மழை பெய்தால் விவசாயம் சாப்பாடு வாழ்வு என்று இருந்த பூமி இது. காடுகளை களனியாக்கிய வாழ்வியலைக் கொண்டது அவரின் வாழ்விடம்.ஆற்றம் கரையோர வாழ்வு செழிப்பானதாக அமைந்திருப்பது இயல்பானது அது நீர் வளத்தால் மட்டும் அல்ல அன்றைய கால கட்டத்தில் ஆற்றில் பயணப்பட வீதிகள் அதிகம் அற்ற காலத்து வாழ்க்கையும் செழிப்பானதாக இருந்து.
சிறந்த கதை சொல்லி… சொல்லும் நபராக பலராலும் விழிக்கப்படும் கி.ரா. சங்க காலத்து இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் எடுத்துச் சொல்லப்பட்ட கதைகளை தான் வாழும் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்பவும் வட்டார மொழியில் சொல்லி எழுத்தாளராக தனித்துவமாக திகழ்ந்துள்ளார்.மக்களை விட்டு விலத்தி இலக்கியப் படைக்கும் எழுத்தாளர்கள், சினிமா படைப்பாளிகள் பலரிடம் இருந்தும் கி.ரா. வேறுபடுகின்றார்.
அவர் தான் வாழும் வாழ்ந்த வாழ்விடச் சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதில் கதை சொல்வதில் அங்கு வழக்கத்தில் இருக்கும் நாட்டுப் புறக் கதைகளைத் தொகுப்பதில் தன்னை மற்றைய எழுத்தாளர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டினார். இவை யாவும் அவரின் திட்டமிடலால் இல்லாமல் இயல்பாக உருவானதாகவும் அவர் பல பேட்டிகளில் கருத்துரைத்தும் இருக்கின்றார்.
இடதுசாரிகளுடனான உறவும் அவர்களின் மேடைகளில் கிடைத்த தளங்களும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை அவர்களுக்கான இலக்கியத்தை படைப்பதற்கு பெரும் காரணமாக இருந்தது. இவருள் இருந்த இயல்பான இடதுசாரிச் சிந்தைனையும் அதற்கு ஒத்துழைப்பையும் கொடுத்தன.
உலகில் போற்றப்படும் பல எழுத்தாளர்களை எடுத்துப் பார்த்தால் தெரியும் அவர்களைத் கரம் பற்றி தூக்கிவிடுவதில் இந்த இடதுசாரித் தத்துவங்களும் அமைப்புகளும் கருத்தியலும் முக்கிய பங்காற்றி வந்திருக்கின்றன என்பதை அறிய முடியும்.இதனை நாம் வரலாற்றில் உலக அரங்கில் உப கண்டத்தை தாண்டி அறிய முடியும் சோவியத்தின் ஃபியதோர் தாஸ்தயேவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய் உம் செலோவிக்கியாவின் யூலிஸ் பூசிக்கும் மார்க்சிம் கோர்க்கியும் இந்தியாவின் ராகுல சாங்கிருத்யாயன் போன்றவர்களை இதற்கு வலுச் சேர்க்க அழைத்து வரலாம்.
தமிழ் நாட்டின் அதிகம் பலராலும் அறியப்பட்ட ஜெயகாந்தனாக இருக்கட்டும் ரஸ்யாவின் புகழ்பெற்ற பல புதினங்கள் நெடுநாவல்கள் வரலாற்றுக் குறிப்புகளுக்கு பின்னாலும் அங்கு நடைபெற்ற புரட்சியும் அதற்காக பாவிக்கப்பட்ட கருத்தியலும் அவர்கள் உருவாக்க முயன்ற கம்யூனிச சித்தாந்தங்களும் இல்லாமல் இருக்கவில்லை.
இதனை ஸ்லோவிக்காவின் ‘தூக்கு மேடைக் குறிப்பு’ மார்சிம் கோர்கியின் ‘தாய்’ ராகுல சாங்கிருத்யாயன்; ‘வால்காவில் இருந்து கங்கை’ வரை விரிந்து சென்றுள்ளதை அவதானிக்க முடியும்.ஈழத்து இலக்கியத்திலும் இதனை நாம் நீர்வை பொன்னையன் டொமினிக் ஜீவா போன்றவர்களின் படைப்புக்களிலும் நாம் காண முடியும்.
மாறாக முதலாளித்து ‘இலக்கியங்கள்’ ஹரி போட்டர்களும் மணியனின் நாவல்களும் இந்த விளிம்பு நிலை மக்களின் பிரச்சனை பற்றி பேசவில்லை குறைந்த பட்சம் மத்திய மேல்த்தட்டு மக்களின் பிரச்சனைகளைக் கூட அதிகம் பேசத் தயாராக இல்லாது இருந்து பணத்தை மட்டும் சம்பாதிக்கும் மலிவான படைப்புகளாக படைக்கப்பட்டு இருந்தன.
