ஒருவரின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் மற்றவருக்கு, பாதை மிக இலகுவானதாகவே தெரியும், ஆனால், முன்னால் ஓடிக்கொண்டிருப்பவர் பல்வேறான கரடுமுரடான, முட்செடி கொடிகள் நிறைந்த இ்டத்தினூடாகவே ஓடிக்கொண்டிருக்கின்றார்; அவர் ஓடும் தடங்களே பாதையாகிறது. ஆகையால், புதிய பாதைகளே பல அனுபவங்களைக் கற்றுத்தரும்.
ஆனால், எமது நாட்டு அரசியல்வாதிகளில் பலர், பழைய பாதையில்தான் ஓடிக்கொண்டிருகின்றனர். உரிமைக்காகக் குரல்கொடுக்கும் ஏகநேரத்தில், மக்களின் மேம்பாடு, பிரதேசத்தின் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளிலும் கவனம் செலுத்தவேண்டும். இன்றேல், ஏனைய இனங்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, இன்னும் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டியிருக்கும்.
உரிமைகளுக்காக குரல்கொடுத்துக் கொடுத்தே, சிறுபான்மை இனங்களின் தொண்டைகள் வரண்டுவிட்டன. இப்போது, காலவோட்டம் மறுபக்கத்துக்கு மாறியிருக்கிறது. பெரும்பான்மை இனங்களும் தங்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுவிட்டனர்.
சகல இனங்களுக்கும், பொதுவான உரிமைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆகையால், பொதுப் பிரச்சினையை, பொது உரிமைகளை இனரீதியில் பிரித்து நோக்காமல், சகலரும் ஓரணியில் திரண்டிருந்து, ஆளும் தரப்புக்கு ஒருமித்த குரலில் அழுத்தம் கொடுக்க முடியும்.
உரிமைகளை வெற்றெடுத்துக் கொண்டே பயணிப்பதையும் அபிவிருத்தியுடன் கூடிய உரிமைப் போராட்டத்தையும் உரிமைகளை வென்றெடுத்ததன் பின்னரான அபிவிருத்தியையும் கடந்தகால அனுபவங்களுடன் சேர்ந்தே பார்க்க வேண்டும்.
உரிமைகளை வென்றெடுத்த பின்னர்தான் அபிவிருத்திக்குள் செல்வோமென ஒன்றைக்காலில் நின்று, கங்கணம் கட்டிக்கொண்டிருந்தால், ஏனைய சமூகங்களின் பின்னால், பல வருடங்கள் தன்தங்கியே எதிர்காலத்திலும் ஓடவேண்டி இருக்கும்.
பெரும்பான்மையின அரசாங்கம், பிரித்தாளுவதில் கைதேர்ந்தது. தமிழ்த் தரப்பைச் சின்னா பின்னமாக்கிவிட்டது. 20ஆவது திருத்தத்துக்கான ஆதரவுடன், முஸ்லிம்களைப் பிளவுபடுத்திவிட்டது. சிங்களச் சிறுகட்சிகள், மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது திணறிக் கொண்டிருக்கின்றன.
இவ்விடத்தில்தான், “என் சட்டியில் என்ன வேகுது என்று பாராமல், உங்கள் சட்டிகளில் என்ன கருகுது என்று பாருங்கள்” என்பது பேசும் பொருளாகிவிட்டது.
அரசியல் தீர்வு, காணாமல்போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் போன்றன, தற்போதைய கருப்பொருளான கொவிட்-19 நோய் தொற்றால் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்தல் உள்ளிட்டவற்றில், சிறுபான்மை இனம் ஓரணியில் நிற்கவேண்டும். ஏககாலத்தில் அபிவிருத்தியின்பாலும் அக்கறை செலுத்தவேண்டும். இல்லையேல், பழைய ‘பல்லவி’ தொடரும் என்பதே திண்ணம்.
(Tamil Mirror)