உலக நாடுகள் அத்தனையினதும் உதவிகளைப் பெற்று இந்தியாவால் மேற்குலக ஒத்துழைப்போடு புலிகளை அழிப்பதென்ற போர்வையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையைத் தமது தனிப்பட்ட ஆளுமையின் வெளிப்பாடாக இராயபக்ச குடும்பம் செய்த பரப்புரைக்கு எடுபட்டவர்களாக சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் ஆனதன் வெளிப்பாடே அச்சுறுத்தலற்ற சிறிலங்காவை உருவாக்கவல்ல ஆளுமையாக கோத்தாபாயவினை சிங்கள மக்கள் நம்பக் காரணமானது.
ஒட்டுமொத்த தமிழ்மக்களும், முசுலிம்களும் கோத்தாபயவினைத் தோற்கடித்தேயாக வேண்டும் என்று முடிவெடுத்து எதிர்த்தும் கோத்தாபய சிங்கள மக்களின் வாக்குகளினால் மட்டுமே தேர்தலில் வென்று சனாதிபதியானதென்பது, சிங்கள மக்கள் தாம் தலைமுறை தலைமுறையாக வாக்களித்து நிலைத்த வாக்கு வங்கிகளாகத் தாம் இருந்து வந்த கட்சிகளை மறந்து, கட்சி வேறுபாடின்றி சிங்கள மக்கள் ஓரணியில் திரண்டு கோத்தாபயவுக்கு வாக்களித்ததன் விளைவேயாம்.
இவ்வாறாக, முசுலீம்களின் மீது மேலிட்ட சிங்களவர்களின் பகைமையெனும் பேரினவாதவலையின் எழுச்சியால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று நடந்த தேர்தலில் வெற்றியீட்டி சிங்கள மக்களின் வாக்குகளினால் மட்டுமே தான் தெரிவாகிய பேரினவாதக் களிப்பில் தன்னை உருகுணைத் துட்டகெமுனுவாக உருவகித்துக்கொண்டு றூவன்வெலிசாயவில் நின்று மகாவம்ச மனநிலையில் கோத்தாபய சனாதிபதியாகப் பதவியேற்றார்.
மேற்குலகிற்கு உவப்பானதாக மேற்குலகின் முழுமுயற்சியுடன் ஆட்சிக்குக்கொண்டுவரப்பட்ட ரணில்-மைத்திரி அரசாங்கமானது அரசியலமைப்பில் ஏற்படுத்திய 19 ஆம் திருத்தச் சட்டத்தினால் சனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் பெரிதும் கேள்விக்குட்படுத்தப்பட்டதால், 19 ஆம் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ள போது சனாதிபதியாகப் பதவியேற்ற கோத்தாபயவினால் முழு அதிகாரத்தையும் தன் கையில் குவித்து ஆட்சிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அதனாலேதான், எப்படியாவது அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாமலாக்க வேண்டும் என்பதில் கடும் முனைப்பாக இருந்தார் கோத்தாபய. எனவே, தான் சனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றி அலையின் ஆர்ப்பரிப்பில் நின்றவாறு பாராளுமன்றத்தை அதன் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே கலைத்துவிட்டு, பாராளுமன்றத் தேர்தலை நடத்தி அதில் 2/3 பெரும்பான்மையைப் பெற்று 19 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி முழுமையான நிறைவேற்றதிகாரத்தைச் சுவைத்தபடி எதேச்சதிகார சனாதிபதியாகத் தொடருவதில் கோத்தாபய மிகுந்த முனைப்புக்காட்டி, அதற்காகவே தனது அரசியலைத் தான் பதவியேற்ற நாள் முதல் தொடரலானார்.
19 ஆம் திருத்தச் சட்டமானது சனாதிபதிக்கு முன்னர் இருந்த பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை வெகுவாக மட்டுப்படுத்தியதோடு பாராளுமன்றப் பதவிக்காலம் 4 1/2 ஆண்டுகளைக் கடந்த பின்பேதான் சனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியுமென்ற நிலைமையை உருவாக்கியது. அத்தோடு, சனாதிபதிப் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாகக் குறைத்ததுடன் 2 தடவைகள் மட்டுமே ஒருவர் சனாதிபதியாக இருக்க முடியுமென்ற நிலையையும் 19 ஆம் திருத்தச் சட்டம் உருவாக்கியது.
