இதில் பாக் நீரிணைப் பகுதி என்பது இலங்கையின் வடக்கு கடற்கரைக்கும் இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதியே பாக் நீரிணை எனப்படுகிறது. 1755லிருந்து 1763வரை சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த ராபர்ட் பாக்கின் பெயர்தான் இந்த நீரிணைக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. பாக் நீரிணைப் பகுதியை ஒரு கடல் என்றே சொல்ல முடியாது. பவளப் பாறைகள், மணல் திட்டுகள் அதிகம் இருப்பதால் இந்தப் பகுதியில் பெரிய கப்பல்கள் செல்ல முடியாது.
இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலிருந்து 10.5 மைல் தொலைவிலும் பாக் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மிகச் சிறிய தீவுதான் கச்சத்தீவு. இதன் பரப்பு சுமார் 285 ஏக்கர். இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டர்கள்தான். மனிதர்கள் யாரும் வசிக்காத இந்தத் தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்றும் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் இந்தக் கோவிலில் இந்தக் கோவிலில் ஒரு வாரத்திற்கு வழிபாடு நடப்பது வழக்கம். 1983ல் இலங்கையில் இனப் பிரச்னை ஏற்பட்ட பிறகு இந்த வழிபாடு தொடர்ச்சியாக நடப்பது தடைபட்டது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சீனிக்குப்பன் படையாச்சி என்பவர் இந்த ஆலயத்தைக் கட்டியதாகவும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் இந்தக் கோவிலில் பூசைவைப்பார் என்றும் கெஸட்டியர் சொல்கிறது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பிரிட்டிஷார் இந்தத் தீவை, வெடிகுண்டுகளை வெடித்துப் பயிற்சி செய்யப் பயன்படுத்தினார்கள்.
கச்சத்தீவின் உரிமை யாருக்கு?
ராமநாதபுரம் ராஜாவின் ஜமீன்தாரி உரிமைகளை வைத்தே 1974வரை கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பான எல்லா ஆவணங்களும் புதுதில்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. அவை தற்போது ரகசிய ஆவணங்களாகப் பராமரிக்கப்படுகின்றன. 1902ல் இந்தத் தீவை அவருக்கு இந்திய அரசு வழங்கியது. அவருடைய ஜமீனுக்காக அவர் வழங்க வேண்டிய பெஷ்குஷ் (குத்தகைத் தொகை) இந்தத் தீவையும் உள்ளிட்டே கணக்கிடப்பட்டது. இந்தத் தீவைச் சுற்றி மீன் பிடிக்கும் உரிமை, தீவில் மேய்ச்சல் உரிமை, வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் உரிமை ஆகியவற்றை ராமநாதபுரம் ராஜா குத்தகைக்கு விட்டிருந்தார்.
இதற்கு முன்பாகவே 1880 ஜூலையில் முகமது அப்துல்காதர் மரைக்காயர் என்பவரும் முத்துச்சாமிப் பிள்ளை என்பவரும் ராமநாதபுரம மாவட்ட துணை ஆட்சியர் எட்வர்ட் டர்னர் பெயரில் ஒரு குத்தகைப் பத்திரத்தைப் பதிவுசெய்தார். சாயம் தயாரிப்பதற்காக 70 கிராமங்களிலும் 11 தீவுகளிலும் வேர்களைச் சேகரிக்க இந்த குத்தகை உரிமை வழங்கியது. அந்த 11 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்று. 1885ல் இதே மாதிரியான இன்னொரு குத்தகைப் பத்திரம் கையெழுத்தானது. 1913ல் ராமநாதபுரம் ராஜாவுக்கும் இந்தியவுக்கான வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக் குத்தகைப் பட்டியலிலும் கச்சத்தீவின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதாவது, இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளையும் ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசு கச்சத்தீவை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்ததே தவிர, இலங்கையின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. 1948 செப்டம்பர் ஏழாம் தேதி மெட்ராஸ் எஸ்டேட் (அபாலிஷன் அண்ட் கன்வர்ஷன் இன்டு ரயத்வாரி) சட்டத்தின் கீழ் சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டபோது கச்சத்தீவு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானது.
1972ல் தமிழ்நாடு அரசால் பதிப்பிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட கெஸட்டியர், கச்சத்தீவை ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது. கச்சத்தீவின் சர்வே எண் 1250. இருந்தபோதும், கச்சத்தீவு ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்ற வகையிலேயே அந்த விவகாரத்தை அணுகியது இலங்கை அரசு.
பிரச்னை துவங்கியது எப்போது?
கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை 1920களிலேயே துவங்கிவிட்டது. பாக் நீரிணை – மன்னார் வளைகுடா பகுதிகளில் எல்லையை வரையறுப்பதற்காக 1921 அக்டோபர் 24ம் தேதி கொழும்பு நகரில் சென்னை மாகாண அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தக் கட்டத்தில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சுங்க வரிக்கான முதன்மை கலெக்டர் ஹார்ஸ்பர்க், கச்சத் தீவு இலங்கைக்கு வரும்படி எல்லையை வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநாட்டை நிறுத்திவிடலாம் என்று சொன்னார். இதை ஏற்காத இந்தியக் குழு, வேண்டுமானால் அந்தப் பகுதியின் மீன்பிடி உரிமையை மட்டும் தருவதாகச் சொன்னது. ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை காலனி அலுவலகம் ஏற்கவில்லை. ஆகவே சட்டரீதியாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கே வரவில்லை.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தப் பிரச்னை அவ்வப்போது எழுப்பப்பட்டது. இருந்தபோதும் இந்திய அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. 1967ல் தி.மு.க. பெரும் எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்பியது. இதற்குப் பிறகு பெரிய அளவில் இந்த விவகாரம் அவையில் எழுப்பப்பட்டது. அப்போதெல்லாம் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி, ஜனசங்கம் ஆகியவை தி.மு.கவுக்கு ஆதரவளித்தன. 1968 மார்ச்சில், ஒரு ஒத்திவைப்புத் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியால் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்தில், இந்த விவகாரத்தைக் கண்டுகொள்வதில்லை என்ற போக்கையே கடைபிடித்தது மத்திய அரசு.
1969ல் லண்டனில் காமன்வெல்த் மாநாடு நடந்தபோது, இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயகவும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் நிலைமை மோசமாகும் வகையில் எதையும் செய்வதில்லை என ஒப்புக்கொண்டனர். மேலும், புனித அந்தோணியார் திருவிழாவின்போது, சாதாரண உடையணிந்த காவலர்களே அங்கு நிறுத்தப்படுவார்கள் என்பதையும் இருதரப்பும் ஏற்றுக்கொண்டனர்.
ராமநாதபுரம் ஜமீனின் ஆவணங்களைக் காட்டி தி.மு.க. அரசு கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என்று கூறினாலும் மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. ஒருகட்டத்தில், அந்தத் தீவின் மீதான வரலாற்று உரிமை இந்தியாவிடம் இருந்ததா என ஆராயும்படி இந்திரா காந்தி தெரிவித்தார். ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்தனர். 1973வாக்கில் கச்சத்தீவு மீதான உரிமையை இந்தியா விட்டுவிட முடிவுசெய்ததுபோலத் தெரிந்தது.
இதையடுத்து, தனது சட்ட அமைச்சரான செ. மாதவனுடன் இந்திரா காந்தியைச் சந்தித்த முதலமைச்சர் மு. கருணாநிதி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை எழுத்து பூர்வமாகவும் பிரதமரிடம் அளித்தார் மு. கருணாநிதி. மாநில அரசு சேகரித்த ஆதாரங்களின்படி, “கச்சத்தீவின் மீது இலங்கை அரசானது ஒருபோதும் இறையாண்மை செலுத்தியதில்லை என்பதைச் சுட்டி்ககாட்ட போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. அநாதி காலம் தொட்டே தமிழ்நாடு கடற்கரையில் முத்து, சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜா உள்ளிட்ட தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கே உரியதாக இருக்கிறது என வரலாற்று ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ராமநாதபுரம் ராஜா இலங்கை அரசுக்கு எந்தக் காலத்திலும் வாடகையோ, ராயல்டியோ செலுத்தியதில்லை” என முதலமைச்சர் மு. கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
1970களில் இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இலங்கையின் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயகவுக்கும் நல்ல நட்புறவு இருந்தது. “கச்சத்தீவு தொடர்பான பேச்சு வார்த்தை ஒரு கட்டத்தில் முறிந்துபோனது. அந்தத் தீவின் மீது இந்தியாவுக்கு இருக்கும் உரிமையை விட்டுத்தர வேண்டாம் என்று இந்திய அதிகாரிகளின் குழு பிரதமர் இந்திரா காந்தியிடம் வலியுறுத்தியது. உடனே சிறிமாவோ இந்திரா காந்தியைத் தொடர்புகொண்டு, தனக்கு உதவும்படி கோரினார். இல்லாவிட்டால் தனக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்று சொன்னார். சிறிமாவோவின் சிக்கலான சூழ்நிலையைப் புரிந்துகொண்டார் இந்திரா காந்தி. இந்திய அதிகாரிகள் ஏதும் சொல்வதற்கு முன்பாகவே ஒப்பந்தத்தை முடிவுசெய்யும் வகையில் அதில் தலையிட்டார்” என இந்த ஒப்பந்தத்தின் பின்னணி குறித்து Ethnicity Versus Nationalism: The Devolution Discourse in Sri Lanka நூலில் குறிப்பிடுகிறார் பார்த்தா கோஷ்.
