நியூசிலாந்தின் முன்மாதிரியான அணுகுமுறை

சமகாலத்தில் இவ்விரு விடயங்களுமே, இலங்கை மக்களால் கூர்ந்து நோக்கப்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. 

நாட்டில் பால்மாக்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும், சில தினங்களுக்கு முன்னர் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பயங்கரவாதி ஒருவர்,  ஒக்லாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டதும் இதற்குக் காரணங்கள் எனலாம். 

நியூசிலாந்தின் ஒக்லாந்தில் உள்ள அங்காடி ஒன்றில், பொதுமக்களைத் தாக்கிய நபரை, உடனடியாகவே பொலிஸார் சுட்டுக் கொன்றனர். இவர், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதான சந்தேகத்தில், பின்தொடரப்பட்டு கண்காணிக்கப்பட்டவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும், உலகில் வழக்கமானதுதான். ஆனால், இவர் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்ற ரீதியில், இலங்கைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.  

அதைவிட முக்கியமாக, இந்த நபர், இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் என்ற அடையாளத்தைக் கொண்டவர் என்பது, இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் சிக்கலையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையில் கடும்போக்குவாத சிந்தனையால் ஈர்க்கப்பட்ட ஒரு கும்பல், 2019 இல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. ஒரு குழுவினரே இதைச் செய்திருந்தாலும், அதனையொட்டி முஸ்லிம் சமூகத்தின் மீது எழுந்த சந்தேகமும் நம்பிக்கையீனமும் இன்னமும் முற்றாக நீங்கிவிடவில்லை. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் யார்? அதன் பின்புலம் என்ன? என்ற ஆயிரத்தெட்டு கேள்விகளும் ஒருபுறமிருக்க, இந்த த் தாக்குதலால் முஸ்லிம்களுக்கும் ஏனைய இனக் குழுமங்களுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட கீறல்களைச் சரிசெய்வதற்காக பரவலான முயற்சிகள், இடம்பெற்று வருகின்றன. 

இந்த முயற்சிகளில், நியூசிலாந்து சம்பவம், பொருத்தமற்ற ஓர் எதிர்த்தாக்கத்தை மறைமுகமாகவேனும் உண்டுபண்ணி இருக்கின்றது. உலகெங்கும் இஸ்லாமிய பெயர்தாங்கிய பல்வேறு ஆயுதக்குழுக்கள், இயக்கங்கள் ஆகியவற்றின் செயற்பாடுகள், இதற்கெல்லாம் சம்பந்தமே இல்லாத சாதாரண இஸ்லாமிய மக்களை, ஓர்  இக்கட்டுக்குள் தள்ளிவிட்டுள்ளதையும் காண முடிகின்றது. 

எவ்வாறிருப்பினும், ஒக்லாந்து சம்பவத்தை அடுத்து, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்த ஆர்டன் வெளியிட்டுள்ள கருத்தானது, இலங்கை முஸ்லிம்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி இருக்கின்றது.  

“இந்தத் தாக்குதல் ஒரு தனிநபரால் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு, அவர் மட்டுமே பொறுப்பாளி ஆவார்.  ஒரு மத நம்பிக்கையாலோ இனத்தாலோ  கலாசாரத்தாலோ இது மேற்கொள்ளப்படவில்லை” என்று அவர் சொல்லியிருக்கின்றார். 

நியூசிலாந்தில் கிட்டத்தட்ட ஒரு  சதவீதமான மக்களாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களுள் முக்கால்வாசிப் பேர் வெளிநாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள்; அல்லது, குடியேறிகள்.  இந்நிலையில், இச் சிறுபான்மை மக்களது மனங்கோணும் வகையில், பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் ஒரு கருத்தைத்தானும் வெளியிடவில்லை. 

இந்தச் சம்பவத்தை, ஓர் இனத்தின் மதத்தின் மக்கள் கூட்டமொன்றின் சார்பான தாக்குதலாக அவர் பார்க்கவில்லை. கொல்லப்பட்டவன், ஒரு பயங்கரவாதி. பயங்கரவாதத்துக்கு நாடும் மொழியும் மதமும் இனமும் இல்லை. அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் பயங்கரவாதிகள்தான் என்ற நிலைப்பாட்டையே, இந்தச் செயல் வெளிப்படுத்துகின்றது.  

இவ்வாறான ஒரு கருத்தை, அவர் வெளியிட்டதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்தமைக்காகக் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்தவர். அதன் பின்னரும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தவர். ஆகவேதான், உடனடியாக அவரை சுட்டுக் கொல்ல முடிந்திருக்கின்றது.

எனவே, இவரது பின்னணி, வலையமைப்பு பற்றி நியூசிலாந்து பொலிஸார் பெற்றுக் கொண்ட முழுமையான தகவல்களின் அடிப்படையில், அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு இவ்விவகாரத்துடன் தொடர்பில்லை என்ற முடிவுக்கு அவ்வரசாங்கம் வந்திருக்கலாம். 

