இலங்கையில் அமல்படுத்தப்பட்டு வரும் இலவசக்கல்வியால் அனைத்துத் தரப்பினரும் கற்க கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இவ்வாறான இலவசக் கல்விமுறைமையின் கீழ், மாணவர்களுக்கு தேசிய ரீதியில் பொதுப்பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, உயர் தரப் பரீட்சை போன்றவை முக்கியமான பரீட்சைகளாகும். இவற்றுள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொடுப்பனவு மற்றும் தேசிய பாடசாலைகளில் கற்பதற்கான அனுமதிக்காக உதவுகின்றது. சாதாரண தரப் பரீட்சை உயர்தரம் கற்பதற்கான பரீட்சையாகவும் உயர்தரப் பரீட்சை பல்கலைக்கழக தெரிவுக்கான பரீட்சையாகவும் அமைந்திருக்கின்றன.
இப்பரீட்சைகளில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகி இருந்தன. இப்பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வினையும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டிருந்தது. அத்தரவுகளின் அடிப்படையில், சாதாரண தரம் சித்தியடைந்து, உயர்தரம் கற்பதற்கு சித்தியடைந்தவர்கள் என்ற தரப்படுத்தலில், ஒன்பது மாகாணங்கள் உள்ள இலங்கைத்தீவில், தமிழ் பேசுகின்றவர்கள் செறிந்து வாழ்கின்ற கிழக்கு, வடக்கு மாகாணங்கள் முறையே எட்டாம், ஒன்பதாம் இடங்களைப் பெற்றுள்ளன. இந்நிலை மிகவும் கவலைக்குரியதே.
2014ஆம் ஆண்டில் இருந்து, 2020ஆம் ஆண்டு வரையான பெறுபேற்று பகுப்பாய்வை அவதானிக்கின்ற போது, தொடர்ச்சியாக வடக்கு மாகாணம் ஒன்பதாவது மாகாணமாக உள்ளதுடன், 2018ஆம் ஆண்டு மாத்திரம் 69.99 சதவீதத்தினைப்பெற்று எட்டாவது இடத்திலும், கிழக்கு மாகாணம் 69.97வீதத்தைப் பெற்று ஒன்பதாவது இடத்தையும் வகித்துள்ளது.
அவ்வாறெனின் 2014ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை வடக்கு மாகாணம் இறுதி மாகாணமாகவே உள்ளமை மிகவும் வேதனையான விடயமாகும். அதேபோன்று 2014ஆம் ஆண்டு தொடக்கம், 2020ஆம் ஆண்டு வரையான பகுப்பாய்வின் அடிப்படையில், கிழக்குமாகாணம் 2014இல் ஐந்தாம் இடத்தையும், 2019 இல் ஏழாவது இடத்தையும் 2018இல் ஒன்பதாவது இடத்திலும் ஏனைய ஆண்டுகளில் எட்டாவது இடத்தையும் பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. கடந்த ஏழு வருட பகுப்பாய்வின் மூலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இறுதிநிலையில் இருக்கின்றமையை விளங்கிக்கொள்ள முடிகின்றது.
2010ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் நான்காம் இடத்தையும் 2011ஆம் ஆண்டு ஆறாம் இடத்தையும் பின்வந்த 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் ஐந்தாம் இடத்தையும் வகித்த கிழக்கு மாகாணம், 2015இல் இருந்து எட்டாம் இடத்துக்குச் சென்றமையை பெரியளவிலான வீழ்ச்சியாகவே பார்க்க முடிகின்றது.
கடந்த மூன்று தசாப்த யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மாணவர்கள், பின்நிலையை தழுவுகின்றமைக்கு பல்வேறு காரணங்களும் உள்ளன.
பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகளவில் இம்மாகாணங்களில் வாழ்கின்றனர். இதனால் பிள்ளைகள் தொடர்ச்சியான கற்றலில் ஈடுபடுவதும் சவாலாகவே உள்ளது. மாணவர்களின் வரவு வீதக்குறைபாடும் பரீட்சைப் பெறுபேற்றில் வீழ்ச்சியை கொண்டுவருகின்றது.
சமூகத்தில் இடம்பெறுகின்ற சீர்கேடுகளும் சட்டவிரோத செயற்பாடுகளும் ஒழுக்கமின்றிய செயற்பாடுகளும் பெறுபேற்றில் குறைவை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக, மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இவற்றிற்கு தந்தையர்கள், சகோதரர்கள் அடிமையாதல்; இதனால் வீடுகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளும் மாணவர்களின் கல்வியில் வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இதேவேளை, அரசினால் வழங்கப்படுகின்ற புத்தகங்களை கற்காது, வெறுமனே ஆசிரியர்கள் வழங்குகின்ற வினா விடைகளைக் கற்றல், சுயமாக கற்கின்ற வீதம் குறைவடைந்து செல்லல், கற்பதற்கான சூழல் வீட்டில் இன்மை, பாடசாலைக் கற்றல், கற்பித்தலில் மாத்திரம் தங்கியிருத்தல் போன்ற பிரச்சினைகளும் மாணவர்களின் பெறுபேறு வீழ்ச்சியடைவதற்கு காரணமாகின்றதெனலாம்.
