இந்த நாவலை ஈழவிடுதலைப் போராட்ட போராளிகளில் அதிகமானவர்கள் வாசித்தார்கள் என்பதற்கு பின்னால் ஒரு முக்கியமான செய்தியும் உண்டு. இடதுசாரி கருத்தியலை மையமாக கொண்ட சோவியத் புரட்சி சார்ந்த கருத்துக்களின் தாக்கத்தை இந்த நாவல் கொண்டிருப்பது இங்கு கவனம் பெறுகின்றது.
சாராம்சத்தில் ஈழவிடுதலைப் போராட்டம் 1970 களின் மத்தியல் அதிகம் இடதுசாரித் தன்மையை தன்னகத்தே கொண்டிருந்த பாதை தனது தெரிவாக கொணடிருந்தது. அதன்படிதான் பயணப்படத் தொடங்கியது.
ஆனால் அது வெகு சீக்கிரத்தில் மேற்கின் இடதுசாரிச் சிந்தனையின் மறுபக்கமான வலதுசாரி செயற்பாட்டிற்குள் மேற்குலகின் சதிகளால் தள்ளி விழுத்தப்பட்டது. இதன் ‘அறுவடையை’ நாம் இன்று பெற்றும் இருக்கின்றோம்.
தாய் என்ற நாவலை உருவாக்கிய மாக்சிம் கார்க்கி ரஷ்யாவில் நிஜினி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 1868 இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ்.
இவருடைய 5 ஆவது வயதில் வயதில் தந்தை இறந்தார். தந்தையார் மரவேலைக்காரர. தந்தையின் மரணத்தின் பின்னர் தாயின் ஆதரவும் இல்லாத இவரை பாட்டிதான் வளர்த்தார். 1879 இல் இவருடைய தாய் இறந்தார். இவரின் தாய்க்கும் இவருக்குமான வாழ்க்கையைப் பேசுவதே இந்த நாவல்.
வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவர் பெறவே இல்லை என்றே கூறலாம். வாழ்கை அனுபவங்கள்தான் அவருக்கு பாடங்களை கற்பித்தன. வறுமை அவரை 8 வயதில் வேலக்கு துரத்தியது.
ஆனால் வேலை செய்துகொண்டே தானாகவே சுயமாக கற்றலில் ஈடுபட்டார். அது பல்வேறு மொழிகளைக் கற்றலாக விரிவடைந்து ரஷ்சிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், ஜேர்மனி ஆகிய மொழிகளைக் கற்றதாக இருந்தது.
தனது எழுத்துத் துறையில் அது சார்ந்த அச்சுக் கோர்த்தல் எழுத்துகளை சரிபார்த்தல் என்று துறையில் ஒன்றாக வேலை செய்தவரை தனது வாழ்க்கைப் பயணத்தின் துணைவியாக காதலால் இணைத்துக் கொண்டார்.
மார்சிம் கார்கியின் படையிற்கு உலகலாவிய புகழுக்கும் கிடைத்த வெற்றிகள் அங்கிகாரம் என்பதற்கு சரிசமனாக பங்களிப்பு அவரின் வாழ்க்கைத் துணையிற்கு இருப்பதாக உணரப்படுகின்றது.
ஒரு புத்தகத்தை எழுதிய பின்பு அச்சுக் கோரப்பதற்கும் அதனை அச்சிட்டு வெளியிடுவது மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக அவரின் வாழ்க்கைத் துணைவி ஏகடரினா பவ்லோவ்னா வால்ழினா உடனான இணைந்த பயணம் மாக்ஸ், ஜென்னி; லெனின், குரூஸ்கையா போன்றவர்களின் இணைந்த பயணம் போல் பல சவால்களை வெற்றி கொண்டு மனித குலத்திற்கான வேலைகளை செய்து முடிக்கக் காரணமாக இருந்தது போலவே இருந்தது.
இது எம்மில் பலருக்கும் கூடவே ‘தூக்கு மேடைக் குறிப்பு’ ஜூலியஸ் பூசிக் அவரின் வாழ்க்கைத் துணை அகஸ்தினா பூசிக் இற்கும் பொருந்தித்தான் இருக்கின்றது.
அவர் வேலை செய்த டோப்ரி என்னும் பயணக் கப்பலில் சமையல்காரராக இருந்த மிகைல் அகிமோவிச் என்பவர் புத்தகங்கள் படிப்பதற்கு இவருக்கு ஆர்வத்தை ஊட்டினார்.
அன்றைய ரஷ்ய முற்போக்கு நாவலாசிரியர்களான டெர்ரெல்கெஸ்டாவ், லெர்மான்டொவ், தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனேவ், டிக்கனஸ், ஆண்டான் செகாவ் முதலானோரின் படைப்புகளை சிறிது காலத்திலேயே படித்து முடித்தார். இந்த இலக்கிய வாசிப்பு அவருடைய அறிவை கூராக்கியது. சிந்தனையை விரிவாக்கியது. அவரும் எழுதத் தொடங்கினார்.
