கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும்:– அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 01

ஆண்டாண்டு காலமாக தங்கள் கடல் நிலங்களில் எந்தவித பிரச்சினைகளுமின்றி மீன்பிடித்து காலமோட்டி, செறிவான கலாச்சாரத்துடன் வாழ்ந்து வந்த சுமார் 7 தீவுகளைச் சேர்ந்த மீனவர்கள், அண்மைக்காலமாக கடல்அட்டை வளர்ப்பு என்ற மாயப் பேயின் கரங்களில் சிக்கி தாங்கள் அழியப் போவதை உணர்ந்து போராடி வருகின்றார்கள். ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனைக்கு போய், தங்கி, மீனவர்களுடனும், மக்களுடனும், உரையாடி, மக்களின் கடல்களுக்குள்ளும், தீவுகளுக்குள்ளும் சென்று களநிலவரங்களை ஆராயுமாறு தோழர் தமயந்தி வேண்டிக்கொண்டதற்கு இணங்கவே இந்தப் பயணம்.

மனதுக்குள் ஒரு பதகளி நிலை. தமயந்தியின் ஈச்சாமுனைக்குன்று, நாவட்டப்பாறை, கவுதாரிமுனை, அனலைதீவு, புளியந்தீவு, மூக்கறுத்தான்குடா, தென்முனைக்குடா, பருத்தீவு, ஆற்றுவாய் நீரோட்டம், பிரண்டையாறு, புட்டியாறு, கலவாய்க்கல், ஆமைப்பார், புளியம்பார், சீராமபார், சாட்டி, நடுவகல் கோயிலுக்கல், கரைக்கல், பூண்டிவெள்ளைக்கல், கெட்டிலான்கன், கண்ணகைக்குடா, நரையான்பிட்டி, கண்ணாபிட்டி, சிறுபிட்டி, ஏழாற்றுக்கன்னிகள் – வடக்காள், வடமேற்காள், ஆமற்காள், தென்மேற்காள், தெற்காள், தென்கிழக்காள், கிழக்காள், கடலட்டை, சங்கு, நாவடம், முத்து, கடற்தாமரை, சாட்டாமாற்றுச் செடிகள்,வளிச்சல்வலை, படுப்புவலை, களங்கண்டி, மாலைவெள்ளி, கப்பல் வெள்ளி, மூவிராசாக்கள் வெள்ளி, ஆறாம் மீன் கூட்டம், செட்டியை கொன்ற வெள்ளி, அடிவெள்ளி போன்றவைகளை தரிசிக்கப் போகிறோம். கடலில் நீந்தப் போகிறோம். மூழ்கப் போகிறோம். எனது சமுத்திர அறிவுப் புலத்திற்குள் இவை வளமான பொக்கிசமாக காலா காலத்திற்கும் தங்கப் போகின்றன என்பதே பெரிய கொண்டாட்டமாக இருந்தது. தோழர் தமயந்திக்கே நன்றி சொல்ல வேண்டும்.

சுமார் 7.30 இரவு இருட்டையும், கடலையும் கிழித்துக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து பண்ணை வீதியூடாக ஊர்காவற்றுறை தீவு நோக்கிபஸ் ஊர்ந்து கொண்டிருந்தது. இருளில் நிலக்காட்சிகள் தெரியவில்லை. கடலுக்குள் பல வகையான வெளிச்சங்கள்தான் தெரிந்தன. இந்த 25-30 கிலோமீற்றர் துாரத்தைக் கடப்பதற்கு ஏன் இவ்வளவு நேரம்? இதுதான் கடைசி பஸ் எல்லோரையும் ஏற்ற வேண்டும். பிரதான வீதியிலிருந்து திரும்பி மிகக் குறுகிய பாதையூடாக குக்கிராமங்களுக்கு சென்று ஒன்று, இரண்டு பேரை அங்கேயும் இறக்கிவிட வேண்டும். மீண்டும் பிரதான பாதைக்கு வந்து பயணத்தை தொடர வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு நேரம் எடுக்கின்றது போலும்.

