நேருவின் தாத்தா கங்காதர் நேருவின் பெயரைத் திரித்து, ‘அவர் ஒரு முஸ்லிம்; அவரின் உண்மைப் பெயர், கியாசுதீன் காஸி ; பிரிட்டிஷ்காரனுக்கு பயந்து போய், தன் பெயரை கங்காதர் என்று மாற்றிக் கொண்டார்’ என்று தில்லுமுல்லு செய்தார்கள்.
நேரு குறித்த தரக்குறைவான செய்திகளும் மேலும் அதில் சேர்க்கப்பட்டன.
இந்திய அரசாங்கத்தின் இணைய நெறிமுறை
( IP-internet protocol address ) முகவரியிலிருந்தும்,
இந்திய அரசாங்கத்திற்கு மென்பொருள் வழங்கும்
தேசிய தகவல் மையத்தின் (NIC) இணைய நெறிமுறை முகவரியிலிருந்தும்தான் அந்த போலித் தகவல்கள் விக்கியில் ஏற்றப்பட்டன என்று கண்டறிந்து குற்றம்சாட்டப்பட்டது.
நாட்டின் முதல் பிரதம மந்திரியின் பரம்பரையையே மாற்றி எழுதி , சங்பரிவாரின் சாக்கடைத் தந்திரச் பிரச்சார முயற்சியில் தேசிய தகவல் மையம் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி, இதற்காக பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரும் அளவுக்கு பிரச்சனை வலுத்தது.
பிறகு விக்கிபீடியா பழையபடிக்கு உண்மைத் தகவல்களை இடம்பெறச் செய்ததெல்லாம்
வேறு விஷயம்.
நேருவை ஒரு முஸ்லிம் என்று பொய்யுரைக்கும் அளவுக்கு – ஹிந்து மதவெறி அடிப்படைவாதிகளை ஆத்திரம் கொள்ளவைத்தது எது?
நாமும் அறிய வேண்டுமல்லவா?
1928ஆம் ஆண்டிலேயே ‘ஆட்சி அதிகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கையை எழுப்பி
காங்கிரஸை ஏற்றுக்கொள்ளச் செய்தவர் நேரு என்கிற பின்னணியுடன் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.
1947. சுதந்தரம் அடைந்துவிட்டோம். ஆனால்,
அதன் நறுமணத்தை நுகரவிடாத வன்முறை வெறியாட்டங்களால் ஹிந்து முஸ்லிம்களின்
குருதி நெடி – இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக வீசிக்கொண்டிருந்த சூழல் அது.
பாகிஸ்தானில் சிறுபான்மை ஹிந்துகளும்
சீக்கியர்களும் கொடூரமாகக் கொல்லப்படுவதாக
வந்த செய்திகள் இந்திய மக்களிடையே ஆத்திரத்தையும் உணர்ச்சிப்பெருக்கையும் தூண்டிவிட்டுக்கொண்டிருக்க, அதனால் பற்றிக்கொண்ட நெருப்பில் ஹிந்து அடிப்படைவாதிகள் லிட்டர் லிட்டராக பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.
காந்தியைக் கொன்றவன் ஒரு முஸ்லிம் என்று
விஷ வதந்தியைப் பரப்ப முடிந்தவர்களுக்கு –
இது அடுத்த ஒரு வாய்ப்பு.
ஏறத்தாழ 90 லட்சம் ஹிந்துகளும், சீக்கியர்களும், பாகிஸ்தானிலிருந்து உயிர் அச்சத்துடன் இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார்கள். போன்று, இங்கிருந்து 60 லட்சம் இஸ்லாமியர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார்கள்.
பிரிவினை வன்முறையால் கொலை செய்யப்பட்டவர்கள் 8 லட்சம் பேர் என்று சொல்லப்பட்டது.
‘மரணத்தின் நாற்றமும், குருதியின் வீச்சமும், எரிந்துபோன மனித சதைகளின் நெடியுமாக ஊர் இருக்கிறது. இந்தியாவைவிட்டு வெளியேறிய லட்சக்கணக்கானோர் வேரோடு பிடுங்கப்பட்டார்கள் என்பதையும், லட்சக்கணக்கானோர் முகாம்களிலும் நடுத்தெருக்களிலும் அலைந்து திரிவதை கற்பனை செய்து பார்க்கிறேன். என்னால் தாளமுடியவில்லை!’ என்று தன் நண்பர் மவுண்ட்பேட்டனுக்கு எழுதிக் கண்ணீர் உகுத்தார் நேரு.
