வௌ்ளையினப் பொலிஸ் உத்தியோகத்தர்களால், கறுப்பினத்தவர்கள் மீது, இனவன்மம் கொண்ட தாக்குதல்கள் நடத்தப்படுவது, அமெரிக்க வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கண்டனத்துக்கும் கவலைக்குமுரிய இனவெறியாட்டமாகும். அந்த இனவெறியின் அண்மைய பலிதான் ஜோர்ஜ் ஃபுளொய்ட்.
இந்த இனவெறிப் படுகொலை, அமெரிக்கர்களைக் கோபமுறச் செய்திருக்கிறது. அதன் எதிரொலியாக, அமெரிக்காவின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் பொலிஸாருக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான வன்முறைத் தாக்குதல்களும் பொதுச் சொத்துகளை நாசம் செய்வதும் கடைகளைச் சூறையாடுவது போன்ற குற்றங்களும் இடம்பெற்று வருகின்றன. இதுவும் கூட, அமெரிக்காவுக்குப் புதியதொன்றல்ல.
மனித வரலாறு முழுவதும், இனவாதம் நிலவி இருக்கிறது; இன்னமும் நிலவிக் கொண்டிருக்கிறது. தோலின் நிறம், மொழி, பழக்கவழக்கங்கள், பிறந்த இடம் போன்ற நபர்களின் அடிப்படைத் தன்மையை வெளிப்படுத்தும் எந்தவொரு காரணிகளால், ஒரு நபர், இன்னொரு நபரைவிடத் தரங்குறைந்தவர் என்ற நம்பிக்கையே இனவாதமாகிறது.
இனவாதமானது போர்கள், அடிமைத்தனம், நாடுகளின் உருவாக்கம் ஆகியவற்றுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மனிதனே மனிதனைத் துன்புறுத்துவதற்கும், அழிப்பதற்குமான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.
இனவாதம் பற்றிப் பேசும் போது, அடிப்படையில் அதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தனிநபர் இனவாதம்; இரண்டாவது, ஒழுங்கு முறைசார்ந்த இனவாதம்.
தனிப்பட்ட இனவெறி என்பது, ஒரு நபரின் இனவெறி அனுமானங்கள், நம்பிக்கைகள், நடத்தைகளைக் குறிக்கிறது. இது பற்றிக் கருத்துரைக்கும் ஹென்றி, டேடர் ஆகியோர், ”இது ‘நனவானதும் மயக்கமுள்ள தனிப்பட்ட தப்பெண்ணத்திலிருந்து உருவாகும் இனப் பாகுபாட்டின் ஒரு வடிவம்” என்கின்றனர். இருப்பினும், தனிநபர் இனவெறி, ஒரு வெற்றிடத்தில் உருவாக்கப்படவில்லை. மாறாக, ஒரு சமூகத்தின் அடித்தள நம்பிக்கைகள், விடயங்களைப் பார்த்தல், அவற்றைச் செய்வதற்கான வழிகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படுகிறது. மேலும், இது நிறுவனங்கள், அவற்றின் கட்டமைப்புகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படுகிறது.
மறுபுறத்தில், ஒழுங்குமுறைசார் இனவெறி என்பது, நிறுவப்பட்ட நிறுவனங்களில் நிலைநிறுத்தப்பட்ட கொள்கைகள், நடைமுறைகளை உள்ளடக்கியது. இவற்றின் விளைவாக, நியமிக்கப்பட்ட குழுக்களை விலக்குவது, ஊக்குவிப்பது போன்ற செயற்பாடுகளின் ஊடாக, ஒழுங்கு முறைசார்ந்த இனவெறி முன்னெடுக்கப்படுகிறது.
ஒழுங்கு முறைசார்ந்த இனவெறியானது, தன்னை இரண்டு வழிகளில் வௌிப்படுத்துகிறது. முதலாவது, நிறுவன மயப்படுத்தப்பட்ட இனவெறி; மற்றையது, கட்டமைப்புச் சார்ந்த இனவெறி.
