இழப்பிலிருந்து மீள்தல்

தொற்று இலங்கையில் பரவத்தொடங்கியது முதல் இதுவரை ஏறத்தாழ நான்கு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றாளர்களாக அடையாங்காணப்பட்டுள்ளதுடன், இந்த பெருந்தொற்று இலங்கையில் மட்டும் இதுவரை எட்டாயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களை பலியெடுத்துள்ளது.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு” என்ற வள்ளுவன் வாக்கினை அன்றாட வாழ்வில் தினம் தினம் கண்ணூடாகக் காணும் நிலையை கொவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியிருக்கிறது. 

கொடிய பெருந்தொற்று நோயும், அதனாலான மரணங்களும் ஒருபுறம் இலங்கையை வாட்டிவதைக்க, மறுபுறத்தில் முடக்கமும் அதனாலான விளைவுகளும், பணவீக்கமும், பொருளாதார நெருக்கடியும் இலங்கை மக்களை இன்னும் அதிகமாகப் பாதித்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

பெருந்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக நாட்டை முடக்குவது அவசியமாகிறது. மாதச் சம்பளத்திற்கு அரசசேவையிலும், தனியார் நிறுவனங்களிலும் உள்ளவர்களால் இதனை ஓரளவு சமாளிக்கக் கூடியதாக இருக்கிறது.

அரசசேவைக்கான சம்பளத்தை பணநோட்டுக்களை அச்சடித்தேனும், பணவீக்கம் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கரிசனங்கொள்ளாது அரசாங்கம் வழங்கிவிடும். தனியார் நிறுவனங்கள் சம்பளக் குறைப்புக்களை மேற்கொண்டாலும், அவற்றால் முடிந்தவரையில் சம்பளங்களை வழங்கிவிடும். முடியாதபட்சத்தில் நிறுவனத்தை மூடுவதைவிட அவற்றிற்கு வேறு வழியில்லை. அதன் விளைவு வேலையிழப்பு.

ஆனால் இவர்களை விட நாடு முடக்கப்படுவதால் உடனடியாகப் பாதிக்கப்படுபவர்கள் அன்றாடத் தொழிலை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களே. அன்றாடத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் என்று சொன்னதும் பலரும் முச்சக்கரவண்டி சாரதிகளும், கூலித்தொழிலாளர்களும், பெட்டிக்கடை நடத்துபவர்களும் தான் அன்றாடத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் என்று எண்ணுகிறார்கள். அது தவறு.

எத்தனையோ நிபுணத்துவ தொழிலாளர்கள் அன்றாடத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். உதாரணமாக வழக்குரைக்கும் சட்டத்தரணிகளை எடுத்துக்கொண்டால், வழக்குரைப்பதற்குத் தான் அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுகிறது. நாட்டின் முடக்கத்தினால் நீதிமன்றுகள் வழமைபோன்று இயங்காத நிலையில், அன்றாட வழக்குரைக்கும் தொழிலை நம்பி வாழும் அவர்களின் நிலையும் கவலைக்குரியதாகிறது. குறிப்பாக, தொழிலின் ஆரம்ப நிலையிலுள்ளவர்கள், சேமிப்போ, ஏனைய பொருளாதார பாதுகாப்புக்களோ இல்லாதவர்களின் நிலை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. 

இப்படி தொழில் மற்றும் வருமான ரீதியில் பெரும் இழப்புக்களை இலங்கையர்கள் சந்தித்துள்ள இந்த நிலையில்தான், அதனோடு சேர்ந்து இலங்கையர்களை இன்னும் வாட்டிவதைப்பதாக இலங்கையின் பொருளாதார நிலை உருவெடுத்திருக்கிறது.