எனவே, தான் சனாதிபதியாகப் பதவியேற்ற மறுகணமே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாத சூழ்நிலையில் கோத்தாபய இருந்தார். எனவேதான் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை கோத்தாபய காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படியாக, பாராளுமன்றத்தை மார்ச் 2 ஆம் தேதி சனாதிபதி கோத்தாபய கலைத்த பின்னர், ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையகம் முடிவு செய்தது.
இவ்வாறாக, 2/3 பெரும்பான்மையைப் பெற்று பாராளுமன்றத் தேர்தலை வென்று 19 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கிவிடுவதை மட்டுமே தனது தற்போதைய அரசியல் இலக்காகக் கொண்டு கோத்தாபய தன்மீது ஒரு போலியான நிழலுருவைக் கட்டியமைத்து சிங்கள மக்களை மேலும் ஏமாற்றி வருவதைத் தனது அரசியலாகத் தொடரலானார்.
நிலைமை இவ்வாறிருக்கையில், கொரோனா பெருந்தொற்று உலகெங்கும் டிசெம்பர் மாதம் இறுதிக் கிழமையில் பரவத்தொடங்கி இது உலகப் பொதுச் சிக்கலாக மாறியிருந்தபோதும், கோத்தாபய தனது பாராளுன்றத் தேர்தல் வெற்றி குறித்து மட்டுமே செயலாற்றினாரே தவிர, கொரோனாவை ஒரு விடயமாகக் கூடக் கருதாமல் இருந்தார்.
2020 ஆண்டு சனவரி மாதத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான சீனப் பெண்மணி சிறிலங்காவில் அடையாளங்காணப்பட்ட பின்பும், இது குறித்துப் பெரிதும் கருத்திலெடுக்காமல் வானூர்தி நிலையம் தொடக்கம் அத்தனை வழங்கல் வழிகளையும் கட்டற்றவாறு துறந்தே வைத்திருந்தார் கோத்தாபய. அவரைப் பொறுத்தவரையில் தனக்கான ஆதரவலை வீசும் காலத்திலேயே பாராளுமன்றப் பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதே ஒரே இலக்காக இருந்தது. அதில் எந்தக் கேடும் நிகழா வண்ணமே கொரோனாவைக் கையாள வேண்டும் என கோத்தாபய முடிவெடுத்திருந்தார்.
அதனால், தங்கு தடையின்றி வெளிநாடுகளிலிருந்து வந்து சென்றவர்கள் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களா இல்லையா என்பது கூட தெரியாத நிலையே மார்ச் மாதத்தின் நடுப்பகுதி வரை தொடர்ந்தது. அதுவரை, இது குறித்து கோத்தாபாய குறிப்பிடும்படியாகக் கண்டுகொள்ளவில்லை. எனவே, தான் கொரோனாப் பெருந்தொற்று நாட்டுக்குள் வரமுடியாத வகையிலான எச்சரிக்கை நடவடிக்கைகளில் கோத்தாபய இறங்கவில்லை.
இந்தக் காலப்பகுதியிலே கொரோனாத் தொற்றுக்குள்ளானதாகக் கண்டறியப்பட்ட சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகர் முதல் பலர் நாட்டுக்குள் வந்து சென்றனர். இப்படியாகக் கொரோனாத் தொற்றுப் பரவலெடுக்கவே, ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி நடக்கவிருந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலை காலவரையறையின்றித் தள்ளிப்போடுவதாக தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் 21 ஆம் தேதி அறிவித்தது.
