ற அரசனாகவும், இயல்பில் வலிமை குறைந்த நடிகன் ஒருவன் அரசன் வேடத்தில் நடிந்தார்கள்.
நாடகத்தில்…. போரில் நேரடிச் சண்டையில் எதிரி அரசனை நாட்டின் அரசன் வெல்வது போன்றும் காட்சி இருந்தது. அந்த காலத்தில் கிராமங்களில் நடைபெறும் நாடகங்களில் அந்த கிராமத்தவர்களே அதிகம் வேஷம் கட்டி நடிப்பார்கள். அதனால் நடிகர்களின் முழமையான வீரதாப விடயங்களை அறிந்தும் இருப்பர்.
அந்தப் போர் காட்சியில் சண்டையின் இறுதியில் அரசன் வெல்வது போலவும் எதிர் அரசன் நிலத்தில் வீழ்ந்து இருக்கும் போது அவரின் நெஞ்சின் மீது அரசன் காலை வைத்து வெற்றி முரசு கொட்டுவது போன்ற காட்சி அமைந்திருந்தது…
நாடகத்தில் ஒன்றி ஊறித் திளைத்து போயிருந்த மக்கள் தமது உள்ளுர் கலைஞரை உச்சாகப்படுத்த நிலத்தில் வீழந்தவனை நோக்கி ‘செத்தான் சிங்கன்” என்று சொல்லி ஆர்பரிப்பார்கள்.
நிலத்தில் வீழ்ந்தவனின் பெயர் சிங்கன். இதில் உண்மையில் ‘ரோசம்’ வந்த சிங்கன் நிலத்தில் இருந்து எழுந்து நாடக மேடை என்றும் பார்க்காமல் வென்ற அரசனை நடிகனை உண்மையாக துவசம் செய்த சம்பவம் நடைபெற்றதாக பேசிக் கொள்வர்.
இது அன்றைய காலகட்டத்தில் பல கிராமத்து பட்டி தொட்டியெல்லாம் இச் செய்தி பரவி ‘செத்தான் சிங்கன்’ என்பது நிலத்தில் வீழந்தவன் ஒருவன் மீண்டெழுந்து தன்னை வீழ்த்தியவனை துவசம் செய்வது போன்ற உவமையிற்காக பேச்சு வழக்கில் பாவிக்கப்படுவதுண்டு இன்றுவரை.
தற்போது ரஷ்யாற்கு எதிராக நேட்டோ(NATO) நாடுகள்….. அதுதான் அந்த தலைப்பிற்குள் ஒளித்திருக்கும் அமெரிக்காவை நினைக்கும் போது இந்த கதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. இங்கு ‘செத்தான் சிங்கன்’ என்று அமெரிக்கா 1990 களில் சோவியத்தின் உடைவினால் உருவான ரஷ்யாவைப் பற்றி ஆர்ப்பரித்த நிலையில் இன்று வீறெழுந்து அமெரிக்காவை துவசம் செய்யக் காத்திருக்கும் சிங்கனாக ரஷ்யா உருவெடுத்திருக்கின்றது.
இதற்கு சற்று நாம் வரலாற்றை திரும்பி பார்த்தாக வேண்டும்.
சோவியத் ஒன்றியம் 1922 முதல் 1991 வரை 15 சோசலிச குடியரசுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டாட்சி சோசலிச அரசாக இருந்தது. சோவியத் யூனியன்(USSR) 1917 ரஷ்யப் புரட்சியில் உருவானது.
அப்போது தீவிர இடதுசாரி புரட்சியாளர்கள், போல்ஷிவிக்குகள் லெனின் தலமையில் மன்னர் ஜார் நிக்கோலஸ் ஐ மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான ரோமானோவ் முடியாட்சி மற்றும் உள்நாட்டுப் போரை வெற்றி கொண்டனர். மக்கள் அரசையும் நிறுவினர்.
1922 இல், ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் மற்றும் டிரான்ஸ்காக்காசியா (இன்றைய ஆர்மீனியா, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா) இடையே ஒரு ஒப்பந்தம் சோவியத் ஒன்றியத்தை(USSR) உருவாக்கியது, இது முறையாக சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம்(USSR) என்று அழைக்கப்பட்டது. தொடர்ந்த காலங்களில் மேலும் சில அயல் மாநிலங்கள் இணைக்கப்பட்டன.
இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரத்தை பெற்ற போது பல்வேறு மாநிலங்களை முடிக்குரிய ஆட்சிப் பகுதிகளை இணைத்து இந்தியா என் ஒன்றிய அரசை கூட்டாட்சி அடிப்படையில் உருவாக்கியது போலவே. சுதந்திரத்திற்கு பின்னர் வேறு சில கோவா போன்ற மாநிலங்கள் இணைக்கப்பட்டதும் போலவே.
இந்தியா ஜனநாயக அடிப்படையிலான ஒன்றிய அரசாக தன்னைப் பிரகடனப்படுத்தி பயணப்படுகின்றது. மாறாக சோவியத் யூனியன் சோசலிச குடியரசுகளின் ஒன்றியமாக தன்னை தகவமைத்துக் கொண்டது. இங்கும் பிரிதலும் இணைத்தலுமாகத்தான் நாடுகள் பலவும் உருவானது.
இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஹிட்லரை தோற்கடிக்க ஐக்கிய முன்னணி அமைத்து செயற்பட்டு போரை முடிவிற்குள் கொண்டுவந்தனர். இரண்டாம் உலககப் பிறகு, சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடையத் தொடங்கின. சோவியத் ஒன்றியம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச அரசாங்கங்களை நிறுவியது.
மேலும் உலகின் ஆசிய, மத்திய, தென் அமெரிக்க நாடுகளிலும் சோவியத்தின் ஆதரவுகளுடன் சோசலிச புரட்சியும் தொடர்ந்த அரசுகளும் ஏற்பட்டன. இதற்கான தார்மிகு ஆதரவுகளை சோவியத் வழங்கியும் வந்தது. இது அமெரிக்க தலமையிலான மேற்கத்திய நாடுகளுக்கு உலகம் முழுவதும் கம்யூனிசம் பரவிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது இந்நிலையில்….
(கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது தொடரும்….)