இலங்கையின் பொருளாதாரம் தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடிகளை பலரும் கொரோணாவோடு தொடர்பு படுத்தியே புரிந்து கொள்கின்றனர். அரசாங்கமும் அப்படியானதொரு பிரமையையே மக்களுக்கு வழங்கி வருகின்றது. முன்னர் உள்நாட்டு யுத்தம் முடிந்து விட்டால் நாடு செழிப்படைந்து விடும் என்றார்கள்: இன்று கொரோணாவுக்கு முடிவு கட்டி விட்டால் நாடு மீண்டும் முன்னேற்றப்பாதையில் வீறு நடை போடத் தொடங்கி விடும் என்கிறார்கள். ஆனால், இலங்கையின் பொருளாதாரம் தனது சுய பலமாக உள்ள வளங்களைக் கொண்டு சரியான சுயாதீனமான பாதையில் சுயசார்புத் தளங்களைக் கட்டியெழுப்பத் தவறியமை இன்று நேற்றல்ல சுதந்திரம் பெற்ற காலம் தொட்டே தொடர்கதையாக உள்ளதை இக்கட்டுரை முன்னர் பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளது.
அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் உலக அமைப்புக்கள் பலவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கும் யுத்த அழிவுகளை புனரமைப்பு செய்வதற்காகவும் அள்ளிக் கொடுத்த கொடைகளையும் மிகப் பெருந்தொகை கடனுதவிகளையும் கொண்டு நடத்திய பொருளாதார நடவடிக்கைகளை கூட்டிப் பெருக்கி யுத்தத்தின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் 30 சதவீதம், 35 சதவீதம் என பாய்ச்சலில் முன்னேறிச் செல்வதாக கணக்குக் காட்டியது அரசாங்கம். ஆனால் அது 2010ம் ஆண்டு தொடங்கிய அந்தப் பாய்ச்சல் அடுத்த ஆண்டுகளில் இறங்கு முகமாகி 2014ம் ஆண்டோடு நாட்டின் பொருளாதாரமானது களைத்துப் போன மாடுகள் இழுக்கும் வண்டி போல் முன்னோக்கி நகர மறுத்தது மட்டுமல்லாது, பின்னோக்கி அடி நகரும் போக்கில் அமையத் தொடங்கியது. 2018ல் மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்கிய பொருளாதாரத்தை கொரோணா நோயின் பாதிப்புகள் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் மேலும் மோசமாக பின்தள்ளிக் கொண்டிருக்கின்றது.
பலமான சுய தளங்களை இலங்கையின் பொருளாதாரம் கொண்டிருந்தால் இவ்வளவு தூரம் மீள முடியா அளவுக்கு ஆழமான பொருளாதார பின்னடைவுகளைகளை அடைந்திருக்க மாட்டாது. இலங்கையின் அண்டை நாடுகளும் மிக அதிக அளவில் கொரோணா நோயின் பாதிப்புக்கு உள்ளானவைதான். ஆனால் அவை ஒரு சில மாதங்களுக்கு உள்ளேயே தமது பொருளாதாரத்தை சுதாகரித்துக் கொண்டன.
2009ம் ஆண்டு முடிவில் 2000 டொலர்களாக இருந்த தலாநபர் தேசிய வருமானம் 2010ன் முடிவில் 2750 டொலராகவும் (டொலர் கணக்கில் ஓராண்டில் 35 சதவீத வளர்ச்சி), 2013 இறுதி வரையான அடுத்த மூன்று ஆண்டுகளின் முடிவில் 3610 டொலராகவும் (அதாவது மூன்று ஆண்டுகளில் மொத்தமாக 31 சதவீத வளர்ச்சி), அதாவது யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 70 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சியடைந்ததாக கணக்குப் பார்க்கப்பட்டது. இதை வைத்துத் தான் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சா அவர்கள் இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்கி விட்டதாக பெருமிதத்தோடு பிரகடனம் செய்தார். ஆனால் இந்த வளர்ச்சி வீதம் அவருடைய ஆட்சியிலேயே 2014ல் 5.8 சதவீமாக இறங்கி விட்டது.
2015ல் மைத்திரி – ரணில் கூட்டாட்சியானது, இந்தா இலங்கையின் பொருளாதாரத்தை யாரும் நினைத்துப் பாரக்க முடியா வேகத்தில் முன்னேற்றிச் செல்லப் போகிறோம் என்று அரசு கட்டில் ஏறினர். அவர்களுக்கு ஆதரவான நாடுகளெல்லாம் அவர்கள் சாதிக்கட்டும் என அள்ளு கொள்ளையாக கடன்களை வழங்கினார்கள் ஆனால் 2015ன் முடிவில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி டொலர் கணக்கில் வெறுமனே அரை சதவீத அதிகரிப்பையும் 2016ன் முடிவில் 1 சதவீத அதிகரிப்பையுமே காட்டி அதே தேக்க நிலையிலிருந்து அசையாமலேயே நின்றது.
