கடலை அண்மித்த பிரதேசங்களிலும் கடலோரங்களிலும் களப்பை அண்டிய பிரதேசங்களிலும் பெரும் எண்ணிக்கையான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கடற்றொழில் செய்கிறார்கள். தொழிலுக்கு வசதியாக, இவர்கள் கடற்கரையை அண்மித்த பகுதிகளில், பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றனர். இவற்றில், சட்ட விரோத குடியிருப்புகளும் உள்ளதாகக் குற்றச்சாட்டுகளும் உள்ளன.
இந்நிலையில், கடலை அண்மித்த சில பிரதேசங்களில், கடந்த சில வருடங்களாகக் கடலரிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாகத் தமது வீடுகளை முழுமையாகவோ, பகுதியளவிலோ இழக்க வேண்டிய நிலைக்கு, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆளாகியுள்ளனர்.
இதற்கு உதாரணமாக, வெள்ளிக்கிழமை (05) நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் போருதொட்ட கடற்கரையோரத்தில் கடலரிப்பு ஏற்பட்டதன் காரணமாக, அந்தப் பகுதியில் அமைந்துள்ள 30க்கும் அதிகமான வீடுகள் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதைக் குறிப்பிடலாம்.
இதன் காரணமாக, அந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளதோடு, அரசாங்கம் இதுதொடர்பாக, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்னர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது, ”நாங்கள் பல வருடகாலமாக, இந்தப் பிரதேசத்தில் வசித்து வருகிறோம். அப்போது பல மீற்றர் தூரத்தில் கடல் இருந்தது. தற்போது இந்தப் பிரதேசத்தில் 30 வரையான வீடுகள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இரவு கடலலைகள், வீடுகள் சிலவற்றுக்குள் புகுந்தன. ஒவ்வோர் இரவையும் பயத்துடன் எதிர்நோக்கியுள்ளோம். எமது காணிகள், பல வருட காலமாகக் கடலரிப்புக்கு உள்ளாகி, நாங்கள் நிலங்களை இழந்துள்ளளோம். தற்போது, கடல் கொந்தளித்து, கடலரிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. சில வீடுகளின் பகுதிகள், பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. கடற்றொழில் செய்பவர்களே, இந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர். இதுதொடர்பாக, பிரதேச அரசியல்வாதிகளுக்கு அறிவித்துள்ள போதும், ஏதும் பயன் எற்படவில்லை. கருங்கற் பாறைகளைக் கடல்பகுதியில் தடுப்பாகப் போடுவதன் மூலமாகக் கடலரிப்பு ஏற்பட்டு, எமது வீடுகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம். அரசாங்கம், இதை உடனடியாகச் செய்ய வேண்டும். அல்லது, மாற்றுத் தீர்வை வழங்க வேண்டும்” என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
போருதொட்ட கடற்கரையோரம், நீண்ட காலமாகக் கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றது. அந்தப் பகுதியில் உள்ள நிலங்களை, கடல் மெதுமெதுவாக ஆக்கிரமித்து வருவதாகவும் சுற்றாடல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, கடந்த வருடம் செப்டெம்பர் மாதம், நீர்கொழும்பில் பிட்டிபனை, மோரவல, நீர்கொழும்பு முதல் போருதொட்ட பகுதி வரையுள்ள பல இடங்களிலும் கடலரிப்பு ஏற்பட்டதையும் இங்கு நினைவுகூர வேண்டும். இதன் காரணமாக, வீடுகள் சிலவும் கட்டடங்கள் சிலவும் சேதமடைந்தன.
