மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் தொடரும் பண்ணையாளர்களுக்கெதிரான செயற்பாடுகளைத் தடுப்புக்குரிய முயற்சிகளும், கவனயீர்ப்பு போராட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்க அத்துமீறல்களும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.
தமது கால் நடைகளைத் தேடிச் சென்ற பண்ணையாளர்கள் தாக்கப்படுவார்கள்; கைது செய்யப்படுவார்கள்; பண்ணை நடவடிக்கைகளுக்காக அமைத்திருக்கும் குடிசைகள் நாசம் செய்யப்படும்; கால்நடைகள் கொல்லப்படும்; கவரப்பட்டு கப்பம் கோரப்படும். இவ்வாறு பல இன்னல்களை அனுபவித்தபடியே, தங்களது கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பண்ணையாளர்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக, ‘அரசே இன அழிப்பை மேற்கொள்ளாதே’,‘மேய்சல் தரையை உறுதிப்படுத்து’, ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’, ‘மகாவலி என்ற போர்வையில், தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்காதே’, ‘பண்ணையாளர்கள் எம்மினத்தின் முதுகெலும்பு’, ‘சிங்களவர்களுக்குத் தனிச்சட்டம், தமிழர்களுக்கு வேறா’ போன்ற கோஷங்கள், தமிழர்கள் மத்தியில் உருவாகத் தொடங்கியிருக்கின்றன.
மயிலத்தமடு, மாதவணை பிரதேசங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பண்ணையாளர்கள், பாரம்பரியமாக மேச்சல் தரையாக பயன்படுத்திய பிரதேசமாகும். யுத்தம் முடிந்த கையோடு, இப்பிரதேசத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தர்கள், விவசாய செய்கைக்காக குடியேறத் தொடங்கி, பல தடவைகள் வெளியேற்றப்பட்டும் இப்போதும் குடியேறுதலை நிறுத்தவில்லை. அதற்கு அரசியலும் அனுசரணை கொடுக்கிறது. இறுதியாக, கடந்த வருடத்தில் குடியேறினர். இவர்களது இச்செயற்பாடுகள் குறித்து, கிழக்கு ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோதும் நிறுத்தப்படவில்லை.
இந்த நிலையில், தமது விவசாய நிலத்துக்குள் கால்நடைகள் புகுந்து, பயிர்களை நாசமாக்குவதாகத் தெரிவித்து, கால்நடைகளை வெட்டி உயிரிழக்கச் செய்ததுடன் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்ணையாளர்களும் தாக்கப்படுகின்ற நிலைமை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டப் பண்ணையாளர்களின் மேய்ச்சற்றரையாக விளங்கும் மாவட்டத்தின் எல்லைப்புறப் பிரதேசங்களான மாதவணை மற்றும் மயிலத்தமடு பிரதேசங்களில், அம்பாறை, பொலனறுவை மாவட்டங்களில் இருந்து அத்துமீறிக் குடியேறுபவர்களது நெருக்குவாரங்களை தாங்கிக்கொண்டு, வாழ்வாதாரத்துக்காக காலம் கடத்தும் நிலையில், மட்டக்களப்பின் பண்ணையாளர்கள் இருக்கிறார்கள்.
இவ்விவகாரம் தொடர்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியுடன் அங்கிருந்து சேனைப் பயிர்ச்செய்கையாளர்கள் விலகிச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அது நடைபெறவில்லை. மே 12ஆம் திகதி மீண்டும் வழக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், கொரோனா நிலைமை அதைப் பிற்போட்டிருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டப் பண்ணையாளர்கள் அங்கிகரிக்கப்பட்ட மேய்ச்சல் தரையின்றி, இடர்களை எதிர்நோக்குகின்றார்கள். மேய்ச்சற்றரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அதிக பிரச்சினைகளும் ஆபத்துகளும் எதிர்நோக்கப்படுகின்றது. அம்பாறை, பொலனறுவை மாவட்டத்தைச் சேர்ந்தோர், இப்பிரதேசங்களில் அத்துமீறுவோர், நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும் என்பது பண்ணையாளர்களது கோரிக்கையாகும்.
போர்க்காலத்துக்கு முன்பும் இவ்வாறான அத்துமீறல்கள் காணப்பட்டிருந்தாலும், போர் முடிந்த கையோடு 2008 – 2009இல் அத்துமீறிக் குடியேறினார்கள். இவர்களை வெளியேற்றுவதற்கு கிழக்கு முதலமைச்சர் ஆளுநர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்போது பயனளிக்கவில்லை. 2015இல் ஆட்சி மாற்றத்தையடுத்து 2016இல் அத்துமீறல் செய்த 99 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதோடு, நீதிமன்றக் கட்டளையின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள். இந்த நடவடிக்கைகள், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் நடைபெற்றன.
கிழக்கு மாகாண சபை 2017 செப்டெம்பரில் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்துமீறுவோரின் நடவடிக்கைகள் மீண்டும் நிகழ ஆரம்பித்தன. இப்போது வரை தடுத்து நிறுத்த முடியவில்லை; பரவிக்கொண்டே இருக்கிறது.
