ஆனால், ஜப்பானில் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சியை விளங்கிக் கொள்ள இக்கொலைக்கான காரணியைப் புரிந்து கொள்வது முக்கியமானது. 41 வயதான சந்தேக நபர், வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் அபேயை சுட்டதாக ஒப்புக்கொண்டார். அவர், ‘மதக்குழு’ ஒன்றின் மீது வெறுப்பு கொண்டிருந்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
தனது தாயார், குறித்த குழுவுக்கு பெரும் நன்கொடைகளை வழங்கியதன் காரணமாக, இறுதியில் திவாலான நிலைக்குச் சென்றதாகவும், அதனால் குறித்த மதக் குழுவின் தலைவரை தாக்க திட்டமிட்டதாகவும் கூறினார்.
கொலை நடந்து சில நாள்களின் பின்னர், சந்தேகநபரின் தாய், தம் மதக் குழுவைச் சேர்ந்தவர் என்றும் 1998ஆம் ஆண்டு தாயார் குழுவில் சேர்ந்து, 2002ஆம் ஆண்டில் திவாலானார் என்றும் ‘யூனிஃபிகேஷன் சர்ச்’ என்று பரவலாக அறியப்படும், உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான குடும்பக் கூட்டமைப்பு கூறியது.
ஜப்பானிய அரசியல் கட்சிகளும் ஊடகங்களும், இக்கொலையை ‘ஜனநாயகத்துக்கு சவால்’ அல்லது ‘பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்’ என்று முத்திரை குத்தின. பொலிஸாரினதும் ஊடகங்களினதும் அறிக்கைகள், இந்தக் கொலை அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்று குறிப்பிடுகின்றன.
இருப்பினும், ஜப்பானில் இதுவரை சொல்லப்படாத ஒரு வலதுசாரி தேசியவாதியாக அபேயின் கடந்த காலத்தை, இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியது. மேலும், அவரது ‘ஒரு வலிமையான’ அரசியல் பிம்பத்தால், அவரது கடந்தகாலம் இருளில் புதைக்கப்பட்டது என்ற உண்மை பொதுவெளிக்கு வந்தது.
‘யூனிஃபிகேஷன் சர்ச்’க்கும் அபேயின் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான நெருங்கிய உறவு, ஜப்பானில் விவாதிக்கப்படாத ஒன்று. இச்சேர்ச்சானது 1954இல் தென் கொரியாவில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர் சன் மியுங் மூனால் நிறுவப்பட்டது. ஜப்பானிய கிளை 1959 இல் திறக்கப்பட்டது. மேலும், 1990களில், உலகம் முழுவதும் தீவிரமாக விரிவடைந்தது.
கம்யூனிசத்துக்கு எதிரான, தாராளவாத ஜனநாயகக் கட்சியின் நம்பகமான கூட்டாளிகளில் இந்தக் குழுவும் ஒன்றாகும். குறித்த சர்ச் தொடர்பான நிகழ்வுகளில், செப்டெம்பர் 2021இல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் வீடியோ இணைப்பு மூலம், அதிவலதுசாரி ஆதரவாளர்களிடையே பேச்சாளராக அபே தோன்றினார். குறித்த சேர்ச்சை கம்யூனிச எதிர்ப்பு வலதுசாரி குழுவிலிருந்து பிரிக்க முடியாது என்ற வகையில், இரண்டுக்குமான உறவு இருந்தது.
‘அசோசியேஷன் ஒப் ஸ்பிரிச்சுவல் லீடர்ஷிப்’ என்ற மற்றொரு வலதுசாரி மதக் குழுவுடன் அபே ஷின்சோ தொடர்புகளைக் கொண்டிருந்தார். இம்மதக்குழு, ஏகாதிபத்திய ஜப்பானின் (1868 முதல் 1945 வரை) அதிகாரபூர்வ சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறது. இது 1997 இல் நிறுவப்பட்ட தீவிர வலதுசாரி தேசியவாத அமைப்பான ‘நிப்பான் கைகி’ (ஜப்பான் மாநாடு) உடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது.
