இராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா?

அவரது கருத்துகள், முழுமையாகச் சரியானவையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இராஜராஜ சோழனின் காலம் பொற்காலம் என்றும், தமிழர்களின் அடையாளம் இராஜராஜன் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இங்கு இரண்டு விடயங்களைப் பேச வேண்டியிருக்கிறது.

முதலாவது, வரலாற்றைச் சரிவர அறிதல்;

இரண்டாவது, இவர்கள் எல்லோரும் வாதிடுவது போல, இராஜராஜ சோழன் ‘பொற்காலத்தைத் தந்த அரசனா’ என்பதாகும். இவ்விரண்டையும் இங்கு சுருக்கமாக நோக்கலாம்.

யாருடைய வரலாறு, யாருக்கான வரலாறு?

அரசர்கள், அவர்தம் போர்கள், அரண்மனைச் சூழ்ச்சிகள் என்பவற்றோடு வரலாறு முடிவதில்லை. எனினும், இவையே வரலாறென எமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளன. பெர்டோல்ட் பிரெக்ட்டினுடைய நாடகத்தில் கல்வியறிவு பெற்ற பாட்டாளி கேட்கும் முதற் கேள்வி, “அலெக்சாண்டர் முழு ஐரோப்பாவையும் வென்றானே, அப்போது அவனோடு ஒரு சமையற்காரன் கூடவா இல்லை?” என்பதாகும். வரலாறு என எங்களுக்குச் சொல்லப்பட்டதன் அபத்தத்தை, இக்கேள்வி உணர்த்துகிறது. அது, வரலாறு பற்றி மேலும் இரு கேள்விகளுக்கு வழியமைக்கிறது.

யாருடைய வரலாறு என்பது முதலாவது கேள்வி? வரலாறு என இதுவரை எங்களுக்குச் சொல்லப்பட்டவையும் எழுதப்பட்டவையும் அதிகாரத்தில் இருந்தோரின் வரலாறுகளேயாகும். அரசர்களதும் பிரபுகளதும் அவர்களது பட்டாளங்களதும் கதைகளே, எமக்கு வரலாறாகச் சொல்லப்பட்டுள்ளன.

இவ்விடத்தில், மக்கள் எங்கே போனார்கள் என்ற வினாவை எழுப்பாமல் இருக்க முடியாது. ஏனெனில், ஷாஜகான், தாஜ் மகாலைக் கட்டினார் என்றால், தாஜ்மகாலைத் திட்டமிட்டு வடிவமைத் தோரும், சாந்துபூசிய கொத்தனார்களும் ஏனையோரும் எங்கே என்பது வரலாற்றின் தன்மை பற்றிய முக்கியமான விமர்சனமாகும்.

இரண்டாவது கேள்வி, வரலாற்றை எழுதியோர் யார் என்பதாகும். அரசவைப் புலவர்களாலும் அரண்மனைப் புத்திஜீவிகளாலும் காலப்போக்கில் ஆள்வோரின் ஆலோசகர்களாலும் வரலாறு எழுதப்பட்டுள்ளது. தங்களுக்குப் படியளப்பவர்களைப் புகழ்ந்து பாடி, அவர்கள் காலத்தை ஓட்டினர். அவர்களது எழுத்துகளே வரலாறாகின. இந்நிலை இன்னும் தொடர்வதை, சமகாலச் சூழலில் காணலாம்.

இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் இர்ஃபான் ஹபீப், இந்திய வரலாறு பற்றிக் கருத்துரைக்கையில், “இந்திய வரலாற்றை, மீள்கட்டமைக்கும் முயற்சிகள் கற்பனை வரலாறுகளாக, ஒருதலைப்பட்சமான வரலாறுகளாக மீளுருவாக்கப் பெறுகின்றன” என்கிறார். “பொய் வரலாறு, எத்தனை உடனடிக் குறுகிய புகழாரங்களைச் சூட்டினும், அது மக்களின் ஒழுக்கநெறி எனும் உயிர் நரம்பைக் கத்தரித்து, அவர்களின் முன்னேற்றத் திறனை அறுத்தெறிந்து விடும். எனவே, எக்காரணம் கொண்டும் இவ்வாறான கதையளக்கும் வரலாறுகளை, நியாயப்படுத்தலாகாது” என, இந்திய வரலாறு, எதிர்கொள்ளும் சவாலை விளக்குகிறார் ஹபீப்.

