இவ்வாண்டின் ஏப்ரல் மாதம் 11 அம் திகதி நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் காஸ்ரில்லாவினால் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. இதனால், வலதுசாரியும், பெருவின் முன்னைநாள் சர்வாதிகார ஆட்சியாளரும், தற்போது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாகச் சிறையில் இருப்பவருமான அல்பேர்ட்டோ பிஜுமோரி அவர்களின் மகளுமான கைக்கோ பிஜுமோரியை இரண்டாவது சுற்றுத் தேர்தலில் சந்திக்க நேர்ந்தது.
பரபரப்பு மிகுந்த சூழலில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காஸ்ரில்லா வெற்றி பெற்றார். எனினும் இந்த வெற்றியை ஏற்றுக் கொள்ளாத கைக்கோ பிஜுமோரியும் அவர்களின் ஆதரவாளர்களும் பல்வேறு வழிவகைகள் ஊடாக காஸ்ரில்லா ஆட்சிக் கட்டிலில் ஏறுவதைத் தடுத்துவிட முயன்றனர். அவர்களின் எந்தவொரு முயற்சியும் வெற்றியளிக்காத நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பைத் தொடர்ந்து எதிர்வரும் 28ஆம் திகதி புதன்கிழமை காஸ்ரில்லா பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யூன் 6ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலில் காஸ்ரில்லா 50.125 வீத வாக்குகளைப் பெற்றார். கைக்கோ 49.875 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். கைக்கோவை விடவும் காஸ்ரில்லோ 44,058 வாக்குகளையே அதிகமாகப் பெற்றிருந்தார். இரண்டு வேட்பாளர்களையும் பொறுத்தவரை பண பலமும், அதிகார பலமும் அதிகம் பெற்றவராக கைக்கோ பிஜுமோரியே விளங்கினார். அது மாத்திரமன்றி அரசியல் பாரம்பரியம் மிக்க ஒரு குடும்ப வாரிசாகவும் அவர் இருந்தார். பெரும் பணக்காரர்களினதும், படைத்துறையைச் சேர்ந்தவர்களினதும் ஆதரவும் அவர் பக்கமே இருந்தது.
மறுபுறம், காஸ்ரில்லோவுக்கு கிராமப்புற மக்களதும், சாமானிய மக்களதும் ஆதரவு அளவுக்கதிகமாக இருந்தது. சில கிராம வாக்குச் சாவடிகளில் கைக்கோ பிஜுமோரிக்கு ஒரு வாக்குக் கூடக் கிடைக்கவில்லை என்பதிலிருந்து, கிராமப் புறங்களில் காஸ்ரில்லோவின் ஆதரவு எவ்வாறு இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
தேர்தல் வெற்றிக்கு மிக இருகில் வந்திருந்த கைக்கோ பிஜுமோரியால், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், “வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றிருக்கின்றது. ஒருசில இடங்களில் ஒரு வாக்குக் கூட தனக்குக் கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” எனக் குற்றஞ்சாட்டிய அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்தார்.
அது மாத்திரமன்றி, அவரின் ஆதரவாளர்களான பிரபல சட்டத்தரணிகள் இணைந்து நீதிமன்றத்திலும் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். ஆளும் வர்க்கத்தின் ஆதரவு பெற்ற ஊடகங்கள் தேர்தல்களை வறிதாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன.
ஓய்வுபெற்ற 23 இராணுவ ஜெனரல்கள், 23 கடற்படை அட்மிரல்கள் மற்றும் 18 விமானப்படை லெப்டினன்ட் ஜெனரல்கள் இணைந்து நடப்பு இராணுவத் தளபதிக்கு ஒரு விண்ணப்பத்தை முன்வைத்தனர். “முறைகேடுகளுடன் கூடிய ஒரு தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வரும் ஒருவர் முப்படைகளின் தளபதியாவதை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும்” என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு கையூட்டு வழங்கி தேர்தல் முடிவுகளை கைக்கோ பிஜுமேரிக்குச் சாதகமாக மாற்றிவிட ஒரு முயற்சி நடைபெற்றமை கண்டறியப்பட்டது. சர்வாதிகாரியான அல்பேர்ட்டா பிஜுமேரியின் பிரதான ஆலோசகரும், அவரின் பதவிக் காலத்தில் புலனாய்வுத் துறையின் தலைவராக விளங்கியவரும், அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யின் நீண்டகால நண்பருமான வளாடிமிரோ மொன்ரசினோ இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
ஊழல், மோசடி, சட்டவிரோத ஆயுதக் கடத்தல், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் என்பவற்றில் சம்பந்தப்பட்டமைக்காக சிறை வைக்கப்பட்டுள்ள இவர் சிறை அதிகாரியின் தொலைபேசியைப் பாவித்தே இதற்கான காய் நகர்த்தல்களில் ஈடுபட்டிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.
