புதிய வடிவில் தமிழ் நாட்டில் சங்கிகளின் செயற்பாடுகள்

இந்திய அளவில் காலனியாதிக்கத்துக்கு பிந்தைய சமூகத்தின் அரசியலை பேசுவதாக 1980-களில் முன்னெடுக்கப்பட்ட Subaltern Studies ஒரு சுவாரஸ்ய கோட்பாடு.

இவை இரண்டும் இணையும் புள்ளியில்தான் ரஞ்சித் நிற்கிறார்.
மார்க்சியரான அந்தோனிய கிராம்சி பயன்படுத்திய Sub Alternism என்கிற பார்வையை எடுத்துக் கொண்டு மார்க்சியத்தையே போட்டுத் தள்ளுவதை நோக்கி நகர்ந்த கோட்பாடுதான் Sub Alternism.
குறிப்பாக 1960களில் எல்லாம் ஏகாதிபத்தியத்தின் காட்டாட்சியால் உலகளவில் எழுந்த மாணவர் போராட்டங்களின் விளைவாக, இயல்பாகவே இளைஞர்கள் சாயக்கூடிய தத்துவமாக இருந்தது மார்க்சியம்தான். அங்கு ஒரு Take Diversion பலகையை முதலாளித்துவம் வைத்தது. அதுதான் Subaltern Politics. அடித்தள மக்களுக்கான அரசியல் என குறிப்பிடலாம்.

இந்த அரசியல் ஐரோப்பாவிலிருந்து எழுந்து வந்த அரசியல்களை நிராகரிக்கிறது. அப்படி சொல்லிக் கொண்டாலும் அது நிராகரிப்பது ஒரு அரசியலை மட்டும்தான். மார்க்சியம். ஐரோப்பாவில் இருக்கும் பிரதான அரசியல் போக்குகள் இரண்டுதான். ஒன்று, முதலாளித்துவம். இரண்டு, மார்க்சியம்!

யாரோ ஒரு துடிப்புள்ள இளைஞர் இந்த ரஞ்சித் – திருமா உரையாடலில் ‘தோற்றுப் போன தத்துவம் மார்க்சியம்’ என முன்வைத்த புரட்சிகரமான கருத்தை கூட காண நேர்ந்தது. இதுதான் Take Diversion பலகையின் வெற்றி!

மூன்றாம் உலக நாடுகளுக்கென ஒரு தனித்துவ அரசியல் சிந்தை இருப்பதாக Sub Alternism அவதானிக்கிறது. அந்த மூன்றாம் உலக சிந்தையை தோண்டி சென்றால், வளை வளையாக பிரிந்து சென்று முட்டுச் சந்தில்தான் முடியும்.

மார்க்சியம் முன்வைக்கும் உற்பத்திசார் அறிவையும் கருத்தியல் ஆதிக்கத்தையும் பொருட்படுத்தாமல் பேசப்படும் அடித்தள மக்கள் அரசியல் ஆபத்தானது. அது மார்க்சியத்தை அழிக்கும் என்பதைக் காட்டிலும் அடித்தள மக்களுக்கான இருப்பையும் சேர்த்து அழிக்கும்.
இன்று உலகளவில் – குறிப்பாக அமெரிக்காவில் – பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டத்தில் அவர்கள் வைக்கும் முக்கியமான கோரிக்கை காலனியநீக்கம். ஏகாதிபத்தியத்தின் எச்சங்களாகவும் தொடுப்புகளாகவும் அமெரிக்க நாட்டின் கல்விமுறையிலும் சிந்தையிலும் சந்தையிலும் இருக்கும் காலனிய ஏற்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்கிற குரல் முக்கியமானது.

அத்தகைய குரல் இந்தியாவில் எழுப்பப்படும் எனில் அது பார்ப்பனியத்தையும் சேர்த்து நீக்கக் கோருவதாக மாறும். ஏனெனில் யூதர்களுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் உள்ள தொடர்புதான், இந்தியாவில் பார்ப்பனியத்துக்கும் காலனியத்துக்கும் இருக்கிற தொடர்பு.

