‘காடுகளை….மரங்களைக் காப்போம்…’

கானகத்தின் உடலில் வீழும்
ஒவ்வொரு கோடரிக்கும் கடப்பாரைக்கும்
கண்ணீர் உகுத்த காந்தியப் பெருவிழுது!
இயன்றவரை எதிர்சமர் தொடுத்த காந்தியப் போராளி!
வனங்களும் வனம்சார் சனங்களும் நீடுவாழ
தன்னை உருக்கிய காந்திய மெழுகுவத்தி!
ஆண்டுகள் நினைவில்லை….
நான் தொடர்பு அலுவலனாகப் பணியாற்றிய
நீதிபதி பகவதி சுற்றுச்சூழல் நிறுவனம்
சென்னையில் நிகழ்த்திய
தோல் தொழிற்சாலை மாசுபாட்டுக்கெதிரான
கருத்தரங்கத்துக்கு
வருகை தந்து உரையாற்றினார்.
இவரை சந்தித்தே ஆகவேண்டுமென்று விழைந்த
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின்
முன்னணித் தலைவர் தோழர் ராஜ்மோகனை அழைத்துச் சென்று அளவளாவ வைத்த நிகழ்வுகள் அகத்திரையில் இன்று மீளொளிபரப்பாகின்றன.
ஏன்?
கொரோனாத் தொற்றால்
மரணமடைந்துவிட்டார் சுந்தர்லால் பகுகுணா.
வயது மூப்பைக் கணக்கிட்டால்
இழப்பில்லை என்றே தோணும்.
ஆனால் –
நம்மிடையே உயிர்த்திருந்த பெருஞ் சூழற் போராளி
என்று எண்ணுகையில்
பேரிழப்பும் வெற்றிடமும் புலப்படும்.
இவரது ‘CHIPKO’ சிப்கோ இயக்கத்தை
புதிய தலைமுறை திறந்து வாசிக்கவேண்டும்.
தேர்ந்து சூழல் காக்க வேண்டும்!
வனம் காப்போம்…
சூழல் பேணுவோம்….
அதுவே பகுகுணாவுக்கு
நாம் செய்யும் கைம்மாறு!