பாராளுமன்றத் தேர்தலை உடன் நடத்தித் தனக்குக் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள முனைப்பாயிருந்த கோத்தாபயவுக்கு கொரோனாப் பெருந்தொற்று என்ற பேரிடர் பெரும் இடையூறாகத் தெரிந்தாலும், பெருமளவுக்கு வீரியமெடுத்து சமூகப் பரவலாக்கம் அடைந்து இன்னமும் இலங்கைத்தீவில் பெருஞ்சிக்கலுக்கிட்டுச் செல்லாத கோரோனாவையும் வெற்றிகொண்ட மிகப்பெருந் தலைவனாகத் தன்னைக்காட்டி, கொரோனாவையும் தனக்கான அரசியல் முதலீடாக்கி இன்னுமின்னும் தன்னை வலுப்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் வென்றிட வேண்டும் என்று கங்கணங்கட்டிச் செயற்படலானார் கோத்தாபய.
கொரோனாவைக் கையாண்டதில் கோத்தாபய காட்டிய கொரோனாவிலும் கொடிய சிங்கள இனவெறி
தமிழர்களை வெற்றிகொண்ட துட்டகெமுனு என்றும் இசுலாமியர்களை நசுக்கி அச்சுறுத்தலற்ற தனிச் சிங்கள நாடாக இலங்கைத்தீவை மாற்ற வல்லவராகவும் தன்னை நிழலுருப் படுத்தியதன் விளைவே தனது தேர்தல் வெற்றி என்பதை மிகவும் தெளிவாக மனதிற்கொண்டவர் கோத்தாபய.
அதிலும் இன்னும் மேற்சென்று, முசுலிம்களிற்கெதிரான பகைமையுணர்வைக் கிளறிவிட்ட உயிர்த்த ஞாயிறுக் கொலைவெறித் தாக்குதலில் தான் கட்டியெழுப்பிய முசுலிம்களை நசுக்கவல்லான் என்ற அடையாளமே தனது தேர்தல் வெற்றிக்கான உடனடி அலையென்பதைப் புரிந்துகொண்டு, அதைத் தக்கவைப்பதோடு அதை இன்னும் உறுதிப்படுத்தும் முகமான வேலைகளைச் செய்வது தனது பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்குத் தேவை என்பதை உறுதியாக மனதிற்கொண்டு செயலாற்றுவதோடு அதற்கு துணைசேர்க்கும் வகையில் மேலும் இனவெறிச் செயல்களை கொரோனாவைப் பயன்படுத்திச் செய்யும் முனைப்பில் கோத்தாபாய உறுதிகொண்டார்.
தனது இனவெறிச் செயற்பாடுகளை முன்னெடுக்க வல்லதான சிங்கள பேரினவாத அரசின் இராணுவ எந்திரத்தை கொரோனா விடயத்தைக் கையாளுவதற்குப் பயன்படுத்துவதென கோத்தாபய முடிவெடுத்தார். சீனாவில் கல்விகற்பதற்குச் சென்ற சிங்கள மாணவர்களை சிறிலங்காவிற்கு அழைத்து வந்ததைக் கூட முப்படைகளும் பெற்ற மிகப்பெரிய வெற்றி போல காட்சிப்படுத்த அத்தனை ஊடகங்களையும் கோத்தாபய பயன்படுத்தினார். இந்த நிகழ்வு குறித்துப் பேசவல்லவர்களாக இராணுவப் பேச்சாளர்களே ஊடகங்களாலும் அடையாளங் காணப்பட்டனர். இவ்வாறாக சிங்கள பேரினவாதப் படைகள் கொரோனாவைக் கையாளுவதென்ற பாசாங்கில் களமிறங்கினர்.
கொரோனோ தொற்றுப் பரவல் பேரிடரிலிருந்து காப்பாற்றும் தனிமைப்படுத்தல் அலகுகளை சிறிலங்கா இராணுவத்தினரே இயக்குகிறார்கள். கொரோனா பெருந்தொற்று பரவலடையும் தன்மை மற்றும் அதன் இயல்புகள் குறித்த சரியான அறிவு இருந்தால் மட்டுமே வினைத்திட்பத்துடன் இப்படியான தனிமைப்படுத்தல் நடுவங்களை (Quarantine Centres) இயக்கலாம். இப்படியான அறிவு மட்டத்திலிருந்து வெகுதொலைவிலிருக்கும் சிறிலங்கா இராணுவத்திடம் கேள்விகளுக்கப்பால் இந்த முதன்மைச் செயற்பாடு கையளிக்கப்பட்டமையானது உலகலவில் இருக்கும் சுகாதாரத்துறைகளை ஒட்டுமொத்தமாக எள்ளல் செய்வதாகவே இருக்கிறது.