இன்று இராஜராஜன் குறித்த விவாதமும் இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டும் சவாலையே எதிர்நோக்குகிறது.

இராஜராஜன் ஆட்சி: சில குறிப்புகள்

இராஜராஜன் ஆட்சிக்காலம் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆதாரம் உண்டா என்றதொரு கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. இது, முன்சொன்ன வரலாற்றை யார் எழுதினார்கள் என்ற கேள்வியுடன் தொடர்புடையது. இராஜராஜன் காலத்தில் நிகழ்ந்த சான்றுள்ள சிலவற்றை மட்டும் இங்கு நோக்கலாம்.

இராஜராஜனின் மிகப்பெரிய சாதனையாகக் கொள்ளப்படுவது தஞ்சைப் பெரியகோவில். இதன் பெருமையெல்லாம் இதைக்கட்டிய க‌ற்றச்சர்கள், சிற்ப ஆசாரிகள், உழைப்பாளிகள் ஆகியோரின் உடல் உழைப்பையும் மதி நுட்பத்தையுமே சாரும். இதற்குப் பின்னால் இருந்த கடின உழைப்பைக் கோருவது சாதாரணமானதல்ல. சாதாரண மனிதர்களின் உழைப்பும் இரத்தமும் உறிஞ்சப்பட்டே இக்கோவில் கட்டப்பட்டது என்ற உண்மை, வசதியாக மறக்கப்படுகிறது. இப்போது சொல்லப்படுவதுபோல, இக்கோவில் தமிழ்ச்சைவ நெறிப்படிக் கட்டப்பட்டது அன்று. காஸ்மீரத்துப் பாசுபத சைவ நெறிப்படி கட்டப்பட்டதாகும் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார் முனைவர் தொ. பரமசிவம். தமிழ்நாட்டில் காஸ்மீரசைவம் எப்படி வந்தது என்று யோசிப்பவர்களுக்கு ஒரு செய்தி: காஸ்மீரத்திலிருந்து ஈசான சிவ பண்டிதர் என்பவரை வரவழைத்து, தனக்கு இராஜகுருவாக நியமித்துக் கொண்டார் இராஜராஜன். சோழர் காலத்துக்கு முன்பு கோவில்கள், மிகச் சிறியவையாயிருந்தன. இராஜராஜனே, பெரிய கோவில்களைக் கட்டி நிலங்களைப் பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்து, தமிழ்நாட்டில் பிராமணர்களுக்குத் தனிப்பெரும் நிலையை உருவாக்கிக் கொடுத்தான் என்று, ‘சோழர் வரலாறு’ என்ற நூலில் மு.இராசமாணிக்கனார் எழுதுகிறார்.

image_964ee28512.jpg

சோழர் காலச் சமுதாயத்தில், பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதப் பாடசாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன. இதையெல்லாம் தொடக்கி வைத்தது இராஜராஜனே என்று தனது ‘தமிழ்ச் சமூக வரலாறு’ என்ற கட்டுரையில் எழுதுகிறார் மானிடவியலாளர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்.

இராஜராஜன் ஆட்சிக்காலம் பற்றி எழுதும் பேராசிரியர் நா. வானமாமலை, சோழர்கள் அதற்கு முன்பிருந்த நிலவுடைமை முறையை மாற்றினார்கள் என்றும் சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மையைக் கல்வெட்டுக்களின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது என்கிறார். அவர் இராஜராஜன் ஆட்சி குறித்து இவ்வாறு எழுதுகிறார்:

‘வெள்ளாளன் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமையைப் பறித்து, கோவில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தங்கள் உரிமைகளை இழந்தார்கள். உழுதுண்போரின் நிலங்களில் பலவற்றைப் பிரமதேயமாக்கினார்கள். ஆகவே நிலவுடைமை கோயிலுக்கோ, கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கங்களுக்கோ மாற்றப்பட்டது.

