சுற்றுச்சூழல் நடவடிக்கையாளர் ராமதாஸனின் அஸ்தி புனரமைக்கப்பட்ட ஆரியகுளத்தில் கரைக்கப்படத் தகுதியானது
எந்திரி ராமதாசன் 2018ல் யாழ் ஊடக அமையத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி யாழ்ப்பாணத்தில் குளங்கள் புனரமைக்கப்படும் சுற்றுச்சூழல் இயக்கத்துக்கு காரணமாக இருந்தார். பின்வருவது அம்மாநாட்டில் எந்திரி ராமதாசன் பேசிய விடயங்கள்
குடாநாட்டில் எதிர்கொள்ளப்படும் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள குளங்கள் அனைத்தையும் பராமரிக்கவேண்டிய தேவையேற்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.ஆனால் அவற்றில் 300 குளங்கள் வரை இருந்த இடமே தெரியாது போயிருப்பதாக சிரேஸ்ட பொறியியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான மா.இராமதாசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இரண்டு ஆண்டுகளுக்குமுதல்(ஒக்டோபர், 2018) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் கடந்த காலங்களில் குளங்கள் மக்களால் அல்லது இயற்கையான பள்ளங்களினாலேயே தோற்றம் பெற்றிருந்தது.பின்னரே அவை அரச உடமையாக்கப்பட்டன.குடாநாட்டில் மக்களிற்கு நிலத்தின் மேலான நீரை தரக்கூடிய குளங்கள் கவனிக்கப்படாமால் கைவிடப்பட்டமை வேதனைக்குரியது.
அதிலும் மாகாணசபை வசமிருந்த குளங்கள் மத்திய அரசின் வசம் சென்ற பின்னர் அத்தகைய குளங்களை புனரமைப்பது அரசின் வேலையென்றே மக்கள் கருதுகின்றனர்.அத்துடன் தமது நகரங்களிலும் கிராமங்களிலுமுள்ள குளங்கள் பற்றி எமது மக்களிடையே அக்கறையற்ற நிலையே காணப்படுகின்றது.
குளங்களினை புனரமைப்பது தொடர்பில் நாம் அக்கறை கொண்டு செயற்பட தொடங்கியுள்ளோம்.எமது சொந்த நிதியிலும் வெளிநாட்டிலுள்ள நண்பர்கள் சிலரது பங்களிப்புடனும் குறைந்த செலவில் இரண்டு வருடங்களில் 8குளங்களை புனரமைத்துள்ளோம்.
மக்கள் விழிப்புணர்ச்சியுடன் முன்வருவார்களானால் அடுத்து வருகின்ற ஜந்து வருடங்களுள் ஆகக்குறைந்தது 500குளங்களையாவது புனரமைக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
எம்மால் புனரமைக்கப்பட்ட குளங்களிற்கு தலா இரண்டு இலட்சம் வரையிலே செலவாகியுள்ளதால் குறைந்த செலவில் குளங்களை புனரமைக்க முடியுமென தெரிவித்த ம.இராமதாசன் மக்கள் தாமாக முன்வந்து இப்பணியில் இணைந்து கொள்ளவும் அழைப்புவிடுத்துள்ளார்.
தற்போது யாழ்.மாவட்டத்தில் உள்ள குளங்களில் 27 பில்லியன் லீற்றர் நீர் தேக்கி வைக்க இயலும். இதில் 40 வீதமான நீர் ஆவியாதல் மற்றும் தாவரங்களுக்கு பயன்பட மீதமாக உள்ள 60 வீதமான நீர் 16 பில்லியன் லீற்றர் நீர் மக்களுக்கு பயன்படும்.
அதன் மூலம் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 63 லீற்றர் நீரை வழங்கலாம். இதனை மேலும் 20 வீதத்தால் உயர்த்தினால் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 72 லீற்றர் நீரை வழங்கலாம்.
இதேவேளை மழை காலத்தில் வெள்ளம் கடலுக்குள் செல்ல முடியாத போது வெள்ளம் தேங்கும் இடமே பொம்மைவெளி பிரதேசம். அது தெரியாமல் அங்கு குடியேற்றங்களை அரசியல்வாதிகள் மேற்கொண்டதால் இன்று அப்பகுதியை மேடாக்கி குடியேறிய மக்கள் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. யாழில் பெரும் மழை பெய்தால் யாழ்ப்பாணமே வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை யாழ்.வீரசிங்கம் மண்டபம் மற்றும் வின்சர் திரையரங்குக்கு அருகில் இருந்த குளங்களை பற்றி தற்போது தகவல்களோ தடையங்களோ இல்லாதுள்ளது. அக்குளங்களில் ஒன்றின் பெயர் தாரா குளமெனவும் அவர் தெரிவித்தார்.