ஆனால் கி.ரா.வின் படைப்புகள் மக்களுக்கான இலக்கியங்களாக அவர்களின் வாழ்வியலை பண்பாட்டை ஒடுக்கு முறைகளை அதனை எவ்வாறு எதிர் கொண்டார்கள் இதன் போக்கில் அவர்களின் தெய்வ நம்பிக்கைகளையும் இதிகாச புராணக் கதை போக்குடன் இணைத்துச் சொன்ன பாங்கு மகத்தானது.நூறு வயதை அண்மிக்கும் பொழுதில் அவரின் மரணம் சிந்தனையை மட்டும் நிறுத்திக் கொண்டதாகவே மட்டும் பார்க்க முடியும்.
இனியும் அவர் பேச விளைந்த விடயங்கள் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் அது அவரின் படைப்புக்களின் வழியாக அவரை ஆதர்ச ஆசானாக ஏற்ற எழுத்தாளர்களால்… சிந்தனையாளர்களால் நிச்சயம் எடுத்துச் செல்லப்படும்.
பல சிறுகதைகள் கட்டுரைகள் எழுதிய அவரின் கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவல் சாகித்திய அக்கடமி பரிசை வென்றிருக்கின்றது. இந்தியாவின் அதி உச்ச ஞானபீட பரிசை பெறும் அளவிற்கான அவரின் எழுத்துக்கள் முழுமையாக ஆளும் வரக்;கங்களாக காணப்படாது தட்டிக் கழிக்கப்பட்டதாகவே உணரப்படுகின்றது.
என்னை பொறுத்தவரையில் அவரின் சாகித்தய அக்கடமி பெற்ற நாவல் எனக்கு மிகவும் நெருக்கமானதாக உணர்கின்றேன் நான் பிறந்த கிராமமும் அதற்கான வரலாறு அது பற்றி ஆய்வில் எனக்கு கிடைத்த தகவல்களும் எனக்கு இதில் அதிக ஈர்ப்பு ஏற்படக் காரணமாகியது.
அவர் தனது சாகித்திய அக்கடமி நாவல் பற்றி பேசும் போது கோபல்லபுரம் கிராமம் என்பது ஒரு கற்பனைக் கிராமப் பெயர் என்றும் அது ‘கோ’ என்பது பசுவையும் ‘பல்ல’ என்பது பட்டி என்பது போலவும் இருந்தபடியினால் அதனை சூட்டியதாக கூறினாலும் எனக்கு என்னவோ இது இந்திய கிராமங்களில் சிறப்பாக தமிழ் நாட்டுக் கிராமங்களில் ஈழத்து கிராமங்களில் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்த கிராமம் ஒன்றின் குறியீட்டு இடமாக இருந்த அடையாளச் சின்னமாகவே உணரப்படுகின்றது.
அதனால்தான் இந்த நாவலுடன் அதிகம் என்னால் ஒன்றிப் போக முடிகின்றது. எமது மூதாதையரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற நா வழி கதைகள் வரலாறுகள் இதனை நிறுவியும் நிற்கின்றன.
நாட்டுப் புறக் கதைகளின் தொகுப்புடன் கிராமங்களில் வழக் கொழிந்து போன அல்லது பேச தவிர்க்கும் பாலியல் கதைகளை தொகுத்தது இவர் மீதான ஒரு விமர்சனமாக ஏன் வெறுப்பாக பார்க்கப்பட்டாலும் மனித வாழ்வியல் உயிரினங்களின் வாழ்வியலில் பாலியலும் ஒரு அங்கம்தான்.
அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாட்டிற்குள் இருக்கும் போது போற்றப்படுபவனமாகவும் ஏற்புடமை உடையதாகவும் ஏன் ஒரு வலுவான சந்ததியை உருவாக்கும் ஒரு செயற்பாட்டின் அங்கமாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.மேலும் இது இனவிருத்தியின் ஒரு அங்கம் என்பது சமூக விஞ்ஞான அடிப்படையில் பாரத்தால் வள்ளுவனின் காமத்துப் பாலிற்கு கிடைத்த ஏற்புடமை கி.ரா.விற்கும் அவரது பாலியல் கதைகள் சம்மந்தான சேகரிப்பிற்கும் நாம் வழங்க வேண்டும் அதுவே சரியான நிலைப்பாடாக இருக்கும்.
பாரதிராஜா சிவாஜி இணைப்பில் உருவான திரைப்படம் முதல் மரியாதை. பல வழிகளிலும் சிறப்பாக பேசப்படும் திரைப்படம் இது. இதில் தனது மகள் செவிழியின் மரணம் கொலை பற்றி அவரின் தந்தை தனது கையிற்குள் நறுக்கப்பட்ட ஒரு கால் பெரு விரலை பொத்தி வைத்த படி ‘ எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும்’ என்கின்ற வசனம் இன்றுவரை அடையாளப்படுத்தப்பட்ட பிரபல்யமானது.
