– ஆசிரியர் குறிப்பு
சம்பந்தர்கடை என் நினைவில்
(கரவெட்டி ராஜி)
கரவெட்டி சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை.
நாலு றோட்டு சந்திக்கும் இடம் மட்டுமல்ல, அங்கிருப்பவர்களுடன் உணர்வாக கலந்து , உயிராகி விட்ட இடம் தான் சம்மந்தர்கடை.
துணி முதல் தும்புதடி வரை கிடைக்கும் ஒரே இடம். சங்ககடையில் சீத்தைதுணி முதல் சீரகம் வரை எல்லாமே வாங்கிடலாம்.
பக்கத்தில் இராசனாயகப்பா பெரும் கடை முதலாளி. அக்கம் பக்கம் உள்ளோர் கடன்கொப்பி வைத்து மாதம் ஒருமுறை பணம் செலுத்தி பொருட்களை வாங்கிடுவர். அங்குள்ளவர்கள் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கை தான் காரணமோ.
பக்கத்தில் ஒரு நகைக்கடையும் இருந்தது. எங்கள் பெண்களின் சிறு சேமிப்பு தோடாகவோ, மூக்குத்தியாகவோ அவர்களை அழகுபடுத்திவிடும்.
கரவெட்டி ஆண்கள் அன்றைய கமல் ஆகவும், ரஜனியாகவும் இருந்ததற்கு காரணமே அங்குள்ள முடிதிருத்தகம் ஒன்று இருந்தது தான் காரணம் என்றால் மறுக்க தான் முடியுமா.
உடைகளை துவைத்து, அயன் செய்து தந்து பாடசாலை யில் சிட்டாக நாமும் சிறகடித்ததற்கு, அங்கிருந்த லோன்றியும் முழு முதற்காரணம் தான்.
சிறுபெட்டி வியாபாரிகள், ஏன் பெரிய மரக்கறி கடையும் கூடவே இருந்தது.
சம்மந்தர்கடையில் காலை ஒரு ஆறு, ஆறரையிலிருந்து ஏழு எழரைவரைக்கும் இடியப்பம் முதல் தோசை, வெள்ளையப்பம், பாலப்பம் விற்பார்கள். கொஞ்ச நேரம் பிந்தினால் வீட்டில அடுப்பு மூட்ட வேண்டும். அந்த செல்லாச்சி மாமியின் வெள்ளையப்பத்தை நினைத்தால், இன்றளவும் அப்படி ஒரு அப்பம் நானும் சாப்பிட்டதில்லை. அந்த தோசையில் சம்பல் ஊறி, அம்மம்மா இப்ப நினைத்தாலும் மனம் தவிக்கிறது. உள்ளுக்குள் மூச்சுமுட்டுகிறது.
ஒன்பது, பத்துமணிக்கெல்லாம் மீன் சந்தை தொடங்கிவிடும். அதை வாங்க பெண்கள் வீட்டில் போட்டிருந்த மைக்சியோட வாடி மீனாட்சி, வாடி சரசி மீன் வாங்கி வருவம் என்று, அவர்களுக்கும் ஊர் கதை பேச அப்ப தான் நேரம் கிடைக்கும் போல. எடியே அக்காத்தை சின்னாச்சி அக்காத்தை வீட்டை நேற்று இரவு ஒரே சத்தமாக இருந்தது நீ ஏதாச்சும் அறிஞ்சனியே.
ஒவ்வொரு நாளும் தான் அங்கை இடியுடன் கூடிய மழை. இப்படி பல கிசு கிசுகதைகளை அம்மாவின் சேலை தலைப்பை கடித்தபடி நானும் அப்பாவியாக, அடப்பாவியாக இருந்து கேட்டதுண்டு. போற போக்கில பூவரசம் இலையை பிடுங்கி சூடைமீனை அதில் வாங்கி வரத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்.
