இந்தச் சிறுமி 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி பிறந்துள்ளார். அவர் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், பாராளுன்ற உறுப்பினரின் வீட்டில் பணிபுரிய, அவரது பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு 15 வயது மட்டுமே ஆகியிருந்தது.
இந்தப் பெண் நீண்ட காலமாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்ததாகவும் அதை மையப்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுப் பணிப்பெண்கள், வீட்டு எஜமானர்களால் வன்முறைகளுக்கு உள்ளாவதும் வீட்டில் இடம்பெற்ற விபத்தில் பணிப்பெண் இறந்து விட்டதாகவும் கூறப்பட்ட பல சம்பவங்கள், கடந்த காலங்களில் செய்திகளாக நமது காதுகளை எட்டியிருந்தன. ஆனால், அவை எவற்றுக்கும் அளிக்கப்படாத முக்கியத்துவத்தை ஹிஷாலினியின் மரணத்துக்கு அரசாங்கமும் சிங்கள ஊடகங்களும் அளித்துவருகின்றன. அதற்கு முக்கிய காரணம், இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பது, இவர்கள் விரும்பாத அரசியல்வாதியாகவும் சிங்கள-பௌத்த மக்கள் மத்தியில் ‘தேசத்துக்கு ஆபத்தானவர்’ என உருவகிக்கப்படும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டில் என்பதாலாகும்.
இந்தச் சிறுமியின் இறப்புக்கான காரணம், ரிஷாட் பதியுதீன் என்பதாகவே பிரசார பீரங்கிகள் முழங்கிக் கொண்டிருக்கின்றன. ரிஷாட், 2020 ஒக்டோபர் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டு, நவம்பர் 25ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். மீண்டும், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டு, இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இப்போது, ஹிஷாலினியின் மரணம், அரசியலாக்கப்பட்டு உள்ளது.
ஆனால், 15 வயது கூட நிறைவடையாத ஒரு சிறுமியை வீட்டு வேலைக்காகப் பணிக்கமர்த்தியது, சமூகப் பொறுப்பற்ற செயலாவதுடன் சட்டத்தின் முன் தண்டனைக்குரிய குற்றச் செயலுமாகும்.
மலையகம், வடக்கு-கிழக்கு பகுதிகளில் நிலவும் ஏழ்மையைப் பயன்படுத்தி, வீட்டு வேலைகளுக்காக நகரப்பகுதிகளுக்கு சிறுமிகளை அழைத்துவரும் முகவர்கள், தரகுப் பணத்துக்காக பொய்புரட்டுகளைக் சொல்லி, ஏதோ ஒரு வீட்டில், யாரோ ஒரு சிறுமியைத் தள்ளிவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள். இந்தச் சிறுமி என்ன வேலை செய்கிறாள், எப்படி இருக்கிறாள் என்பது குறித்து எவருக்கும் தெரியாது. இத்தகைய சூழ்நிலைகளே வீட்டுப் பணிப்பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் சிறுமிகள் வேலைக்குச் சேர்க்கப்படவும் காரணங்களாக அமைகின்றன.
வீட்டுப் பணிப்பெண்களுக்கான சந்தையைக் கண்காணிப்பதற்கோ, நெறிப்படுத்துவதற்கோ எந்த அமைப்புகளும் இல்லை. எனவே, அரசாங்கம் தனது நிறுவனங்கள் ஊடாக, உடனடியாகப் பணிப்பெண்களின் சமூகப் பாதுகாப்பையும் தொழில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில், தவறுகள், சம்பவங்கள் நடப்பதற்கு முன்னர், அதைத் தடுக்கும் வகையிலான சட்டதிட்டங்களை வகுத்திருப்பதே சிறந்த அரசாங்கத்தின் அம்சமாகும்.
(Tamil Mirror)