சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 6)

அது

இந்தப் போர் உக்ரெய்னுக்கு ஆகாது

ரஷ்யாவுக்கும் கூடாது

ஆனால், அமெரிக்காவுக்குத்

தேவையாக இருக்கிறது என்று கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்றன…

ரஷ்யா, உக்ரெய்ன் கம்யூனிஸ்ட் கட்சிகள்

இந்நிலையில்

ஐரோப்பிய யூனியன் பார்லிமெண்ட் கூட்டம் நடைபெற்றது….

உக்ரேனின் மறைவான இடம் ஒன்றில் இருந்து காணொளியில் பேசுகிறார் உக்ரெய்ன் செலென்ஸ்கி. அது நேரடியாக கூட்டத்தில் ஒளிபரப்பப்படுகின்றது மெய்நிகர் நிகழ்வு போல்

கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள்.

“போரில் பின்வாங்கமாட்டேன்” என்று செலென்ஸ்கி சொன்னவுடன்

ஒரு உறுப்பினர் பாக்கி இல்லாமல் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்….. தொடர்ந்தார் போல்

எல்லோரும் ரஷ்யாவை பின்வாங்கச் சொன்னவர்கள்…

எல்லோரும் ரஷ்யாவுக்குத் தடை போட்டவர்கள்

‘பேச்சுவார்த்தைக்குப் போ” என்று உக்ரெய்னிடம் சொல்லாமல்

‘ஏன் குடிமக்கள் கையில் ஆயுதம் கொடுக்கிறாய்..? அவர்களைக் கேடயமாக்குகிறாய்..? என்று செலென்ஸ்கியிடம் கேட்காதவர்களாக போரை ஊக்கிவிக்கும் ஊக்கிகளாக செயற்படுகின்றனர்.

உலகத்தின் பொலிஸ்காரனாக செயற்படும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளின் வளங்களை சுரண்டுதல் என்ற அடிப்படையிலான செயற்பாடுகளை கேள்வி கேட்க ஆளில்லாத உலகில் வாழ வேண்டும் என்பதன் விரிவாக்கமாக நேட்டோவின் விரிவாக்கம் சென்று கொண்டிருக்கின்றது.

தற்போதைய ரஷ்யா ஒன்றும் சோசலிச அரசை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. மாறாக தனது முதலாளித்துவ செயற்பாடுகளின் ஊடு தனக்கு போட்டியாக இருக்கும் அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் கேள்வி கேட்கும் எதிர் நிலையில் ஆனால் ஓரே வர்க்க செயற்பாட்டில்தான் பயணித்துக் கொண்டு இருக்கின்றது. அதன் தலைவர்தான் புட்டின்.

1990 களில் சோவியத்தின் உடைவுகளுக்கு பின்பு பத்திரிகையாளர் Hindu ராம் புட்டினை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்ட போது தான் ஒரு பழமைவாதி என்று புட்டின் சொன்னதை ராம் அவர்களே ஒரு தொலைக் காட்சி விவாதத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார்.

ராம் இன் உறுதி செய்தல்களுக்கு அப்பால் இன்றைய ரஷ்யாவும் அதன் ஆட்சித் தலைவரும் ஒன்றும் இடதுசாரிச் செயற்பாட்டாளர் அல்ல.

நான் இங்கு பேச விளைவது ரஷ்ய மக்களையும் உக்ரேன் மக்களையும் இந்த மக்களை மோத வைத்து அதில் தமது அதிகாரங்களை நிலை நிறுத்த ரஷ்யாவின் கொல்லையில் தனக்கான இராணுவத் தளங்களை அமைக்க முனைந்த ஆத்திரம் ஊட்டும் செயற்பாடுகளை. இதில் உள்ள நியாயங்களை தவறுகளை.

அந்த வகையில் போர் நிறுத்தப்பட வேண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் அதன் அடிப்படையில் அச்சுறுத்தல் அற்ற சுயாதிபத்திய உக்ரேனும் ரஷ்யாவும் ஏன் உலக நாடுகளும் உருவாக வேண்டும்.