அடிப்படை தப்பிப்பிழைத்தலுக்கான உணவுப் பொருட்களின் விலைகள் கூட அதிரடியாக உயர்ந்திருக்கின்றன. தேசிய நுகர்வோர் விலைச்சுட்டியின் படியான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 6.1% அதிகரித்திருந்த நிலையில், ஜூலை மாதத்தில் அது 6.8% ஆக மேலும் அதிகரித்துள்ளது. அரசி, பருப்பு, சீனி, மரக்கறிகள் என உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு ஒருபுறமிருக்க, டொலர் கையிருப்பினைத் தக்கவைப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள இறக்குமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு கூட ஏற்படும் நிலை வரலாம் என சில பொருளியலாளர்கள் கருத்துரைக்கிறார்கள்.

இலங்கையின் பணவீக்கத்தின் நிலை இலங்கை ரூபாய்களை வங்கிகளில் சேமிப்பதை பயனற்ற விடயமாக மாற்றியுள்ளது. வங்கிகள் தற்போது ஏறத்தாழ 3-4% சேமிப்பிற்கு வட்டிவழங்கும் நிலையில், பணவீக்கம் 6.8% ஆக உள்ள போது, ஒவ்வொரு வருடமும் சேமித்துள்ள பணத்தின் மதிப்பு குறைகிறது.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளமை. ஒரு நாள் பாடசாலைக்கு செல்லாமல் இருப்பதே பெருஞ்சங்கடமான விடயமாக இருந்த காலம் போய், இன்று ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் மாணவர்கள் பாடசாலையையே எட்டிப்பார்க்காத நிலையை கொவிட்-19 ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒரு சந்ததியையே நீண்டகாலத்தில் பாதிக்கும் விடயமாக அமையப்போகிறது.

சிலர் இடையீடு செய்து இணையவழி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று குறிப்பிடலாம். இலங்கையில் இணையவழி கல்வி சார்ந்த குறைபாடுகள் பற்றி பலரும் எழுதிவிட்ட நிலையில், அதை மீளக்குறிப்பிடுதல் அவசியமில்லை. ஆனால் இங்கு இணைய வழிக்கல்வி முழுமையாக கல்விச்செயற்பாடாக கருதப்பட முடியாமைக்கு முக்கிய காரணம் அது இலங்கையின் இலவசக் கல்வி போல அனைவராலும் அணுக முடியாதிருப்பதாகும்.

இலவசக்கல்வி, இலவசப் பாடநூல்கள், இலவச சீருடை என்பவற்றை அனைவருக்கும் கல்வி அணுகப்படக்கூடியதொன்றாக உள்ள நாடாக இலங்கை இருக்கையிலே, இணையவழிக்கல்வி என்பது அந்த நிலையைத் தகர்ப்பதாக இருக்கிறது. அடிப்படையில் இலங்கையில் எல்லா இடத்திலும் திடமான இணையவசதி கிடையாது என்பது முதற்பிரச்சினை. இணையத்தினூடாக இணைந்து கல்வி பெறும் உபகரணங்கள் அனைத்துப் பிள்ளைகளிடமும் கிடையாது என்பது இரண்டாவது பிரச்சினை. இவற்றைத்தாண்டி, இணையவழி மூலம் முழுமையான கல்வியும், கல்வி அனுபவமும் வழங்கப்படமுடியுமா என்பது முக்கிய பிரச்சினை. இத்தனைக்கும் நடுவில்தான் இலங்கையின் எதிர்காலம் சிக்குண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரடிப் பிரச்சினைகளைத் தாண்டி, முடக்கநிலையானது மக்களிடையே பெரும் உளவியல் தாக்கங்களையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏலவே உளவியல் பிரச்சினைகளை பெருமளவு கண்டுகொள்ளாத நாடாக இலங்கை காணப்படுகிற நிலையில், இந்த முடக்கம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமானது, பரவலான வகையில் இலங்கையர்களிடையே பெருமளவாக உளவியல் பாதிப்புக்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் விளைவுகள் எதிர்காலத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உணரப்படலாம் என்பதோடு, இலங்கையில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கியமான விடயமாக இது மாறாலாம் என்பதையும் நாம் கவனத்திற்கொள்ளுதல் வேண்டும். 