இனவெறி (இனவாதம்), ஒரு சமூகத்தின் ஆட்சிக் கட்டமைப்புக்குள் ஊடுருவி, அதைக் கைப்பற்றும்போது, அது நிறுவன மயப்படுத்தப்பட்டதும் கட்டமைப்பு சார்ந்த இனவெறியை ஸ்தாபிக்கிறது. இத்தகைய ஒழுங்குமுறைசார் இனவெறியால் பீடிக்கப்பட்ட சமூகத்தில் இருக்கும் தனிநபர்களிடம், அவர்களை அறியாமலேயே இனவெறி ஊறிவிடுகிறது.
இன்று, அமெரிக்காவில் பற்றி எரியும் இனவெறிக்கெதிரான குரல்கள், இலங்கையிலும் ஒலிக்கின்றன; அது பாராட்டத்தக்கதே.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னது போல, ”ஓர் இடத்தில் இடம்பெறும் அநீதியினாது, அனைத்து இடங்களிலும் உள்ள நீதிக்கு ஆபத்தானதாகும். ஆகவே, உலகின் எந்த மூலையில் அநீதி நிகழ்ந்தாலும் மனிதனாகச் சக மனிதனின் நீதிக்காகக் குரல்கொடுப்பது எமது கடமை ஆகிறது”. ஆனால், இலங்கையர்களின் ‘நியாயத்தவம்’, ‘நீதிக்கான குரல்’ அமெரிக்காவுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. இதைச் சொல்வதற்கு ஒரு காரணமுண்டு. இன்றைய தினமானது, யாழ்ப்பாண நூலகம் இனவெறித் தீயால் சாம்பலாக்கப்பட்ட துயரம் நிகழ்ந்து, 39 ஆண்டுகள் நிறைவடையும் துயர தினமாகும்.
”ஓர் இனத்தை அழிக்க வேண்டுமாயின், அதன் அடையாளத்தை, வரலாற்றை அழித்து விடுங்கள்; அந்த இனம், தானாக அழிந்துவிடும்” என்பது, மிகப் பிரபலமாக அறியப்பட்ட ஒரு கூற்றாகும். உலக வரலாற்றில், ஓர் இனத்தை, சாம்ராட்சியத்தை அழிக்கும் போர்களின் போது, அந்த இனத்தின், அந்த சாம்ராட்சியத்தின் நூல்களையும் நூலகத்தையும் அழித்த செயற்பாட்டைப் பல சந்தர்ப்பங்களிலும் காணலாம்.
ஓர் இனத்தின் பலமாக, அறிவுச்செல்வம் இருக்கும் பொழுது, ஓர் இனத்தின் அடையாளமாக நூல்களும் நூலகங்களும் இருக்கும் போது, அவற்றை அழிப்பதனூடாக அந்த இனத்தை அழிக்கும் கொடூர வரலாறு, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலமளவுக்குப் பழைமையானது. கி.மு 213இல், சீனாவின் சின் பரம்பரையின் முதலாவது சக்கரவர்த்தி என்று அறியப்படும் சின் ஷூ ஹூவாங், கவிதை, வரலாறு, தத்துவம் உள்ளிட்ட புத்தகங்களைக் கையகப்படுத்தி எரித்திருந்தார்.
கி.மு 300இல் ஸ்தாபிக்கப்பட்ட, அன்றைய உலகின் மிகப்பெரிய நூலகமாகக் கருதப்பட்ட ‘அலெக்ஸாண்ட்ரியா’ நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இது தீக்கிரையாக்கப்பட்ட காலமும் சந்தர்ப்பமும் மிகத் தெளிவாக அறியப்படவில்லை. எனினும், இது ஜூலியஸ் சீஸரால் அல்லது, ஓரீலியனால் அல்லது, அலெக்ஸாண்ட்ரியாவின் பாப்பரசர் தியோஃபீலியஸால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதுதான் ஆய்வாளர்களால் அதிகமாக முன்னிறுத்தப்படுகிறது.
‘ஞானத்தின் இல்லம்’ என்று அறியப்பட்ட பாக்தாத் நூலகம், கி.பி 1,258இல் மொங்கோலியப் படையெடுப்பின்போது, மொங்கோலியப் படைகளால் அழிக்கப்பட்டது. மத்திய கிழக்கின் அறிவுச் செல்வத்தின் பெரும்பகுதி, இதில் அழிந்துபோனது.