ஜப்பானின் வரலாற்றில் மிக அதிககாலம் பிரதமராக இருந்தவர் என்ற வகையில், ஜப்பானிய அரசியல் பண்பாட்டை அபே வழிப்படுத்தினார். அதில் அதிவலதுசாரித்துவத்தின் சாயல் மிகத் தெளிவாக இருந்தது.
இந்தப் பின்புலத்திலேயே ஜப்பானின் அதிவலதுசாரித்துவத்தின் வரலாற்றையும் சமகாலச் செயற்பாடுகளையும் நோக்க வேண்டியுள்ளது. ஜப்பானிய வலதுசாரிகளின் சித்தாந்தங்கள், வரலாறு முழுவதும் தொடர்ந்து உருவாகி வந்தாலும், ஜப்பானிய வலதுசாரி அரசியலின் பரிணாம தளத்தை வடிவமைத்த அரங்காடிகளின் பன்முகத்தன்மை கொண்ட குழுக்கள், பேரரசர் மீதான அவர்களின் ஒற்றை பக்தி, மரியாதை ஆகியவற்றில் ஒன்றுபட்டுள்ளன.
ஜப்பானிய வலதுசாரி இயக்கங்கள் முதலில், ‘ஐரோப்பிய மயமாக்கல்’ நோக்கிய போக்குகளுக்கு எதிரான ஓர் இயக்கமாகவும், பின்னர், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானிய ஏகாதிபத்திய விரிவாக்கத்தை நியாயப்படுத்தும் ஓர் அணிதிரட்டல் சக்தியாகவும் உருவெடுத்தன.
1895 முதல் 1945 வரை, ஐந்து பெரிய போர்களின் (சீன-ஜப்பானியப் போர், ரஷ்ய-ஜப்பானியப் போர், முதலாம் உலகப் போர், இரண்டாம் சீன-ஜப்பானியப் போர், பசிபிக் போர்) விளைவாக, ஆசியாவில் கொரியா, தாய்வான், மஞ்சூரியா, தென்கிழக்கு ஆசியா முழுவதும், கடலோர சீனாவின் பெரும்பகுதி, மேற்கு பசிபிக் பகுதியின் பெரும்பாலான தீவுகள் முழுவதும் பரந்து விரிந்த அகண்ட பேரரசை ஜப்பான் உருவாக்கியது. ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்குச் சவால் விடும் ஆசியர்களின் ஒரு பெரிய குடும்பத்தின் தந்தையாக சித்திரிக்கப்பட்ட ஜப்பானிய பேரரசரின் கீழ், பான்-ஆசியவாதத்தின் வலதுசாரி சித்தாந்தங்கள், கொலனித்துவ விரிவாக்கத்தில் முன்னணியில் இருந்தன.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஒரு நிறுவனமாக பேரரசர் அமைப்பு இருந்தபோதும், பேரரசரது அதிகாரமும் மற்றும் தெய்வீக அந்தஸ்தும் பறிக்கப்பட்டது. மேலும், பேரரசரை ஒரு வெறும் பிரமுகராக புதிய ஜப்பானிய அரசியலமைப்பு மாற்றியது. இது போருக்கு முந்தைய அதிவலதுசாரிக் குழுக்களின் ‘பேரரசருக்கான விருப்பு’ என்ற அடிப்படையை சரித்தது.
இருந்தபோதும் ஜப்பானில் ‘கம்யூனிச அபாயம்’ குறித்து, அமெரிக்கா கவலைகொண்டது. ஜப்பானில் கம்யூனிசம் காலூன்றாமல் பார்த்துக் கொள்ள, இந்த அதிவலதுசாரி குழுக்களை பயன்படுத்தியது. இக்குழுக்கள் கட்டற்ற வன்முறையில் ஈடுபட்டன. இடதுசாரித் சித்தாந்தத்தைப் பின்பற்றுவோர் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
1960ஆம் ஆண்டு, ஜப்பானிய சோசலிசக் கட்சியின் தலைவர் அசனுமா இனெஜிரோவ் அதிவலதுசாரி செயற்பாட்டாளர்களால் கொலை செய்யப்பட்டார். 1970களில் மெதுமெதுவாக அதிவலதுசாரித்துவம் நிறுவனமாகத் தொடங்கியது.
