ஆனால், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நாமும் இல்லை. அதை வெளிப்படையாக, மக்களுக்குச் சொல்லும் மனநிலையில், அரசாங்கங்களும் இல்லை.
உயிர்களுக்கும் இலாபத்துக்கும் இடையிலான முடிவுறாத போரின் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது. இதுவொரு துன்பியல் நாடகம்; உயிர்கள் விலைமதிப்பற்றுப் போய், இலாபமும் அதிகாரமும் கோலோச்சுகின்ற அரங்கில், இந்தத் துன்பியல் நாடகத்தின் புதிய பாகங்கள், இப்போது மெதுமெதுவாக அரங்கேறுகின்றன.
கொவிட்-19 பெருந்தொற்றுக் குறித்த கதையாடல்கள் குறைவடைந்து, தேசியம், பிராந்தியம், தேர்தல் போன்ற கதையாடல்கள், முன்னிலைக்கு வந்துள்ளன. இது இலங்கைக்கு மட்டும் உரியதல்ல.
பல நாடுகளில், கடந்த சில வாரங்களில் தேர்தல்கள் நடந்துள்ளன. கோடை விடுமுறை, களைகட்டி உள்ளது, கோலாகலமாக நிகழ்வுகள் நடக்கின்றன. இவை அனைத்தும், ‘வழமைக்குத் திரும்பி விட்டன’ என்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.
கொவிட்-19 தொற்றுப் பரவுகைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, 10 மில்லியனைத் தாண்டிவிட்டது. ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்து இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை, தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருக்கிறது.
வௌ்ளிக்கிழமை (26), நாளொன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 196,000யைத் தாண்டியது. இவ்வளவு பேர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ஒரே நாளில் இதுவரையில் ஆளானதில்லை.
கடந்த சில நாள்களாக, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை, முன்னெப்போதும் இல்லாதளவு அதிகரித்துள்ளது. ஆனால், ஆறுதல் தரும் ஒரே விடயம் யாதெனில், கொரோனா வைரஸ் தொற்றில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஆனால், அதிலும் மகிழ எதுவும் இல்லை. ஏனெனில், இப்போது கொவிட்-19 வேகமாகப் பரவுகின்ற நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் ஆகும். அங்கு தரவுகள் சரியாகப் பேணப்படுகின்றனவா, இறந்தவர்கள் அனைவருக்கும் கணக்கு வைக்கப்படுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்தப் போக்கு, எதை எமக்குக் காட்டி நிற்கின்றது என்ற வினாவுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, இலங்கை போன்று, கொரோனா வைரஸை வென்ற நாடுகள், கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன. அதற்கு முன்:
- வெள்ளிக்கிழமை (26) ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் (World Health Organision-WHO) பணிப்பாளர் நாயகம், பின்வருமாறு தெரிவித்தார். “உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. இது புதியது; எல்லோரும் நினைப்பதற்கு மாறாக, தொற்றின் வேகமும் பரவலும் அதிகரித்துள்ளன. பல நாடுகள் இன்னமும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதால், மக்கள் வீட்டில் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் வெறுப்பு, புரிந்து கொள்ளக் கூடியது. பொருளாதாரச் சேதங்களைக் கருத்தில் கொண்டு, நாடுகள் பழைய நிலைக்குத் திரும்பி, சந்தைகளைத் திறந்து, வர்த்தகத்தை முன்னெடுக்க ஆவலாக உள்ளன. ஆனால், இந்தக் கொரோனா வைரஸ் தொற்று, முன்பை விட இன்னும் வேகமாகப் பரவி வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. அதிகளவிலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். புதிய நாடுகள், கொரோனா வைரஸ் மய்யங்களாக மாறியுள்ளன. இந்தியா, சிலி, துருக்கி, மெக்சிக்கோ, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் உட்பட 81 க்கும் மேற்பட்ட நாடுகளில், கடந்த இரண்டு வாரங்களில் தொற்றுகள் அதிகரித்துள்ளன. அதேநேரத்தில், உலகில் பாதிக்கும் குறைவான நாடுகளிலேயே, தொற்றுக் குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன”.
- உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை விடுப்பதற்கு முதல்நாள் (25), உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குநர், டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றைக் கூட்டினார். அதில், “ஐரோப்பாக் கண்டம் முழுவதும், கொவிட்-19 மீள்எழுச்சி பெற்றுள்ளது. இது குறித்து, நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுகள், ஐரோப்பாவில் குறைவடையத் தொடங்கியதை அடுத்து, முதன்முறையாகக் கடந்த வாரம், மொத்த வாராந்தத் தொற்றுகளில் அதிகரிப்பை, ஐரோப்பா கண்டுள்ளது. அரசாங்கங்கள் விதிமுறைகளைத் தளர்த்தி, மீள் ஒழுங்கமைப்பதில் உள்ள ஆபத்துகள் குறித்து, சில வாரங்களாகவே நான் எச்சரித்தேன். இப்போது அதன் விளைவுகள், மெதுமெதுவாகத் தெரியத் தொடங்கியுள்ளன. ஐரோப்பா முழுவதிலும் இந்த நோய்த்தொற்று, மீண்டும் பரவுவதானது இப்போது யதார்த்தமாகி விட்டது. கடந்த இரண்டு வாரங்களில், ஐரோப்பாவில் உள்ள 30 நாடுகளில் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக, 11 நாடுகளில் இந்தப் பரவுகை மிகவும் துரிதமாக உள்ளது. இந்தப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாமல் விட்டால், ஐரோப்பாவில் சுகாதார சேவைகள், மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகும். இது, ஐரோப்பாவின் திறந்த எல்லைகள் குறித்து, அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகின்றது”.
- செவ்வாய்கிழமை (30) அமெரிக்கா நாடாளுமன்ற மேலவையில், வெள்ளை மாளிகைக்கான சுகாதார ஆலோசகர் அன்டனி பௌச்சி, பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார். “அமெரிக்காவின் கட்டுக்குள், இந்தப் பெருந்தொற்று இல்லை. இப்போது இருக்கின்ற நிலைமைகள் தொடர்ந்தால், எதிர்வரும் காலத்தில், நாளொன்றுக்கு ஒரு இலட்சம் அமெரிக்கர்கள் தொற்றுக்கு ஆளாகுவது தவிர்க்க இயலாதது”.
- ஆசியாவில், கொவிட்-19 பெருந்தொற்றின் மய்யமாக, இந்தியா மாறிவருகிறது. சனிக்கிழமை (27), ஞாயிற்றுக்கிழமை (28) ஆகிய தினங்களில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை, புதிய உயர்வைக் கண்டது. இந்தியாவில் தொற்றாளர், இறந்தோர் குறித்துப் பதிவுசெய்யப்படுகின்ற எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது நன்கறியப்பட்ட நிலையில், உலகில் இரண்டாவது அதிகமான சனத்தொகையைக் கொண்டுள்ள நாட்டில், இத்தொற்றின் வேகமான பரவுகை அச்சமூட்டுகிறது. இதைப்போலவே, தெற்கு அமெரிக்காவில் சனத்தொகை கூடிய நாடான பிரேஸிலில், கொரோனா வைரஸ் தொற்று மோசமாக அதிகரித்துள்ளதோடு, இந்தப் பரவுகை முழுத் தென்னமெரிக்கக் கண்டத்தையும் பாதித்துள்ளது.
இந்த நான்கு விடயங்களும் கொவிட்-19இன் இன்றைய நிலை குறித்த சித்திரமொன்றைத் தருகின்றன. இவை, இன்னும் நிச்சயமற்ற எதிர்காலத்தையே சுட்டிக்காட்டுகின்றன.
வேலையிழப்புகள், பசி, பட்டினி, மனவுளைச்சல், அரசியல் நெருக்கடி, பொருளாதார மந்தம் அனைத்தும் முன்னிலும் மோசமாகத் தாக்கும் சாத்தியம் அதிகம். இதில் எந்தவொரு நாடும், தனியே தப்பிப்பிழைக்க இயலாது. இந்த உண்மையை, நாம் உணர வேண்டும்.
