ரஷ்யா… உக்ரெய்ன்…

It is very revealing that those who profit most from war, never die in war.

அதுதான் உண்மை.

ரஷ்யா முடிவை ரஷ்யா எடுக்கிறது.

உக்ரெய்ன் முடிவை அமெரிக்கா எடுக்கிறது.

பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது,

அங்கே வரமாட்டேன், இங்கே முடியாது

என்றெல்லாம் அலைக்கழித்த உக்ரெய்ன், ‘சரி, பெலாரஸுக்கு வருகிறேன்’ என்று ஒப்பியபிறகு, உக்ரேய்ன் செலென்ஸ்கி வாயில் வந்த முதல் முகூர்த்த வார்த்தை என்ன தெரியுமா?

“பேச்சுவார்தைக்கு சம்மதம். ஆனால்,

எதுவும் விளங்கப்போவதில்லை!”

இதுதான் மனோநிலை.

கட்டமைக்கப்பட்ட மனோநிலை.

போர் முடிந்துவிடக்கூடாது.

இதுதான் உள்ளூறின ஆசை.

ரெண்டுமாசம் ரஷ்யா வந்து எல்லையைச் சூழ்ந்து நின்றபோதும். அதற்கு செவிமடுக்காது உக்ரெய்ன் காத்து நின்றது இந்தப் போருக்காகத்தான்.

உக்ரெய்ன் ஜெயித்தால் என்ன? தோற்றால் என்ன?

செலென்கிக்கு காத்திருக்கிறது

அமெரிக்காவின் பட்டுப் பீதாம்பரம்.

உக்ரெய்ன் எப்படியும் அமெரிக்காவின் கைப்பாவை ஆகிவிடவேண்டும். ஒரே லட்சியம் அதுதான். அவ்வளவுதான்.

நினைவிருக்கிறதா? பெண்கள், குழந்தைகள், ஒட்டுமொத்தத்தில் பொதுமக்களை கேடயமாக்கி போரில் பயன்படுத்தினான் ஹிட்லர்.

அதே பாணியில்,போர் தொடங்கிய முதல்நாளே, இலவச மிக்ஸி கிரைண்டர் மாதிரி இலவசத் துப்பாக்கி குடிமக்களுக்கு வழங்கப்படும், மக்கள் போருக்குத் தயாராகவேண்டும் என்றார் செலென்ஸ்கி.

மக்கள் க்யூவில் நின்று துப்பாக்கி வாங்குவதாகவும், ஒரு எண்பது வயது தாத்தா எனக்கு ரெண்டு துப்பாக்கி கொடுங்கள், ரெண்டு கையாலும் சுடுவேன் என்று அடம்பிடித்ததாகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டன அமெரிக்க சார்பு தமிழக டிவிகள்.

பொதுமக்கள் என்ற பேரில் துப்பாக்கி எடுத்து சுடுவானாம்; ரஷ்யாக்காரன் பார்த்துவிட்டு சும்மா போவானாம்.

மக்களைப் போரில் ஈடுபடச் சொன்னது மகா குற்றம். இப்போது குடியிருப்புக்குள் ரஷ்யா தாக்குதல் தொடுக்கிறது என்று அலறுவது மகா அயோக்கியத்தனம்.

நேட்டோவில் பங்கெடுக்க உக்ரெய்னுக்கு சுய நிர்ணய உரிமை இல்லையா என்று சில சுதந்தர தாகிகள் கேட்கிறார்கள்.

எப்படி உண்டு?

எங்கோ அமெரிக்காவிலிருந்தும், பிரான்ஸிலிருந்தும், ப்ரிட்டனிலிருந்தும் லோகம் முழுமைக்கும் வந்து ராணுவத்தளம் அமைக்க நேட்டோவுக்கு என்ன அவசியம் வந்தது? என்ன உரிமை உண்டு?

நேட்டோ உருவானபோது, 11 நாடுகளின் சொந்தப் பாதுகாப்புக்கு என்றுதான் சொன்னார்கள். ஆனால், விதிகளின் முதல் பத்தியிலேயே சோவியத் ஆதிக்கத்தைத் தடுக்க என்று பிரகடனப்படுத்தி, நோக்கத்தைத் தெளிவாக்கிவிட்டார்கள்.

அவன் வந்து ரஷ்யாவின் வாசலில்

வெடிகுண்டுக் கூடாரம் அமைக்க

உக்ரெய்ன் இடம் கொடுப்பானாம்;

ரஷ்யாக்காரன் மௌனித்திருக்க வேண்டுமாம்.

