என்னத்த சொல்றது…

சிவந்த தேகம், நல்ல உயரம் அருமையான குரல் வளம் என, ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் எஸ் எஸ்ஆருக்கு.

1940 நாற்பதுகளில் சினிமா வாய்ப்புக்காக போராடிய எஸ் எஸ்எஸ்ஸாருக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. .

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் கொலை வழக்கில் கைதாகி இருந்த போது அவரை மீட்க நிதி திரட்டுவதற்காக பைத்தியக்காரன் (1947) என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டது. கலைவாணரின் துணைவி டி ஏ மதுரம் இரட்டை வேடங்களில் நடித்தார். ஒரு ஒரு பாத்திரத்திற்கு எம்ஜிஆர் ஜோடி .

இந்தப் படத்தில் சின்ன வேடம் எஸ்எஸ்ஆர் கிடைத்தது.

1948ல் அபிமன்யு படம். உயிர் நண்பராக இருந்த எம்ஜிஆரின் சிபாரிசுபேரில் அபிமன்யுவாக நடிக்க வாய்ப்பும், ஆயிரம் ரூபாய் அட்வான்சும் கிடைத்தது.

ஆனால் எஸ்எஸ்ஆர் நடித்துக்கொண்டிருந்த நாடகசபை, சினிமாவில் நடிக்க காண்ட்ராக்ட்டிலிருந்து விடுக்கமுடியாது என வழக்குபோட்டதால், ஜூபிடர் நிறுவனத்தின் பட வாய்ப்பு பறிபோனது.

அதே வருஷம், சேலம் மூர்த்தி பிலிம்ஸ் தயாரித்த ஸ்ரீஆண்டாள் படத்தில் வில்லன் ரோல். ஆனால் படத்தை மேற்பார்வையிட்ட மாடர்ன் தியேட்டர் சுந்தரம், தம்மாதுண்டு பையனா இருக்கான் என அதிருப்தியை தெரிவிக்க, உடனே படத்திலிருந்து எஸ்எஸ்ஆர் வெளியே வாரி போடப்பட்டார்.

நல்ல குரல்வளம் பெற்றிருந்ததால் பின்னணி பாடகராகி முன்னுக்குவரலாம் என்று பார்த்தால், ஒரே பாடலோடு அதுவும் ஓடிப்போய்விட்டது.

நொந்துபோன நிலையில் 1951-ல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய ‘மணமகள்’ படத்தில் கிடைத்தது, ஒரு பிச்சைக்காரன் வேடம். கலைஞரின் அனல்பறக்கும் வசனத்தில் புகுந்து விளையாடினார் எஸ்எஸ்ஆர்.

விதி இங்கே சென்சார்போர்டு வடிவத்தில் வந்தது. திராவிட ஆட்களுக்கும் சென்சாருக்கும் ஏழாம் பொருத்தம்.. எஸ்எஸ்ஆரின் பிச்சைக்காரன் வசனங்கள் அபாயகரமாகவும், புரட்சிகரமாகவும் உள்ளன என்று, அவர் நடித்த போர்ஷன்களையே ஸ்வாகா செய்துவிட்டது சென்சார் போர்டு.

கடைசியில் ‘பராசக்தி’ படம்தான் எஸ்எஸ்ஆர்க்கு திருப்புமுனை படமாக அமைந்தது. மூன்று சகோரதரர்களில் ஒருவர் என முக்கியவேடம்.

‘பராசக்தி’ வெற்றியை தொடர்ந்தும் எஸ்எஸ்ஆர்க்கு சோதனைதான். பணம், மனோகரா, ரத்தக்கண்ணீர் என்ற மற்ற கதாநாயகன்களின் படங்களிலேயே அவர் இரண்டாம் ஹீரோகவாக பயணிக்க நேர்ந்தது.

