கோவாவுக்கு விடுதலை கிடைத்ததில் நேருவால்தான் தாமதம் ஏற்பட்டது என்கிற புதிய தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளை சிலர் வெளியிடுவதை நாம் பார்க்கமுடிகிறது.
உண்மை அதுதானா? அவர் அறவழியில் நடக்க முற்பட்டது தவறா? கொஞ்சம் பின்னோக்கி விடைதேடுவோம்.
இந்திய விடுதலைக்குப் பிற்பாடும், வெள்ளையன் நம்மைவிட்டு வெளியேறியபிறகும், போர்த்துகீசுயர்கள் நம்மைவிட்டு வெளியேறவில்லை. நம் மேற்குக் கரையோரத்திலிருந்த கோவா, தாத்ரா, நகர் ஹவேலி, தமன் மற்றும் தியூ , இந்த ஐந்து பிரதேசங்களும் போர்த்துகீசிய இந்தியா என்றே போர்ச்சுகலின் ஆதிக்கத்தில் தொடர்ந்தன. இந்திய ஒன்றியத்தின் பகுதிகளாக மாறவில்லை.
‘கிழக்கின் ரோம்’ என்று கோவாவைக் கொண்டாடிய போர்ச்சுகல் இந்தப் பகுதிகளை விட்டு வெளியேறத் தயாராக இல்லை.
‘போர்ச்சுகலே! கோவாவைவிட்டு வெளியேறு!’ என்ற முழக்கம் எழும்பிவிட்டது. 1949 இல், கோவன் மக்கள் கட்சியும், கோவா தேசிய காங்கிரசும் போர்ச்சுகல் ஆட்சிக்கு முடிவுகட்ட குரலுயர்த்தின.
பிரதமர் நேரு ஒருபோதும் உணர்ச்சிவசப்பட்டு சண்டைக்கோழியாக சிலிர்த்தவரில்லை. அதுவும் பிரதமராகப் பொறுப்பேற்றபிறகு, அண்டைநாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதில் மிக கவனமாக இருந்தார். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு சர்வாதிகாரிபோல ராணுவத்தைக் கட்டவிழ்த்துவிடும் தலைவர் அல்ல நேரு. மட்டுமல்லாமல், சுதந்தரம் பெற்று குறுகிய காலமே ஆகியிருந்த நிலையில், நாடு இருந்த பொருளாதார நிலைமை, நமது ராணுவத்தின் வலிமை இவற்றைக் கணக்கில்கொண்டும் அவர் அடிகளை முன்வைக்கவேண்டியிருந்தது. தேசப்பற்றை மலினமாகப் பயன்படுத்தி அரசியல் செய்ய அவர் ஒருபோதும் தயாராக இருக்கவில்லை.
போர்ச்சுகலுடனும் அவர் தொடக்கத்தில் மென்மையான போக்கைத்தான் கடைப்பிடித்தார்.
அதன் முதல்கட்டமாக – போர்ச்சுகலுக்கு எதிராக இந்தியாவில் முழக்கங்கள் எழும்பிய தறுவாயில் – 1949இல் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இந்தியத் தூதரகத்தை நிறுவினார். அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார்.
16ஆம் நூற்றாண்டிலேயே இந்தப் பகுதிகளைக் கைப்பற்றி அதிகாரம் செலுத்தி, போர்ச்சுகல் நாடாளுமன்றத்திலும், ஏன் அமைச்சரவையிலும்கூட கோவாவிலிருந்து மக்கள் பிரதிநிதிகளை இடம் பெறச்செய்யுமளவுக்கு, இவை தங்கள் நாடுதான் என்று உறுதியுடனிருந்த போர்ச்சுகல் சர்வாதிகாரி அன்டோனியோ டி ஒலிவேரா சலசார்
(António de oliveira salazar) பேசவே ஒப்பவில்லை. “பேச்சுவார்த்தையா? கோவா கீவா எல்லாம் எங்க ஊருய்யா! மூச்சு விடப்படாது!” என்றார்.
1951இல் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து, இந்தியாவில் இருப்பவையெல்லாம் தங்களின் அங்கமான மாநிலங்கள் என்று மாற்றி அதிரடி செய்தது போர்ச்சுகல்.
பொறுத்துப் பார்த்துவிட்டு, லிஸ்பனிலிருந்து தூதரகத்தை காலி செய்தது இந்தியா. அத்தோடு, போர்ச்சுகலிலிருந்து இங்கு வருவதற்கான விஸா கட்டுப்பாடுகளையும் இறுக்கியது.