இந்தப் பின்னணியில்தான், 1974 ஜூன் 28ஆம் தேதி இந்திய அரசும் இலங்கை அரசும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டது. கச்சத் தீவு இலங்கைக்குச் செல்லும்படி இந்தக் கோடு வரையறுத்தது. இருந்தபோதும், அங்கே மீன் பிடிக்கும் உரிமையும் யாத்ரீகர்கள் அந்தத் தீவுக்கு விசா இன்றி செல்லும் உரிமையும் பாதுகாக்கப்பட்டிருந்தன.
இந்திய மக்களவையில் இது தொடர்பாக விளக்கமளித்த அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங், “இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதன் மூலம் கடந்த காலத்தில் இரு தரப்பினரும் அனுபவித்தது போலவே மீன் பிடிக்கும் உரிமை, கப்பல்களைச் செலுத்தும் உரிமை, யாத்திரை செல்லும் உரிமை ஆகியவை எதிர்காலத்திலும் தொடரும்” என்று குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவு இதைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. “இதுவரை இருந்ததைப் போலவே இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்கு வந்துபோக முடியும். இதற்காகப் பயண ஆவணங்களையோ விசாவையோ இலங்கை கேட்காது” என்கிறது அந்தப் பிரிவு. இருந்தபோதும் அதில் மீன் பிடி உரிமைகள் குறித்து சொல்லப்படவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்டபோது, அந்த பாரம்பரிய உரிமை மாறாது என்று பதிலளித்தார் ஸ்வரண் சிங்.
யாழ்ப்பாணம் முதல் கச்சத்தீவு வரை
எங்கே உள்ளது கச்சத்தீவு?
இந்த ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார் முதலமைச்சர் மு. கருணாநிதி. இந்த கடல்சார் ஒப்பந்தம் மாநில அரசின் உரிமைகளை கடுமையாக பாதித்தாலும் அந்த ஒப்பநத்தத்தின் ஷரத்துகளை மாநில அரசுடன் மத்திய அரசு விவாதிக்கக்கூட முன்வரவில்லை என்று குறிப்பிட்டார் மு. கருணாநிதி. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த காலத்திலும் பிரதமரையும் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்த அவர், கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது அதனை இலங்கைக்குக் கொடுக்கக்கூடாது என்று வாதிட்டார். அதை மீறி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், 1974 ஜூன் 29ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த விவாகரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின் ஷரத்துகளை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசிடம் கேட்டார் மு. கருணாநிதி.
இந்த நிலையில், 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டாவது ஒப்பந்தம் இது தொடர்பாக கையெழுத்தானது. அதன்படி, “இந்திய மீனவர்களும் அவர்களது மீன் பிடிப் படகுகளும் இலங்கைக் கடல் பகுதியிலும் இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலப் பகுதியிலும் இலங்கையின் அனுமதியில்லாமல் மீன்டிபிடிக்க மாட்டார்கள்” என்று கூறியது இந்த ஒப்பந்தத்தின் ஷரத்து. நெருக்கடி நிலை காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
தீர்வு என்ன?
1974 மற்ரும் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, மீனவர்களைக் கைதுசெய்து, படகுகளைப் பறிமுதல் செய்வது ஆகியவை தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த விவகாரத்திற்கு சில தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. 1. கச்சத் தீவையும் அதனைச் சுற்றியுள்ள கடற் பகுதிகளையும் இந்தியா இலங்கையிடமிருந்து நீண்ட கால குத்தகைக்கு எடுப்பது. இதற்கு உதாரணமாக தீன் பிகா விவகாரம் சுட்டிக்காட்டப்படுகிறது. தீன் பிகாவின் மீதான இறையாண்மை உரிமை இந்தியாவிடம் இருக்கிறது. ஆனால் நீண்ட காலக் குத்தகையின் கீழ் அந்தப் பகுதியை வங்க தேச மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இரண்டாவதாக, இந்திய மீனவர்களுக்கு உரிமம் அளித்து கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க அனுமதிப்பது. 1974, 76ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையிலும்கூட, கச்சத் தீவு மற்றும் அதனை ஒட்டிய கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துவரும் நிலையில், இம்மாதிரி ஒரு உரிமத்தை வழங்குவது அந்தப் பகுதியில் மீன் பிடித்தல் தொடர்பாக எழுப்பப்படும் சிக்கல்களுக்கு ஒரு தீர்வாக அமையும்.