ஒரு வருடத்திற்கு முன்னர், எமது வரலாற்று நிலங்களில் வாழும் மக்களைப் பாதுகாப்பதற்காகவும், எமது ரஷ்ய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மற்றும் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் நவ-நாசிகளின் பிடிக்குள்ளிருக்கும் உக்ரைன் ஆட்சியாளர்களிடமிருந்து வரும் அச்சுறுத்தலை அகற்றுவதற்காகவும், விசேட இராணுவ நடவடிக்கையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. எங்களிடம் தற்போது இருக்கும் பணிகளை படிப்படியாகவும் கவனமாகவும், சீராகவும் செய்வோம்’
ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு பெப்ரவரி 21ந் திகதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூட்டாட்சி பாராளுமன்றத்தில் பேசும்போது மேற்கண்டவாறு ஆரம்பித்து, ஏறத்தாள 2 மணித்தியாலங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனது உரையை நிகழ்த்தினார்.
இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் சோவியத் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையில் ஆரம்பித்த பனிப்போர் ஏறத்தாள 45 ஆண்டுகள் நீடித்தது. வெற்றி தோல்வி எதுவுமின்றி பனிப்போர் முடிவுக்கு வந்தபோதும், அமெரிக்கா தன்னை ஏகபோக வெற்றியாளனாகக் கருதி ஒற்றைத்துருவ உலக ஒழுங்கிற்குள் (Unilateral World Order) உலகைக் கடந்த 30 ஆண்டுகாலமாக கட்டுப்படுத்தி வருகின்றது. பனிப்போரின் முடிவுக்கு பின்னர் நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்புக்கான தேவை எதுவுமில்லாத போதும், 1999 ஆண்டிலிருந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளை புதிய உறுப்பினர்களாக இணைக்கத் தொடங்கியது. ரஷ்ய எல்லைகளை நோக்கிய இந்த விஸ்தரிக்கப்பினை தனக்கெதிரான நேரடி அச்சுறுத்தலாகவே ரஷ்யா எண்ணியது.
அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளே தற்போதைய ரஷ்ய-உக்ரைன் மோதலுக்கான சூத்திரதாரிகள். இவர்களே நேட்டோவில் உக்ரைன் இணைவதை ஊக்கப்படுத்தி, போரினைத் தீவிரப்படுத்துகிறார்கள். உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன்னர், உக்ரைன் நேட்டோவில் சேர்க்கப்படுவதை நேட்டோவின் கணிசமான உறுப்பினர்கள் எதிர்த்து வந்தனர். ஆனால் அமெரிக்காவின் அழுத்தத்தால், தமது எதிர்ப்பினை பெரும்பாலான நாடுகள் இப்போது கைவிட்டுவிட்டன.
உக்ரைனுக்கான இராணுவத் தளவாடங்களுக்காக இதுவரையில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து 150 பில்லியன் டொலர்களுக்கு மேல் வழங்கியுள்ளன. இத்தொகையில் 115 பில்லியன் டொலர்களை வழங்கி அமெரிக்காவே முன்னணியில் நிற்கின்றது. கடந்த ஒரு வருடப்போரி;ல் இலட்சக்கணக்கான உக்ரேனிய வீரர்கள் காயமடைந்தும் இறந்துமுள்ளனர். அதே நேரத்தில், வழங்கப்படும் உதவிகளில் 70 வீத்தினை உக்ரைன் அரசாங்கம் திருடி ஊழல் செய்கின்றது என்பதைத் தெரிந்து கொண்டும் உதவிகள் கண்மூடித்தனமாகத் தொடர்கின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளே காரணம் என்றும், ரஷ்யாவிற்கு உக்ரைன் முழுவதையும் கைப்பற்றும் நோக்கமோ அல்லது ரஷ்ய பேரரசை மீண்டும் நிறுவுதற்கான எந்த ஆதாரமோ கிடையாதென சிக்காக்கோ பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியர் ஜோன் மெர்ஷெய்மர் (John Mearsheimer) திரும்பத்திரும்ப கூறி வருகின்றார்.
கடந்த செப்டம்பரில் ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு பல்ரிக் கடல் (Baltic sea) வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் குழாய்கள் (Nord Stream 2) தகர்க்கப்பட்டபோது, ரஷ்யாவே அதன் சொந்த குழாய்களில் கண்ணி வெடிகளைப் பொருத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக அறிவித்து, கதையை திசை திருப்பப் பார்த்தனர். ஆனால் புகழ்பெற்ற அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளர் சீமோர் ஹெர்ஷ் (Seymour Hersh) எழுதியுள்ள கட்டுரையில், நோர்வேயின் உதவியுடன் அமெரிக்க கடற்படைதான் நாசவேலையை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
இறுதிச் சரிவை நோக்கி நகரும் வல்லரசுகள், ஓர் இராணுவத் தோல்வியிலிருந்து மீள, மற்றொரு இராணுவ மோதலுக்குத் தாவுகின்றன.
உக்ரைனில் ரஷ்ய இராணுவத் தலையீட்டுக்கு வழிகோலிய அமெரிக்காவின் செய்கை இந்த வகையானதே. அத்துடன் இந்த மோதல் உலகளாவிய மேலாதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் மற்றுமொரு முயற்சியே. இதில் ஆபத்து என்னவென்றால், நிலைமைகள் எவ்வளவு மோசமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு அமெரிக்கா மோதலைத் தீவிரப்படுத்தி, ரஷ்யாவுடனான வெளிப்படையான மோதலைத் தூண்டுகிறார்கள். நேட்டோ நாடுகளிலுள்ள இராணுவத் தளங்கள் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்துவதையோ அல்லது உக்ரைன் மீது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதையோ ஆதரிக்கிறார்கள். இதன்மூலம் நேட்டோ நேரடியாகக் களத்தில் இறங்கி ரஷ்யாவைத் தோற்கடிக்கலாமென எதிர்பார்க்கிறார்கள். ஆனால் உக்ரைன் எல்லைகளுக்கு அப்பால் தனது கவனத்தைச் செலுத்தாது ரஷ்யா நிதானத்தை கடைப்பிடித்து வருகின்றது.
அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளுக்கும் முன்னே குறைந்தது இரு தெரிவுகள் மாத்திரமே உள்ளன. ஒன்றில், உக்ரைன் குறித்த தங்கள் தற்போதைய கொள்கையை அவர்கள் தொடரலாம், இது ரஷ்யாவுடனான பகைமையை மென்மேலும் அதிகரிப்பதோடு, உக்ரைனைச் சீரழித்து, எல்லோரும் தோல்வி அடைய வேண்டிய சூழல் ஏற்படலாம். அல்லது வளமான உலகை உருவாக்க விரும்பினால், உக்ரைன் தொடர்பாக அவர்கள் மாற்றுக் கொள்கையொன்றினை கடைப்பிடிக்கலாம். அதாவது ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் எதுவுமில்லாது நடுநிலையாக இருக்க உக்ரைனை அனுமதிப்பதோடு, ரஷ்யாவுடனான உறவுகளையும் மேற்குலகம் சீர்செய்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான அணுகுமுறையால் மாத்திரமே, ரஷ்ய-உக்ரைன் யுத்தம் மூன்றாம் உலகப்போராக உருவெடுப்பதைத் தடுத்து நிறுத்தி, அனைத்து தரப்பினரும் அமைதியாக வாழலாம் என்ற நிலை உருவாகும்.
(வானவில்)