இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம்! ஒரு வல்லாதிக்க கட்சியின் சர்வாதிகார ஆட்சியில் சீனா பெரும் பொருளாதார வளர்ச்சியை சந்தித்தது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக, பகுதியளவு சமஷ்டி ஆட்சியைக் கொண்ட நாடாக இருந்துகொண்டு, தனக்குள் பலநூறு பிரிவினைகளைத் தாங்கியபடி இந்தியா அடைந்த வளர்ச்சி அபாரமானது.
1991-ன் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதாரக் கொள்கை மாற்றம் தான் இதற்கெல்லாம் அடித்தளம். அந்த அடித்தளத்தைப் போட்டவர்கள் அன்றைய பிரதமர் நரசிம்ஹ ராவும், அன்றைய நிதியமைச்சர் கலாநிதி மன்மோஹன் சிங்கும். அந்த அடித்தளத்திலிருந்து வேர்விட்டு வளர்ந்த இந்தியா கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி அபாரமானது.
இன்று மேற்குலகினால் தொல்லைக்குட்படுத்தப்பட முடியாத ஒரு சக்தியாக இந்தியா உயர்ந்திருக்கிறது. இன்றைய கனடா-இந்திய இராஜதந்திர முறுகல் நிலையில் இந்தியாவின் பலம் வௌிப்பட்டு நிற்கிறது. கனடாவின் உற்ற தோழர்களான அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் அவுஸ்திரேலியா கூட இன்றுவரை கனடாவுக்கு முழு ஆதரவாக நிற்கவில்லை. அவை கனடா-இந்திய இராஜதந்திர முறுகல் நிலை தொடர்பில் மழுப்பல் நிலையைத்தான் இன்றுவரை கடைப்பிடிக்கின்றன. இதற்குக் காரணம் இன்று இந்தியா அடைந்திருக்கும் பலம் வாய்ந்த நிலை.
இந்தியாவின் இன்றைய பலம் வாய்ந்த நிலை தெற்காசியாவில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவதானிப்பது எமக்கு அவசியமானதொன்றாக இருக்கிறது. தெற்காசியாவைப் பொறுத்தவரையில் இந்தியாவிற்கு நிகரான பொருளாதாரப் பலம் நிறைந்த இன்னொரு நாடு தெற்காசியாவில் இல்லை.
இந்தியாவிற்கு அடுத்து, தெற்காசியாவின் பெரிய பொருளாதாரம் பங்களாதேஷ். ஆனால் அது இந்தியப் பொருளாதாரத்தின் அளவில் ஏறத்தாழ 13% மட்டுமே! அடுத்த இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. பங்களாதேஷ் பொருளாதாரத்தின் ஏறத்தாழ 20%ம் கொண்ட பொருளாதாரமாக இலங்கை அடுத்த இடத்தில் இருக்கிறது. இலங்கைப் பொருளாதாரத்தின் ஏறத்தாழ 40%ம் கொண்ட பொருாளதாரமாக நேபாளம் அடுத்த இடத்திலும், ஆஃப்கானிஸ்தான், மாலைத்தீவு, மற்றும் பூட்டான் ஆகியன அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கின்றன.
சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவைத் தவிர்ந்த மற்ற 7 தெற்காசியநாடுகளின் பொருளாதாரத்தின் கூட்டளவு என்பது இந்திய பொருளாதாரத்தின் 28% மட்டும்தான்! இந்திய பொருளாதாரம் என்பது மற்ற தெற்காசிய நாடுகள் அனைத்தினதும் பொருளாதாரத்தைவிட மூன்று மடங்கிற்கு மேல் பெரியது! ஆகவே இந்தியா தெற்காசியாவின் பெரியண்ணன் என்பதில் எதுவித மாற்றுக்கருத்துக்களும் இருக்க முடியாது.
பெரியண்ணனின் தெற்காசியா தொடர்பான வௌிநாட்டுக்கொள்கை என்று நாம் பார்க்கும்போது, பாகிஸ்தானைத் தவிர்த்துவிட்டுப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் எதிரிநாடு. தனது எல்லையை ஒட்டியிருக்கும் இன்னொரு நாடான சீனா போட்டிநாடு. இந்தியாவும், சீனாவும் இன்றைய உலகின் பலமான போட்டியாளர்கள்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவைத் தவிர்த்த ஏனைய தெற்காசிய மற்றும் தனது எல்லையை ஒட்டிய சீனா தவிர்ந்த நாடுகள் தொடர்பில் இந்தியாவின் வௌிநாட்டுக் கொள்கையை ஆய்வு செய்யும் போது, இந்திரா கோட்பாடு, அல்லது ராஜிவ் கோட்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.
இது பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் கொள்கையாக இருந்தது. இது மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாடுகளில் தலையிட, இந்தியாவுக்கு எந்தவோர் எண்ணமும் கிடையாது.
அதேவேளை, எந்த நாடும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை, இந்தியா கடுமையாக எதிர்க்கும். இரண்டாவது, இந்திய நலன்களுக்கு, வெளிப்படையாக அல்லது உள்ளார்ந்த வகையில் எதிராக அமையும் வகையில், வெளிநாடொன்று, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாட்டில் தலையிடுவதை, இந்தியா சகித்துக் கொள்ளாது.