மாறாக மாறி மாறி போர் முழக்கங்களும், ஆயுத விநியோகங்களும், தடைகளும் யார் பெரியவன் மேற்குலகின் ராசாவாகிய நீயா அல்லது ஐரோப்பாவின் ராசாவான நானா என்பது போன்ற செயற்பாடுகள் முழு உலகிற்கும் நல்லது அல்ல.

பெரும் தொற்றினால் உலகப் பொருளாதாரம் பாரிய அளவில் அடிவாங்கி அதன் தாக்கம் வளர்ந்து வரும் நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் அதிக வறுமைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

தற்போதைய போர் சூழல் தடைகள் ஆயுத விநியோகங்கள் இதனை மேலும் பொருளாதார அடிகளை இதே நாடுகளுக்கு அதிகம் ஏற்படுத்தியிருக்கின்றது.

எரிபொருளின் விலை உயர்வு உலகின் எல்லா நாடுகளையும் பாதிப்படையச் செய்திருக்கின்றது. கூடவே பொருட்களின் உற்பத்தி பாரிய சரிவை சந்திக்கின்றது தடையற்ற பண்ட மாற்றம் வர்த்தகம் பாதாளத்திற்கு சென்று கொண்டு இருக்கின்றது.

ஆனால் ஆயுத வியாபாரங்கள் மட்டும் ஓகோ என்று ஓடிக்கொண்டிருக்கின்றது.

இதன் பின்பு யுத்தம் நிறுதப்பட்டதும் கட்டுமானம் என்று இதே ஆயுத வியாபாரிகள் கட்டுமானம் என்றும் பொருள் ஈட்டும் வியாபாரத்தில் ஈடுபடப் போகின்றனர்.

நமக்கு தற்போது தேவை வலுவான அணி சேர நாடுகளின் அமைப்பும் அதற்கான வலுவான தலைவர்களும். ஒரு காலத்தில் வலுவான நிலையில் இருந்த இந்த அணி சேரா அமைப்பும் அதன் தலைவர்களும் இன்று இல்லாமல் போய்விட்டது.

சுரண்டல் அற்ற சமூக அமைப்பை உருவாக்குவதில் மிகச் சிலருக்கு உடன்பாடு இல்லை. அதனை கம்யூனிசம் என்று பூச்சாண்டி காட்டி மக்களிடம் தப்பு அபிப்பிராயங்களை ஏற்படுத்தி அந்த சமதர்ம கொள்கையை தனி உடமை கொள்கையின் பால் கொண்டு சென்று சுயநலம் மிக்க மனிதர்களை சமூகங்களை உருவாக்குவதில் கவனத்தை செலுத்துகின்றனர்.

இதன் மூலம் உலகத்தின் அதிக வளங்கள் வருமானங்கள் இலாபங்கள் ஒரு சிலரிடம் மட்டும் குவிந்து கிடக்கக் கூடிய ஒரு சமூக அமைப்பை பேணுவதில் உள்ள வல்லாதிக போட்டியில் உலகம் அதிகம் அமிழ்தப்பட்டுவிட்டது.

இதிலிருந்து உலக மக்கள் வெளியேறி எல்லோருக்கும் வாழ்வு என்ற வாழ்க்கை முறையை உருவாக்க போராட வேண்டும்.

மாறாக உன்னை இல்லாமல் செய்து நான் மட்டும் வாழ்வதற்கான போராட்டங்களை மக்கள் வெறுக்க வேண்டும். இதனை பேசும் தலைவர்களை எந்த வகையிலும் எமது தலைவர்களாக தெரிவு செய்யக் கூடாது இதனை மக்களாகிய நாம் தான் செய்ய வேண்டும்.

போர் மற்றை எல்லாக் காலங்களையும் விட இதற்கான தேவைகளை அழிவுகள் மரணங்கள் அவலங்கள் என் பாடங்களில் இருந்து எமக்கு வேகமாக பாடங்களை கற்பிக்கின்றது.

மனித குலம் இதனைப் புரிந்து கொண்டு இதன் அடிப்படையிலான யுத்தமற்ற உலகை அமைக்க போர் அற்ற சமாதானமான சக வாழ்வை நிறுவ பாடுபட வேண்டும்…. போராட வேண்டும்…

அதனையும் மீறித் யுத்தம் தொடர்ந்தால்…

(கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது தொடரும்….