காதல் கடிதம் பஷீர் எழுதிய இரண்டாவது நாவல் என்றாலும் இதுதான் முதலாவதாக 1943இல் வெளியானது.
இந்து இளைஞனான கேசவன் நாயர், சாராம்மா என்கிற கிறித்தவ இளம்பெண்ணை காதலிப்பதே இந்தக் கதையின் மையம்.
எளிமையான ஒரு வேடிக்கைக் கதை. 62 பக்கங்கள்.பஷீரின் பெண் கதாபாத்திரங்களில் பெரும்பாலானோர் வெள்ளந்தியானவர்கள், அல்லது அறிவு ஜீவிகள் என்று தம்மைக் கருதிக்கொள்கிற வெள்ளந்தி மனங்கள், அல்லது பாவப்பட்டவர்கள்.
இதில் சாராம்மா இரண்டாவது வகை.காதலித்தாலும் அதை ஒத்துக்கொள்ளாமல் இருப்பதும், காதலிக்கிற ஆணை அலைக்கழிப்பதுமான ஒரு மிகப் பரிச்சயமான கதாபாத்திரம்.
பஷீரின் காதல் எல்லாமே எவ்வளவு அன்பு நிறைந்தவையோ அவ்வளவு நகைச்சுவையானவை. நகைச்சுவை இல்லாத காதல் தழைக்காது. செழிக்காது. பஷீரின் காதல் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தலைசிறந்த பாத்திரங்களாக நிற்கக் காரணம் அந்தப் பெண்களோடு அவர் எழுத்தின் மூலம் நிகழ்த்திக்காட்டிய நகைச்சுவையான பந்தங்கள்தான்.
முற்றிய இரண்டு அறிவு ஜீவிகளால் காதலிக்க முடியாது. காதலித்தாலும் நிலைக்க முடியாது. Sell your cleverness and buy bewilderment என்பார் ரூமி.தங்கத்தை ஆபரணமாக்க செம்பு தேவைப்படுவதைப் போல இரு உயிர்கள் ஒன்று சேர்ந்திருக்க அன்போடு கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் வேண்டும், குழந்தைமை வேண்டும், வெள்ளந்தித்தனம் வேண்டும்.வெறும் அறிவுஜீவித்தனத்தை மட்டும் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாது.
‘ஐசுக்குட்டி’ சிறுகதையிலாகட்டும், ‘பூவன் பழம் சிறுகதையிலாகட்டும், நீலவெளிச்சதிலாகட்டும், பூமியின் வாரிசுதாரர் சிறுகதையிலாகட்டும் – ஆசான் பெண் கதாபாத்திரங்களினோடு நிகழ்த்திக்காட்டிய வெள்ளந்தித்தனமான, அதிமதுரமான காதலால்தான் அந்தக் கதைகள் அமரத்துவம் பெற்றன.
அந்தப் பெண்களின் வெள்ளந்தித்தனங்கள் இல்லாமல் ஆசானின் கதைகளுக்கு அத்தனை மென்மையான, ஆனாலும் வீரியமான உரங்கள் கிடைத்திருக்காது.சாராம்மாவும் அதேபோலொரு பெண், அதேபோலொரு காதலி, அதே போலொரு மனைவி.
ஆசானின் பெண் கதாபாத்திரங்களை அறிந்தவர்களுக்கு சாராம்மா ஒன்றும் புதிதானவர் அல்ல. சாராம்மா பஷீரின் கதையில் ஒரு கிறித்தவர் அல்ல. கேசவன் நாயர் ஒரு இந்து அல்ல.
பஷீரின் மனிதர்கள் காதலையும் அன்பையும் மனித நேயத்தையும் மட்டுமே அடையாளமாய்க் கொண்ட மனிதர்கள்.
காதலும், அன்பும், மனித நேயமும் மட்டுமே மனிதனை மனிதனாக்கும்.அதைத் தன் கதைகளின் கருவாய்க் கொண்டவர்தான் பஷீர். அதனால்தான் அவர் வேறு யாரைக் காட்டிலும் எனக்கு மிகப்பிடித்த ஆசான்.
பஷீரை நம் நெஞ்சுக்கு நெருக்கமாக்கியதில் இருவருக்குப் பெரும் பங்கு உண்டு.
ஒருவர் கவிஞர் சுகுமாரன், மற்றொருவர் குளச்சல் யூசுஃப். இவர்களின் மொழிபெயர்ப்பில் ஆசானே நேரடியாகத் தமிழில் எழுதியதைப் போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும்.அந்த வகையில் ஆசானிடம் வைத்திருக்கிற மதிப்பும் அன்பும் இவர்களுக்கும் உரித்தாகிறது.