அதில், முதலாவது அமேஸன் ப்ரைம் தளத்தில் வௌியான ‘ஃபமிலி மான்’ தொடரின் இரண்டாவது பகுதி. அடுத்தது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்து நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வௌிவந்த ‘ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம்.
இந்திய சினிமாவில் ஈழத்தமிழர்களும் ஈழத்தமிழர் பிரச்சினையும் கையாளப்படுவது இது முதன் முறையல்ல; அதுபோல, இது கடைசிமுறையாகவும் இருக்கப்போவதில்லை.
ஆனால், ஒவ்வொரு முறையும், ஈழத்தமிழர்களையும் ஈழத்தமிழர்களின் அரசியலையும் ஈழத்தமிழர் பிரச்சினையையும் காட்சிப்படுத்தும் போது, இந்திய சினிமா, ஈழத்தமிழர்களுக்கு பெரும் அநீதி இழைப்பதான உணர்வு, பல ஈழத் தமிழர்கள் இடையே எழுந்துவிடுகிறது.
“சினிமாவைச் சினிமாவாகப் பாருங்கள்; அது, பொழுதுபோக்கு மட்டும்தான்” என்று சொல்லி, இதை அமைதியாகக் கடந்து செல்லக் கூறும் அறிவுரைகள், தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, ஈழத் தமிழர்கள் இடையேயும் எழுவதையும் அவதானிக்கலாம். அதில் ஒருவகை நியாயமும் தென்படலாம்.
ஆனால், கலையும் எழுத்தும் பேச்சும் மனித இனத்தை ஆளும் மிகப் பலமான ஆயுதங்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஒன்று, உலகமெங்கும் வாழும் தமிழர்களை, ஆளும் கலையாக, சினிமாவே இருக்கிறது. தென்னிந்திய தமிழ்ச் சினிமா மொழி, ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் தமிழர்களின் மொழிப் பயன்பாட்டில், இன்று தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பது, தமிழ்ச் சினிமா கொண்டுள்ள ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
ஆகவே, அத்தகைய ஆதிக்கம் மிக்கதொரு கலைவடிவம், ஒருவகையான கருத்தியலை முன்னிறுத்தும் போது, அது அந்த மனிதக் கூட்டத்தினிடையே செல்வாக்கைப் பெறுவதாகவும் மற்றைய மனிதக் கூட்டங்களிடையே, குறிப்பிட்ட அந்த மனிதக் கூட்டத்தைப் பற்றி, அறிமுக அடையாளமாகவும் மாறிவிடுகிறது.
இந்த அடிப்படையில்தான், ஈழத் தமிழர்கள் பற்றிய இந்தியப் படைப்புகள் மீதான, ஈழத் தமிழர்களின் அதிருப்தியும் எதிர்ப்பும் எழுவதையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
மறுபுறத்தில், இந்தியப் படைப்புகள் என இந்தப் படைப்புகளை ஒரே வகைக்குள் அடக்குதலும் பொருத்தமானதல்ல. மேற்கூறிய இரண்டு உதாரண படைப்புகளை எடுத்துக்கொண்டால் கூட, அவற்றின் படைப்பாளிகள், அவை பேசும் அரசியல், அந்தப் படைப்புக்கான நோக்கங்கள் ஆகியன வேறுபட்டவை. ஆகவே, இவையும் வெவ்வேறாக நோக்கப்பட வேண்டியவை.
இதற்குள் குறைந்தபட்சம் மூன்று வகையான படைப்புகளை நாம் அடையாளம் காணலாம். குறித்ததொரு திரைப்படைப்பில், ஈழத் தமிழர்களைப் பற்றிய வௌிப்படுத்தல்களையும் ஈழத் தமிழ் கதாபாத்திரங்களையும் கொண்ட படைப்புகள் ஒருவகை. கமலஹாசன் நடித்த ‘தெனாலி’, சூர்யா நடித்த ‘நந்தா’, மாதவன் நடித்த ‘நளதமயந்தி’ உள்ளிட்ட படைப்புகள், இந்த வகையைச் சார்ந்தவை.
இவற்றில், ஈழத்துத் தமிழ் என்று கருதி, இவர்கள் பேச முயற்சித்த மொழி பற்றிய விமர்சனங்களைத் தாண்டி, பெருமளவான அரசியல் முக்கியத்துவம் இவற்றுக்குக் கிடையாது. இத்தனை வருடங்கள் கடந்தும், தென்னிந்திய தமிழ் சினிமாவால், ஈழத்தமிழை முறையாக உச்சரிக்கக் கூட முடியாதிருப்பது, ஒரு புரியாத புதிர்தான்.