அத்துடன் சிறிலங்காவின் உளவமைப்புகளைக் களத்தில் இறக்கி கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள், அவர்கள் பழகிய இடங்கள், அவர்கள் சென்று வந்த இடங்கள் என ஒரு சங்கிலித்தொடராகத் தொற்றுக்கான வாய்ப்புள்ள அனைவரையும் கண்டறியும் நடவடிக்கையை முன்னெடுப்பதாக ஒரு தோற்றப்பட்டைக் காட்டியவாறே உயிர்த்த ஞாயிறுக் குண்டுத்தாக்குதல் தொடர்பான கைதுகள் மற்றும் தமிழர்தாயகப் பகுதிகளில் அரச ஆதரவை நாடி நிற்காமல் தன்னெழுச்சியுடன் இளையோர்களால் புலம்பெயர் பங்களிப்புகளுடன் தொடரும் மக்கள் உதவிச் செயற்பாடுகளைக் கண்காணித்து, தமிழர்களின் பொருண்மிய அசைவியக்கத்தை நாடி பிடித்துப்பார்த்தல் என்பன நடந்தேறிய வண்ணம் உள்ளன.
இவ்வாறாக, உயிர்த்த ஞாயிறு கொலைவெறியாட்டத்தில் வெடிகுண்டுகளாக மாறிய இரு உடன்பிறந்தவர்களின் தந்தையான வணிகரின் தனிப்பட்ட வழக்குகளை 10 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னெடுத்து நடத்தியவரான கியாஸ் கிஸ்புல்லா என்ற வழக்கறிஞர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஏப்ரல் 14 ஆம் தேதி கைதாகினார். இந்த வழக்கறிஞர் இசுலாமிய அடிப்படைவாத கொலைக்கும்பலுடன் எத்தகைய உறவினைக் கொண்டிருந்தார் என்பது குறித்த புலனாய்வுத் தகவல்கள் எம்மிடம் இல்லையென்பதால் அவர் குறித்து எந்தச் சான்றிதழையும் நாம் வழங்கவில்லை.
ஆனால், அவர் கைதுசெய்யப்பட்ட முறையினை நாம் கூர்ந்துநோக்கி எம்மை நோக்கி நகரவிருக்கும் இடுக்கண்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். சுகாதார சேவைகளில் இருந்து பேசுவதாகத் தம்மை அடையாளப்படுத்திப் பேசிய ஒருவர் இந்த வழக்கறிஞரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் தன்னியக்கச் சொல்லி எந்திரத்தைப் பயன்படுத்தினாரா (ATM) என வினவியுள்ளனர்.
உண்மையில், தொலைபேசி அழைப்புக்குச் சற்று முன்னரே பணத்தை எடுத்து வந்த கியாஸ் கிஸ்புல்லா அதற்கு ஆம் என பதிலளிக்க, அதில் கொரோனாத் தொற்று இருப்பதாக ஐயுறவுகொள்வதாகவும் அதனால் அது குறித்து சோதனை மேற்கொள்ள வேண்டுமென்பதால் தாம் வீட்டிற்கு வந்து அவரை அழைத்துச் செல்வதாகவும் வழக்கறிஞரான கியாஸ் கிஸ்புல்லாவிற்கு அந்த தொலைபேசி அழைப்புமூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புறப்படுவதற்கு உடனேயே அணியமாகி நின்ற, கிஸ்புல்லாவை வீட்டிற்குள் வந்த குற்றப் புலனாய்வுத்துறையினர் கைவிலங்கிட்டுக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.
