இயற்கை விவசாயம் – அடுத்த கட்டத்துக்கு நல்ல சிந்தனையை விதைத்தது.

ரெண்டு பேரும் கும்பகோணம்.
ரெண்டு பேரும் கால்நடை மருத்துவர்கள். 
ரெண்டு பேரும் அமெரிக்கப் பிராணிகளுக்கு 
வைத்தியம் பார்த்தவர்கள்.

ரெண்டு பேரும் மனப்பொருத்தத்துடன் 
ஒரு முடிவெடுத்தார்கள்.

‘பணமீட்டியது போதும். ரெண்டு பெண்குழந்தைகளும் தாத்தா பாட்டியுடன் வாழவேண்டும். சொந்த ஊரில் ரசாயனம் 
கலக்காத இயற்கை உரம்போட்டு 
விவசாயம் பண்ணவேணும்!’

ஃபிளைட் பிடித்து கும்பகோணம் வந்தவர்கள் –
செக்காங்கண்ணியில் 13 ஏக்கர் விளைநிலம் வாங்கி – மணப்பாறை மாடு கட்டி – மாயவரம் ஏரு பூட்டி – வயக்காட்டை உழுதுபோட்டார்கள். 
ரசாயன உரமில்லாமல் பசுந்தழையைப்
போட்டுப் பாடுபட்டார்கள் . மாப்பிளை சம்பா, 
கருங்குறுவை என்று நெல்மணிகளாக விளைத்தார்கள்.

மண்மாதா மக்களைக் கைவிடுவதில்லை. விளைத்துக் குவித்தாள்.

இயற்கை விவசாயம் – அடுத்த கட்டத்துக்கு 
நல்ல சிந்தனையை விதைத்தது.

சூழல் ! இயற்கைச்சூழல் ! 
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ! சுற்றுச்சூழல் விழிப்புணர்வு !

சும்மா வெறும் வாயை மென்றுகொண்டிராமல், எதாவது செய்வோமென்று பரபரத்த வேளையில்தான், புருஷம்பெஞ்சாதியின் கண்களில்பட்டது – முள்ளும் களையும் மண்டிப் பயனின்றிக் கிடந்த ஸ்ரீநிவாசநல்லுார் அய்யனார் கோயிலுக்கு சொந்தமான 7 ஆயிரம் சதுர அடி நிலம்.

அய்யனார் அருள்கொடுத்தாலும், அறங்காவலர்குழு வரங்கொடுக்கவேண்டுமே !
நேரே அவர்களைப் பார்த்துப் பேசினார்கள்.

நல்ல கமிட்டியார் போல !
சந்தோஷமாக ஒப்பினார்கள்.

போன வருஷம் 2018.

சொந்தக் காசில் நிலத்தை சுத்தம் செய்து, 
சொந்தக் காசில் அரசு,ஆல், புங்கன், நெல்லி, 
அரளி, வேம்பு , மூலிகை மரங்கன்றுகள் என 
30 வகையான மரக்கன்றுகளாக –
1000 கன்றுகளை வாங்கி நட்டுவைத்தார்கள்.
நீர் பாய்ச்ச சொட்டுநீர்ப் பாசனம்.

இப்போது 2019.

ஏறத்தாழ 20 அடி உயரத்துக்கு மரங்களாக 
வளர்ந்து அடர்ந்திருக்கும் குறுங்காடு…. 
குட்டி வனம்….

கூடுதல் உற்சாகக் கொண்டாட்டமாக, மரங்களிலெல்லாம் கூடுகட்டிக் குஞ்சுகளைக் கொஞ்சும் பறவைகள்…பாடும் பறவைகள்….
விடிகாலை பல்துலக்கிவிட்டுப் போனீர்களானால், 
ஜுகல்பந்தி கேட்கலாம்.

உள்ளூர் அயலூர் மாணவர்கள், இயற்கை 
ஆர்வலர்களின் டூரிஸ்ட் ஸ்பாட்டாக இப்போது மாறிவிட்டிருக்கிறது இந்த அழகிய முயற்சி!

கோயில்குளத்துக்கு கும்பகோணத்துக்குப் போகிறபோது இந்த ‘ஆனந்தத் தோப்பு’க்கும் ஒருமுறை போய்ப் பார்த்துவிட்டுச்சொல்லுங்கள்.

இப்போது –
மேலும் 200 பனைவிதைகளை விதைத்திருக்கிறார்களாம். விரைவிலேயே,
அடுத்த ஓர் இடத்தில் பசுஞ்சோலை செய்கிற திட்டத்திலுமிருக்கிறார்களாம்!

“இந்த மரங்களையெல்லாம் 
சொந்தப் பிள்ளைகளாக நினைத்து 
வளர்த்திருக்கோம்ங்க…” என்று ஆனந்தி சொன்னதாகக் கேட்கும்போது –
என் கண்ணில் ஏன் நீர்வழிகிறது?

யார் பெத்த பிள்ளைங்கள் 
நீங்கள் 
ஆனந்தன் ஆனந்தி!!?

(Rathan Chandrasekar)