இத்தகைய பின்னணியில் அடித்தள மக்கள் அரசியலை பேசுகிற அதே வேளையில் மார்க்சியம் போன்ற பெருங்கதையாடலின் பார்வையோடு இணைத்து பேசுவதால்தான் திருமா தமிழ்ச்சூழலில் முக்கியமானவராக இருக்கிறார். கிட்டத்தட்ட Sub Altern பார்வையை முன்மொழிந்த மார்க்சியர்களின் அடியொற்றிய அரசியல், திருமாவினுடையது.
ரஞ்சித் வைக்கும் அரசியல், பின் காலனியத்துக்கும் மிகவும் பிறகு, ஏகாதிபத்தியமும் பார்ப்பனியமும் தன்னைக் காத்துக் கொள்ள வைத்தம், Take Diversion பலகையை நம்பி திரும்பி தேர்ந்தெடுத்து சென்ற பாதை!
அந்தப் பாதை சென்று சேர்ந்த இடத்தில்தான் மாயாவதி இருக்கிறார். அத்வாலே இருக்கிறார். சிராக் பாஸ்வான் இருக்கிறார்.

தமிழ்ச்சூழலில் ஒரு நவதாராளவாத – அடையாளம்சார் அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு இருக்கிறது. இந்திய ஏகாதிபத்திய-பார்ப்பனிய சிந்தையுடன் தலித் சிந்தையை இணைக்க வேண்டிய தேவை அதற்கு உண்டு. அந்த தேவைக்கான முன் நிபந்தனையாக அது வைப்பது திருமா அரசியலின் வீழ்ச்சியை. அந்த அரசியல் ரஞ்சித்தை கொண்டு முன்னெடுக்கப்படலாம்.

அவர் இல்லையென்றாலும், அப்பணியை செய்ய வேறு ஒருவர் வருவார்.
மேலும் அதிகாரம் பெற்ற OBC-க்கள் என்ன செய்கிறார்கள் என்கிற ரஞ்சித்தின் பார்வையையும் நாம் மறுதலித்து விட முடியாது. அவர்கள் தலித்களுக்கான வன்முறையை ஏன் பேச மறுக்கிறார்கள் என்பதைத் தாண்டி, OBC-களுக்கு அரசியல் அதிகாரம் மாறினாலும் பொருளாதார அதிகாரத்தை ஏன் அவர்கள் மாற்றும் நடவடிக்கையில் இறங்கவில்லை என்கிற கேள்விதான் நேரடியான உற்பத்திசார் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

மற்றபடி இணையத்தில் பெரும்பாலான திமுகவினரும் நீலம் குழுவினரும் பேசுவதோ விசிகவினரும் இடதுசாரிய கட்சியினரும் பேசுவதோ பிற எந்தக் கட்சியினரும் பேசுவதோ அரசியல் பார்வையாக அல்லது உரையாடலாக எடுத்துக் கொள்ள முடியாது. அவை ஒரு முகாமுக்கு எதிராக சேற்றை வாரி இறைக்கும் நடவடிக்கை மட்டும்தானே தவிர, அதில் எந்தவித ஆய்வுப்பூர்வமான பார்வையும் அரசியல் பொறுப்புணர்வும் வரலாற்றின் அவதானிப்பும் இருப்பதில்லை. அவரவர் அமைப்புசார் விசுவாசத்தை மட்டும்தான் அதில் நாம் காண முடியும். கோட்பாட்டு ரீதியான விவாதங்களை அங்கு சென்று முன் வைத்துக் கொண்டிருக்க முடியாது.

வரலாறோ சமூகமோ அரசியலோ ஒரு பெரும் இயங்கியல் தொடர்ச்சியின் குறிப்பிட்ட காலவெளியாகதான் பார்க்கப்பட வேண்டுமே தவிர, தனிச்சம்பவங்களாகவும் நிலைப்பாடுகளாகவும் பார்ப்பது சரியாக இருக்காது.

https://gdpd.xyz/rajasangeethan