எழுத்தில் ஆர்வம் உள்ளவரகள் எப்போதும் ஒரு குறிப்பேடுடன் இருப்பது சாலச் சிறந்தது. இதனை நானும் என் எழுத்துலக செயற்பாடுகளில் அனுபவஙகளாக கண்டேன்.
பல விடயங்கள் நித்திரையின் போது… வேலைகளில் ஈடுபடும் போது… உடற்பயிற்சியில் ஈடுபடும்போது… பயணம் செய்யும் போது… வீதியில் உலாத்தும் போது… என்றாக அன்றாட நிகழ்வுகளில் எற்படும்.
இவற்றைக் குறித்து வைத்து பின்பு தொகுத்து செழுமைப்படுத்தி வெளியிடுவதற்கு உபயோகபடபடுத்தலாம். உதிக்கும் போது குறிப்பெடுக்காதுவிட்டால் பின்பு உதித்த அந்த நல்ல கருத்துகள்… வாக்கிய நடைகள்…. பின்பு ஒரு சந்தர்பத்தில் எழுத முனையும் போது அனேகம் எமது ஞாபகத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.
அவை முன்பொரு கணத்தில் நினைவில் வந்து காற்றுடன் கலந்து கரைந்துவிடுவது போல் ஆகிவிடும்.
மாக்சிம் கார்க்கி எப்போதும் குறிப்பேடுடன் திரிந்து தோன்றும் போதெல்லாம் குறிப்பெடுத்து எழுதிய செய்பாடுதான் அவரை எழுத்துலகின் முக்கிய ஆளமையாக அது மனிதனகுலத்திற்கான இலக்கியங்களாக எம் முன் இன்று இருக்கின்றன.
அன்றும் இன்று போல்தான் எழுத்துலகில் ஈடுபடுபவர்கள் அனேகம் வறுமையில் உளன்றார்கள். பணம் ஈட்டும் தற்போதைய மேற்கத்திய ஹரி போட்டர் போன்ற எழுத்துகளுக்கு அப்பால் மக்களுக்கான கலை இலக்கியங்களை படைத்தவர்கள் தமது தோழில் ஒரு புத்தகப் பையும் கூடவே ஒரு வறுமைச் சுமையையும் சுமந்தவரகளே அதிகம் இருக்கின்றனர்.
இதில் மாக்சிம் கார்க்கியும் வேறுபட்டிருக்கவில்லை. வாழ்வதற்கான தொழிலாக இளமையிலேயே அவர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். முதலில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு கட்டட ஒப்பந்ததாரரிடம் வேலை செய்தார்.
வேலை கடினமாக இருந்ததால் தப்பியோடி டோப்ரி என்னும் பயணக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த ஓட்டம்தான் அவருக்கான எழுத்து ஆற்றலுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தியது.
கூடவே வாசிப்பு, அவதானிப்பு, கலந்துரையாடலில் ஈடுபாடுதல். அப்போது அறிவார்ந்தவரகளின் கருத்துகளை உள்வாங்குதல் என்றாக பலதையும் கொண்டிருந்து தன்னை சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் ஒரு தேடலுடன் அணுகினார்.
தேடல் உள்ளவனே பார்பவனே சிறந்த மக்கள் இலக்கிய படைப்பாளியாக இருக்க முடியம் இதுனையும் மாக்சிம் கார்க்கி தன் வாழ்க்கையில் கொணடிருந்தார்.
சாதாரணமாக வீதியில் பணயம் செய்யும் ஒருவன் வீதி ஓர வேலியில் உள்ள கதிகாலை மட்டும் ஏதோ வேலி என்றாக கடக்காமல் அதன் அடியில் உள்ள மண்ணின் நிறம் அதில் வளரும் செடிகள் அதில் உள்ள பூக்கள் காய்கள் கனிகள் அந்த மரத்தில் இருக்கும் குருவிகள் அவை பாடும் கானங்கள் என்றாக எல்லாவற்றையும் அவதானித்து தொடர்புபடுத்தி தன் காதலுடனும் சக மனிதர்களுடனும் இணைத்தப் பார்க்கும் தேடல் அவனை சிறந்த இலக்கியவாதியாக மக்கள் இலக்கியங்களைப் படைக்கும் ஒருவனாக மாற்றும்.
மாறாக இது வேலி என்று மட்டும் கடந்து செல்வபவனிடம் நாம் ஒரு படைபிலக்கியத்தைப் பார்க்க முடியாது. இதில் கார்க்கியன் வாழ்க்கை எமக்கு இலக்கிய உதாரணங்களாக இருக்கின்றன.
1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது.
மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள். ஆனால் அவர் மனித குலத்திற்கு இனிப்பான சுவையை இலக்கியங்களாக படைத்தார்.
1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன.
இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ‘ஆப்பிள்டன்’ இதழில் தாய் முதற்பகுதியின் முதற் பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான்.
கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாக இருந்தன.
இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.
பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.
பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1889-ஆம் ஆண்டு மாஸ்கோ சென்று ‘புத்துயிர்ப்பு’ லியோ டால்ஸ்டாயை சந்திக்க முடியாமல் திரும்பினார். கொரலென்கோ என்னும் புகழ்மிக்க எழுத்தாளரரைச் சந்தித்து தாம் எழுதிய கவிதையை பரிசீலிக்க தந்தார். 1891 ஆம் ஆண்டு ரஷ்ய நாடு முழுவதும் முக்கிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தார். 1900ஆம் ஆண்டு லியோ டால்ஸ்டாயை சந்தித்து கருத்து பரிமாறிக் கொண்டார்.
ரஷ்ய சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு நிதியுதவி அளித்துவந்தார். ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
ரஷ்யாவின் அக்டோபர் புரட்சியின் துவக்க நாட்களின் வன்முறை நிகழ்வுகளைக் கண்ட கார்க்கி இ பிரான்சுக்குப் போய்விட்டார் .
” நீங்கள் இல்லாமல் இந்த மக்கள் புரட்சி வெற்றி பெறாது….. உடனே புறப்பட்டு வருக ” – என்று அவருக்குச் செய்தி அனுப்பி இ அவரை மீண்டும் ரஷ்ய நாட்டுக்குத் திரும்புமாறு செய்தார் – மாமேதை லெனின். கார்க்கியின் எழுத்துக்களின் பரிமாணம் எடுத்தியம்ப இதனை விட சிwந்த வராற்றுக் குறிப்பை நாம் சொல்லிவிட முடியாது.
இவ்வளவு விடயங்களில் ஈடுபட்ட கார்க்கி தன் வாழ்க்கையில் நேரிட்ட துன்ப துயரங்களையும் இழிவுகளையும் நினைத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். உடலில் குண்டு பாய்ந்தும் பிழைத்துக் கொண்டார். இந்த தற்கொலை முயற்சியிற்கான உளவியல் புரியப்படாத ஒன்றாகவே பலருக்கும் படுகின்றது.
முற்போக்கு இலக்கியத்தின் பிதாமகரும் பல மக்கள் இலக்கியங்களைப் படைத்தவருமான மாக்சிம் கார்க்கி 68 வயதில் (1936) மறைந்தார்.
நாடு நகர எல்லை கடந்து, சமூக மத இன கலாச்சார மொழி பேதங்கள் கடந்து, நூற்றாண்டு காலம் கடந்து மக்களால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்படும் நூல்கள் சிலவற்றுள் மக்சீம் கார்க்கியின் தாய் நாவலும் ஒன்று.
தாய் நாவல் பற்றி……
ஒரு சமூகம் சோசலிச சமூகமாக மாறுவதன் பின்னணியில் எத்தனை எத்தனை மக்களின் வலியும் வேதனையும் உழைப்பும் பின்னிக் கிடக்கின்றன. அரசு நிர்வாகம் காவல் நீதி போன்ற அனைத்தும் வர்க்க நலனைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக எவ்வாறெல்லாம் செயல்படுகின்றன என்பதைப் புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவின் காட்சிகளால் மகோன்னதமாக படம்பிடித்துக் காட்டுகிறது இந்தத் தாய் இலக்கியம்.
காதலும் வீரமும்தான் எப்போதும் இலக்கியங்களின் அடிப்படைப் பேசுபொருள். கதைமாந்தர்களாக எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் பொதுவாக இலக்கியங்களின் கதாநாயன் ஆணாக இருப்பதே பெரும்பான்மை.
இவ்வாறான இலக்கியத்தின் வழக்கமான வரம்புகளை மீறி உயரத்தில் நிற்கிறாள் தாய். தெளிந்த நீரோடையைப் போல தன் வாழ்வின் இலட்சியங்களை நோக்கி, எவ்வித இடைச் சலனமும் இன்றி நடைபோடும் தாயின் மகன் பாவெல் விலாசவ், தான் கொண்ட கொள்கையையே காதலிப்பதும், அதற்காக உயிரையும் துச்சமென எண்ணிப் போராடும் வீரமும் வழக்கமான இலக்கியங்களில் காணக் கிடைக்காத கூறுகள்.
இத்தகைய காதலும் வீரமும்தான் புரட்சி இலக்கியத்துக்கான, புரட்சிப் பாதைக்கான உலகளாவிய இலக்கணம் என்பதாக இவ்விலக்கியம் நமக்கு வகுத்தளித்திருக்கிறது.
என்று எழுத்தாளர்கள் இனம் கண்டுள்ள தாய் நாவலை…
இதுவரை யாராவது வாசிக்காது இருந்தால் அதனை ஒரு தடவை வாசியுங்கள். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனுக்கும் அவனது தாயிற்கும் அவன் வாழும் சூழலில் ஏற்படும் போராட்ட வாழ்விற்கும் இடையிலான பயணத்தை யதார்த்தமாக அதே வேளை முன்னோக்கி நகர்வதாக அமைந்த இலக்கியம் இது.