சீனாக்காரன் லடாக்குக்குள் வந்தபோது

ஏன் குய்ய்யோ முறையோ என்று அலறினீர்கள்?

‘வந்து கூடாரமடித்துவிட்டுப் போகிறான் பாவம், அவன் இடுங்கிய கண்களைப் பார்த்தாலே பரிதாபம் சுரக்கிறது’ என்று

விட்டு விட வேண்டியதுதானே?

உங்களுக்கு வந்தால் குருதிப்புனல்?

ரஷ்யாவுக்கு வந்தால் குங்குமக் கரைசலா?

‘புட்டின் தங்கக் கம்பியா ?’

இல்லை.

‘கம்யூனிஸ ஆட்சி நடத்துகிறாரா?’

இல்லை.

‘பின் ஏன் அவரை சப்போர்ட் பண்ணுகிறீர்கள்?

போரை சப்போர்ட் பண்ணுகிறீர்கள்?’

புட்டினையும் சப்போர்ட் பண்ணவில்லை

போரையும் ஆதரிக்கவில்லை.

‘பின்னே?’

சோவியத் பயம் காட்டி நேட்டோவை நட்டீர்கள். அவர்களின் வார்ஸா கூட்டைக் காட்டி, நேட்டோவை வளர்த்துக்கொண்டு போனீர்கள்.

இப்போது சோவியத்தும் இல்லை.

வார்ஸாவும் இல்லை. நேட்டோவை

ஏன் கலைக்க மறுக்கிறீர்கள்?

எதற்கு நேட்டோ? நேட்டோவை உலகம் பூரா நிறுவ ஏன் அலைகிறீர்கள் ? தன்னந்தனி ரௌடிபோல ஏன் கலாட்டா செய்கிறீர்கள்? போரை விரும்பாத மாதிரி நாடகம் போடும் அமேரிக்கா ஏன் ராணுவத் தளவாடங்களை உலகமெல்லாம் கொண்டு செல்கிறது? நேட்டோவை ஏன் ரஷ்யாவின் நாலு திசைகளிலும் நிறுவுகிறது? இனி யாரால் உங்களுக்கு பயம்?

ரஷ்யாதான் எதிரி என்று, அவன் எல்லைக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அவனை அமைதியாக பொறுத்துக் கொள்ளச் சொல்வதில் என்ன நீதி இருக்கிறது?

எங்கே நியாயம் இருக்கிறது?

இதுவே ரஷ்யப் போரில் நமது கேள்வி!

நமது தரப்பு வாதம்!

போர் கூடவே கூடாது.

ரஷ்யாக்காரனாக இருந்தாலும் சரி,

அது யாராக இருந்தாலும் சரி,

போர் கூடாதென்றால் போர் கூடாதுதான்.

இது ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும், ஏன் எல்லாருக்குமே பொருந்தும்.

உலகமெங்கிலுமுள்ள அரசாங்கங்கள் –

இந்தியா உட்பட – ராணுவச்செலவுகளைக் குறைத்து, கல்விக்கும், சுகாதாரத்துக்கு செலவிட வேண்டுமென்று இறைஞ்சுகிற கூட்டத்தில்தான் நாங்கள் இருக்கிறோம்.

உக்ரெய்ன் அங்கு வாழும் ருஷ்யர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் நீதியான அரசாங்கத்தை நடத்தவேண்டும். ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த நேட்டோவை அழைக்கக்கூடாது. அமெரிக்கா அங்கிருந்து வந்து ஊரெல்லாம் மூக்கை நுழைக்கக்கூடாது. ஐநா என்ற ஒன்றை பொம்மையாக்கிவிட்டு நேட்டோவை பரப்பக்கூடாது. ரஷ்யாவும் போரைக் கைவிட்டு உலகில் பதற்றத்தைத் தவிர்க்கவேண்டும். பேசித் தீர்க்கமுடியாததை போரால் தீர்க்கமுடியாது.

இதுவே நமது நிலை.

ரஷ்யா கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும் ; அமெரிக்கா என்னவேண்டுமானாலும் அராஜகம் புரியலாம்;

ஒரு கண்ணுக்கு மயோனிஸ் –

மறு கண்ணுக்கு மெதில் ஆல்கஹால் என்பதுதான்……

வாதிட வருவோரின் நீதி என்றால்,

மன்னிக்க வேண்டும்.

நாங்கள் ரஷ்யன் பக்கம்தான்!

(Rathan Chandrasekar)