அல்லது, நியூசிலாந்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது என்று சொல்லி, மக்களை எச்சரிக்கை செய்ய முனைந்தால், மக்கள் தேவையற்ற பதற்றத்துக்கு ஆளாகி விடுவார்கள் என்றும், இன நல்லிணக்கம் சிதைவடையலாம் என்றும் அந்நாட்டுப் பிரதமர் நினைத்திருக்கலாம். 

ஜெசிந்தா ஆர்டன், என்ன நினைத்து இக்கருத்தை வெளியிட்டிருந்தாலும், அவரது வார்த்தைகள் உலகின் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் ஆறுதலை. இது ஏற்படுத்தியிருக்கின்றது.  

2021 மார்ச் மாதத்தில், கிறிஸ்சேர்ச் பள்ளிவாசலில் ஓர் ஆயுததாரி நுழைந்து, முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தின் பின்னரும், அந்நாட்டுப் பிரதமர் இவ்வாறு மிகக் கவனமாகவும் சிறுபான்மையினருக்கு மன ஆறுதலாகவுமே நடந்து கொண்டார் என்பது நினைவு கொள்ளத்தக்கக்கது.  

இவரது நடவடிக்கை, பல நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், பயங்கரவாதம் ஆகிவற்றில் இருந்து, அப்பாவி சிவில் சமூகங்களை எவ்வாறு பிரித்து நோக்க வேண்டும் என்பதற்கு, இது ஒரு நல்ல எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. 

துரதிர்ஷ்டவசமாக, இலங்கை சூழலில் இவ்விதமான அணுகுமுறைகள் இல்லாமையாலேயே, இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. யுத்த காலத்தில், தமிழர்களின் அனுபவமும்  ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லிம்களின் அனுபவமும் கசப்பானவையாகும். 

நியூசிலாந்து சம்பவத்தை விட, ஏப்ரல் 21 தாக்குதல் பன்மடங்கு பாரதூரமானதும் காட்டுமிராண்டித்தனமானதும் ஆகும். யார் இதைத் திட்டமிட்டிருந்தாலும், இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரே, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், சிவில் முஸ்லிம் சமூகத்துக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 

யதார்த்தம் இவ்வாறிருக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், நியூசிலாந்துக்கு மாற்றமான நிலைமைகளே இலங்கையில் பெரிதும் அவதானிக்கப்பட்டன.  

அப்போதிருந்த அரசாங்கம், விசாரணைகளை சரியாக மேற்கொள்ளவில்லை. இன்றுவரை, இத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் திருப்திப்படும் வகையில், நீதி நிலைநாட்டப்படவில்லை. மாறாக, காலம் இழுத்தடிக்கப்பட்டது; தேவையற்ற பிரச்சினைகள் தூண்டிவிடப்பட்டன. 

இந்தப் பயங்கரவாதச் செயலைக் காரணமாகக் காட்டி, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் சந்தேகக் கூண்டில் நிறுத்தப்பட்டனர். அதைவைத்து, அரசியலும் இனவாதமும் சிலகாலம் முன்கொண்டு செல்லப்பட்டது. 

ஆனால், நியூசிலாந்து பிரதமர் முன்வைத்த கருத்தால், இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதை அவர் ஆரம்பத்திலேயே தடுத்திருக்கின்றார்.  அந்நாட்டில் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, புலனாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆயினும், இன நல்லிணக்கத்தைப் பாதிக்காத வகையில், அதைச் செய்வதற்கு நியூசிலாந்து முனைவது தெட்டத்தௌிவாகத் தெரிகின்றது. 

அந்த வகையில், ஜெசிந்தா ஆர்டனின் ஆளுகையும் அவரது அரசாங்கத்தின் செயற்பாடுகளும் வரவேற்கத்தக்கவை. சிறுபான்மையாக வாழ்கின்ற மக்களை, நல்லிணக்கத்தோடு அரவணைத்துச் செல்வது எப்படி என்பதற்கு, இது ஓர் உதாரணமாகும். அத்துடன், சம்பவங்களை அரசியலாக்கி, இனவாதமாக உருவேற்றி, அதிலிருந்து இலாபம் தேட முற்படாமையும் சிறப்பான அணுகுமுறையாகும்.

இதனை இலங்கை உள்ளடங்கலாக பல்லினங்கள் வாழ்கின்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் ஒரு முன்மாதிரியாகக் கொள்ளலாம். பயங்கரவாதிகளை, ஆயுததாரிகளை வேரறுப்பது அவசியமானது. அதனைச் செய்து கொண்டே சமகாலத்தில் இன நல்லிணக்கத்தையும் எவ்வாறு நிலைநாட்டலாம் என்ற அடிப்படைப் பாடத்தைக் நியூசிலாந்திடம் இருந்தும் கற்றுக் கொள்ளலாம். 

இலங்கைச் சூழலில், குறிப்பாக முஸ்லிம்களும் சிலபோது தமிழர்களும் கூட இதனை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். இனம், மதம் என்ற அடையாளங்கள், உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய தருணங்கள் தவிர்ந்த ஏனைய பொதுவான பிரச்சினைகளில் இலங்கையர் என்ற பொதுவான அடையாளத்தை முன்னிறுத்தியே சிறுபான்மை மக்கள் செயற்பட வேண்டும்.