வேறு வழியில்லை. முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு பேச வரமாட்டேனென்கிறான், அத்துமீறுகிறான்!
இதற்கிடையில், கோவாவின் சுதந்திரத்திற்காக கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளால் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. சமாதான வழியில் போராட கோவாவிற்குள் நுழைந்த சத்யாகிரகிகளை போர்ச்சுகல் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இருபது இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
கடுப்பான நேரு, போர்ச்சுகல் தூதரக உறவை அறவே முறித்து, கோவாவிலிருந்த இந்தியத் தூதரகத்தை இழுத்துமூடிவிட்டு, பொருளாதார, பயணத் தடைகளை உடனே அறிவித்தார்.
ஆனால் கோவாவின் மக்கள் இயக்கங்களும், உலக பொதுக் கருத்தின் அழுத்தமும் கோவா அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் என்று மேலும் பொறுமை காத்தார்.
விஷயம் சர்வதேசப் பஞ்சாயத்துக்கு வந்தது. சோவியத் ரஷ்யாவும், சீனாவும் இந்தியாவை ஆதரிப்பதாக அறிவித்தன. பிரிட்டனும் நேட்டோ நாடுகளும் போர்ச்சுகலுக்கு ஆதரவுக்கரம் உயர்த்தின. அமெரிக்கா நடுநிலை என்று சொல்லி போர்ச்சுகலுக்கு மறைமுக ஆதரவளித்ததில் முகம் சிவந்துபோனார் நேரு.
போர்த்துகீசிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய அன்டோனியோ சலசார், “இந்தியாக்காரன் உள்ளே நுழைவதை தடுத்து வெளுத்த போர்ச்சுகல் ராணுவத்தின் தேசபக்தியை மெச்சுகிறேன்!” என்றார்.
அமைதி முயற்சிகளின் முறிவைத் தொடர்ந்து, சத்யாகிரகம் என்று யாரும் போர்ச்சுகீசிய பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று தடை விதித்தார் நேரு. நேரு போர் தொடுப்பார் என்று எதிர்பார்த்து….
நவம்பர் 1961 இல் கோவாவில் நான்காயிரம் போர்த்துக்கீசிய போர் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இரண்டு பீரங்கி பிரிவுகள் நிறுவப்பட்டன. நான்கு போர் கப்பல்கள் கோவாவின் கடற்கரையில் ரோந்து சென்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளும் எல்லைக் காவலர்களும் கண்காணித்துக்கொண்டேயிருந்தனர். ஐந்து வணிகக் கப்பல்களும் இரண்டு போக்குவரத்து விமானங்களும் அவர்களிடம் இருந்தன. யாரும் நுழையாமலிருக்க கோவாவுக்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டன .
நவம்பர் மாத இறுதியில் , இந்தியாவை மிரட்டும் நோக்குடன், போர்த்துகீசியர்கள் கோவாவின் அஞ்சதீப்பில் இருந்து ஒரு இந்திய நீராவிக் கப்பலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் இந்திய மீனவர்கள் சிலர் மரணம் அடைந்தனர். இனி பொறுப்பதில்லை என்று கிளர்ந்தார் நேரு.
சர்வதேச விவகாரங்களில் காந்திய அணுகுமுறையைக் கடைப்பிடித்த ஒருவருக்கு இது ஒரு வேதனையான முடிவுதான்!
டிசம்பர் 1 ஆம் தேதி, ‘ஆபரேஷன் சட்னி’ என்ற கண்காணிப்பு – உளவுப் பயிற்சியைத் தொடங்கியது இந்தியா . இரண்டு போர்க் கப்பல்கள் கார்வார் கடற்கரையில் ரோந்து செல்லத் தொடங்கின, இந்திய கடற்படை பதினாறு கப்பல்களைத் தயார்ப்படுத்தி நான்காக பிரித்து நிறுத்தப்பட்டது. கோவா, தமன், தியூ எல்லைகளை இந்திய ராணுவம் சூழ்ந்தது. போர்ச்சுகலின் விமானப்படையின் வலிமையை அறிய இந்திய வேம்பயர் விமானங்கள் அப்பகுதிகளின்மீது பறக்கவிடப்பட்டன .
அப்போதுகூட, அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியும், பிரிட்டிஷ் பிரதமர் ஹரோல்ட் மேக்மில்லனும், ஐ.நா. பொதுச்செயலாளர் யு தாண்ட்டும் நேருவுக்கு முட்டுக்கட்டை போட்டனர். ஆனால் இனி தாமதிப்பதில் பொருளில்லை என்று நேரு தனது முடிவை எடுத்தார்.