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக கடலிலிருந்து பாரிய அளவில் மணல் எடுக்கப்பட்டதன் காரணமாகப் பல பிரதேசங்களிலும் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகத் தாங்கள் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டள்ளதாகவும் மீனவர்களும் பிரதேச மக்களும் அப்போது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இதன்போது, நீர்கொழும்பு, கொட்டுவ மைதானத்துக்கு அருகில் அமைந்துள்ள நீர்கொழும்பு மீன் விற்பனை சந்தையின் பின்பக்கமாக உள்ள குட்டித்தீவு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் கடல் நீர் புகுந்ததன் காரணமாக, வீடு சேதம் அடைந்தது. அத்துடன், அந்தப் பகுதி கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, நீர்கொழும்பு மீனவ செயற்பாட்டாளர் வர்ணகுலசூரிய நாமல் பெர்னாந்து, நீர்கொழும்பு தேவதயாவ கிராமிய மீனவர் சங்கத்தின் தலைவர் ஜுட் எக்டர், புனித ஜெபமாலை மாதா கிராமிய மீனவர் சங்கத்தின் தலைவர் மெக்ஸிமன் கூஞ்ச உட்பட பிரதேசவாசிகள் சிலர் அப்போது எமக்குக் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காகக் கடலிலிருந்து பாரிய அளவில் மணல் எடுக்கப்பட்டதன் காரணமாக பிட்டிபனை, மோரவல, குட்டித்தீவு, நீர்கொழும்பு முதல் போருதொட்ட வரையுள்ள கடற்பகுதி, திக்கோவிட்ட உட்பட பல பிரதேசங்களில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
பாரிய அளவில், மணல் கடலிலிருந்து எடுக்கப்பட்டதன் காரணமாக, கடல் வளங்கள் பல அழிந்துள்ளன.மீன் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக, சிறுமீன் பிடித்துறையினர் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நீர்கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் 3,000 வரையான படகுகளில் சென்று, சிறுமீன் பிடித்துறையில் ஈடுபடும் மீனவர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலரிப்புக் காரணமாக, வீடுகள் பலவற்றுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் சில காலத்தில் மேலும் பல வீடுகள், கட்டடங்கள் பாதிக்கப்படும். மக்கள் வீடுகளை இழக்க வேண்டி ஏற்படும். இதற்கு முன்னர், இவ்வாறான நிலை ஏற்படவில்லை. நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக் காரணமாக, சிறு மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் கரையோரம் தமது படகுகளைக் கொண்டு வந்து நிறுத்தி, பிடித்த மீன்களைக் கரைக்கு கொண்டுவர முடியாது அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு மணல் எடுக்கப்பட்டதன் பின்னர்தான், இந்த நிலை ஏற்பட்டது. இந்த வேலைத் திட்டத்துக்காகச் செலவிடும் பணத்தைப் போன்று, நூறு மடங்கு நிதியைச் செலவிட்டாலும் ஏற்பட்டுள்ள இழப்பை, ஈடு செய்ய முடியாது. சில மீன்பிடிச் சங்கங்களுக்கு, நட்டஈடு என்ற பெயரில், பணத்தைக் கொடுத்து, அவர்களின் வாயை அரசு மூடியது. இதன் காரணமாக,ஈ கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நிறுத்தப்பட்டன; போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது எல்லா மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளபோதும், அதற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியாத நிலையில், இந்த மீனவர் சங்கங்கள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள கடலரிப்பு நிலை, தொடர்பாக கடற்றொழில் அமைச்சு உட்பட, உரிய நிறுவனங்கள் உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த வருடமும் பசியவத்தை சிங்களப் பாடசாலை அமைந்துள்ள கடற்பகுதியில், கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்காக பிட்டிபனை, தலாதூவ பிரதேசத்தில், குடாகங்கையில் 8,000 கியூப்புக்கு மேலாக மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டு, இனந்தெரியாத இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு எதிராகவும் அகழ்ந்தெடுக்கப்படும் மணல், தமது பிரதேசத்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் எனவும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து, 11-6-2020 அன்று, பிட்டிபனை வீதியில் குடாகங்கை அமைந்துள்ள பிரதேசத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். பிட்டிபனை ஐக்கிய மீனவர் சங்கம், கம்மல்தொட்ட மீனவர் சங்கம், பலகத்துறை சாந்த ஆனா மீனவர் சங்கம், கம்மல்தொட்ட சாந்த பீற்றர் மீனவர் சங்கம், ஏத்துக்கால் நிர்மல மாதா மீனவர் சங்கம், பலகத்துறை வத்முல்ல மீனவர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.
