உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இன்னுமொரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் போடப்பட்டிருக்கும் முடிச்சை அவிழ்க்கவேண்டும். பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு இன்னும் காலமிருக்கிறது.
அத்தேர்தல்களில் ஆட்சி மாறலாம்; ஜனாதிபதி மாறலாம். தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் இருக்கலாம். அவர்களை இன,மொழி, ரீதியில் பாகுபாடுகள் காட்டாமல், ‘நமது நாட்டு மக்கள்’ எனச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும் ஏன், மறைமுகமாகவும் கூட, பெரும்பான்மை இன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்பதைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. நாட்டின் பெயருக்குக் கீர்த்தி, ஏற்படுத்திக்கொடுப்போரை சம அந்தஸ்துடன் கௌரவித்திருக்க வேண்டும்.
அதில், அரசாங்கம் தவறிநிற்கின்றது. தான் பாடியதன் ஊடாக, சர்வதேச ரீதியில் மக்களின் கவனத்தை ஈர்த்த, யொஹானி டி சில்வாவுக்கு காணித்துண்டொன்று வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமரே சமர்ப்பித்து, அங்கிகாரத்தைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.
யொஹானிக்கு காணித்துண்டை வழங்கியதில் தவறில்லை. ஆனால், பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், தன்னுடைய முழுத்திறமையையும் காண்பித்த, முல்லைத்தீவு, ஒட்டிச்சுட்டான் கரிப்பட்டமுறிப்பைச் சேர்ந்த கணேஷ் இந்துகாதேவிக்கும், அரசாங்கம் கௌரவமளித்திருக்க வேண்டும்.
தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில், நாட்டுக்காக தங்கப்புகழ் தேடித்தந்திருக்கும், இந்துகாதேவியின் கடந்தகாலப் பயணம் கடினமானவை; வெற்றிவாகை சூடியதன் பின்னர், பலரும் ஆதரவுக்கரங்களை நீட்டிக்கொண்டிருக்கின்றனர். அதனை மனமுவர்ந்து வரவேற்கவேண்டும். போட்டியில் பங்கேற்க உதவிய நல்லுள்ளங்களையும் மறந்துவிடக்கூடாது.
இந்துகாதேவியைப் போல, வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் நாலாப்புறங்களிலும் திறமையானவர்கள் மூலை முடுக்கெல்லாம் மறைந்திருக்கலாம். அவ்வாறானவர்களை இனங்காண வேண்டியது, விளையாட்டுத்துறை அமைச்சின் பொறுப்பாகும்.
பொது அமைப்புகள் சில உதவியிருக்காவிடின், தங்கப்பதக்கத்தை வென்றிருக்க முடியாதென, இந்துகாதேவி தெரிவித்திருக்கின்றார். ஆகையால், திறமையான வீர, வீராங்கணைகளை இனங்கண்டு, அவர்களுக்கு ஊக்கமளித்து, சர்வதேச களங்களுக்குச் கொண்டு செல்வது விடயதானங்களுக்குப் பொறுப்பானவர்களின் பொறுப்பாகும்.
நாட்டுக்கு கீர்த்தி, புகழ், என்பவற்றைத் தேடிக்கொடுத்ததன் பின்னர், இன,மொழி, மத ரீதியில் வேறுபடுத்திப் பார்க்காமல், ஓர் அகப்பையில் பகிர வேண்டும். அதற்கு அரசாங்கத்துக்குள் இருக்கும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள் அழுத்தம் கொடுக்கவேண்டும். அதனூடாகவே, எதிர்காலங்களில் இந்துகாதேவி போன்ற வீராங்கணைகளை உருவாக்க முடியும் என்பதை நினைவூட்டுகின்றோம்.
(Tamil Mirror)