இலங்கையின் வடபால், வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில், ஒரு கிராமம், மக்கள் இன்றி அழிவடைந்து செல்கின்றது என்றால், நம்பித்தான் ஆக வேண்டும்.
பழம்பெரும் கிராமமமான ‘வெடிவைத்தகல்’ என்ற செழிப்புமிகு, எல்லையோர கிராமமே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையை சந்தித்துள்ளது.
1985 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர், சுமார் 45 குடும்பங்கள் வாழ்ந்த இக் கிராமம், செல்வச்செழிப்புடன் காணப்பட்ட நிலையில், அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால், மக்கள் சிறுகச் சிறுக வெளியேறி நகர்ப்புறங்களை நோக்கி சென்றுவிட, அக்கிராமம் வனாந்தரமாக காணப்படுகின்றது.
ஓமந்தை கிராமத்தில் இருந்து, 24 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இக் கிராமத்தில், தற்போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையினால், அக்கிராமத்தை சேர்ந்த மக்கள், மீளக்குடியேற விருப்பம் அற்ற நிலையில் காணப்படுகின்றனர் என, அக்கிராமத்துக்கு அயலில் உள்ள கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெற்றபோது, மக்கள் மீள வருவார்கள் என்ற அவாவோடு அரச அதிகாரிகளின் பரிந்துரையினால், இந்திய அரசின் நிதியுதவியுடன் பாடசாலையொன்று கட்டப்பட்டு, இன்று அது நெல் காய வைக்கும் இடமாக மாறிக் காணப்படுகின்றது.
சிதைவடைந்த வீடுகள், சீரற்ற வீதிகள், எப்போது யானை வரும் என தெரியாத வனாந்தரம் என்ற ஓர் அழிந்த கிராமத்த்துக்கு அருகாமையில் உள்ள கிராம மக்களும், தமது அன்றாட கருமங்களை இத்தகைய ஆபத்துகளுக்கு மத்தியில் அச்சத்துடன் கழிக்க வேண்டியிருப்பதால், அவர்களும் தமது பாரம்பரிய கிராமங்களை விட்டு வெளியேறும் நிலை காணப்படுகின்றது.
2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர், 35 குடும்பங்கள் வாழ்ந்த கோவில் புளியங்குளம் கிராமத்தில் தற்போது ஒன்பது குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், வெடிவைத்தகல் கிராமத்தின் பாதிப்பாகும்.
எனவே, இந்தப் பாரம்பரிய கிராமங்களில், மக்கள் வாழ்வதற்கு ஏதுவான நிலைமைகள் தொடர்பில், சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்து, 11 வருடங்கள் கடந்த நிலையில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி என பெருமளவு நிதியை அரசாங்கம் செலவு செய்துள்ளது. எனினும் அவை சீரான முறையில் பயன்படுத்தப்பாமை பல கிராமங்கள் அழிவடையும் நிலையில் காணப்படுகின்றமையை தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இந்நிலை வடக்கின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் வவுனியாவில் அதிகம் என்றே கூறலாம். குறிப்பாக, வீமன்கல், வெடிவைத்தகல், புதுவிளாங்குளம் என பல கிராமங்களைக் கூறலாம்.
இவ்வாறு இக்கிராமங்களில் மக்கள் குடியேறாமைக்கு காரணம் என்ன….?. இவை அழிவடைந்து செல்லும் நிலை ஏன் வந்தது என்பன தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது.
இவ்வாறான நிலைமைக்கு வெறுமனே அரசாங்கத்தினை மாத்திரம் குற்றம்சாட்டிவிட்டு மக்கள் தப்பித்துக்கொள்ள முடியுமா எனவும் பார்க்க வேண்டும். ஏனெனில் யுத்த காலத்தில் வெளியேறிய மக்கள் நகர்ப்புறங்களில் வசதிவாய்ப்புகளுடன் வாழ்வதன் காரணமாக மீளவும் தமது கிராமத்திற்கு செல்வதற்கு பின்னடிக்கும் நிலை காணப்படுகின்றது.