ஒரு வழியாய் ஏவிஎம் புண்ணியத்தில், முரசொலிமாறன் வசனம் எழுதிய ‘குலதெய்வம்’ படத்தில் கதாநாயகன் அந்தஸ்தை எட்டிப்பிடித்தார். படம் பெரிய அளவில் வெற்றி. அடுத்து முக்தா சீனுவாசன் இயக்கிய, முதலாளி (1957) படம்.. “ஏரிக்கரையின்மேல போறவளே பெண் மயிலே” என்ற பாடல்.

தேவிகாவை பின்தொடர்ந்து சென்று சைட் அடித்தபடி எஸ் எஸ் ஆர் கேரக்டர் பாடும். டிஎம்எஸ் குரலில் கணீரென அந்த பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்க, படம் மெகா ஹிட்.

1959- 59 வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு நிகராக மருது சகோதரர்கள் வரலாற்றை மையமாக வைத்து சிவகங்கைச்சீமை என்ற படத்தை தயாரித்தார் கவிஞர் கண்ணதாசன்.

அருமையான

பாடல்களோடு கண்ணதாசனின் வசனங்கள் எஸ்எஸ்ஆரின் வாயிலிருந்து அனலாக பறந்தன..

எஸ்எஸ்ஆர் வாழ்க்கையில் மைல் கல்லாக பார்க்கப்பட்ட அந்த சிவகங்கை சீமை படம், ஏனோ எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை

இப்படிப்பட்ட சூழலில் எஸ்எஸ்ஆர் இன்னும் ஒரு தவறான காரியத்தை செய்தார். தெளிவில்லாத, சுவாரஸ்யமில்லாத கதைகளில் தொடர்ந்து நடிக்க எஸ்எஸ்ஆரின் பல படங்கள் காணாமல் போய்விட்டன.

குமுதம், சாரதா, நானும் ஒரு பெண் போன்ற படங்கள் மட்டும் அவ்வப்போது வெற்றி பெற்று ஆறுதலைத் தந்தன. எஸ்எஸ்ஆர் கதாநாயகனாக நடித்த பல படங்களில் கதாநாயகி, காதலித்து மணந்துகொண்ட நடிகை விஜயகுமாரிதான்.

தொடர்ந்து களத்தில் இருப்பதற்காக ராஜாதேசிங்கு, ஆலயமணி, காஞ்சித்தலைவன் என எம்ஜிஆர் சிவாஜி படங்களில் இரண்டாம் ஹீரோவாக பாதுகாப்புடன் செல்லவேண்டிய. கட்டாயத்திற்கு ஆளானார் எஸ்எஸ்ஆர்.

பெரும்பாலும் சிவாஜி படங்களில் சகோதரனாக மைத்துனராக நண்பனாக வருவார் எஸ்எஸ்ஆர்.

பச்சை விளக்கு,சாந்தி, பழனி,கை கொடுத்த தெய்வம் என, அது ஒரு பெரிய பட்டியல்.

ஐந்து படங்களில் இரண்டாவது ஹீரோ என்றால் ஒரு படம் ஹீரோவாக வெளிவரும். அவன் பித்தனா, மறக்க முடியுமா? பூம்புகார் போன்ற படங்களை இவ்வரிசையில் சேர்க்கலாம்.

கலைஞரின் வசனத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம், மணிமகுடம். இந்த படத்தின் கதாநாயகன் எஸ்எஸ்ஆர் தான்

1960-களின் இறுதியில் எஸ்எஸ்ஆர் மெல்ல மெல்ல சினிமா வாழ்க்கையில் கரைந்து போனார்.

கே.பாலச்சந்தர் – சிவாஜி கூட்டணியில் முதன்முறையாக உருவாகி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம், எதிரொலி (1970). படத்தில் எஸ் எஸ் ஆரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படம் படு ஃபிளாப்.