இரண்டாவது வகை, ஈழத் தமிழர் அரசியலை அல்லது இலங்கையில் நடந்த போராட்டத்தைத் தொட்டுச் செல்லும் திரைப்படங்கள். ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை இந்த வகைக்குள் உள்ளடக்கலாம். அடிப்படையில், இது ஒரு தாதாக்கள் பற்றிய திரைப்படம் (ganster film). இரண்டு தாதாக்களிடையேயான கருத்தியல் வேறுபாடாக, ‘வந்தேறுகுடிகள்’ எதிர் ‘பூர்வக் குடிகள்’ என்பது முன்வைக்கப்படுகிறது.
இங்கிலாந்தை மையப்படுத்திய கதைக்கு வசதியாக, இங்கிலாந்தில் அகதிகளாகக் குடியேறிய ஈழத் தமிழர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் கதையை எடுத்துக்கொண்டால், இங்கு ஈழத் தமிழர்களுக்குப் பதிலாக, போரால் பாதிக்கப்பட்டு, மேற்கு நாடுகளில் அகதிகளாகக் குடியேறிய வேறு எந்த இனமும் சித்திரிக்கப்பட்டு, இந்தக் கதை படம்பிடிக்கப்பட்டிருக்க முடியும். ஏனென்றால், கதைக்குத் தேவைப்படுவது, வேறுநாட்டிலிருந்து போரால் பாதிக்கப்பட்டு, எப்படியோ தப்பி வந்து, மேற்கில் அகதிகளாகக் குடியேறி, அங்கு கஷ்டப்பட்டு உழைக்கும் ஓர் இனக்கூட்டம் ஆகும்.
அதை எதிர்க்கும் பூர்வக்குடி அமைப்பு; அந்த எதிர்ப்பை முறியடிக்கும் நாயகன். இந்த வகை திரைப்படங்களில், உண்மைக்கு மாறான காட்சிப்படுத்தல்கள் பற்றிய பிரச்சினைகள் எழுந்தாலன்றி, இவற்றின் அரசியல் தாக்கம், முக்கியத்துவம் பெருமளவுக்கு இல்லை.
ஆனால், மூன்றாவது வகையைச் சார்ந்த படைப்புகள் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனென்றால், அவை அரசியல் பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசும் படைப்புகளாக அமைகின்றன. அதனால்தான், அவை பிரச்சினைக்கு உரியவையாகவும் சிக்கலானவையாகவும் கருதப்படுகின்றன என்பதோடு, கடும் விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளாகின்றன. இந்த வகைக்குள் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படமும் ‘ஃபமிலி மான் 2’ திரைப்படமும் வருகின்றன.
இந்த இந்தியப் படைப்புகளிடையே, ஓர் ஒற்றுமையை நாம் அவதானிக்கலாம். இவை இந்திய தேசியவாதத்தை முன்னிறுத்தும், இந்திய அரசின் நலன் மையப் பார்வையை முன்னிறுத்தும் அரசியலை, நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தமாகச் சொல்லும் படைப்புகள் ஆகின்றன.
அவை முன்னிறுத்தும் அரசியலுக்கும் கருத்தியலுக்கும் முரணானவற்றைப் பிழையானதாகச் சித்திரிக்கின்றன. அதனைச் செய்வதற்கு, அவை பாதி உண்மைகளை மட்டுமல்ல, பொய்களையும் பொய்யான கற்பனைகளையும் பயன்படுத்துகின்றன. இந்த இடத்தில்தான், அவற்றுக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் தலைதூக்குகின்றன.
இந்திய அரசாங்கத்துக்குத் தேவையான பகடைக் காய்களாக, ஈழத்தமிழர்கள் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ‘இலங்கை’ என்ற இந்தப் பூகோள தந்திரோபாயம் மிக்க தீவில், இந்தியா தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள, வசதியான துருப்புச் சீட்டு ஈழத்தமிழர்களும் இலங்கையின் இனப்பிரச்சினையும்தான். அதேவேளை, ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வு, இந்தியாவுக்குக் கடத்தப்படுவதை இந்திய தேசியவாதம் விரும்புவதில்லை. அது, இந்திய நலன்களுக்கு விரோதமானது என்று, இந்திய தேசியவாதம் கருதுவதாக நாம் ஊகிக்கலாம்.
