கதவைத் திறந்த தாய்க்கு வந்தவரைப் புரியவில்லை.உறக்கத்திலிருந்து மகனை எழுப்பினார்.மகன் வெளியே வந்தார்.”தோழர், நீங்களா!?”திகைத்து, வியந்து, வரவேற்றார்.
அந்த இளைஞனின் பெற்றோரை அமைதிப்படுத்தி,அவரைக் கட்சிப்பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டி, ‘மெட்றாஸி’லிருந்து வந்திருந்த அந்தத் தோழர், மாவட்டத்தில் மாணவர் மன்றத்தை வலுப்படுத்த அவ்விளைஞன் முழுநேரமாய் உழைக்கவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
அவ்வாறு – கட்சித் தோழர்களின் வீடுவரைக்கும் சென்று இயக்கத்தைக் கட்டப் போராடிய அந்தத் தலைமைத் தோழரின் பெயர் -சங்கரய்யா.
நாட்டின் விடுதலை வேள்வியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர். அல்லாது,பின்னாளிலும் – நாட்டின் உழைப்பாளர்க்கும் அடித்தட்டு மக்களுக்குமாக – இயங்குதற்பொருட்டு – இயன்ற காலம்வரை தன் வாழ்நாளையெல்லாம் ஒப்படைத்துக் கொண்ட பெருந்தோழர்.
எளிமையின் பிறிதொரு எடுத்துக்காட்டு.அவருக்குத்தான் இப்போது நூறு வயது என்று நல்லோரெல்லாம் கொண்டாடுகிறார்.
தன்னினும் மூத்த தோழருக்கு – தன் தலைவருக்கு – நேரில் சென்று பொன்னாடை அளித்து வாழ்த்தியிருக்கிறார் தமிழகம் போற்றும் பொதுவுடைமைத் தோழர் நல்லகண்ணு.
நாமும் மகிழ்வெய்துகிறோம். கட்சி, அரசியல் கடந்து தோழரைப் போற்றுகிறோம். அவர்தம் ஈகத்தை நினைவில் கூர்கிறோம்.இத்தகைய பின்னணியினூடே – மனத்தை ஒருவித இருள் கவ்வுகிறது.
தமிழகத்தை ஆள்வது தோழமைக் கட்சிதான்.களம் விரிந்து கிடக்கிறது. இறங்கியடிக்க வேண்டிய கிரிக்கெட்டு வீரனைப்போல –வாய்ப்புகள் முன்நின்றும் -வாயில்கள் திறந்திருந்தும் -பொதுவுடைமை இயக்கங்கள் சோம்பிக் கிடக்கின்றன.
திமுகவுக்கு மாற்று நாம்தான் என்று – நேற்று வந்த பாஜக அண்ணாமலை அறைகூவுகிறார்.இவர்களோ….சொல்லிப் பயனென்ன. தம் குற்றம் கொள்ளார். நம் குற்றம் சுட்டுவார்.
ஊழென்று ஒன்றுளதோ!அது நாட்டுக்கும் பொருந்திக் கவியுமோ !கிடக்கட்டும்.இதயத்திலிருந்து மொழிவோம்… சங்கரய்யா வாழ்க!நாட்டுக்கும், இயக்கத்தார்க்கும்வழி மொழிக!
(Rathan Chandrasekar)