1980களில், அதிவலதுசாரி செயற்பாட்டாளர்கள், சிறியளவில் அமைப்பாகத் தொடங்கினர். இடதுசாரிகள் செயற்படுவது போல, அவர்கள் அடிமட்ட அணிதிரட்டல் செயற்பாடுகளில் இறங்கினர். பரந்துபட்ட பொதுமக்கள் ஆதரவுத்தளத்தை உருவாக்க முனைந்தனர்.
இவ்வமைப்புகளின் தலைவர்களில் இனவாதிகளும் அடங்குவர். இவர்கள் 1960, 1970களில் மாணவர் இயக்கங்களின் இடதுசாரிகளின் எழுச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள். இவர்கள் சிறிய அமைப்புகளாகிய போது, அவர்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனது. ஆனால் இவர்களின் பணிகள், அபேயின் எழுச்சிக்கு உதவின. 1990களின் ஆரம்பத்தில் இந்த அடிமட்ட முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கின. இத்தோடு அபேயின் அரசியல் எழுச்சி இடைவெட்டுகிறது.
பிரதான குடிமக்கள் மத்தியில் அதிகாரத்தையும் செல்வாக்கையும் குவிப்பதில் வெற்றி பெற்ற முதல் பெரிய வலதுசாரி அமைப்பு ‘ஜப்பான் மாநாடு’ ஆகும். இது 1997இல் மதம் மற்றும் இராணுவம் சார் சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்து, ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியது.
‘ஜப்பான் மாநாடு’ 1995இல் ஒரு குறிப்பிடத்தக்க சம்பவத்தின் பின்னர் மிகுந்த செல்வாக்குள்ளதாக மாறியது. அவர்கள் கொலனித்துவம் மற்றும் போரில் ஜப்பானின் பங்குக்கு மன்னிப்பு கேட்கும் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடும் அப்போதைய பிரதம மந்திரி முராயமா டோமிச்சியின் முயற்சியை வெற்றிகரமாகத் தடுத்தனர்.
அபேயின் எழுச்சியுடன், ‘ஜப்பான் மாநாடு’ ஒரு சக்திவாய்ந்த அரசியல் அமைப்பாக மாறியது. நாற்பதாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் குவித்து, அபேயின் தாராளவாத ஜனநாயகக் கட்சி மற்றும் அடிமட்ட அமைப்புகளுடன் வலுவான தொடர்புகளைப் பெற்றுள்ளது. அபேயின் அமைச்சரவையில் பெரும்பாலானோர் ஜப்பான் மாநாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் போக்குக்கு முரண்பாடாக, ஜனநாயக ஆட்சிகள் மற்றும் சமத்துவத்துவத்துக்கான இடதுசாரி அழைப்புகள், 1970 களுக்குப் பிறகு முக்கியத்துவத்தை இழந்தன. அதிவலது செயற்பாட்டாளர்களால் ஏகாதிபத்திய சித்தாந்தங்களை பொது ஆர்ப்பாட்டங்கள், அரசாங்க பரப்புரை, ஒன்லைன் மனுக்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகள் மூலம் பிரபலப்படுத்த முடிந்தது.
இடதுசாரிகளாலும் ஜனநாயகவாதிகளாலும் பயன்படுத்தப்படும் மக்கள்நோக்கு ஆயுதங்கள், இன்று ஜப்பானிய அதிவலதுசாரிகளால் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது கடந்த தசாப்தத்தில் சிறுபான்மையினரைத் தாக்கும் அடிமட்ட இயக்கங்களின் அமைதியான பெருக்கத்துக்கும் திடீர் எழுச்சிக்கும் களம் அமைத்தன.
அதிவலதுசாரி சிந்தனையில் இந்த முக்கியமான மாற்றத்தைப் புரிந்து கொள்வது அவசியம். ஜனநாயக வழிமுறைகளை ஆசிய அதிவலதுசாரித்துவம் வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறது. இதன் நீட்சியை இலங்கை, இந்தியா போன்ற பல ஆசிய நாடுகளில் காணலாம்.