பிட்டிபனை ஐக்கிய மீனவர் சங்கத்தின் தலைவர் அருண ரொசாந்தவிடம் இதுதொடர்பாக வினவிய போது, ”நீர்கொழும்பில் களப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்போது, 15 ஆயிரம் கியூப் மணல் அகழ்ந்தெடுத்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தலாதூவ பிரதேசத்தில் குடாகங்கையில் மாத்திரம் 8,000 கியூப்புக்கு மேலாக மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டு, கொண்டு செல்லப்பட்டுள்ளது. களப்பில் தேங்கியுள்ள மண்டிகளையும் கழிவுப் பொருள்களையும் அகற்றுவதற்காக, இந்தக் களப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் தற்போது மணல் அகழ்தெடுக்கப்பட்டு, பிற இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என்று குற்றச்சாட்டுத் தெரிவித்தார்.
அத்துடன், இந்த மணல் அகழ்வு காரணமாகப் பிரதேசத்தில் உள்ள பல வீடுகளில், வெடிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அவர்களின் நிலங்கள் குறைந்து உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அங்குள்ள கடலோரத் தாவரங்கள் சில, வேர் அறுந்து களப்புக்குள் வீழ்ந்துள்ளதையும் பெரும் குவியல்களாக மணல் குவிக்கப்பட்டுள்ளதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
களப்பு அபிவிருத்தி என்ற போர்வையில், களப்பு நாசமாகும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படக்கூடாது; மணல் விற்பனை செய்யப்படும் ஊழல் இடம்பெறக்கூடாது; மீனவத் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்; எமது வீடுகள், இருப்பிடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது, அந்த மீனவர்களின் பிரதான கோரிக்கைகளாக இருந்தன.
அபிவிருத்தி என்ற பெயரில், இயற்கைக்கு விரோதமாக மேற்கொள்ளப்படும் சகல செயற்பாடுகளுக்கும் எதிர்விளைவுகள் உண்டு. கடலிலிருந்து பாரிய அளவில் மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டதன் விளைவையும் அவ்வாறே அனுபவிக்க வேண்டி வரும் என்று சுற்றாடல் ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.
கடலிடம் நாங்கள் அபகரித்ததை, கடல் வட்டியும் முதலுமாக எம்மிடம் மீளப் பெற்றுக் கொள்ளும் என, கடற்றொழிலில் நீண்ட அனுபவம் உள்ள நாமல் என்ற மீனவர் தெரிவித்தார்.
மீனவர்கள், ஏனைய மக்களின் வசிப்பிடங்கள், தொழில் என்பன கடலரிப்புக் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவர்கள் விரக்தியில் உள்ளனர். இதுதொடர்பாகவும் தங்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அரசாங்கமோ, அதிகாரிகளோ போதியளவு கவனம் செலுத்துவதில்லை என்பது, பாதிக்கப்பட்ட மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
கடற்கரையோரங்களை அண்மித்ததாக அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல்கள், உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகள், வசதிபடைத்தவர்களின் வீடுகள், சாதாரண மக்களின் வீடுகள் எனப் பல்வேறு தரப்பினரும் கடலரிப்புக் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில், பாதிப்பு அதிகமாகலாம் எனச் சுற்றாடல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடலரிப்புத் தொடர்பாகக் கடற்றொழில் அமைச்சும் அதனுடன் இணைந்த அரச நிறுவனங்கள் போன்றன அதிக கவனம் செலுத்த வேண்டும். துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலமாக, நாட்டுக்குப் பாரிய நிலப்பரப்பு கிடைக்கும் அதேவேளை, நாட்டில் ஏற்கெனவே உள்ள கரையோர பிரதேசங்களைக் கடல் கபளீகரம் செய்வதற்கும் இடமளிக்க கூடாது என்று, சுற்றாடல் ஆர்வலர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடல் வளங்கள் பாதுகாக்கப்படுமா? கடற்கரையோரங்கள் பாதுகாக்கப்படுமா?