மாவட்டத்தில் மேய்சல் தரை இல்லாத நிலையில், பல தடவைகளில் நிரந்தரமான மேய்ச்சல் தரைக்காக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது நிலைவேறாது போயிருக்கிறது. ‘நாமெல்லோரும் இலங்கையர்கள்’ என்ற அடிப்படையிலும், இலங்கையர் எல்லோர் தொடர்பிலும் சட்டங்கள் பாராபட்சமின்றிப் பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும்தான் இந்த விடயம் பார்க்கப்பட வேண்டும். ஆனால், அது சாத்தியப்படுவதாக இல்லை.
மயிலத்தமடு, மாதவணை பகுதிகளில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்த கால் நடை வளரப்பாளர்கள் வனவளத் துறையினரால் கைது செய்யப்படுவதும், இலட்சம் ரூபாய் பெறுமதியான கால்நடைகள் சுட்டுக்கொல்லப்பட்டு உணவாக்கப்படுவதும், கட்டப்பட்டு பணம் வசூலிக்கப்படுவதும் நடைபெறும் போது, பிரச்சினைகள் முற்றும் நிலையே உருவாகின்றது. கடந்த காலங்களில் 1,000க்கும் மேற்பட்ட மாடுகள் கொல்லப்பட்டும், பிடிக்கப்பட்டும், சித்திரவதைகளுக்கு உள்ளாகியும் உள்ளன.
1974ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வரப்படும் பிரதேசமே மயிலத்தமடு, மாதவணைப் பிரதேசமாகும். மாதவணை, புதிய மாதவணை, மயிலத்தமடு, மாந்திரியாற்றுப் பகுதி என்னும் இடங்களிலுள்ள 3,000 ஏக்கர் மேய்ச்சல் தரைக் காணிகளை பொலநறுவை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 2014ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் விவசாயச் செய்கைக்கு வழங்குவதற்கு வனவள திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்ததாக அறிய முடிகிறது.
அது பல்வேறு முயற்சிகளால் நிறுத்தப்பட்டாலும், கிழக்கு ஆளுநரால் கடந்த வருடத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டது. மேய்ச்சல் தரை நிலங்களை விவசாயத்துக்கு வழங்கும் திட்டத்தைத் தடுக்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளின் பின்னர், நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
மாதவணை, மயிலத்தமடு பிரதேசத்தில் எமது பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து, எமது கால்நடைப் பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்த்து வருகின்றார்கள். தற்போது மகாவலி என்ற பெயரிலே சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இங்கு எமது கண்முன்னே எமது கால்நடை வளர்ப்பாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்டும், கால்நடைகள் கொல்லப்பட்டும் வருகின்றன. அப்பிரதேசத்தில் இருந்து கால்நடைகள் விரட்டியடிக்கப்பட்டமையினால் எமது விவசாய நிலங்களில் மாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றால் எமது பல நூற்றுக் கணக்கான விவசாய நிலங்களும் பயிர்களும் அழிவடைந்துள்ளன. அழிவடைந்து வருகின்றன என்பது விவசாயிகளது கருத்தாக இருக்கிறது.
விவசாய ஆரம்பக் கூட்டங்களிலே விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் கால்நடைகளை அதற்கு ஒதுக்கப்பட்ட இடமான மயிலத்தமடு, மாதவணை என்ற இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அங்கே கால்நடை வளர்ப்பாளர்களுக்கு சிங்கள இனத்தவர்கள் அச்சுறுத்தல், மிரட்டல்களை மேற்கொண்டு அச்சமூட்டப்படுகின்றது. அதனால் கால்நடைகளை விவசாயப்பகுதிகளான தங்களது பகுதிகளிலேயே வைத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.
அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம் செய்ய வேண்டுமாக இருந்தால், பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாது போனால் விவசாயத்தைக் கைவிட்டுச் செல்வதை விட வேறு வழி இருக்காது என்பது விவசாயிகளது இப்போதைய நிலைப்பாடு.
பறிபோய்க்கொண்டிருக்கின்ற பண்ணையாளர்களின் நிலங்களை விடுவித்து அவர்களை அப்பிரதேசத்தில் கால்நடைகளை மேய்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதே கால்நடைகளின் பிரச்சினைகளின்றி விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் வழி ஏற்படும். அது இதய சுத்தியுடனான பரஸ்பர விட்டுக் கொடுப்புடனும் ஏற்றுக் கொள்ளலுடனும் நடைபெற்றாக வேண்டும்.
மாவட்டத்தின் மேய்ச்சல் தரையானது பொதுப்பிரச்சினையாக இருந்த போதிலும் மேய்ச்சற்றரை போன்ற பல பொதுப் பிரச்சினைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசுசார் மக்கள் பிரதிநிதிகள் கவனம் கொள்வதாகத் தெரியவில்லை. இதில் மாற்றம் ஏற்படுமெனில் சிறப்பானதொரு நிலைமையைத் தோற்றுவிக்கமுடியும்.
நியாயத்துக்கும் நடுநிலைமைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்ற வகையில், நியாயங்கள் பேசப்படவேண்டும். மாவட்டத்தின் பொருளாதாரத்தினை சீர் செய்வதற்கான முயற்சியாக மேய்ச்சல்தரை பார்க்கப்படும்போதே அதுவும் சாத்தியம்.