2017ல் இலங்கையர்களின் தலாநபர் தேசிய வருமானம் 4000 டொலர்களைத் தாண்டி விட்டதாக பெருமையடித்தார்கள். ஆனால் உண்மையென்ன 2017ல் டொலர் கணக்கில் தலாநபர் வருமானம் வெறுமனே 90 டொலர்களால் மட்டுமே அதிகரித்தது. அதாவது 2.2 சதவீதம் மட்டுமே அதிகரித்தது. 2015ம் ஆண்டு ஆரம்பத்தில் மைத்திரி – ரணில் ஆட்சி தொடங்கிய பொழுது 3821 டொலர்களாக இருந்த இலங்கையின் தலாநபர் வருமானம் கூட்டாட்சி 2019ல் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அதே நிலையிலேயே இருந்தது. நான்கு ஆண்டு நல்லாட்சி நிறைவேறி விட்டது – ஈஸ்டர் நாள் தாக்குதலும் நடைபெறவில்லை அப்போதும் கூட இலங்கையின் தேசிய வருமானத்தில் எந்த ஏற்றமும் ஏற்படவில்லை.
2019ம் ஆண்டின் ஈஸ்டர் தாக்குதல் இலங்கையின் உல்லாசப் பயணத்துறை மூலமான அந்நிய செலாவணி வருமானத்தை பெரிதும் பாதித்தது எனினும் இலங்கையின் தலாநபர் வருமானத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரையான தலாநபர் வருமானம் அமெரிக்க டொலர் கணக்கில்
ஆண்டுகள் தலாநபர் தேசிய வருமானம் அமெரிக்க டொலரில்
மஹிந்த ஆட்சியில்:
2009 2057
2010 2744
2011 3129
2012 3351
2013 3610
2014 3821
மைத்திரி-ரணில் ஆட்சியில்
2015 3842
2016 3886
2017 4077
2018 4057
2019 3852
ஆனால், இதே காலகட்டத்தில் வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன் சுமைகளோ மலை போல் உயர்ந்தன. 2005ம் ஆண்டு 11.8 பில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டுக் கடன், மஹிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் கால முடிவாகிய 2010ல் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்து 21.7 பில்லியன் டொலர்களானது. அது மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக்கால முடிவாகிய 2014 இறுதியில் மேலும் இரண்டு மடங்காக அதிகரித்து 42.2 பில்லியன் டொலர்களாகியது.
2015ம் ஜனவரியில் ஆட்சியை அமைத்த மைத்திரி – ரணில் கூட்டாட்சியானது 2019ம் ஆண்டு அவர்களது ஆட்சி முடிவடைந்த ஐந்தாண்டு காலத்தில் இலங்கையின் வெளிநாட்டுக் கடனை 56 பில்லியன் டொலர்களாக உயர்த்தி சாதனை புரிந்தாலும் 2019ம் ஆண்டில் அட்சிக்கு ராஜபக்சாக்கள் மேலும் கடன்களை வாங்குவதற்காக நாடு நாடாக பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் ஆனால், அவர்களின் வெளிநாட்டு உறவுக் கொள்கையும், கொரோணாத் தொற்றின் பாதிப்பும் ஒருங்கு சேர்ந்து அவர்களுக்கு வெளிநாடுகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும் வாய்ப்புகளை வெகுவாக குறைத்துள்ளன. ஆனால், ஏற்கனவே வாங்கிய கடன்களை திருப்பிக் கொடுக்க வேண்டிய சுமைகளால் ராஜபக்சாக்கள் திணறிப் போயிருக்கிறார்கள்.
மேற்கூறப்பட்டுள்ள ஒப்பீட்டு விபரங்கள் எதனைக் காட்டுகிற தென்றால் இலங்கையின் பொருளாதாரம் தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு அடிப்படையான நோய்கள் ஈஸ்டர் நாள் பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் கொரோணா நோயின் பாதிப்புக்கள் ஆகியவற்றிற்கு முன்னரே பீடித்து விட்டன என்பதனையே.
எந்தக் கோணம் நோக்கினாலும், இலங்கையின் பொருளாதார அமைப்பில் கோணல்களே தெரிகின்றன.
