தற்கொலையாக இருக்கட்டும் ரயிலில் மோதுண்டு இறப்பதாக இருக்கட்டும் ஏன் அண்மையில் அதிகரித்து வரும் கடலில் மூழ்கி உயிரிழத்தல் போன்ற அனைத்து சம்பவங்களிலும் மலையக இளைஞர்கள் வீணாக உயிரிழக்கின்றனர்.
உண்மையில் அதிக நீர்வளம் கொண்ட மலையகத்திலிருந்து தலைநகருக்கு தொழிலுக்காக வரும் இளைஞர்கள், கடலை கண்டவுடன் பாய்ந்து குதித்து, கும்மாளமிடுவதற்கு அலைவது ஏனோ? குறிப்பாக இந்த பிரதேசத்தில் குளிக்க வேண்டாம் என கொட்டை எழுத்தில் அறிவித்தல் பலகைக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றை அலட்சியப்படுத்தி விட்டு கடலில் உயிரை மாய்க்கும் மலையக இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையை கட்டுபடுத்த முடியாமல் உள்ளது.
உண்மையில் வறுமை, குடும்ப சுமை என்பவற்றைப் போக்குவதற்காகவும் தன்னுடன் படித்த நண்பன், கையில் பெறுமதிமிக்க போன், அழகான மோட்டார் சைக்கிளில் தோட்டத்தில் உலா வரும் போது, அடடா கொழும்புக்குப் போன பின்னர் தானே இவனும் இப்படி மாறிப்போனான். நாமும் தலைநகர் மண்ணை மிதித்து, தலைக்கு கலர்கலராய் டை அடித்து, தோட்டத்து திருவிழா, கல்யாணம், காதுகுத்தில் ஹீரோவாய் வலம் வரும் என்னும் அசட்டு, எண்ணத்தில் தலைநகர் செல்லும் இளைஞர்களே தாமும் வாழாமல், தன்னை நம்பிய பெற்றோர், சகோதரர்களின் தலையில் இடியைப் போட்டு விட்டு, காலனால் காவிச் செல்லப்படுகின்றனர்.
ஆனால் உண்மையில் உழைத்து, குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தலைநகரில் கால்பதிக்கும் மலையக இளைஞர்கள் ஒருநாளும் இவ்வாறு வீண் சாவைத் தேடிச் செல்ல மாட்டார்கள் என்பது நிதர்ஷனம். ஏனெனில் இவ்வாறு வரும் இளைஞர்களின் எண்ணம் எல்லாம் ஒன்றுதான். எப்பாடு பட்டாவது எனது குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக நானும் பத்திரமாக இருந்துக்கொண்டு, பாதி உண்டு, மீதி உண்ணாமல், இருப்பதற்கு ஒழுங்கான இடமின்றி, தனது வாயையும் வயிற்றையும் கட்டி குடும்பத்துக்காகவே உழைக்கும் மலையக இளைஞர்கள் மத்தியில், தானே சாவைத் தேடிச் செல்லும் அதிலும் தனது நண்பர்களையும் இணைத்துச் செல்லும் மலையக இளைஞர்களின் நிலை குறித்து பரிதாபம் காட்ட மனம் வரவில்லை.
“நீ உன் நண்பனுடன் கடலுக்கு இரையாகிவிட்டாய். கடலில் போய் கூத்தாடுவதற்கு முன் 1 நிமிடம் உன் உறவுகள், நண்பர்கள், பெற்றவர்கள் பற்றி சிந்தித்திருந்தால், கடலுக்குச் செல்வதையே தவிர்த்திருப்பாய்.
கையில் பெறுமதியான அலைபேசிகளை வைத்து, விரல்கள் தேய தேய உருட்டிக்கொண்கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை மலையக இளைஞர்களே! அதில் வரும் விழிப்புணர்வு செய்திகளை படியுங்கள். அதனை ஏனையவர்களுக்கும் பகிருங்கள். அப்போதாவது இவ்வாறான வீண் சாவுகளை தவிர்த்துக்கொள்கிறீர்களா என பார்க்கலாம்.