அநேக பகுதிகள் கஸ்ட, அதிகஸ்ட பகுதிகளாகவே உள்ளன. இதனால் வளப்பற்றாக்குறைகளும் உள்ளன. சமூகத்தில், மாணவர்களிடத்தில் உள்ள பிரச்சினைகளால் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இலவசக் கல்வியை முறையாக எல்லா இடங்களுக்கும் வழங்காமையும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வீழ்ச்சியடையக் காரணமாக உள்ளன.
குறித்த இரு மாகாணங்களிலும், முக்கிய பாடங்களுக்கான வெற்றிடங்கள் இன்றும் நிலவிக்கொண்டே இருக்கின்றன. இதனால் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் கற்கமுடியாமல், அவ்வாறான பாடங்களில் சித்திபெறத் தவறுகின்றனர்.
குறிப்பாக, கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் போன்ற பாடங்கள் முக்கிய பாடங்களாக இருக்கின்ற போதிலும், அப்பாடங்களுக்கு இன்றுவரை வெற்றிடங்கள் நிலவிக்கொண்டே இருக்கின்றன. கணிதபாடம் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. உயர்தரம் கற்பதற்கு மிகவும் அவசியமாக உள்ளது.
அவ்வாறான நிலையில், கணித பாடத்திற்கு ஆசிரியர்கள், சில பாடசாலைகளில் இல்லாமையால், பாடசாலையை மாத்திரம் நம்பியுள்ள பிள்ளைகள் மிகவும் பாதிப்படைகின்றனர். இப்பாதிப்பு மாகாண பெறுபேற்று பகுப்பாய்வில் வீழ்ச்சியை உண்டுபண்ணுகின்றது.
மேலும், பொருத்தமான இடமாற்றங்கள் நடைபெறாமையும் மாணவர்களின் கல்வி வீழ்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. குறிப்பாக, சமமப்படுத்தல்கள் இன்றி மாகாண இடமாற்றங்கள் நடைபெறுகின்றமையால், ஒருசில வலயங்களில் இருந்து பலரும், இன்னும் சில வலயங்களில் இருந்து சிலரும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால் ஒருசில வலயங்களில் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாகவும், இன்னும் சில வலயங்களில் ஆசிரியர்கள் இன்றியும் உள்ளமை மாணவர்களின் பெறுபேற்றை உயர்த்துவதற்கு சவாலாக உள்ளது.
ஆசிரியர் இடமாற்றம், அதிகாரிகள் நியமனம் போன்றவற்றில் அரசியல் தலையீடுகளும் கல்வியின் வீழ்ச்சிக்கு காரணமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல பாடசாலைகளை வழிநடத்துபவர்களாக ஆசிரியர்களே உள்ளனர். அதிபர்கள் இன்மையினால் ஆசிரியர்கள் பாடசாலையை பொறுபேற்று நடத்தவேண்டிய நிலையேற்பட்டிருக்கின்றது. நிரந்தரமில்லா பதவியில் இருத்தப்பட்டமையால் முழுமனதுடன் அப்பொறுப்பினையேற்று நடத்துவதில் குறித்த ஆசிரியர்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளமையும் பெறுபேற்று அதிகரிப்பில் தாக்கத்தினை செலுத்துகின்றது.
பாதிக்கப்பட்ட சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கான ஆயுதமாக கல்வி உள்ளமையினால் இதனை முறையாக பயன்படுத்தி உயர்நிலையை மாணவர்கள் அடைவதற்காக பல்வேறு செயற்றிட்டங்களை வடக்கு, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது.
பெற்றோர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை ஒவ்வொரு கிராமங்களிலும் முன்னெடுக்க வேண்டும். தொடர்ச்சியாக மாணவர்கள் பாடசாலைக்கு அனுப்புவதை சமூகமட்டத்திலான அமைப்பினரும், அதுசார்ந்த உத்தியோகத்தர்களும் உறுதிப்படுத்த வேண்டும்.
வீடுகளில் கற்பதற்கான சூழலையும், சட்டவிரோத செயற்பாடுகள் அற்ற கிராமங்களையும் ஒழுக்கமுள்ள மாணவர் சமூகத்தினையும் கட்டியெழுப்ப ஒவ்வொரு கிராம மட்டத்திலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சுய கற்றலை ஊக்கப்படுத்துடன், பாடப்புத்தகங்களை வாசிக்கும் திறனை மாணவர்களிடத்தில் வளர்க்க வேண்டும்.
அரசியல் தலையீடின்றி நியமனங்கள் வழங்கப்படுவதுடன், இடமாற்றங்களும் நடந்தேற வேண்டும். பாடசாலைகளை பொறுப்பேற்று நடத்துகின்ற ஆசிரியர்களுக்கு அங்கிகாரத்தை வழங்கி, அவர்களின் மூலமாக உச்சவிளைவினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்ச்சியாக பின்நிலை வகிப்பதனை தவிர்த்து, முன்நிலை பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை, செயற்பாடுகளை அனைவரும் கூட்டாக இணைந்துசெயற்படுத்த வேண்டும்.
இதன்மூலமாக வடக்கு, கிழக்கு மாகாணத்தினை கட்டியெழுப்ப முடியும். இல்லையாயின், கல்வியில் பின்னோக்கு சமூகமாக வடக்கு, கிழக்கினை பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டுவிடும்.