இந்தக் கொரோனா வைரஸ் தொற்று, பல்வேறு பரிணாமங்களைக் கொண்டது. அவற்றில், கவனிப்புக்கு உள்ளாகாத முக்கியமான சிலவற்றைச் சுருக்கமாக நோக்கலாம்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு, மே மாதம் இந்த நோய்த்தொற்றுக் காரணமாக, 25 மில்லியன் பேர் வேலை இழப்பாளர்கள் என்று சொல்லியிருந்தது. ஆனால், இப்போதைய தொற்றின் போக்கும், குறிப்பாக, சனத்தொகையை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகளில் இதன் வேகமான பரவுகையும், வேலையிழப்புக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை, எதிர்பார்த்ததை விட, இருமடங்காகும் என்று அனுமானிக்கப்படுகிறது. அதேவேளை, உலகளாவிய தொழிலாளர்களில் ஐந்தில் நான்கு பேர், வேலையிழப்பு, வேலைக்குறைப்பு, சம்பளக்குறைப்பு போன்ற காரணங்களாலும் பாதிக்கப்படுவர்.
ஜூன் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குதிரேஸ், “கொரோனா வைரஸ் தொற்றின் விளைவால், 50 மில்லியன் மக்கள் கடுமையான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள். கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் இவ்வளவு பேர் ஒருபோதும் கடுமையான வறுமைக்குள் தள்ளப்பட்டதில்லை” என்று கூறினார். அதேபோல, வறுமையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகரிக்கும் என்றும் எதிர்வுகூறப்பட்டது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த, உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் டேவிட் பேஸ்லி, “உலகில் இப்போது 821 மில்லியன் மக்கள் பசியோடு உறங்கப் போகிறார்கள். 235 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் பேசிய அவர், “இந்தக் கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடின், 27 மில்லியன் மக்கள், எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்குள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்; இப்போது நாம் 35க்கும் மேற்பட்ட நாடுகளில் மோசமான பட்டினியையும் பட்டினிச் சாவையும் எதிர்நோக்கி இருக்கிறோம்” என்றார்.
கடந்தாண்டு நிறைவில், உலகளாவிய ரீதியில் 80 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டு உள்ளார்கள். கொரோனா வைரஸ் தொற்றில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். இவர்களுக்கு மருத்துவ வசதிகள், சுகாதார வசதிகள் இல்லை; இருப்பிட வசதிளும் இல்லை. இவற்றுக்கு மேலாக, உயிர்வாழ்வதற்கான உணவைத் தேடுவதும் இந்தப் பெருந்தொற்றால் சவாலாகியுள்ளது. இப்போது கொவிட்-19, அகதிகள் அதிகம் வாழும் நாடுகளை, வீரியத்துடன் தாக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல, உயிரே கேள்விக்குரியதாக உள்ளது.
இப்போது பலர், ‘இரண்டாவது அலை’ பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள். ஆனால், இந்தக் கதையாடல் கொஞ்சம் சிக்கலானது. அமெரிக்கா உட்படப் பல நாடுகளில், முதலாவது அலையே இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், இரண்டாவது அலை குறித்துப் பேசுவது சிக்கலானது. அதேவேளை, புதிதாகத் தோற்றம் பெறுகின்ற மய்யங்கள், கட்டாயம் இரண்டாவது அலைக்குரியதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளே, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தத் திண்டாடுகின்றன. பொருளாதார நலன் கருதி, வழமைக்குத் திரும்பிய நாடுகள், அதற்கு மோசமான விலையைக் கொடுத்துள்ளன.
இதேவேளை, மூன்றாமுலக நாடுகளிடம், இந்தத் தொற்றைக் கையாளுவதற்குரிய வழிவகைகள் இன்மை மிகப்பெரிய அவலமாகும். பாரியளவில் பரிசோதனைகளை மேற்கொள்வது, இந்நாடுகளுக்குச் சாத்தியமற்றது. ஊரடங்குச் சட்டங்கள் முழுமையாகப் பலனளிக்கும் என்றில்லை. ஏனெனில், அன்றாடங்காய்ச்சிகள் எப்படியேனும் அடுத்த வேளை உணவைத் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
அரசாங்கங்கள் இதைத் தங்கள் அரசியலுக்கான வாய்ப்பான ஆயுதமாக்கி உள்ளன. ஆனால், இப்போது பிரச்சினை யார் வென்றார் என்பதோ, வெற்றிக்கு யார் உரிமை கொண்டாடுவது என்பதோ அல்ல. உயிர்வாழ்வதற்கான போராட்டமே பெரிது. அதற்குப் பொறுப்பும் பொதுநலனும் அவசியம். எங்கள் அரசாங்கம் அதற்குத் தயாராக இருக்கின்றதா என்ற கேள்வியை, நாங்களே எங்களைக் கேட்டுக்கொள்ளலாம்.