இவ்வாறு தான் வீட்டில் வறுமைக் காரணமாக, வீ்ட்டுக்கு மின் இணைப்பைப் பெற்று, ஏனையோரைப் போலவே, நாமும் சமூகத்தல் மதிக்கத்தக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தனது உற்ற நண்பனுடன் கொழும்பு- தெஹிவளைப் பகுதிக்கு வந்த இளைஞனரொருவன் இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி, 7 இளைஞர்களுடன் கல்கிஸை கடற்கரைக்குச் சென்ற 18 வயது இளைஞர்கள் இருவர், மீண்டும் கரைக்குத் திரும்பவே இல்லை.
பூண்டுலோயாவைச் சேர்ந்த குறித்த இருவரும், வாழ்ந்த போதும் உற்ற நண்பர்களாக இருந்த இவ்விருவரும் இறப்பிலும் பிரியவில்லை. இவர்கள் மண்ணுலகை விட்டு சென்று 4 மாதங்கள் சென்று விட்டன. ஆனால் அவர்களின் பெற்றோர், உடன்பிறப்புகளின் கவலைகள், அதே வயதில் உள்ள ஏனைய இளைஞர்களைக் காணும் போது, அவர்களுக்கு ஏற்படும் வேதனைகள் சொல்லில் அடங்காதவை.
இந்த துயரம் மறைவதற்குள், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போருதொட்ட கடலில், சனிக்கிழமை (3) நீராடிக்கொண்டிருந்த நிலையில் காணாமல்போன இளைஞர்கள் மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை ஸ்டேலிங் தோட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் சிந்துஜன் (வயது 24), அதே தோட்டத்தை சேர்ந்த மனோகரன் சசிகுமார் (வயது 22), நமுனுகலை தோட்டத்தைச் சேர்ந்த பி.பிரதீபன் (வயது 18) ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்படி இளைஞர்கள், கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகின்ற நிலையில், நேற்று முன்தினம் (4) தமது நண்பர்கள் எழுவருடன் கடலுக்குச் சென்றுள்ளனர். தமது நண்பர் ஒருவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்காகவே, தாம் கடலுக்குச் சென்றதாக உயிரிழந்த மூவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, தலவாக்கலையைச் சேர்ந்த முத்துகுமார் சிந்துஜன் கடலலையில் அடித்துச்செல்லப்பட்டார் என்றும் அவரை நான்கு இளைஞர்கள் கடலில் பாய்ந்து காப்பாற்ற முற்பட்டனர் என்றும் இவர்களில் மூவர் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்றும் தெரியவருகிறது.
நால்வரில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
மேற்படிக் கடல் அபாயகரமானது என்றும் இதற்கு முன்னரும் பலர் கடலலையில் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்றும் நீர்கொழும்பு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஆபத்து என்ற அறிவிப்பு பலகையைக் கூட பார்த்த பின்னர் கூட தமது சந்தோசத்தை மாத்திரமே மனதில் வைத்து, கடலுக்குள் இறங்கி வாழ வேண்டிய வயதில் மரணத்தைச் தேடிச் சென்ற இந்த இளைஞர்களை என்னவென்று வகைப்படுத்துவது.
ஆனால் இவ்வாறு ஆபத்தான இடங்களில் கடலுக்குள் இறங்குவதைத் தடுப்பது தொடர்பான எவ்வித சட்டமும் எமது நாட்டில் இல்லாமையே இவ்வாறான உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைவதாக, இலங்கை தேசிய பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் அசங்க தெரிவித்தார்.
