ஆதலினால் காதல் செய்வீர்……

இதுவரை நோய் தடுப்பு மருந்தோ நோய் தீர்ப்பு மருந்தோ கண்டுபிடிக்காத நிலையில் உலகம் ஒருங்கிணைந்து செயற்படாத தன்மை இங்கு பெரிய கேள்விக் குறியாகி இருக்கின்றது. உலகின் ‘பொலிஸ்காரனாக’ தன்னை வரிந்து கட்டிக் கொண்ட நாடு தன்னை மட்டும் காத்துக் கொள்ளல் என்பதற்குள் சுழன்றடித்துக் கொண்டு இருக்கின்றது.

மனிதன் வீட்டிற்குள் அடங்க இயற்கையின் சமநிலையிலான மிருகங்களும், பறவைகளும் தம்மை மனிதர்கள் தள்ளிய நடுக்காட்டுச் சிறை வாழ்வில் இருந்து விடுபட்டு சுதந்திர செயற்பாட்டிற்குள் வந்திருக்கின்றன.

யானையினால்(காட்டு மிருகங்களால்) வீதியில் மறித்து மக்கள் தாக்கப்படும் போது அவர்கள் நமது பாதையிற்குள் வந்து இந்தத் தாக்குதலை செய்கின்றன என்பதைவிட நாம் தான் அவர்களின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டோம் என்று இயற்கையை மறந்து நாம் நியாயங்களை தேட முற்படுகின்றோம்.

காடுகளை அழித்து மிருகங்களுக்கான உணவுகளை நாசம் பண்ணிய போது அவை தமக்கான இரை தேடி மனிதர்களின் வயல்களுக்கும் வீட்டு வாழைத் தோட்டங்களையும் தேடி வந்தன. தமக்கான உணவிற்காக பயிர்களை நாசம் பண்ணின.

நாம் பலரும் குறை சொல்லும் இந்த யானை கேரளாவின் வீட்டு மிருகமாக சாதுவாக வளர்க்கப்படுவது எப்படிச் சாத்தியமானது என்பதை ஆழமாக ஆய்வு செய்து பார்த்தால் தெரியும். கேரளம் இயற்கைச் சமநிலையை பாரியளவில் மாற்றாத வாழ்வியலை அவர்கள் கொண்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

மிருகங்கள் தமக்கு தேவையான உணவை தாமே தேடி கொள்ளும் வாழ்க்கை முறையினைக் கொண்டவை. மனிதனும் அவ்வாறுதான் ஆதி பொதுவுடமை சமுதாய வாழ்வில் கொண்டிருந்தான். அதுதான் இயற்கையை சார்ந்த வாழ்க்கை முறையின் ஆரம்ப கட்டமாகும்.

கொரனாவினால் மனிதர்கள் வீட்டிற்குள் அடங்க மக்களின் உணவில் தங்கியிருக்க பழக்கப்படுத்திக் கொண்ட மிருகங்கள் வழி மறித்து பழம் கேட்பதுவும் பழத் தட்டடை குரங்குகள் தட்டிப் பறித்து செல்வதும் ரக்கூன்(மேற்கத்திய மர நாய்) சமான்ய வீட்டு மக்களின் சாப்பாட்டுக் கழிவு தொட்டியில் உணவை தேடி நாசம் பண்ணுவதற்கும் தாமே தள்ளி வந்த தமக்கான உணவை தாமெ இயற்கையுடன் இணைந்து தேடுவதில் சோம்பல் அடைந்த நிலையிற்கு மனிதர்களே காரணமாக இருக்கின்றனர் என்பதை ஆழமாக பார்த்தால் உய்தறிய முடியும்.

தற்போதைய பேரிடர் காலத்தில் மக்கள் வீட்டிற்குள் அடங்கிய நிலையில் மிருகங்கள் உணவின்றி பட்டினியால் வாடுகின்றன என்பதன் அடிப்படையில் அவற்றின் பசி போக்குதல் என்பதன் அடிப்படையில் உணவு வழங்குதல் என்பது இயற்கையை சார்ந்து தமக்கான உணவை தாமே தேடும் பழகத்திலிருந்து அவர்களை மனிதர்கள் வலுக் கட்டாயமாக இழுத்து செல்வது போன்றதாக அமைகின்றது. இது ஆரோக்கியமான விடயம் அல்ல.

இது சற்று ஆழமாக பார்த்தால் நான் அதிகம் விரும்பி ‘கூட்டிற்குள் அடைத்து வளர்க்கும் நாய் பூனை என்பன அடிப்படையில் வேட்டடை மிருகங்கள் தமக்கான உணவை தாமே தேடும் பண்பை பழக்க வழக்கத்தை கொண்டன.

நாம் அவற்றை கூட்டிற்குள் அடைத்து நுகர்வுக் கலாச்சார வியாபாரிகளிடம் இருந்து வாங்கும் உணவுகளை அவர்களுக்கு வழங்கி மனிதர்களுக்கு வரும் அத்தனை நோய்களையும் அவர்களுக்கு உருவாக்கும் செல்லப் பிராணி வளர்பிற்குள் வந்து விட்டோம்.

இதன் வெளிப்பாடு வேட்டையாடும் வீரனாக திரிந்த இவர்கள் தற்போது அவசர வேலை வாகனங்கள்(Ambulance, Fire Truck எழுப்பும் விசேட ஒலிகளுக்கு(Siren) பயந்து கதிரைகுள் ஒழிக்கும் பயந்த மிருங்கங்களாக மாறி விட்டன. இயல்பில் அவை அவ்வாறானவை அல்ல.

மிருகங்களை அதிகமாக நேசிக்கு நாம் அவர்கள் இயல்பில் வாழக்கூடிய சூழலில் வாழ் அனுமதிக்க வேண்டும். இங்கு பதியப்படும் கருத்தை தவறாக அர்த்தப்படுத்தி விடாதீர்கள் கூட்டிற்குள் அடைத்து வைத்து வேட்டை மிருகங்களை செல்லப் பிராணியாக வளர்பவர்கள்.

அவர்கள் கூட்டிற்கு வெளியே அதிகம் சந்தோஷமாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

இங்கே புகைப்படத்தை பாருங்கள் இதனை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்வீர்கள்.

இரும்புத் திரை
போட்டாலும்
உன் இடுப்பளவே
நான் ஆனாலும்
இதயங்கள் இணைந்தே
இருக்கின்றோம்

காந்த அலைகளாக பாயும்
எமது நட்பு.. காதல்..
இந்த படலையையும்
தாண்டி வராதோ..

கேற்று தடுத்தாலும்
காற்று புகாத
தக தகப்பில் நாம்
அணைத்துக் கொள்வோம்

நிறங்கள் பேதங்களை
தாண்டியது எமது உறவு – இது
சமத்துவ உறவு
சோசலிச உறவு

ஆதலினால் காதல் செய்வீர்
மானிடரே
பேரிடர் வந்தாலும்
காதல் செய்வீர்
எம்மைப் போல்
காதல் செய்வீர்
மானிடரே

ஊரடங்கினாலும் – எமது
உள்ளம் அடங்காது
பார் அடங்கினாலும்
பாசம் அடங்காது – எனவே
காதல் செய்வீர்
மானிடரே

எம் மீது
காதல் செய்வீர்
மானிடரே
உங்கள் மீதும்
காதல் செய்வீர்
மானிடரே