திறந்த பொருளாதாரமுறைமை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி படிப்படியாக வளர்ச்சி கண்டிருந்த போதிலும், 2022 மார்ச் மாதம் முதல் 2022 மே மாதம் வரையான பொருளாதார நெருக்கடி தோன்றிய காலப்பகுதியில், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி ரூ. 204 என்பதிலிருந்து ரூ. 369 ஆக சடுதியாக வீழ்ச்சியடைந்தது. அதுபோலவே, டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 2023 பெப்ரவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் ரூ. 364 இலிருந்து ரூ. 290 ஆக உயர்ந்திருந்தது. ரூபாயின் பெறுமதியின் ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகளின் விளைவாக இந்நிலை ஏற்பட்டிருந்தது.
இவ்வாறு ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளமை என்பது பொருளாதார மீட்சியின் அடையாளமாக அமைந்துள்ளதாக பொதுவான கருத்துகள் காணப்படுகின்றன. அதில் ஓரளவு உண்மைத்தன்மையும் காணப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 1977 ஆம் ஆண்டின் பின்னர் நடைமுறைக் கணக்கில் நேர் பெறுமதி மீதி காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக் கணக்கில், ஏற்றுமதி வருமானம் மற்றும் இறக்குமதி செலவீனம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு, வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் போன்ற வியாபார மீதி அடங்கியுள்ளன.
2023 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதி செலவீனம் வழமைபோல அதிகமாக காணப்பட்டது. இதனால் வர்த்தக மீதியில் மீதியில் மறைப் பெறுமதி பதிவாகியிருந்தாலும், வெளிநாட்டு பண அனுப்புகைகள் மற்றும் சுற்றுலாத் துறை வருமானம் போன்றன உயர்வை பதிவு செய்திருந்தமையினால் நடைமுறைக் கணக்கில் நேர் பெறுமதி மீதியை எய்த முடிந்திருந்தது.
நிதிக் கணக்கு என்பது எவ்விதமான முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் தவணைகள், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிடமிருந்து கடன்கள், நட்பு நாடுகளிடமிருந்து கடன் உதவிகள் போன்றன கிடைத்திருந்தன.
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் அரசாங்க கடன் பத்திரங்கள் சார்ந்த கொடுக்கல் வாங்கல்களினூடாக நாட்டினுள் பணப்பாய்ச்சல் காணப்பட்டது. இவை பொருளாதார மீட்சிக்கான நேர்த்தியான அடையாளங்களாகும்.
மேலும் பொது மக்கள் எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடியான சூழ்நிலை காரணமாகவும், பண்டங்களின் விலை உயர்வாக காணப்படுகின்றமையாலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் நுகர்வில் வீழ்ச்சி பதிவாகியிருக்கலாம். இதனால் இறக்குமதி செலவு குறைவதில் பங்களிப்பு வழங்கியிருக்கும்.
சந்தையினுள் வரும் டொலர்களின் எண்ணிக்கை, வெளிச்செல்லும் டொலர்களை விட உயர்வாக இருந்தமையினால், சந்தையில் டொலர்களின் மிகை நிலை காணப்பட்டது. இதனால் சந்தையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தது.
இந்த வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக சந்தையில் மிகையாக காணப்படும் டொலரை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை உயர்த்தியிருந்தது.
இவ்வாறு 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அந்நியச் செலாவணி இருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்தது. இதில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு சந்தையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகும். இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைவதற்கான காரணம் இதுவாகும்.
எவ்வாறாயினும், உண்மை நிலை இதுவல்ல. தற்போதும் நாட்டில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. ஏற்றுமதியில் ஈடுபடுவோர் தமது டொலர் வருமானங்களை உடனடியாக ரூபாயாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனும் விதிமுறை காணப்படுகின்றது.
நாடு பெற்றுக் கொண்ட சர்வதேச கடன்களை மீளச் செலுத்த ஆரம்பிக்கவில்லை. எனவே, சந்தையில் ஏற்பட்டுள்ள டொலர் மிகை என்பது உண்மையான நிலைவரம் அல்ல. சந்தையிலிருந்து சில காரணிகள் பலவந்தமாக கட்டுப்படுத்தப்படுகின்றமை இந்த பெறுமதி வீழ்ச்சியில் பங்களிப்புச் செலுத்துகின்றது.
இந்தக் காரணிகளும் தளர்த்தப்படும் போது, இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இலங்கையில் நுகர்வோர் பொருட்கள், இடைப்பாவனை பொருட்கள் மற்றும் மூலதன பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் இல்லை.
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்திருந்த போதிலும், இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களில் இதுவரையில் விலைக்குறைப்பு ஏற்படுத்தப்படவில்லை.
பால்மா விலையில் மாத்திரம் விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறிப்பாக, நாட்டில் பொது மக்களின் வாழ்க்கைச் செலவில் பிரதான தாக்கம் செலுத்தும் காரணியான எரிபொருள் விலைகள் குறைக்கப்படவில்லை.
சர்வதேச சந்தையில் கடந்த மாதம் நிலவிய எரிபொருள் விலை உயர்வுகள் மற்றும் ஜனவரி மாதம் முதல் எரிபொருள்கள் மீது பெறுமதி சேர் வரி பிரயோகிக்கப்பட்டுள்ளமை போன்றன இத்தத் தீர்மானத்தில் தாக்கம் செலுத்தியிருக்கலாம்.
நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கப்படுவதுடன் ரூபாயின் மதிப்பு உயர்வடைந்தால், அது இயற்கையானது. தற்போதைய நிலை மிகவும் தற்காலிகமானதாகும். எதிர்காலத்தில் இறக்குமதிகள் கட்டுப்பாடுகள் மேலும் தளர்க்கப்பட்டதும், பெற்ற கடன்களை மீளச் செலுத்த ஆரம்பித்ததும், இந்த நிலை மாறும். ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிக்கும்.
தற்போதைய பொருளாதார மீட்சி என்பது வெறும் மாயக் கதை, விரைவில் நாம் மீண்டும் பின்நோக்கி செல்வோம் என்றவாறான கருத்துகள் பகிரப்படுகின்றன.
முறையாக பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றப்படாவிடின், நாட்டின் பின்நோக்கிய நகர்வை தடுக்க முடியாது. நாட்டினுள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதுடன், அது சார்ந்த வருமதி அதிகரித்துள்ளது மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றுவோர் அனுப்பும் பணத்தொகையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
குறுகிய கால அடிப்படையில் இந்த இரு துறைகளினூடாகவும் நாட்டினுள் அந்நியச் செலாவணி வரத்து அதிகரிக்கும்.
ஆயினும், தேர்தல்கள் தொடர்பில் பேசப்படும் நிலையில், கடந்த காலங்களைப் போன்று, மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக நிவாரணம் வழங்குகின்றோம் எனும் போர்வையில், மீண்டும் நாட்டை பின்தள்ளும் தீர்மானங்களை அதிகாரத்திலுள்ளவர்கள் மேற்கொள்ளாமல் இருந்தால் நன்று.