ஆகவே, தமிழ்நாட்டுத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் ஒன்றிணைவை, இந்திய தேசியவாதம் ஐயத்துடனேயே அணுகியது. ராஜீவ் காந்தியின் படுகொலையுடன், ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வு, இந்தியாவுக்குக் கடத்தப்படுவதைத் தவிர்க்க, ஒரு புறநிலை தார்மிக நியாயப்படுத்தல் (objective moral justification) கிடைத்தது; அதுதான் பயங்கரவாதம்.
ஒரு மக்கள் கூட்டத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதுதான், அந்த மக்கள் கூட்டத்தை ஏனையோர் அச்சத்துடன் அணுகச்செய்வதற்கும், அந்த மக்கள் கூட்டத்தின் அரசியலை, சட்டவிரோதமாக்குதவற்கு அல்லது, நம்பகத்தன்மை அற்றதாக்குவதற்கான இலகுவான குறுக்கு வழியாகும்.
இந்த மூன்றாவது வகையிலான படைப்புகள், இதைத்தான் செய்கின்றன என்பதுதான், ஈழத்தமிழர்கள் பலரும் இவற்றை விமர்சிப்பதற்கும் எதிர்ப்பதற்குமான அடிப்படைக் காரணம் ஆகும். நிற்க!
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில், இந்தியப் படைப்புகள் இப்படித்தான் அமைய வேண்டும் என்று அவர்களால் கட்டளையிட முடியாது. அதுபோலவே, கற்பனைகளைத் தணிக்கை செய்வது, இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான ஏற்புடைய வழிமுறையும் அல்ல.
படைப்பது ஒருவரது சுதந்திரம் என்றால், அதற்கான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் முன்வைப்பது, மற்றவருடைய சுதந்திரம். ஆனால், வெறும் எதிர்ப்போடும் விமர்சனத்தோடும் நின்றுவிடாது, மாற்றுப் படைப்புகளை முன்வைப்பதுதான், நீண்டகாலத்தில் பயனுள்ள தீர்வாக அமையும்.
இந்த இடத்தில்தான், ஈழத் தமிழ் திரைப்படத் துறையின் மறுமலர்ச்சி பற்றி, ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது புலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சாத்தியப்படக் கூடியதே!
படைப்பு, மக்களைக் கவர்வதாக அமைகின்ற போது, அது அனைவரையும் வெற்றிகரமாகச் சென்றடையக்கூடிய, திறந்த வாய்ப்புகள் உள்ள ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, மாற்றுப்படைப்புகள்தான் கருத்தியல் சமநிலையை உருவாக்குவதற்கான முதற்படி. அதுபற்றிப் பேசுதல், சிந்தித்தல், முயற்சிகளை முன்னெடுத்தல் என்பனதான் பயன்தருவன.
கார்த்திக் சுப்பராஜ், தனது வசனத்தில் எழுதியதுபோல, “இலங்கைல போர்னா, என்ன கொடுமைடானு உச்சு கொட்டீட்டு, அடுத்த வேலையப் பார்க்கிற கூட்டங்க நாங்க… எனக்கெப்டீங்க இதெல்லாம் புரியும்… எப்டீங்க இதெல்லாம் ஒறைக்கும்” என்பதாகத்தான், ஈழத்தமிழர்கள் பற்றிய இரக்கம் மிகுந்த தமிழக உறவுகளின் நிலையே இருக்கிறது.
ஆகவே, இந்திய சினிமாவில், ஈழத் தமிழர்களைப் பற்றிய முழுமையான புரிதல் மிக்க படைப்புகளை வழங்கவேண்டும் என்று எண்ணுவது அதீத எதிர்பார்ப்பாகவே அமையும். அவர்கள் விசுவாசமாக, அதை முயன்றாலும் கூட, அது கடினமானதே! ஆகவேதான், தனக்கான குரலாகத் தானே இருக்க வேண்டியது அவசியமாகிறது.
‘தொப்புள் கொடி உறவுக்கு’ என்று ஒரு தார்ப்பரியம் இருக்கிறது. தொப்புள்கொடி என்பது, பிறந்தவுடன் வெட்டிவிடப்படும் ஒன்று. அது, இருந்ததற்கான அடையாளம் மட்டும் இருக்கும். பாசம் இருக்கலாம்; பற்றும் இருக்கலாம். ஆனால், தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு; அதுதான் யதார்த்தம்!