அங்குள்ள வயல் நிலங்களில் செய்கை பண்ண மட்டுமே செல்லும் மக்கள் பயனைப்பெற்றுவிட்டு மீள நகரைநோக்கி திரும்பி விடுகின்றமை கிராமத்தின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பே.
எல்லையோர கிராமமாக இது காணப்படுகின்றமையால் அயலில் உள்ள சகோதர இனத்தவர்கள் அப்பகுதியில் காணிகளை அபகரிக்க திட்டமிட்டும் வருகின்றனர். மக்கள் தமது கிராமத்தில் குடியேறாத நிலையில் தமது காணிகள் பறிபோகின்றது எனக் கூக்குரல் இடுவதால் எந்த பலனும் இல்லை என தெரிந்த போதிலும் புதிய சந்ததி அக்கிராமங்களில் சென்று குடியேற தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.
இவ்வாறான ஓர் நிலைமையையே வவுனியா புதுவிளாங்குளம் என்ற கிராமமும் சந்தித்து வருகின்றது.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மன்னகுளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் ஒரு பரம்பரைக்குரிய 25 குடும்பங்கள் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் கோவிலை அண்டியதாக உள்ள இக் கிராமம் விவசாயப் பிரதேசமாகும். முன்னர் பாடசாலை, சிவன் கோவில், சனசமூகநிலையம், அழகான கல்வீடுகள், விளைச்சல் தரும் வயல்கள் என்பவற்றைக் கொண்டு கம்பீரமாக காட்சியளித்த இந்தக் கிராமம் தற்போது பற்றைக்காடாகவும், போரின் சாட்சியாகவும் கண்முன்னே நிற்கின்றது.
சேதமடைந்த சிவன் கோவிலும், சிதைவடைந்த கட்டடம் ஒன்றின் இடிபாடும் மட்டுமே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஒரே சாட்சி. ஏனைய கட்டடங்களின் அத்திவாரங்களை கூட தேடி கண்டுபிடிக்க முடியாத நிலையில் போரின் அவலத்தை இப்பிரதேசம் நேரடியாக சந்தித்துள்ளது.
இப்பகுதியில் குடியிருந்த மக்கள் 1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை காரணமாக, இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களை நோக்கி நகர்ந்தனர்.
அவர்களது வாழ்விடங்கள் பற்றைக்காடுகளாக மாறியிருந்ததுடன், அப்பகுதியில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.இதனால் அங்கு சென்று குடியேறுவதை தவிர்த்த இக் கிராம மக்கள் தற்போது கனகராயன்குளம், மன்னகுளம், வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் வேறு காணிகளைப் பெற்றும், உறவினர்கள், நண்பர்கள் காணிகளிலும் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்தக் கிராமம் தற்போது அழிந்து போகும் நிலையில் உள்ளது.
தரம் 5 வரை இருந்த பாடசாலை கூட தற்போது இருந்த இடம் தெரியாது இருக்கின்றது. மேலும், இப் பகுதிக்கான போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதுடன் வீதிகள் கூட சீராக இல்லை. இதனால் தமது பிள்ளைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் என்பவற்றை கவனத்தில் கொண்டு, இக் கிராமத்தில் மக்கள் சென்று குடியேறுவதை தவிர்த்து வருகின்றனர்.
தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதாக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் கூட, அழிவடைந்து செல்லும் கிராமங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் அழிவடையும் தமிழ் கிராமங்களின் பட்டியல் நீண்டே செல்கின்றது.
நாட்டில் பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெறுகின்ற போதும் அவை சீராக பங்கிடப்படாமையும், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் அபிவிருத்தி திட்டங்களை ஒதுக்குவதன் மூலமும் இன்று பல பகுதிகளில் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளதுடன், அந்தக் கிராமங்களை கைவிட்டுச் செல்லும் நிலையும் உருவாகி வருகிறது. அந்த வரிசையிலேயே வெடிவைத்தகல், புதுவிளாங்குளம் கிராமங்கள் உள்ளன.
எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி அபிவிருத்திகளையும் வளங்களையும் சீராகப் பங்கீடு செய்து, அழிவடையும் தமிழ் கிராமங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.