இது இந்தப் படத்தின் உச்சங்களை தொடும் வெற்றிகளுக்கு காரணமானதும் கூட. இந்த காட்சிக்கான கரு பாரதிராஜவினால் கி.ரா. வின் கோவில்பட்டி கிராமம் என்ற நாவலில் இருந்தே உருவானதாக செய்திகள் பலருகும் தெரியாமல் இருக்கலாம். அவ்வளவிற்கு கிராமிய மக்களின் வாழ்வைப் பேசியவர்தான் கி.ரா.
இவர் தனது எழுத்துகளில் வட்டார மொழி வழக்கை மாற்றி பொது மொழி வழக்கில் எழுதுவதை விரும்பவில்லை அப்படி எழுதினால் அந்த புதினம் தனது இயல்பை இழந்துவிடும் என்பதினால் அதனை தவிர்த்தே வந்தார் இதனால் அந்த வட்டார் மொழி வழக்கை புரிந்து கொள்ள முடியாதவர்களின் தேவையை கருத்தில் கொண்டே ஒரு அகராதியை உருவாக்கினார்.
நண்பர்களுக்கு கடிதங்கள் எழுவதில் இருந்த ஆர்வம் அதனை வாசித்த நண்பர்கள் மிகவும் சிறப்பாக இருந்தன கடிதம் என்ற நண்பர்களின் வெளிப்பாடுகள் அவரை சிறுகதை எழுதத் தூண்டியது. அவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பச் செய்தாகவும் கூறுகின்றார் இது எனக்கான உணர்வாகவும் பார்க்கப்படுவதும் கி.ரா.வின் மீது எனக்கான மரியாதை ஈடுபாட்டிற்கும் காரணமாக இருக்கின்றன.
பெண்களே தமது ஆய்வுகள்… கற்றல்கள்… முனைவர் பட்டத்திற்கு… அதிகம் கி.ரா.வின் படைப்பு இலக்கியங்களை பாவிப்பது உண்டு. பெண்கள் பற்றியும் அவர்களின் ஒடுக்கு முறைகள் பற்றியும் அதிகம் இவர் தனது எழுத்தகளில் அதிகம் கையாண்டது இதற்கான காரணமாக இருக்கின்றது.
இவரின் பேட்டிகள் கலந்துரையாடல் போன்றவற்றில் கூட இவரின் எழுத்துகள் போலவே மிகவும் இயல்பான வார்த்தை பிரயோகங்கள் காணப்படும். எந்தவித சோடனையும் மெருகூட்டலையும் இயல்பைத் தாண்டி காண முடியாது. இவரின் பேட்டிகளை கேட்பவர்கள் இதனை உணர முடியும்.
இனி அவரின் வாழ்க்கைக் குறிப்பையும் சிறிதளவு பார்ப்போம்….கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி. ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.
1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.
நல்ல இசை ஞானம் கொண்டவர்.கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றார். கூடவே 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.
மூன்று நெடு நாவல்கள் இரண்டு குறு நாவல்கள் இருபத்தி ஐந்திற்கு மேற்பட்ட சிறுகதைகள்; ஐந்திற்கு இற்கு மேற்பட்ட கட்டுரைகள் சிறப்பாக கரிசல் காட்டு மண்ணின் வட்டார் மொழியை ஏனையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கிய ‘கரிசல் வட்டார வழக்கு’ என்ற அகராதி ‘கிடை’ என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்ட திரைப்படம் என்று நீண்டாலும் கதவு என்ற சிறுகதையும் கோபல்லபுரத்து மக்கள் என்ற நெடும் புதினமும் அதிகம் பேசப்புடபவையனாக காணப்படுகின்றன.
கூடவே நாட்டுப்புறக் கதைகளை தொகுத்தது இதற்குள் கிராமிய விழக்கில் இருக்கும் பாலியல் கதைகளையும் இணைத்து இவரிடம் இருக்கும் சிறப்புதான்
வாழ்ந்த கிராமத்தை விட்டுப் புறப்பட்டு கடந்த 25 வருடங்களாக பாண்டிசேரி என்கின்ற புதுச்சேரியில் வாழ்ந்து வந்தவர் தனது 98 வயதில் வயதின் மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் தமிழக அரசு இவரது மரணச் சடங்கை அரச மரியாதையுடன் செய்திருக்கின்றது.
பிரபஞ்சனுக்கு பின்பு இவருக்கான அரச மரியாதையுடனாக மரணச் சடங்கு தமிழகத்தில் எழுத்தாளர்கள் அரசால் உரிய முறையில் கவனத்தை பெறுகின்றார்கள் என்பதை காட்டி நிற்பதாக பலரும் உணருகின்றனர்.கி.ரா.வின் ஆவணப் படம் ஒன்றையும் தங்கர் பச்சான் எழுதி இயக்கி இருந்தார். இதனை காணொளியில் காண்பதற்கு இந்த இணைப்பை பயன்படுத்தவும்: https://youtu.be/T_6QdPSMxxQ