புதன்கிழமை (14) ஜேர்மனியர்களுக்கு ஓர் அதிர்ச்சிகரமான செய்தியோடு விடிந்தது. அச்செய்தி இதுதான்: மூவாயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு அலுவலர்கள் நாடெங்கும் தேடுதல் வேட்டைகளில் இறங்கி, 25 பேரைக் கைது செய்தனர். இதன்மூலம், அரசாங்கத்தைத் தூக்கி எறிவதற்கான சதி முறியடிக்கப்பட்டது. இது ஜேர்மனியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நீண்டகாலமாக அதிவலதுசாரி அபாயம் குறித்துக் கேட்கப்பட்ட போதெல்லாம், ஜேர்மன் பொலிஸாரும் அரசாங்கமும் அவ்வாறு அபாயமில்லை என்பதைத் தொடர்ந்து சொல்லி வந்தார்கள்.
ஆனால், கடந்த ஒரு தசாப்தகாலமாக ஜேர்மனியில் அதிவலதுசாரிகளுக்கான ஆதரவு அதிகரித்து வந்துள்ளது. இந்த நிகழ்வு, மிகப்பெரிய விழிப்புணர்வை மட்டுமன்றி, அதிவலதுசாரிகளின் ஆபத்தையும் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் புரியவைத்துள்ளது.
இந்த விழிப்புணர்வு, ஜேர்மனிக்கு மட்டுமன்றி, முழு ஐரோப்பாவுக்கும் ஓர் எச்சரிக்கையாக உள்ளது. குறிப்பாக, பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளை, முழு ஐரோப்பாவும் இன்று அனுபவிக்கையில், அரசுகள் ஆட்டங்கண்ட நிலையிலேயே உள்ளன.
இந்தச் சதியின் பல்வேறு அம்சங்கள், பல்பரிமாண நெருக்கடிகளைக் கொடுத்துள்ளன. இந்தச் சதித்திட்டத்தின் மொத்தக் கதை, ஓர் உளவு நாவலின் கதையை ஒத்ததாக இருக்கிறது. இந்தச் சதியின் ஓரம்சம் இராணுவத்தினரின் ஆதரவாகும். இன்னோர் அம்சம், அரசாங்கப் பதவிகளில் இருப்பவர்கள் சம்மந்தப்பட்டிருப்பதாகும்.
ஆனால், ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாதம் குறித்து ஆய்வு செய்வோர், இந்தச் சதியில் அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உயர்பதவிகளில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல என்கிறார்கள்.
அவர்கள், “ஜேர்மன் இராணுவத்துக்குள் இந்த வகையான தீவிர சதித்திட்டங்கள், பல ஆண்டுகளாக இருந்ததை நாங்கள் பார்த்தோம். அவற்றைக் கண்காணிக்கவும் பொறுப்பேற்கவும் வேண்டிய அமைப்புகளும் ஏஜென்சிகளும், அதைச் செய்யத் தவறியதையும் அவர்களுக்கு எதிராகச் செயற்படத் தவறியதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
அதன் ஒரு பகுதி நிச்சயமாக, சிக்கலான பிரச்சினைகள் மற்றும் எளிதான விசாரணைகள் அல்ல. தீவிர வலதுசாரிகளுக்கு ஜேர்மனியில் இராணுவம், பொலிஸ் கட்டமைப்புகளின் பல பகுதிகளுக்குள், சில உண்மையான உடந்தைகள் அல்லது சில உண்மையான அனுதாபங்கள் உள்ளன என்ற உணர்வைத் தவிர்ப்பது கடினம்.
இது, கட்டளைச் சங்கிலியில் எவ்வளவு உயரத்தில் செல்கிறது என்று சொல்வது மிகவும் கடினம். அதாவது, ஜேர்மனியில் இராணுவத்திலும், அரசியல் உயரடுக்குக்கு உள்ளேயும் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் நபர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்தச் சிக்கலை விசாரிப்பதில் இருந்து, அவர்கள் ஆதாரங்களைத் திசை திருப்பியுள்ளனர்” என்று தெரிவிக்கிறார்கள்.