எல்லோரும் இறங்கிக் கொண்டே இருந்தார்கள். நடாத்துனரைப் பார்த்தேன். புரிந்துகொண்டு, நீங்கள் மூன்று பேரும்தான் கடைசி. நீங்கள் வழி தவறமாட்டீர்கள். நீங்கள் இறங்க வேண்டிய இடம்தான் பஸ் நிறுத்தி வைக்கும் இடம் என்றான் சிரித்துக்கொண்டே.

இறக்கிவிட்டார். அழைத்துச் செல்ல வந்தவர் வந்தார். வணக்கம் சொன்னார். சொன்னேன். நான் கொண்டு வந்த பை, மிகவும் பாரமானதும் பெரியதுமாக இருந்தது. ஆளுக்குகொரு கைபிடியை பிடித்துக்கொண்டு நடந்து சென்றோம். அவர் ரோச் லைற் அடித்துக்கொண்டு சென்றார். நாய்கள் என்னை நோக்கி குரைக்கத் தொடங்கின. எனது உடுப்பு பச்சையும், மெல்லிய கறுத்த பச்சை மஞ்சலும், போலிக் கோலமுமாய் இருந்திருக்க வேண்டும். நாய்கள் அதனாலும் குரைத்திருக்கும்.

நாய்கள் துாரத்திலேயே காலுறை, சப்பாத்து, உடுப்பு, மற்றும் மனிதர்களின் மணங்களை நுகர்ந்து, இவன் நமது ஆளில்லை என்று முன்னெச்சரிக்கையை எடுக்கின்றன. அத்துடன் மனிதர்களின் பயங்களையும் நுகர்ந்துகொள்ளுகின்றன. விளையாட்டுக் காட்டுவதற்கு யாராவது அப்பாவி மாட்ட மாட்டானா என்று காத்துக்கொண்டிருக்கின்றன.

அந்த மனிதரின் வீட்டுக்கு சென்று பையை வைத்துவிட்டு கதிரையில் அமர்கின்றேன்.

உங்களைப் பற்றியும், உங்கள் வருகையைப் பற்றியும் பவுண் (தமயந்தி) சொல்லிக் கொண்டிருந்தார். அறிவுறுத்தல்களையும் தந்து கொண்டிருந்தார் என்று தன்னை அறிமுகப்படுத்தினார். நான் என்னை அறிமுகப்படுத்தினேன்.

அவர் மடுத்தீன் பெனடிக்ற் (சின்னமணி), ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை கடற்தொழிலாளர் சங்கத் தலைவர். சிறந்த கடற்தொழிலாளி. சிறந்த கூத்துக் கலைஞன். எந்த எதிர்ப்புக்கும், தீய சக்திகளுக்கும் அஞ்சாதவர். பெரும் போராட்டக்காரர். மடுத்தீன் பெனடிக்ற் (சின்னமணி) யின் குடும்பத்திற்கும் கலைக்கும் அப்படி ஒரு தொடர்பு இருக்கின்றது. அவருடைய மாமா சவிரிமுத்து தான் மெலிஞ்சிமுனையின் அண்ணாவி. அவரது தந்தை மடுத்தீன் அவர்களும் பெரிய கூத்துக் கலைஞர். வாழ்நாள் முழுவதும் கடலுடன் போராடி, இலகுவாக ஐந்து ஆறு பேரை அடித்து நொறுக்கிவிடும், வாகுகொண்டமைந்த உயர்ந்த தடித்த, உறுண்டு திரண்டு இரும்பு போல் உடம்பு கொண்ட, பெனடிக்ற் சின்னமணி தமயந்தியின் சித்தப்பாவும், மெலிஞ்சி முத்தனின் மாமாவும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும்…….