தமக்கு மாத்திரமின்றி, கடற்படையினரால் கூட கடலுக்குள் குளிப்பதற்காக இறங்குபவர்களை தடைசெய்ய முடியாதென்றும் அவ்வாறானதொரு சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த இடத்தில் குளிக்க வேண்டாம் என அறிவிப்பு பலகைகளைக் காட்சிப்படுத்தி, இளைஞர்களை தெளிவுப்படுத்த மாத்திரமே முடியும் என தெரிவித்துள்ள அவர், இவ்வாறு பாதுகாப்பற்ற இடங்களில் கடலுக்குள் இறங்குபவர்களுக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை இருப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் வருடாந்தம் இடம்பெறும் திடீர் விபத்துகள் அல்லது தொற்றா நோய்களில் இரண்டாம் இடத்தை வகிப்பது நீரில் மூழ்கி உயிரிழப்பதாகும். இதனால் வருடாந்தம் 1,000 உயிர்களுக்கு மேல் காவு கொல்லப்படுகின்றன. இலங்கை உயிர்பாதுகாப்பு சங்கத்தின் இந்த வருடத்துக்கான இதுவரையான அறிக்கைக்கமைய, 750 பேர் வரை நிரில் மூழ்கி உயிரிழந்துள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 1-14 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களே அதிகம் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் அந்த சங்கத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே கவனயீனம், மதுபாவனை, நீர் நிலைகளுக்கு அருகில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பற்ற செயற்பாடு என்பனவே இவ்வாறான உயிரிழப்புகளுக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.“
உண்மையில் ஆழமான கடற்பரப்புக்குச் சென்றால் தான் மூழ்குவார்கள் என்ற நம்பிக்கைக்கு அப்பால், விதியின் வசத்தால் கடற்கரையில் தனது குடும்பத்துடன், நடந்துச் சென்ற சிறிய அழிகிய குடும்பமொன்றும் இந்த வருட ஆரம்பத்தில் கிரிந்த கடலில் மூழ்கி உயிரிழந்தது. இவர்களும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் இவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடாதவர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க வந்த இவர்களை கடலலை காவிச் சென்றது என்னவோ விதியின் துரதிஷ்டம் தான்.
இதேவேளை நாட்டைச் சுற்றியுள்ள கடல் பரப்புகளில் நீராட முடியும் என அடையாளமிடப்பட்டுள்ள இடங்களில் உயிர்பாதுகாப்பு அதிகாரிகளில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரென தெரிவித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக டீ சில்வா, இவ்வாறான இடங்களுக்குச் சென்று சிக்கிக்கொண்டவர்களைக் காப்பாற்றவே உயிர்பாதுகாப்பு அதிகாரிகள் இருக்கின்றார்களே ஒழிய, நீராட வேண்டாம் என அறிவிப்பு பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் வேண்டுமென்றே சென்று மாட்டிக்கொள்பவர்களை காப்பாற்றுவதற்கு அல்ல என்றார்.
அத்துடன், இவ்வாறு கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றும் பணி கடற்படையினரது அல்ல என்றும் தெரிவித்த அவர், பொலிஸ் அல்லது உயிர் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ், செயற்பாடும் உயிர் பாதுகாப்பு அதிகாரிகள் கோரினால், கடற்படையின் சுழியோடிகள் கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவர் என்றார்.
அதேப்போல், எந்த இடத்தில் ஆபத்து உள்ளது. எந்த இடத்தில் ஆபத்தில்லை என்பதை உணர்ந்து நீர் நிலைகளில் இறங்கும் அளவுக்கு எமது இளைஞர்கள் புத்தி சுயாதீனமற்ற நிலையில் இருக்கின்றார்களா? அல்லது தாம், தமது, சூழல், தமது கனவுகளை சிற்சில அற்ப சந்தோசத்துக்காகத் தேடிச் சென்று,மரணம் எம்மைத் தேடி வரும் காலம் போய், நாம் மரணத்தைத் துரத்திச் செல்லும் காலத்தை உருவாக்கி வரும் இளைஞர் குறிப்பாக மலையக இளைஞர்களே நீங்களாக சிந்தித்து விழித்துக்கொண்டாலே அன்றி உங்களை, உங்கள் அரசியல்வாதிகளிடமிருந்து மட்டுமல்ல அந்த யமனிடம் இருந்தும்காப்பாற்ற முடியாமல் போய்விடுவது திண்ணம்.