உண்மையில், கைதின் போது கடைப்பிடித்திருக்க வேண்டிய எந்த நடைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் உளவு அமைப்புகளின் ஆட்கடத்தல் நடவடிக்கை போலவே இக்கைது நடைபெற்றிருக்கிறது. இந்த முஸ்லிம் வழக்கறிஞர் ஒரு தலைமறைவுப் போராளியல்ல. அவர் இயல்பாக ஒரு வீட்டில் வாழ்பவர். அவரைக் கைது செய்ய கொரோனா நாடகம் ஆட வேண்டிய எந்தத்தேவையும் இல்லை.
ஆனால், உளவுத்துறையினர் இந்த விடயத்திற்கு கொரோனாவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால், கொரோனாவுக்கும் கோத்தாபயவுக்கும் உள்ள உறவு இன்னதுதான் என அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, உளவமைப்புகள் களத்தில் இறங்கி என்னென்ன வேலைகளை கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் செய்கின்றன என்பதை நாம் ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும்.
கொரோனாத் தனிமைப்படுத்தல் நடுவங்களை தொடக்கத்தில் தமிழர்தாயகப் பகுதிகளில் இராணுவத்தினரின் கீழ் நிறுவத்தொடங்கிய சிறிலங்கா அரசானது, மட்டக்களப்பில் புதிதாக கட்டப்பட்ட பல்கலைக்கழக வளாகம், காங்கேசன் துறை இராணுவமுகாம், பலாலி, முழங்காவில், மன்னார் போன்ற இடங்களிலே சுகாதாரசேவைகள் பணிப்பாளர்கள் கூட சென்றுவர முடியாதவாறே தனிமைப்படுத்தல் நடுவங்களை அமைத்தது.
உண்மையில் சுவிசிலிருந்து வந்த கிறித்துவ பரப்புரைப் பாதிரியானவர் மார்ச் 10 ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் உலாவியிருக்கிறார். அவர் சுவிஸ் நாட்டுக்குத் திரும்பியதும் அங்கு அவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் என ஒரு 20 பேரை கண்டுபிடித்து காங்கேசந்துறையிலுள்ள இராணுவத்தினர் நிருவகிக்கும் தனிமைப்படுத்தல் நடுவத்தில் மார்ச் மாதம் 23 ஆம் தேதி அன்று தனிமைப்படுத்தினார்கள்.
பின்னர், அந்த 20 பேர் இரு குழுக்களாக்கப்பட்டு பத்துப் பத்துப் பேராக கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களா இல்லையா என ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதிகளில் சோதனைக்குட்பட்டார்கள். சோதனைக்குள்ளானவர்களான இந்த 20 பேரில் 6 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணாப்பட்டுள்ளனர். மீதி 14 பேரும் தொற்றுக்குள்ளாகவில்லை. பின்பாக ஏப்ரல் 14 ஆம் தேதியன்று நடத்திய சோதனையில், முன்னர் தொற்றுக்குள்ளாகாத 14 பேரில் 8 பேர் கொரோனாத்தொற்றுக்குள்ளாகி இருப்பது தெரியவந்து பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உண்மையில் தொற்று வெளியில் தெரியாக்காலம் (Incubation Period) 2 கிழமைகள் அளவே என நன்கு அறியப்படினும் இப்படியாக 1 மாதத்தின் பின்பாக தொற்று வெளிப்பட வாய்ப்புகளில்லை என்பது நன்கு தெளிவாகும் ஒன்றே. எனின், இப்படியாக மீதி 14 பேரும் பெருந்தொற்றுக்குள்ளாகியமைக்கான காரணம் அவர்கள் தனிமைப்படுத்தல் நடுவத்தில் இருந்தமையே என அடித்துக்கூறலாம்.
இராணுவத்தால் இயக்கப்படும் இந்த தனிமைப்படுத்தல் நடுவமானது ஒரு மண்டப அமைவில் இருப்பதுடன் பொதுக்கழிப்பறைகளும் பொதுவான உணவருந்துமிடமுமே அங்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்தளவுக்கு மிகவும் மூடத்தனமாகவும் அறிவிலித்தனத்தின் உச்சத்துடனுமே இந்த தனிமைப்படுத்தல் நடுவங்கள் இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வந்துள்ளது.