1930களில் ஜேர்மனியில், ஹிட்லரின் நாஸிப் படைகள், தமது கொள்கைக்கு மாற்றான நூல்களைக் கைப்பற்றித் தீக்கிரையாக்கினார்கள். 1992இல் பொஸ்னியாவின் பழைமை வாய்ந்த நூலகம், சேபியர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்தத் துயர் மிகு biblioclasm எனப்படும் புத்தக அழிப்பின், அறிவு அழிப்பின் தொடர்ச்சியாகத்தான் நாம், யாழ்ப்பாண நூலக எரிப்பையும் நினைவுகூர வேண்டியதாக இருக்கிறது. யாழ். நூலக எரிப்பு ‘காடையர்’களால் நடத்தப்பட்டது என நம்ப வைக்கப்பட்டாலும், அதில் அரசாங்கத்தின், பொலிஸாரின் நேரடியானதும் மறைமுகமானதுமான பங்களிப்பு இல்லை என்று, எவராலும் மறுத்துவிட முடியாது.
யாழ். நூலகம் எரிக்கப்பட்ட போது, மிகப் பெரும் இனத்து வேசியாகவும் பேரினவா தத்தின் முரசொலி யாகவும் காணப்பட்ட அமைச்சர் சிறில் மத்யூ, அவரது தளபதி என்றறி யப்பட்ட அமைச்சர் காமினி திஸாநாயக்க, அவர்கள் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு முக்கிய குழு யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தது. அதுமட்டுமல்ல, ஏறத்தாழ 500 பொலிஸாரைக் கொண்ட பெரும் பொலிஸ் படையொன்றும், தேர்தல் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தது.
1981 மே 31, யாழ். நாச்சிமார் அம்மன் கோவிலடியில், அன்றைய யாழ்ப்பாண நகரபிதாவான ராஜா விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பாதுகாப்புக் கடமையில் நின்றிருந்த மூன்று பொலிஸ் கொன்ஸ்டபிள்கள், அடையாளம் தெரியாத இளைஞர் சிலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதன் எதிரொலியாக, அவ்விடத்துக்கு விரைந்த ஆயுதமேந்திய பொலிஸ் படையொன்று, அவ்விடத்தில் தமது வெறியாட்டத்தை ஆடத் தொடங்கியது.
அருகிலிருந்த கோவிலுக்கு தீவைத்த அவர்கள், தொடர்ந்து அருகிலிருந்த வீடுகளையும் வீதியிலிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கினார்கள். இங்கு தொடங்கிய பொலிஸ் வன்முறைகள், யாழ். நகரின் மத்தியை நோக்கிப் பரவத் தொடங்கியது. யாழ்ப்பாணத்தின் சந்தைக் கடைத்தொகுதியும் புதிய சந்தைக் கட்டடமும் வர்த்தக, வணிக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழர் மண்ணில், மீண்டும் ஒரு திட்டமிட்ட கலவரத்தை, பொலிஸார் நடத்திக் கொண்டிருந்தனர்.
மேலும், யாழ்ப்பாணத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தருமான வி. யோகேஸ்வரனின் வீட்டைச் சூழ்ந்து கொண்ட பொலிஸ் குழுவொன்று, அந்த வீட்டுக்குத் தீ வைத்தது. தீ வைக்கப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் அவரது குடும்பமும் அந்த வீட்டிலேயே இருந்தனர். அவரும் குடும்பமும் விரைந்து வெளியேறியதால், மயிரிழையில் உயிர் தப்பினர்.
இதேநேரத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய முக்கிய பத்திரிகையான ‘ஈழநாடு’ பத்திரிகைக் காரியாலயமும் அச்சகமும் அங்கு நுழைந்த பொலிஸ் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதுடன், முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டது. ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரியரான கோபாலரட்ணம், கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயமைடைந்தார். நான்கு பொதுமகன்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.
மேலும், 31ஆம் திகதி இரவோடிரவாகத் தெற்கிலிருந்து பெருமளவு காடையர்கள் யாழ். நகரில் கொண்டு வந்து இறக்கப்பட்டதாக, இந்தக் கறுப்பு வரலாற்றைப் பதிவு செய்த பலரும் குறிப்பிடுகிறார்கள். இந்தக் காடையர் கூட்டம், யாழ்ப்பாணத்திலிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் காரியாலயத்துக்குள் நுழைந்து, அதைத் தீக்கிரையாக்கியதுடன், நகரிலிருந்த வீடுகள், கடைகள், வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து, கொள்ளைகளிலும் ஈடுபட்டது. அத்தோடு, யாழ். நகரை ஆங்காங்கே அலங்கரித்த தமிழ்ப் பெரியார்களின் சிலைகளும் அடித்துடைக்கப்பட்டன.
