உலகத்திலேயே அதிகளவான சதவீதத்தில் பெண்களை அமைச்சரவையில் உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் நாடென்றால் அது ருவாண்டாதான். அமைச்சரவையில் 55 வீதமானவர்கள் பெண்கள்.
ருவாண்டா நாட்டின் அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவருமே ஒன்றுக்குக் குறையாத பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றவர்கள்.
ஆபிரிக்காவில் வர்த்தகம் செய்வதற்கு சிறந்த இடங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ருவாண்டா விளங்குகிறது.
ஊழலற்ற நாடு என்ற பட்டியலில் கிழக்கு ஆபிரிக்காவில் முதலாவது இடத்தினைப் பிடித்திருக்கிறது ருவாண்டா.
இப்படியான உயர்ந்த பண்புகளுடன் ருவாண்டா இன்று விளங்குகின்ற அதேவேளை பொருண்மியத்திலும் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்தாலும் 1994 ஆம் ஆண்டு நாட்டில் நடைபெற்ற ருட்சி இன மக்களுக்கெதிரான மாபெரும் இனப்படுகொலையில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டமையானது உடனடியாக பொருண்மியத்தில் மேம்பாடு காணமுடியாமல் செய்துவிட்டது எனலாம்.
1994 ஆம் ஆண்டில் இனப்படுகொலையானது முடிவிற்கு வந்ததன் பின்னர் உடனடியாக நாட்டினை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து இனிமேல் ருவாண்டா நாட்டில் இனமே இல்லை என்ற நிலைக்கு தற்போது நாடு வந்துவிட்டது.
இதற்கு ருவாண்டா நாட்டு மக்கள் பாரிய மனப்பாங்கு மாற்றத்திற்கு தயாரானார்கள். இவ்வாறு எளிதாக நடைபெற முடியுமா என்றால் முடிந்திருக்கிறது என்பதே ருவாண்டாவில் பதிலாகியிருக்கிறது.
அதற்கு அந்நேரத்தில் ருவாண்டாவை தலைமையேற்று வழிநடத்திய போல் ககாமே அவர்களே முதன்மைக் கரணீயமாகும்.
1959 ஆம் ஆண்டு பெல்ஜியம் ருவாண்டாவிற்கு விடுதலையினை வழங்கியது. 1959 வரை ருவாண்டாவின் ஆட்சி அதிகாரத்திலும் அரசின் முக்கிய பொறுப்புகளிலும் இருந்தவர்கள் ருவாண்டாவில் எண்ணிக்கையில் குறைவாக வாழ்ந்து கொண்டிருந்த ருட்சி இன மக்களே.
கூட்று இன மக்கள் 85 சதவீதத்தில் இருந்தாலும் கூட ருட்சி இன மக்கள் அவர்களை அடக்கி ஆண்டார்கள்.
தொடர்ந்து பொறுக்க முடியாத கூட்று இன மக்கள் பெல்ஜியத்தின் வெளியேறுகையின் பின்னர் நாட்டின் பெரும்பாலான இடங்களில் ருட்சி இன மக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
1965 ஆம் ஆண்டு வரை ஏறத்தாள 150,000 இற்கு மேற்பட்ட ருட்சி இன மக்கள் கூட்று இன மக்களால் கொல்லப்பட்டார்கள். இலட்சக்கணக்கான மக்கள் விழுப்புண்ணடைந்தார்கள்.
ஏறத்தாள 300,000 மக்கள் அண்டை நாடுகளுக்கு உயிரச்சத்தினால் ருவாண்டைவிட்டு இடம்பெயர்ந்தார்கள்.
ரூவாண்டா, வடக்கே உகண்டாவினாலும் கிழக்கே தன்சானியாவினாலும் தெற்கே புறுண்டியினாலும் மேற்கே கொங்கோ குடியரசினாலும் கிவி ஏரியினாலும் எல்லையிடப்பட்ட நாடாகும். ஏறத்தாள நிலத்தினாலேயே ருவாண்டா அண்டை நாடுகளினால் பிரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் காலத்தில் தான் போல் ககாமே இன் குடும்பம் ருவாண்டாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த இனமுறுகலில் சிக்கித் தவித்து ஒரு வாறு தப்பிப் பிழைத்து உகண்டாவில் தஞ்சமடைந்தது. அந்தக் காலத்தில் உகண்டாவை இடிஅமீன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்.
(இடிஅமீன் ஆட்சிக்கெதிரான போல் ககாமேயின் பங்கு அடுத்துவரும் பகுதிகளில்)
நிழற்படத்தில் இருப்பவர்கள் ருவாண்டாவின் பெண் அமைச்சர்கள்.