1961 டிசம்பர் 18 அன்று கோவா, தமன் , தியூவில் ஆயுதமேந்திய படையெடுப்புக்கு உத்தரவிட்டார் நேரு. அப்போது இந்திய ராணுவமும், பிரதமர் நேருவும் கலந்தாலோசித்து எடுத்த போர் நடவடிக்கைகள் ஓர் ஆக்க்ஷன் படக் காட்சிகளைப்போல விறுவிறுப்பானவை.
முதல்கட்டமாக போர்த்துகீசிய விமான தளங்களை குறிவைத்து அழிக்க ராணுவம் முடிவெடுத்தது. ஆனால், அப்பாவி மக்கள் மீது ஒரு குண்டுகூட விழக்கூடாது என்பது நேருவின் கட்டளையாக இருந்தது. அதனால், விமான ஓடுபாதைகளை மட்டும் தகர்க்க முடிவானது.
ஓடுபாதைகள் தகர்க்கப்பட்டால், போர்துக்கீசிய விமானங்கள் போரில் ஈடுபடமுடியாது. அந்த நேரத்தில் தரைவழி யாகத் தாக்குதலை தொடுக்கவேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.
இன்னொரு சிக்கல் இருந்தது. அப்போது உலகின் வலிமையான கடற்படையைக் கொண்டிருந்த போர்ச்சுகல், நம்மீது கடல்வழித் தாக்குதல் தொடுக்குமானால், நமக்கு எவ்வித சேதம் ஏற்படுமென்று சொல்லமுடியாத சூழ்நிலை அன்று இருந்தது.
தன் வலிமையறிந்த நேரு ஒரு காரியம் செய்தார். தனது நண்பரான ஈஜிப்ட் அதிபர் நாஸரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒரு உதவியை வேண்டினார்.
“போர்த்துகீசிய கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக இந்தியா செல்வதற்குத் தற்காலிகத் தடை விதிக்கவேண்டும்! இந்த உதவியை எனக்காக செய்யவேண்டும்!” என்று கேட்டுக்கொண்டார்.
சூயஸ் கால்வாய் வழியை விட்டால் போர்ச்சுகலுக்கு வேறு கடல்பாதை கிடையாது, அவர்களின் கப்பற்படை எளிதாக உள்ளே நுழைந்துவிடமுடியாது.
நாஸர் சொன்னாராம் : “உலகமே வாய் மூடிக் கிடந்தபோது, பாலஸ்தீன விடுதலைக்கு, அந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு சொன்ன ஒரே தலைவர் நீங்கள்தான். அந்த நன்றியை மறப்பேனா?”
போர்ச்சுகல் போர்க்கப்பல்களுக்கு சூயஸ் வழி மூடப்பட்டது.
வானத்திலும் அவன் வரமுடியாது, ரன்வேயெல்லாம் வெடி வைத்துப் பிளந்தாயிற்று.
அடுத்த கணமே, முப்படைகள் திரண்ட ‘ஆபரேஷன் விஜய்’ தாக்குதல் தொடங்கியது. 36 மணி நேரத்திற்கும் மேலாக மும்முனைத் தாக்குதல்.
என்ன செய்வதென்று தடுமாறிய போர்ச்சுகல் ராணுவம், வயர்லெஸ் ரேடியோ மூலம் தங்கள் நாட்டைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோதுதான் தெரிந்தது, இந்தியா முதலில் அதைத்தான் துண்டித்துவிட்டுத்தான் களத்தில் இறங்கியது என்று!
தப்பிக்க வேறுவழியே இல்லை!
டிசம்பர் 19 போர்த்துகீசிய கவர்னர் வஸாலோ டிசௌஸா தலைமையில் போர்ச்சுகல் ராணுவம் இந்தியாவிடம் சரணடைந்தது. இந்திய தேசியக்கொடி கோவாவில் ஏற்றப்பட்டது.
ஆரம்பத்திலிருந்தே, ‘போர் தொடுத்து விடாதீர்கள்,அமைதியுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்!’ என்று அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நேருவுக்கு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்திருந்தன என்பதை இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும்.
சர்வதேச நாடுகள் எவரும் கைநீட்டி குற்றம் சொல்லிவிடமுடியாது. சாம பேத தானம் பார்த்துவிட்டுத்தான் தண்டத்தில் இறங்கினார் நேரு. பதுங்கிப் பாய்ந்த புலியாக நேரு செயல்பட்டதைத்தான் குழாயடிச் சண்டைக்காரர்கள் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், வரலாறு அவருக்கு ஆசிய ஜோதி என்று கிரீடம் சூட்டியது!