இவ்வாறு தொடர்ந்த வன்முறையின் விளைவாக, 1981 ஜூன் முதலாம் திகதி இரவு, பொலிஸ் கும்பலும் காடையர் கூட்டமும் தமிழர்களின் அடையாளமாகப் பரிணமித்த, யாழ். பொது நூலகத்துக்குள் புகுந்து, அதற்குத் தீ மூட்டினார்கள். ஓலைப் பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள், மூலப்பிரதிகள் உள்ளிட்ட ஏறத்தாழ 97,000 நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ என்ற வரலாற்று நூலின் ஒரேயொரு பிரதியும், இதில் அழிந்து போனது பெருஞ்சோகம்.
சுருங்கக் கூறிவதாயின், தமிழர்களின் அடையாளமும் வரலாறும் அரசாங்கத்தின் ஆதரவுடைய இனவெறிக் கூட்டத்தால் அழித்தொழிக்கப்பட்டது. இரவோடிரவாக இந்த இனரீதியான, புத்தக அழிப்பு (ethnic biblioclasm) நடத்தி முடிக்கப்பட்டது.
பலம் வாய்ந்த இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்த போது, அவர்களின் கண்முன்னால் பொலிஸாரினாலும் காடையர்களாலும் பெரும் இனரீதியான வன்முறையும் இனரீதியான புத்தக அழிப்பும் நடத்தப்பட்டது என்றால், அது நிச்சயமாக அவர்கள் அறியாமல் நடந்திருக்க முடியாது.
அமெரிக்காவின் இனவெறித் தீக்கு கண்டனம் தெரிவிக்கும் இலங்கையர்கள், தமிழ் மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒவ்வோர் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கும் கூட, கண்டனத்தையாவது தெரிவிப்பதுதான் நியாயமாகும். கருகிய நூலகக் கட்டடத்துக்கு நீங்கள் வௌ்ளையடித்து விடலாம். ஆனால், அது மக்களின் மனங்களில் ஆறாத ரணமாகக் காணப்படும், இனவெறிக் காயத்துக்கு மருந்தாகிவிடாது; அழிந்துபோன பொக்கிஷங்களை மீட்டுத்தராது; இழந்த உயிர்களை மீட்பிக்காது.
இந்த நாட்டில், மிகுந்த இரக்கமிக்க மனிதர்கள் இருக்கிறார்கள். அநியாயமாகக் கொல்லப்படும் ஒரு சிறுத்தைப் புலிக்காகக் கண்ணீர் வடிக்கும் இரக்கமிகு இதயங்கள் அவை. ஆனால், இந்த நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு முறைசார் இனவெறி, தம்மோடு வாழும் சக மனிதனை வெறுக்குமளவுக்கான வன்மத்தைப் பெரும்பான்மையானவர்களின் மனதில் விளைவித்திருக்கிறது; விளைவித்துக் கொண்டிருக்கிறது. இங்குள்ளவர்கள் உணரக்கூடிய அடிப்படை விடயமொன்றுள்ளது; தன் சகமனிதன் மீது, கடும் வெறுப்பை வைத்துக்கொண்டு, ஐந்தறிவு ஜீவனுக்காக இரங்குவதெல்லாம், ஜீவகாருண்யமாகிவிடாது. அது பெரும் போலிப்பாசாங்காகும் (hypocrisy).
எந்தத் தீயையும் போல, இனவெறித் தீயும் அணைக்கப்படக் கூடியதே. ஆனால், தகுந்த காலத்தில் அது அணைக்கப்படாவிட்டால், நாம் முயற்சித்தாலும் அணைக்க முடியாத பெருந்தீயாக அதுவளர்ந்துவிடும். எவ்வளவு விரைவாக நாம், இதை உணர்கிறோமோஇ அவ்வளவு தூரத்துக்கு அது, எமக்கு நல்லது.