குறைவிருத்தியான உள்ளுர் உற்பத்தி மற்றும் வர்த்தகக் கட்டமைப்புகள்: குறிப்பாகக் கூறினால் உள்ளுர் உற்பத்திகளை நோக்கிய தேசிய பொருளாதார வளர்ச்சி மற்றும் அவையொட்டிய வர்த்தக வளச்சிக்கு மாறாக இலங்கையில் இறக்குமதிகளை மையமாகக் கொண்ட வகையாக வல்லமை கொண்ட நாடுகளோடு கட்டி இணைக்கப்பட்ட தரகு முதலாளித்துவ வளர்ச்சியே ஊக்குவிக்கப்பட்டுள்ளது. உள்ளுர் உற்பத்தி முயற்சிகள் அனைத்தும் அவற்றோடு பின்னிப் பிணைக்கப்பட்டவையாகவே உள்ளன.;
உழைப்பு வளத்தின் பயன்பாட்டிலும் சரி,அது தொடர்பான கல்வி மற்றும் ஆக்கத் திறன் ஊட்டல்களின் கட்டமைப்பிலும் சரி சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் காலனித்துவ கால பாரம்பரியத்திலிருந்து மாற்றம் பெற்ற முன்னேற்றங்கள் எதுவும் இலங்கையின் கட்டமைப்பில் ஏற்படுத்தப்படவில்லை.
ஏற்றுமதி வர்த்தகத்தில் தேயிலை, றப்பர், தெங்குப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் என ஒரு சில பண்டங்களில் மட்டுமே தங்கியிருக்கிறது என்ற விமர்சனங்கள் இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரம் பற்றி 1970கள் வரை பரவலாக இருந்தது. 1977ல் ஆட்சியமைத்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கம் அறிமுகப்படுத்திய திறந்த தாராள பொருளாதாரமானது தயாரித்த ஆடைகள், இரத்தினக் கற்கள் ஆகிய வேறு ஒரு சில ஏற்றுமதிப் பொருட்களை அறிமுகப்படுத்தியதற்கு அப்பால் வேறேந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏற்றுமதி வருமானத்தில் அரைவாசிக்கு மேல் வருமானம் தருவதாகக் கூறப்படும் ஆடை ஏற்றுமதிகள் ஒரு சில மேலைத் தேச நாடுகளின் கருணையிலேயே தங்கியிருப்பது அனைவரும் அறிந்த விடயமே. தேயிலைக்காவது பன்முகமான நாடுகளின் கோரிக்கையுண்டு. ஆனால், ஏற்றுமதிகளைப் பொறுத்தவரையில் அமெரிக்காவும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளும் கதவை மூடினால் ஆடைத் தொழில் இங்கு படுத்து நித்திரை கொள்ள வேண்டியததான்.
தென்னாவிலேயே சிறந்த பொருளாதாரம் கொண்டதாக சொல்லப்படுகின்ற இலங்கையின் விவசாயத் துறையை நோக்கினாலும் சரி அல்லது ஆக்க உற்பத்தித் துறையை நோக்கினாலும் சரி உற்பத்தித் திறன் விடயத்தில் பாராட்டக்கூடியதாகவோ அல்லது திருப்திப்படக் கூடியதாகவோ இல்லை. நாடு முழுவதுவும் நரம்புகள் போல் நாலா பக்கமும் ஓடும் நதிகளையும், வளமான நிலங்களையும், சாதகமான காலநிலைகளையும் கொண்ட நாடு இலங்கை. இங்கு கிட்டத்தட்ட 60 சதவீத உழைப்பு சக்தி உணவுப் பண்டங்களின் உற்பத்தியிலும், அவற்றின் வர்த்தகத்திலும், அவற்றோடு தொடர்பான சேவைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றது. இவ்வாறான இலங்கையின் விவசாயத்தை, 60 சதவீதத்துக்கு மேல் வானம் பார்த்த விவசாய நிலங்களைக் கொண்ட அண்டை நாடான இந்தியாவோடு ஒப்பிட்டோமானால் இங்கு விவசாயத் துறையில் நெல் உற்பத்தியைத் தவிர ஏனையவற்றில் முன்னேறுவதற்கு இன்னமும் எவ்வளவு தூரம் உள்ளதென்பது தெளிவாகும்.
நிலத்தின் நெல் விளைச்சல் திறன் 2019FAO
கிலோகிராமில் ஒரு ஹெக்டேயருக்கு (அதாவது இரண்டரை ஏக்கர்களுக்கு)
இந்தியா இலங்கை
நெல் 4057 4795
மரவள்ளிக் கிழங்கு 30527 13650
உருளைக் கிழங்கு 23097 18712
தக்காளி 24337 13276
கரும்பு 80104 50390
கத்தரிக்காய் 17441 13654
பச்சை மிளகாய் 8273 5626
அன்னாசி 16452 9718
இவ்வாறாக இலங்கையின் பொருளாதாரத்தினுடைய ஒவ்வொரு கூறுகளையம் நுணுக்கமாக நோக்கினால் பாராட்டத்தக்கதாக அல்லது எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளைத் தரத்தக்கதாக இலங்கைப் பொருளாதாரத்தின் எந்தப் பாகங்கள் உள்ளன எனும் விடயம் சரியான விடைகளற்று கேள்விகளாலேயே நிரம்பியிருக்கிறது.