பாகிஸ்தான் போகமாட்டோம், இந்தியாவே எங்கள் தாய்மடி என்று இங்கேயே தங்கிவிட்ட சிறுபான்மை முஸ்லிம் மக்களின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அச்சத்தால் அவர்கள் ஒடுங்கிப் போய்க் கிடந்தார்கள்..
ஆர்எஸ்எஸ்.காரர்களும், அகாலிகளும் கலவரத்தின் முன்னணியில் பகிரங்கமாக செயல்பட்டார்கள். மறுபுறத்தில், அச்சத்தாலும், அடிப்படைவாதிகளின் தூண்டுதலாலும் இஸ்லாமியர்களும் கலகத்தில் இறங்கினார்கள்
“மத வெறி முற்றிய இந்தப் பைத்தியக்காரர்களையும் உடன் வைத்துக்கொண்டுதான் நாம் முன்னேறியாக வேண்டும். ஆனால் ஒன்று, அவர்களின் பாதை வெறுப்பின் பாதை, மிகமிக ஆபத்தானது. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் , சீக்கியம் என்று எந்தப் பெயரில் வந்தாலும் மத அடிப்படைவாதம் ஆபத்தானது!” என்றார் நேரு.
உணர்ந்து சொன்னதுமல்லாமல், அதை ஒடுக்கவும் தானே களமிறங்கினார் நேரு.
டெல்லி கன்னாட் பிளேஸில் முஸ்லிம்களின் கடைகள் அடித்து நொறுக்கப்படுவதாக, அவர்களது சொத்துகள் கொள்ளையிடப்படுவதாக பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு செய்தி போனது.
பிரதமர்தானே என்று கீழ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருக்கவில்லை நேரு. நேரே கிளம்பி கலவர இடத்துக்குப் போய்விட்டார்.
அவர் கண்ட காட்சி அவருக்குள் கோபத்தைக் கிளர்த்தியது.
ஆத்திரமூட்டப்பட்டிருந்த மக்கள், கும்பல் கும்பலாக அங்கிருந்த முஸ்லிம்களின் கடைகளை குறிவைத்து பொருட்களை சூறையாடிக் கொண்டிருந்தார்கள். வன்முறை நிகழ்வதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
ஆத்திரமடைந்த நேரு காரிலிருந்து இறங்கியவர் அங்கு நின்றிருந்த ஒரு போலீஸ்காரனின் கையிலிருந்த கழியைப் பிடுங்கி கலவரக்காரர்களைத் தாக்கி விரட்ட ஆரம்பித்தார்.
“அவர்களும் இந்தியர்கள்தான். உன் சகோதரனை நீயே தாக்குவாயா?” என்று பிரதமரே களத்தில் இறங்கி வன்முறையாளர்களை ஒடுக்குவதைப் பார்த்ததும், செயலற்று நின்றிருந்த காவல்துறைக்கும் உறைக்க ஆரம்பித்தது. முனைப்புடன் இறங்கி கலகக்காரர்களை விரட்டியடித்தார்கள்.
இன்னொரு நிகழ்ச்சி.
இது நம்முடைய இந்திய தேசியக் கொடியான மூவண்ணக் கொடியை வடிவமைத்த ஓவியர் சுரய்யாவின் கணவரும், பின்னாளில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவருமான பக்ருதீன் தியாப்ஜியின் அனுபவம்!
டெல்லியில் அகதி முகாம்களில் அடைக்கலம் தேடிச்செல்லும் முஸ்லிம்களின்மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தார்கள் ஹிந்துத்துவ வகுப்புவாதிகள்.
பதறிச் சென்று, பிரதமர் நேருவிடம் முறையிடுகிறார் தியாப்ஜி.
வன்முறையா ? எங்கே?
பதறியபடி கேட்கிறார் பிரதமர்.
“மிண்ட்டோ பாலத்தருகே கலகக்காரர்கள் கும்பலாகக் கூடி நின்றுகொண்டிருக்கிறார்கள்; பெண்களென்றும் குழந்தைகளென்றும்கூடப் பார்க்காமல் கண்மூடித்தனமாகத் தாக்கி விரட்டுகிறார்கள்”
என்கிறார் அவர்.