இந்த படத்தோடு ஒதுங்கிவிட்ட எஸ்எஸ்ஆர், எண்பதுகளில்தான் மீண்டும் சினிமா பக்கம் எட்டிப்பார்த்தார். இரட்டை மனிதன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதுவும் ஓடவில்லை.. அதன்பின் சில படங்களில் கௌரவவேடம் அவ்வளவே..

சினிமாவில் இப்படி தத்தளித்த எஸ்எஸ்ஆர், ஆரம்பகால அரசியல் வாழ்வில் நன்றாகவே முன்னேறினார். எம்ஜிஆர், திமுகவுக்கு வருவதற்கு முன்பாக அண்ணாவின் திரைத் தளபதிகளாக கோலேச்சிய மும்மூர்த்திகளில் கே.ஆர். ராமசாமி, சிவாஜி ஆகியோருடன், எஸ்எஸ்ஆரும் இருந்தார். அற்புமான மேடைப்பேச்சால் திமுக மேடைகளை அலங்கரிக்கவும் செய்தார்.

தென்மாவட்டங்களில் திமுவுக்கு வலிமை சேர்க்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்ததால், கட்சி 1957ல் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே எஸ்எஸ்ஆர்க்கு சீட் வழங்கியது. துரதிஷ்டவசமாக அவர் வெற்றியை இழந்தார்.

இருந்தாலும் 1962 தேர்தலில் தேனி தொகுதியில் வென்று, இந்திய வரலாற்றிலேயே சட்டசபைக்கு செல்லும் முதல் நடிகர் என்ற சாதனையை படைத்தார்.

1964ல் சுதந்திர தினம்.. சென்னை எல்டாம்ஸ்ரோட்டில் தன் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி திராவிட இயக்க கோஷம் போட்டார். போலீஸ் பட்டாளம் முற்றுகையிட்டது.

கையில் ரிவால்வருடன் மொட்டைமாடியில் ஏறியவர், ‘என் வீட்டில் நான் எது வேண்டுமானாலும் செய்வேன். அதை கேட்க நீங்கள் யார்?’ என்று ஓங்கிச்சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்..

ராஜ்யசபா எம்பி, தமிழ்நாட்டி லேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்த சாதனை படைத்த அதிமுக வேட்பாளர் என பல பெருமைகள் எஸ்எஸ்ஆர்க்கு உண்டு.

ஆனால் அரசியலுக்கே உண்டான முன்னிலைப்படுத்திக்கொள்ளுதல் போன்ற சாதூர்யமான குணங்கள் இல்லாமல் வெள்ளந்தியாக இருந்தது, எஸ்எஸ்ஆரை பின் தங்கவைத்துவிட்டது. சரியாக செயல்பட்டிருந்தால் எம்ஜிஆர் வந்த இடத்திற்கு எஸ்எஸ்ஆர்தான் வந்திருப்பார்.

ஒருவேளை, பராசக்தி படத்தில் எஸ்எஸ்ஆர் கதாநாயக னாக இருந்து கருணாநிதியின் வசனங்களை சிவாஜியை விட சிறப்பாக பேசி படம் வெளி வந்திருந்தா ல்.. விதியின் வியப்பான விளையாட்டு எப்படி இருந்திருக்குமோ?

புராண படங்களில் நடிப்பதை தவிர்த்ததால் லட்சிய நடிகர் என்று பட்டம் பெற்ற எஸ்எஸ்ஆர் என்ற மூன்றெழுத்தை, சினிமாவில் சிவாஜி என்ற மூன்றெழுத்தும் அரசியலில் எம்ஜஆர் மூன்றெழுத்தும் முன்னேறவிடாமல் செய்து விட்டன என்பதை மறுப்பதற்கில்லை..

அறிஞர் அண்ணா மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தவர் எஸ்எஸ்ஆர். அண்ணாவைத் தவிர வேறு யாரும் தனக்கு தலைவர் இல்லை என்று சொல்லி வந்தவர்.

நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரனின் ஏழாமாண்டு நினைவு நாள் இன்று.

(Elumalai)