பின்னேரத்தில் சில வேளை ஐஸ்பழ சைக்கிள் நிற்கும். பனம்பழக்காலங்களில் அம்மாபேத்தி பனங்காய்காய் விற்பார் . இருபதைந்து சதத்திற்கு ஐந்து தருவார். அந்த சுவை இன்றளவும் என் நாக்கில். அந்த இருபத்தைந்து சதத்திற்கு வசதி இருந்ததில்லை அன்று.
நாவற்பழக்காலங்களில் நாவற்பழம் பின்னேரங்களில் ஆச்சி ஒருவர் விற்பார். வீட்டில் அம்மா மல்லி பேணியில் மறைவாக வைத்ததை நாங்களும் பல நாளாக மறைந்து, காத்திருந்து எடுத்து கொண்டு சென்று வாங்கி நண்பர்களுக்கு காட்டி காட்டி உண்பதில் இருக்கும் சுகமிருக்கே அப்பப்பா எங்கு போனாலும் கிடைத்திடாது.
மாலையில் கரவெட்டி ஆண்கள் சேர்ந்து நாட்டு பிரச்சினை, ஏன் வீட்டு பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து எந்த வித தீர்மானமும் நிறைவேற்றப்படாத ஐநா சபை கூடும் இடமும் இதே சம்பந்தர் கடை தான்.
சில வாலிபர்கள் கூட்டமாக நின்று அந்த வழி போய், வரும் பெண்களுக்கு கடலை போடும் இடமும் சம்மந்தர்கடை தான்.
கோயிலுக்கு வரும் காவடி எல்லாம் சமா வைத்து, ஊரையே கூட்டி, வேடிக்கை காட்டிடுவர் அந்த சந்தியில் தான்.
நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்காவது விளையாடிக் கொண்டு இருப்போம், பறைச்சத்தம் கேட்டால் பறந்தோடி வந்து பிணத்தை ஒருமுறை பார்த்திடுவோம்.
இறந்த உடலுக்கு ஊரே கூடி அஞ்சலி செலுத்தும் பிரதான இடமும் நம்ம சம்மந்தர் கடை தான்.
விலாசம் சொல்லும் போது இலகுவாக சொல்ல அடிக்கடி நாங்கள் எல்லோரும் பயன்படுத்தும் ஒரே சொல் சம்மந்தர்கடை.
எங்கள் எல்லோர் வாழ்விலும் மறக்க முடியாத, மறந்து விட முடியாத நிஜமான பல நினைவுகளை நம்மில் அடக்கி வைத்திருக்கிறதென்றால் மிகையாகாது.
உன் அழகில் இன்று வரை பெரிதாக எந்த மாற்றமும் இருந்ததில்லை. கடைகளில் சில மாறினாலும் என் நினைவில் பல காட்சிகளை படமாக்கும் ஒரே இடம் .
வெளியூர் போய் வரும் ஒவ்வொரு முறையும் சம்மந்தர்கடையடியில் சம்மந்தப்பட்டவர்களை எம் மனம் தேடி ஏங்கும். பல முறை ஏக்கமாகவே தான் இருந்திருக்கிறது. அன்றிருந்த மாதிரி கூடி கதை பேச உறவுகள் இல்லையோ. மனம் பதைபதைக்கிறது. பக்கத்தில் இருந்தும் பாரா முகமாகி தொலைபேசி களில் தூரதேசம் பேசி துக்கத்திற்கு கூட துணையாக இருந்து பார்த்திட யாரும் இல்லாத பாவியாகிவிட்டோமோ.
என்னமோ போ எப்படியோ போ. காலங்கள் மாறினாலும் , கதிரவன் உதிக்கும் திசை மாறுவதில்லை. எங்கள் நினைவில் சம்மந்தர்கடை , கடைகள் நிறைந்த இடம் மட்டுமல்ல வாழ்வோடு ஒன்றிப்போன இடம். ஒரு நாளைக்கு பல முறை தரிசிக்கும் கரவெட்டி ஷொப்பிங் மால் எல்லோர் நினைவிலும் சொர்க்கம் தான்.