இதனால்தான் இப்படியாக 14 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை மூடி மறைக்கவே இராணுவத்தினரும் சுகாதார சேவைகளின் பணிப்பளாருமான மருத்துவர் அணில் ஜயசிங்கவும் அறிக்கைகளை விட்டனர். அவ்வேளை, துணிந்தெழுந்து முறையான ஆய்வுமுறையைப் பின்பற்றி ஆய்ந்து இது குறித்த உண்மைத் தகவலை அறிக்கையாக வெளியிட்ட மருத்துவர் முரளி வல்லிபுரநாதனை கண்டபடிக்கு திட்டியும் அவரது கருத்துகள் தவறானவை என்று சொல்லி வந்ததிலும் மேற்சென்று, உண்மையை துணிவுடன் மக்களிடத்தில் வெளிக்கொண்டு வந்த மருத்துவர் முரளியின் கருத்துகளை இனவெறிக் கருத்து என்றும் அவர் ஏலவே இனவெறியனாக அறியப்பட்டவர் என்றும் சுகாதாரசேவைப் பணிப்பாளர் அறிக்கை வெளியிட்டு அப்பட்டமான சிங்களவெறியாட்டத்தை சிறிலங்காவின் சுகாதாரத்துறை ஆடியுள்ளது.
அந்த அறிக்கையில் இந்த தகவல்களை முறைப்படுத்தி உண்மையை உரைத்தமையைத் தாண்டி இனம் குறித்து எந்தவொரு சொல்லைத்தானும் பயன்படுத்தாத மருத்துவர் முரளி எவ்வாறு இனவெறிக்கருத்தை வெளிப்படுத்துவதாக சிறிலங்காவின் இனவெறிச் சுகாதாரத்துறையால் குற்றஞ்சாட்டப்படுகின்றார் என கூர்ந்து பார்க்க வேண்டும்.
இப்படியாக கொரோனா குறித்த கோத்தாபய அரசின் செயற்பாடுகளில் ஐயுறவுகொண்டவர்கள் பொதுவெளியில் வெளியிட்ட கருத்துகளுக்காக, 17 பேரை இதுவரை கோத்தாபய அரசு கைதுசெய்துள்ளது. எந்த அடிப்படையுமில்லாமல் இந்தக் குற்றச்சாட்டு எழவில்லை. அதாவது, சிறிலங்கா இராணுவம், கோத்தாபாய போன்றவர்களின் குறைச் செயற்பாடுகளைத் தமிழர்கள் கேள்வி கேட்பது இனவெறியெனக் கொள்ளப்படும் என்ற அடிப்படையிலேயே மருத்துவர் முரளி மீதான இந்தக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து தமிழ் மருத்துவர்கள் ஒன்றிணைந்து மருத்துவர் முரளிக்கு துணையாக நின்று செயற்பட்டேயாக வேண்டும். ஆனால் மருத்துவர் லக்ஸ்மன் போன்ற சிவில் சமூகம் என்ற போர்வையில் விக்கினேசுவரின் அடிவருடியாக இருக்கும் சமூகத்திற்கு புறம்பானவர்கள் இது பற்றி எல்லாம் மெய்யான அக்கறையைக் காட்ட மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள்.
சிறைகளில் கொரோனாத் தொற்றுப் பரவலடையும் வாய்ப்புகள் கூடுதலாக இருப்பதாலும் அங்கு தேவையான இடைவெளிகளைப் (Physical Distancing) பேண முடியாதென்பதாலும் 2991 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். 80 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்ற போதும் அவர்களில் சிலர் தண்டனைக்கால நிறைவில் இருக்கின்ற போதும், அவர்களில் ஒருவரேனும் பிணையில் கூட விடுவிக்கப்படவில்லை.