இந்தச் சதி தொடர்பட்டதாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெர்லின் நீதிபதி. அவர் தீவிர வலதுசாரி கட்சியின் உறுப்பினர். கடந்தமுறை தேர்தலில் வெற்றிபெற்று, பாராளுமன்றத்தில் இருந்தவர். இம்முறை தேர்தலில் தோல்வியடைந்ததால், தனது முன்னைய பதவிக்குத் திரும்பிவிட்டார்.
அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், குடியேற்றத்துக்கு எதிராகப் பேசினார்; ‘நோய்-இறக்குமதி செய்யும் புலம்பெயர்ந்தோர்’ என்று தனது பாராளுமன்ற உரைகளில் அகதிகளை முத்திரை குத்தினார். பெர்லின் நகர அரசாங்கத்தின் நீதி அமைச்சர் லீனா கிரெக் (இடதுசாரி கட்சி) அகதிகள் பற்றிய அவரது பெண் வெறுப்பு அறிக்கைகளுக்காக அவரை கட்டாய ஓய்வு பெறவேண்டும் என்று போரிட்டார்.
ஆனால், மேல் நிர்வாக நீதிமன்றம் நீதிபதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. மற்றும், பாராளுமன்றத்தில் அவர் கூறிய சில அறிக்கைகள் தீவிரமானதாக இருந்தாலும் அது அவரது நீதிமன்றத் தீர்ப்புகளைப் பாதிக்காது என்றும் அவர் அரசியல் சாய்வோடு இயங்கமாட்டார் என்றும் தெரிவித்தது.
இன்று அதிவலதுசாரி சித்தாந்தத்தை நேரடியாக ஆதரிக்கின்ற பலர், ஜேர்மன் நீதித்துறையில் இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி, ஜேர்மனிய நீதித்துறையைக் கொண்டு செல்கிறது என்று ஆய்வாளர்களும் நீதித்துறைசார் நிபுணர்களும் தெரிவிக்கிறார்கள்.
அதிவலதுசாரிகளுக்கான பரந்துபட்ட ஆதரவு, ஜேர்மனியில் எவ்வாறு உருவானது என்ற வினாவை ஆழ்ந்து நோக்க வேண்டியுள்ளது. இதற்குக் குறுகியகால, நீண்டகாலக் காரணிகள் இருக்கின்றன.
குறுகிய காலக்காரணியாக 2015-2016ஆம் ஆண்டளவில் சிரிய யுத்தத்தின் விளைவாக, ஜேர்மனியில் அகதிகள் நெருக்கடி ஏற்பட்டது. சிரிய அகதிகளை ஏற்கும் ஜேர்மன் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்காக, மக்கள் ஆதரவு திரட்டப்படவில்லை.
இது அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்புப் படைகளையும், ஜேர்மன் மக்களில் பெரும் பகுதியினரையும் வலதுசாரி தீவிரவாதத்துக்கு அனுதாபம் உள்ளவர்களாக்கியது. ஒருதொகுதி மக்களைத் தீவிர வலதுசாரி சாய்வு நோக்கித் தள்ளியது.
நீண்டகாலக் காரணி யாதெனில், இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, நேச நாட்டுப் படைகள் ஸ்ராலினிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் எதிராக ஓர் அரண் உருவாக்க ஆர்வமாக இருந்தன. எனவே கம்யூனிசம் பரவுவதைத் தடுக்க பல முன்னாள் நாஜிகளுடன் நெருக்கமாக பணியாற்றத் தயாராக இருந்தன.
இதற்கு வசதியாக ஜேர்மனியில் முன்னாள் நாஜிகள் பாதுகாக்கப்பட்டதோடு, அவர்கள் கம்யூனிச எதிர்ப்புக்கான முக்கிய அரணாகவிருந்தனர். அவ்வகையில் ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டாலும் நாஜிகளும் அவர்தம் சித்தாந்தங்களும் தொடர்ந்தும் நிலைபெற அனுமதிக்கப்பட்டன. நாஜிகளுக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்தன. இது தனியே விரிவாகப் பேசப்படவேண்டியது.
கடந்த வார நிகழ்வு ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து, ஜேர்மனியர்கள் இன்னமும் முழுமையாக வெளிவரவில்லை. மக்கள் ஒருபுறம் என்ன நடந்தது? இதன் தீவிரம் என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள். இன்னொருபுறம் இந்நிகழ்வைக் கடந்து செல்ல முயலுகிறார்கள். ஆனால் பழைமைவாதிகளில் பெரும்பாலானோர் இந்த நிகழ்வை முக்கியமற்றதாகக் கருதுகிறார்கள்.