இந்த இடத்தில்தான் முக்கிய கேள்வி எழுகிறது. இத்தனை இழப்புக்களிலிருந்து மீள முடியுமா? மீள்வது எப்படி? இழப்புக்களிலிருந்து மீள்தல் என்பதுதான் மனித வரலாறே!

இந்தப் பூமியின் ஆதிக்கம் மிகு உயிரினமாக மனிதன் மாறியது அவன் இழப்புக்களை சந்திக்காததனால் அல்ல; விழ விழ எழுந்துகொண்டேயிருக்கும் தன்மையினை அவன் கற்றுக்கொண்டதனால்தான்.

ஆனால் அதற்குள் ஒரு ரகசியமுண்டு. தனிநபர்களாக மனிதன் வாழ்ந்திருப்பானாயின், அவன் என்றோ அழிந்திருப்பான். மனிதன் கூட்டங்கூட்டமாக வாழ்ந்தான். ஒரு மனிதன் காயப்பட்டபோது, மற்றவன் அவனைத்தாங்கிக்கொண்டான். இந்தக் கூட்டமாக ஒருவரையொருவர் சார்ந்தும், ஆதரித்தும் வாழும் தன்மைதான் மனிதன் எனும் உயிரினம் ஆதிக்கம் பெற்றதன் இரகசியம். இன்று அதற்கான தேவை மீண்டும் உருவாகியுள்ளது. ஒருவரையொருவர் அரவணைக்க வேண்டிய காலம் இது.

இழப்புக்களிலிருந்து மீள்தல் என்பதற்கு அண்மைய உதாரணங்களே பல உள்ளன. இரண்டு அணுகுண்டுகளின் தாக்கத்தை சந்தித்த ஜப்பான் இன்று உலகின் பொருளாதார வல்லமைபெற்ற நாடுகளுள் ஒன்றாக முடியுமென்றால், இரண்டாம் உலக யுத்தத்தில் பெருந்தோல்விகண்டு சின்னாபின்னமான நிலையிலிருந்து ஜேர்மனி இன்று ஐரோப்பாவின் ஆதிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது என்றால், இழப்பிலிருந்து மீள்தல் என்பது முடியாத காரியமல்ல.

ஆனால் இனவாதம் பேசிக்கொண்டு, தமது மக்களிடையே பிரிவினையைத் தூண்டிக்கொண்டு இந்த நாடுகள் இழப்பிலிருந்து மீளவில்லை. மாறாக தம்மக்களிடையே ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உருவாக்கின. அதுதான் அடிப்படை.

அடுத்ததாக, அடிப்படை அறிவுகூடு இல்லாத முழு முட்டாள் தலைவர்களைக் கொண்டு இந்த நாடுகள் தமது இழப்பிலிருந்து மீளவில்லை, மாறாக தம்மைப் பின்னிறுத்தி, நாட்டை முன்னிறுத்தும் தலைவர்களை, தலைமைக் குழுக்களைக் கொண்டதனால்தான் வெறும் சில தசாப்தங்களுள் பூச்சியத்திலிருந்து, பெரும் ராச்சியமாக அவை உருமாறின.

2ம் உலக யுத்தத்திற்கு பின்னரான ஜப்பானின் ஒரு தலைவரின் பெயரோ, ஜேர்மனியின் ஒரு தலைவரின் பெயரோ பலருக்கும் தெரியாது. ஆனால் அந்த நாடுகள் அந்தத் தலைமைகளின் கீழ் வளர்ச்சியடைந்தன. சுயநலங்கொண்ட, நாட்டைக் கொள்ளையடித்துப் பிழைக்கும், பொருளாதாரம், அபிவிருத்தி பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாத, கடன்வாங்கி வீதிபோடுதல், நகரங்களை அழகாக்குதல் ஆகியவையே அபிவிருந்து என்று நம்பும் முழு முட்டாள் கூட்டத்திடம் நாட்டை ஒப்படைத்துவிட்டால், இழப்பிலிருந்து மீள்தல் என்பது வெறுங்கனவாகவே முடியும்.