ஆகவே, எந்தத் தெற்காசிய நாடும் இந்தியாவுக்கு எதிராக அமையத் தக்கவகையில், வெளிநாடொன்றிடமிருந்து இராணுவ உதவியைப் பெறக் கூடாது. மூன்றாவது, ஒரு தெற்காசிய நாட்டுக்குப் பாரதூரமான உள்ளக முரண்பாட்டை எதிர்கொள்ள அல்லது சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்துக்குச் சகிக்கமுடியாத அச்சுறுத்தல் காரணமாக, வெளியக உதவி உண்மையாகவே தேவைப்படுமானால், அது இந்தியா உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகளிடம் உதவி கோரலாம். அத்தகைய சூழலில், இந்தியாவைத் தவிர்த்தலானது, குறித்த அரசாங்கத்தின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும்.
இந்திரா, ராஜிவ் காலத்து இந்தியா அல்ல இப்போது இருக்கும் இந்தியா. அப்படியானால், இந்தியாவின் தற்போதைய பிராந்தியக் கொள்கை மாறியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 2008 காலப்பகுதியிலேயே “அயலக முன்னுரிமைக்” கொள்கைக்கான அடிப்படைகள் வௌிப்பட்டிருந்தாலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சியில் “அயலக முன்னுரிமை” (“Neighbourhood First”) என்பது முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
“நண்பர்கள் மாறலாம், ஆனால் அயலவர்கள் மாறுவதில்லை, அயலவர்கள் ஒன்றாக வாழ்ந்தாக வேண்டும்” என்று முன்னர் ஒரு முறை அடல் பிஹாரி வாஸ்பாய் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிராந்திய ஒத்துழைப்பு என்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானது, அதுதான் இந்தக் கொள்கையின் அடிப்படையும் கூட. ஆனால் வெறுமனே தனது பாதுகாப்புத் தேவையை அயலவர்கள் மீது திணிப்பதாக அமையாமல், அயலக நாடுகளோடு பரஸ்பர நல்லுறவைக் கட்டியெழுப்பும் அணுகுமுறையை இந்தியா தற்போது முன்னெடுக்கிறது.
அது அரசாங்கங்களிடையேயான உறவுகளைத் தாண்டி மக்களிடையேயான இராஜதந்திர உறவு மேம்பாட்டிலும் கணிசமாக அக்கறை செலுத்துகிறது.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து நின்ற போது, இலங்கைக்கு அவசர உதவி தேவைப்பட்ட நிலையில், ஏறத்தாழ 4 பில்லியன் டொலர்கள் அளவிலான உதவியை அள்ளி வழங்கியது இந்தியா.
அதற்கு முன்னர் “கொவிட்-19” பெருந்தொற்றின் போதும், இலங்கை உட்பட்ட பல நாடுகளுக்கும் முதன் முதலில் தடுப்பூசியை வழங்கியது இந்தியாதான்.
இந்தியாவின் இந்த அணுகுமுறையானது பலத்தை மட்டும் பயன்படுத்திய இராஜதந்திரத்தைவிட, பரஸ்பர நம்பிக்கையையும், தோழமையையும் கட்டியெழுப்பும் இராஜதந்திரப் பாதையை இந்தியா தேர்ந்தெடுத்திருப்பதை உணர்த்தி நிற்கிறது.
இந்தியாவின் நீடித்து நிலைத்த பாதுகாப்பிற்கு, நெருக்கமான அயலக உறவு அவசியம் என்பது இந்தியா ஆரம்பத்திலிருந்து உணர்ந்த ஒன்று. ஆனால் அதனை ஏற்படுத்த அரசாங்கங்களிடையேயான பரஸ்பர நம்பிக்கை மட்டும் போதாது, மக்களிடையேயான நம்பிக்கையும், விசுவாசமும், நல்லுறவும் அவசியம்.
ஆகவேதான் இந்தியா நேரடியாக மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விடயங்களல் முதலிடுகிறது. நிறைய மக்கள் நலத்திட்டங்களுக்கு உதவுகிறது. மக்களுக்கான நேரடி நிகழ்வுகளை நடத்துகிறது. இந்தியா பற்றிய நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.
இந்திரா அல்லது ராஜிவ் கோட்பாட்டின் அடிப்படைகள் மாறவில்லை. அவை மாறவும் முடியாது. அதனால்தான் சீன புலனாய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது. சீனாவோ, ஏனைய பெரும் பலம்வாய்ந்த நாடுகளோ இந்தியாவிற்கு அருகிலுள்ள இலங்கையின் வடக்கில் பெருமளவு முதலீடுகளைச் செய்து, அங்கு காலூன்றுவதைக்கூட இந்தியா விரும்பவில்லை.
ஆனால் இந்த பாதுகாப்புக் காரணங்களோடு நின்றுவிடும் வௌியுறவுக் கொள்கையைத்தாண்டிய மக்களிடையே நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் விதைக்கும் அணுகுமுறையை இந்தியா தனது “அயலக முன்னுரிமை-க்” கொள்கையினூடாக முன்னெடுக்கிறது.
சுருங்கக் கூறின், இந்திய வௌியுறவுக் கொள்கையின் அடிப்படைகள் மாறவில்லை, ஆனால் அணுகுமுறை மாறியிருக்கிறது. பெரியண்ணன் கொஞ்சம் அன்புகாட்டத் தொடங்கியிருக்கிறார். தனது நலனைக் காக்க கண்டிப்பு மட்டும் போதாது, நிறைய அன்பும் வேண்டும் என்பதை பெரியண்ணன் புரிந்துகொண்டிருக்கிறார்.