“ஒரு நிமிடம் இருங்கள்!” என்று மாடிப்படிகளில் தாவியோடுகிறார் நேரு. திரும்பி வந்தபோது-
அவர் கையில் ஒரு துப்பாக்கி!
“தியாப்ஜி! உடனே நாமிருவரும் அபயம் தேடும்
ஏழை முஸ்லிம்களைப் போல உடை உடுத்திக்கொண்டு, மிண்ட்டோ பாலத்துக்குப் போகிறோம். கலவரக்காரர்களை சுட்டுப் பொசுக்கிவிடலாம்!” என்கிறார் நேரு.
உணர்ச்சிவசப்பட்டிருந்த நேருவை தியாப்ஜி சமாதானப்படுத்துகிறார்.
“அதற்கு நீங்கள் போகவேண்டுமா? இங்கிருந்து ஆணையிட்டு அதிகாரிகளை அனுப்பி கட்டுப்படுத்தினால் போதாதா? நீங்கள்
பிரதமர் அல்லவா?”
“ஏன் கூடாது? முஸ்லிம்கள் இந்தியர்கள் அல்லவா? அவர்கள் இங்கேயே பிறந்து இங்கேயே வாழ்ந்து வருகிற நம்முடைய மக்கள்தானே? ஹிந்து மக்களால் எந்த ஆபத்தும் நேராது, அவர்களும் அரசாங்கமும் அரவணைப்பார்கள் என்று நம்பித்தானே பாகிஸ்தானுக்குக்கூடச் செல்லாமல் இங்கேயே வாழ முற்பட்டார்கள்?” என்று கொந்தளிக்கிறார் நேரு.
அவரை ஆசுவாசப்படுத்துவதற்குள் போதுமென்றாகிவிட்டது தியாப்ஜிக்கு.
அதேபோல, சாந்தினி சௌக் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த பிரதமர் நேரு, ஒரு முஸ்லிம் தையல்காரர் தாக்கப்படுவதைப் பார்த்ததும், காரை நிறுத்தச் சொல்லிக் கீழிறங்கி, அந்த தையல்காரரை வன்முறைக் கும்பலிலிருந்து காப்பற்றிய நிகழ்வை காங்கிரஸ் இணையத்தளத்தில் படித்த நினைவையும் இங்கே பதிவு செய்கிறேன்.
இத்தகைய மத வன்முறை வெறியாட்டங்களை
நேரில் கண்டு கொதித்த பிறகுதான், நேரு இப்படி
உரக்கச் சொன்னார் :
“நான் பொறுப்பில் இருக்கும்வரை –
இந்தியா ஒரு ஹிந்து ராஜ்ஜியமாக
உருவெடுக்காது!”
“ஹிந்து நாடு என்பது ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனை. இந்தியர்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அந்த எண்ணமே இந்தியாவின் ஆன்மாவை அழித்துவிடும்! ” என்று பட்டேல் அதை வழிமொழிந்தார்.
மதத்தின் பேரால் ஓருயிர்கூட அழிக்கப்படக்கூடாது என்று அறைகூவியதும் –
பாகிஸ்தான் செய்வதைப்போல சிறுபான்மையினர் மீதான வன்முறை நடவடிக்கைகளில் இந்தியா ஒருபோதும் ஈடுபடாது என்ற பகிரங்க நிலைபாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தியதும் –
இந்தியா எப்போதும் ஒரு மதச்சார்பற்ற நாடாகவே இருக்கும் என்று சூளுரைத்ததும் –
நேரு மீதான மதவெறியர்களின் ஆத்திரத்துக்குக் காரணங்களாயின.
பிராமணரான நேரு, கடவுள் மறுப்பாளரானதுகூட இவர்களுக்குப் பிரச்சனையில்லை. அவர் முஸ்லிம்களை அரவணைத்தார் என்பதுதான் மிகப்பெரும் வன்மம்.
மகாத்மா காந்தி மீதான ஆத்திர த்தைப் போன்றதே இதுவும்!
காந்தியை
அப்போதே கொல்ல முடிந்தது!
மக்களின் இதயங்களிலிருக்கும் நேருவை
இப்போது
கொல்ல முயற்சிக்கிறார்கள்!
அவ்வளவே!