அதேவேளை, தீவிர வலதுசாரி தேசியவாதிகள், இந்நிகழ்வைத் ‘திட்டமிட்ட நாடகம்’ என்று வர்ணிக்கிறார்கள். ஜேர்மனியில் சிரிய அகதி ஒருவன், ஜேர்மனியக் குழந்தையைக் குத்திக் கொலைசெய்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்காக, இந்த நாடகத்தை அரங்கேற்றியதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதையும் கணிசமானளவு மக்கள் நம்புகிறார்கள்.
இந்த நிகழ்வு, அரசாங்கத்தின் தரப்பில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு காலமும் அசண்டையீனமாக இருந்த ஜேர்மனிய அரசாங்கம், இறுதியாக விழித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது. அதாவது, இந்தப் பிரச்சினைகளைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்ட தனிப்பட்ட அரங்காடிகள், இதற்கு முன்பு அரசாங்கத்தில் இருந்தனர். ஆனால், அரசாங்க உயரடுக்கு அவர்களின் குரல்களை செவிமடுக்கவில்லை.
இன்று ஜேர்மனிய அரசாங்கத்துக்கு இருக்கின்ற முக்கியமான பிரச்சினை, இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளில் ஆழமாகச் செல்வாக்குச் செலுத்துகின்ற அதிவலதுசாரி தீவிரவாதம் ஆகும்.
இந்தச் சதி, அதிகளவில் அரச அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்போதுதான் ஜேர்மனியின் உள்நாட்டு புலனாய்வு சேவையின் தலைவர், இந்த இயக்கம் கடந்த ஆண்டில் வளர்ந்துள்ளது என்றும் ‘உயர் மட்ட ஆபத்தை’ கொண்டுள்ளது என்றும் பொதுவெளியில் ஒத்துக் கொண்டுள்ளார்.
இந்த அதிவலது இயக்கத்தின் மிகவும் ஆபத்தான கூறுகளில் ஒன்று என்னவென்றால், அவர்கள் மொட்டையடித்த தலைகள், கறுப்பு காலணிகளுடன் வெளியே செல்லும் கோபமான இளைஞர்கள் அல்ல. வழமையான நவ-நாஜி அணிவகுத்துத் செல்பவர்கள் அல்ல. அடையாளங்களுடனும் சின்னங்களுடனும் தம்மை வெளிப்படையாகக் காட்டிக் கொண்பவர்கள் அல்ல.
கைது செய்யப்பட்டவர்களில் பலர் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள்; அவர்கள் மரியாதைக்குரியவர்கள்; நடுத்தரக் குடிமக்கள். இது, இந்த இயக்கத்தை ஓரளவு கண்ணுக்கு தெரியாததாக ஆக்குகிறது. எனவே அவர்கள் 1990களில் நவநாஜிக்கள் என்று மக்கள் கருதியவற்றிலிருந்து மிகவும் சமூக ரீதியாக வேறுபட்ட இயக்கமாக உருவாகிவிட்டனர்.
2017ஆம் ஆண்டு, அமெரிக்காவில் தோற்றம் பெற்றுப் புகழ்பெற்ற QAnon என்கிற சதிக்கோட்பாட்டையுடைய அரசியல் இயக்கத்தின் செல்வாக்கு, ஜேர்மனியில் அதிகரித்துள்ளது. QAnon ஆதரவாளர்களில் ஒன்லைனில் இரண்டாவது பெரிய சமூகமாக ஜெர்மனி உள்ளது.
எனவே, டெலிகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில் QAnon சேனல்களுக்கு சந்தா செலுத்தும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஜெர்மனி அந்த வகையில் மிகவும் செழிப்பாக உள்ளது. இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இவையனைத்தும் ஒரே திசையை நோக்கியே சுட்டுகின்றன. பொருளாதார நெருக்கடி ஏற்படுத்துகின்ற சமூக நெருக்கடி தவிர்க்கவியலாதபடி தீவிரவாத நிலைப்பாடுகளை நோக்கி மக்களை நகர்த்துகின்றன. இதன் முதற்படியே ஜேர்மனியில் அரங்கேறுவது ஆகும்.