இது மட்டுமல்ல போர்களுக்கும் கோவில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. இவ்வரிகளை வசூலிக்கும் உரிமை மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ஊர்ச்சபைகளிடமே விடப்பட்டிருந்தன. அவர்கள் தங்கள் உடைமைகளுக்கும் நலன்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் வரியையும் கடமைகளையும் இறைகளையும் வசூலித்தார்கள். வரி கொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப்படுத்தினார்கள்.

வரி கோவிலுக்கென வசூலிக்கப்பட்டதால் வரி கொடாதவர்களுக்குச் ‘சிவத்துரோகி’ என்ற பட்டம் சூட்டி, நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள்; அல்லது நிலத்தில் ஒரு பகுதியை விற்று, ‘தண்டம்’ என்ற பெயரால் கோவிலுக்கு அளித்தார்கள். இத்தகைய ஒரு சுரண்டல் முறையை, படைகளின் பாதுகாப்போடும் மதக் கொள்கைகளின் அனுசரணையோடும் இராஜராஜனும் அதன் பின்வந்தவர்களும் நடைமுறைப்படுத்தினர்’. (தமிழர் வரலாறும் பண்பாடும், நா. வானமாமலை, 1966)

இராஜராஜனின் காலத்திலேயே சதுர்மாணிக்கம் போன்ற பெண்களின் கோபுரத் தற்கொலைகள் நடந்தன. இதுகுறித்த விரிவான குறிப்புகள், நா. வானமாமலையின் ‘சோழராட்சியில் அறப்போர்கள்’ என்ற கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுகளில், தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே, இராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது என்பதைச் சுட்டும் வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவர் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும் பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன என்பதையும் ஆதாரங்களோடு நிறுவியுள்ளார்.

பிராமணர்கள் நிறைந்துள்ள ஊர்களில், மற்றச் சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின், அவர்களை நிலங்களை விற்றுவிடச் சொல்லி, இராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை இராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி, கோவிலுக்குச் சொந்தமாக்கினாள்.

இவ்வாறாகப் பிராமணர் வாழ்ந்த ஊர்களில், பிராமணர் அல்லாதோரின் நிலஉரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர் என்று எழுதுகிறார் தமிழறிஞர்; நொபொரு கராஷிமா (பார்க்க: வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் சோழர் காலம், தமிழகத் தொல்லியல் கழகம், 1995).

இதேபோலவே, சிறந்த ஆட்சிமுறை இராஜராஜன் காலத்தில் இருந்தது. குடவோலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் சிறந்த ஜனநாயக முறை அதுவே என்று சொல்பவர்கள், சொல்லத்தவறும் செய்தி ஒன்றுண்டு. இந்தக் குடவோலை முறையில் பங்குபற்ற இரண்டு தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒன்று, நிலவுடமையாளராக இருக்க வேண்டும். இரண்டு, வேதம் கற்றிருக்க வேண்டும். எனவே, ஆட்சியும் அதிகாரமும் பிராமணர்களின் வசமே இருந்தன. இதுதான் இராஜராஜன் காலத்து ஜனநாயகம்.

இராஜராஜனின் காலம் பொற்காலம் என்பவர்கள், அது யாருக்குப் பொற்காலமாக இருந்தது என்ற கேள்வியைக் கேட்பது பொருத்தம்.

தமிழரின் பெருமைகளை நாம் இப்படித் தான் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்போகிறோமா? சமூகநீதியினதும் நியாயத்தினதும் பெறுமதி என்ன? இராஜராஜனை வைத்துத் தமிழர் பெருமையை அடையாளப்படுத்துவது அநியாயத்தையும் அநீதியையும் சேர்த்தே அடையாளப்படுத்துகிறது. அநியாயத்தைப் பெருமைப்படுத்தி, நியாயப்படுத்தியபடி எம்மால் எப்படி எமக்கான நீதியைக் கேட்கவியலும்?