எண் சாண் உடம்புக்கு தலையே பிரதானம்
அதேபோல ஒரு நாட்டின் தேசிய பொருளாதார முன்னேற்றத்துக்கான முகாமைத்துவ தலைமைப் பொறுப்பு அரசுக்கே உரியதாகும். நாட்டின் தேசிய பொருளாதாரம் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதற்கு ஆட்சியாளர்கள் அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தை சரியாக முகாமைத்துவம் செய்தல் வேண்டும். ஆனால் அரசாங்கம் அரசின் நிதி நிர்வாகத்தை முகாமைத்துவம் செய்வதிலேயே கோட்டை விட்டு விட்டு நிற்கிறது.
நாட்டின் தேசிய பொருளாதார நிர்வாகமும் அரசாங்கத்தின் நிதி நிர்வாகமும் சரியாக முகாமைத்துவம் செய்யப்பட்டால் ஒன்றையொன்று உந்தி முன்னேற்றுபவையாகும். ஆனால் முகாமைத்துவம் பிழையானால் ஒன்றுக்கொன்று பாதகமான தாக்கங்களை விளைவிப்பவையாகும். அதாவது அரசாங்க நிதி நிர்வாகத்தை சரியாக முகாமைத்துவம் செய்யவில்லையென்றால் ஆட்சியாளர்களால் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றகரமான முறையில் செயற்படுத்த முடியாது என்பதே அர்த்தமாகும். எனவே இங்கு இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் பல்வேறு கூறுகளையும் பரிசோதிக்கையில் அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் தொடர்பான பிரதானமான அம்சங்கள் எவ்வாறாக உள்ளன என்பது பற்றிய தெளிவான புரிதலும் அவசியமாகும்.
அரச நிதி நிர்வாகம் என்பது அரசாங்கம் அரசுக்கான வருமானங்களை பொது மக்களுக்கு பெரும் சுமைகளை ஏற்படுத்தாமல், போதிய அளவு முழுமையாகத் திரட்டுதல் மற்றும் அரசாங்கத்தின் செலவுகளை முறையாக சிறந்த முறையில் மேற்கொள்ளுதல் தொடர்பானதாகும். அந்த வகையில் இலங்கை அரசின் நிதி நிர்வாகத்தை ஆட்சியாளர்கள் எந்தளவு தூரம் முறையாக, சரியாக, சிறப்பாக மேற்கொள்கிறார்கள் என கேள்வி எழுப்பி நோக்கினால், ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தைச் சார்ந்தவர்களையும் மற்றும் அரசாங்கத்தை வக்காலத்து வாங்கியே ஆக வேண்டும் என்றிருப்பவர்களையும்; தவிர வேறொவ்வருவரும் கடுமையான விமர்சனங்களைக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகவே உள்ளது. இவ்விடயத்தில் எதிர்கட்சிகள் சார்ந்தவர்கள் மற்றும் எதிர்க் கட்சிகள் சார்பாக வக்காலத்து வாங்குபவர்களை ஒரு புறம் ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும் உண்மையில் நடுநிலையானவர்கள் மற்றும் பாரபட்சமற்ற சமூக அக்கறை கொண்டவர்கள் எவரும் இங்கு அரசாங்கத்தின் அரச நிதி நிர்வாகம் தொடர்பில் ஓரளவுக்குக் கூட திருப்தியடைய முடியவில்லை என்பதே உண்மையாகும். இங்கு அரசாங்கம் என்பது இப்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை மட்டும் குறிக்க வில்லை. கடந்த காலங்களில் ஆட்சிக் கட்டிலில்லிருந்த அனைத்து அரசாங்கங்களையும் உள்ளடக்கியே குறிக்க வேண்டியுள்ளது.
சுயமான வளங்களைக் கொண்டு சுயசார்பு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முனையாது வெளிநாட்டு மூலதனங்களுக்காக நாட்டைத் திறந்து தாராளமயமாக்கி கடைசியில் வெளிநாட்டுக் கடன்களில்லாமல் அரசாங்கத்தை நிர்வகிக்க முடியாது என்ற நிலைக்குக் கொண்டு வந்த அரசாங்கங்கள் அனைத்தும் அரசாங்க நிதி நிர்வாகம் இன்றைய சீரழிவு நிலைக்கு வருவதற்கு பொறுப்பானவையாகும்.
அரச நிதி நிர்வாகம் தொடர்பாக அடுத்த தொடர்களால் சற்று விபரமாக நோக்கலாம்.
(அடுத்து தொடரும் பகுதி – 8)