கைக்கு பிஜுமேரி ஆதரவாளர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியைத் தழுவிய நிலையில், ஓ.ஏ.எஸ். எனப்படும் அமெரிக்க நாடுகளின் அமைப்பிடம் தலையீடு செய்யுமாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டில் பொலிவியாவில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் ஈவோ மொரலஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டபோதில் நடைபெற்றதைப் போன்ற ஒரு தலையீடு நிகழ்த்தப்பட வேண்டும் என்பதே கைக்கோ ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஒருவர் ஆட்சியில் இல்லாததாலோ என்னவோ, அமெரிக்கா இந்தக் கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை.
நாட்டு மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெறாத ஒருவராக காஸ்ரில்லோ பதவியைப் பொறுப்பேற்கிறார். அது மாத்திரமன்றி, ஊழலில் தின்று கொழுத்த பணக்கார வர்க்கத்தின், அரச அதிகாரிகளின் முழுமையான ஆதரவும் அவருக்கு இல்லை. எனவே, தனக்கு வாக்களித்த மக்களைக் கடந்து, வாக்களிக்காத மக்களின் மனங்களையும் வெல்ல அவர் பாடுபட வேண்டும். அது சாத்தியமா?
காஸ்ரில்லோவின் வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக் கழக அரசியல் விஞ்ஞானியான ஸ்ரீவன் லெவிற்ஸ்கி, “மிகவும் பலவீனமான ஒரு அரசுத் தலைவராக காஸ்ரில்லோ பதவிக்கு வருகிறார். ஒரு வகையில் பார்த்தால் 1970இல் சிலியின் அரசுத் தலைவராகப் பதவியேற்ற சல்வடோர் அலண்டே மற்றும் 1962இல் பிரேசிலில் அரசுத் தலைவரான ஜோ கௌலாற் ஆகியேரை அவர் நினைவு படுத்துகிறார்” என்கிறார்.
பெருவின் ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் ஆதரவு அற்ற நிலையில் காஸ்ரில்லோ பதவியேற்கிறார் என்பதைக் குறித்ததாகவே அவரின் கருத்து இருந்த போதிலும், குறித்த இரண்டு அரசுத் தலைவர்களும் அமெரிக்க ஆதரவு பெற்ற படை அதிகாரிகளால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்கள் என்பதை நினைவுபடுத்துவதாகவும் அவரது கருத்து உள்ளது.
அரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றிவளைத்த சொந்த நாட்டுப் படையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய நிலையில் சல்வடோர் அலண்டே 1972இல் மாண்டுபோனார். இராணுவச் சதிப் புரட்சி மூலம் ஆட்சியதிகாரத்தை இழந்த கௌலாற் 1964இல் உருகுவே நாட்டுக்குத் தப்பியோடினார். பின்னர், 1973இல் ஆர்ஜென்ரீனா சென்ற அவர் 1976இல் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.
உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்றான ‘இன்கா’ நாகரிகத்தின் ஊற்றுக் கண்ணான பெருவின் தலைவிதியை மாற்றும் திட்டங்களுடன் பதவியேற்கும் காஸ்ரில்லோ தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்னர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கே பெரும்பாடுபட வேண்டியிருக்கும் என்பதையே நடப்பு நிகழ்வுகள் நினைவு படுத்துகின்றன.
கடந்த மூன்று வருடங்களில் பதவியேற்கும் ஐந்தாவது அரசுத் தலைவராக காஸ்ரில்லோ உள்ளார். மக்கட்தொகையில் மூன்றிலொரு வீதமானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நிலையில், கெரோனாக் கொள்ளை நோய் காரணமாக உலகிலேயே அதிக வீதமான எண்ணிக்கையான மக்கள் இறந்த நாடாகவும் பெரு அறியப்படுகின்றது.
தேர்தலில் முறையாக வெற்றிபெற்று அதற்கான சான்றிதழைப் பெறுவதற்கே இத்தனை சவால்களைச் சந்தித்த காஸ்ரில்லோ பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் என்னென்ன சாவல்களைச் சந்திக்க உள்ளாரோ என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், அவரின் பதவிக்காலம் அவருக்கு மலர்ப் படுக்கையாக அமையப் போவதில்லை என்பது மாத்திரம் நிச்சயம்.