மிருசிவில் படுகொலை குற்றவாளியான சிங்கள இராணுவத்தினனை அறமென்றால் என்னவென துளிக்கும் மதிக்காமல் தமிழனைக்கொன்றால் குற்றமில்லையென்ற மகாவம்ச மனநிலையில் விடுதலை செய்த இந்த கோத்தாபய அரசானது, வன்புணர்வாளார், கள்ளர், காடர், போதைக்கடத்தல்காரர் என்ற வேறுபாடில்லாமல் 2991 கைதிகளை விடுவித்தும் அதில் 1 தமிழ் அரசியற் கைதியைத் தன்னும் ஒரு பேச்சுக்காகவேனும் விடுதலை செய்யவில்லை என்பதிலிருந்து கோத்தாபயவின் தமிழினப்பகைமையுணர்வு எத்தகைய எல்லை கடந்த ஒன்றென்பதை ஓரறிவுள்ளோரும் விளங்கிக்கொள்வர்.
இப்படியான பேரிடர் நேரங்களில் பயன்படுத்தவென உள்ளாட்சி நிருவாகங்களிடம் ஒரு தொகை ஒதுக்கப்பட்ட பணம் வைப்பிலிருக்கும். இந்தப் பேரிடர் காலத்தில் மக்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக மக்கள் பணிகள் செய்வதற்கு இந்த நிதியைப் பயன்படுத்த முடியும். இலங்கை முழுதும் சமுர்த்திப் பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுக்கும் திட்டத்திலும் மிகவும் தாமதமாகவே தமிழர் பகுதிகளுக்கு இந்தத்திட்டம் வழங்கப்பட்டது.
வெறெந்த உதவிகளையும் செய்யாத கோத்தாபய அரசு இதனைக் கூட தனது தேர்தல் காலச் செலவுபோலவே செலவுசெய்து வாக்கு அறுவடைக்கு நின்றமையை சிங்கள நாளிதழ்களை பார்த்தால் இலகுவில் தெரிந்துகொள்ளலாம். இப்படியாக, தானும் மக்களுக்கு எதுவும் செய்யாத கோத்தாபய அரசு, வடக்கு-கிழக்கில் உள்ள உள்ளாட்சி நிருவாகங்களில் பேரிடர் காலத்தில் பயன்படுத்தவென இருக்கும் பணத்தையும் எடுக்க விடாது வடக்கு, கிழக்கு ஆளுநர்கள் மூலம் முட்டுக்கட்டை போட்டு வைத்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அவர்கள் அந்த நிதியைப் பயன்படுத்துகின்றனர். இந்த விடயத்தில் வேண்டுமென்றே மெத்தனப்போக்குடன் தமிழர்களை வஞ்சிக்கும் நோக்குடன் கோத்தாபய அரசு நடந்துகொள்கிறது. கொரோனாவிலும் கொடிய இனவெறியை கோத்தாபாய கொரோனா காலத்திலும் தமிழர்கள் மீது ஏவுகிறார் என்பதை இங்கு சுட்ட வேண்டும்.
வடக்கு, கிழக்கில் உள்ள மருத்துவமனைகளில் தற்காப்பு அணிகலன்களுக்கு (PPE) மிகவும் பாரிய பற்றாக்குறை நிலவுகிறது. துப்பரவுப் பணியாளர்கள், தாதிமார்கள், ஆய்வுகூட ஆய்வாளர்கள், மருந்தாளர்கள், மருத்துவர்கள் என அனைவரும் இந்த தற்காப்பு அணிகலன்கள் இன்றி மிகவும் இடர்பாடுகளுடன் அச்ச சூழலுக்குள் பணியாற்றுகின்றனர். இதைத்தன்னும் கோத்தாபாயவினால் சரிவர நிருவகிக்க முடியவில்லை, இல்லை அதைச் செய்ய விருப்பமில்லை. புலம்பெயர்ந்து பணியாற்றும் எம்மவர்களே சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து இப்படியான தற்காப்பு அணிகலன்களை கொள்வனவு செய்து எமது தாயகப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொடுக்கும் முயற்சியில் இருக்கின்றனர்.
கொரோனாவிற்கு எதிரான கோத்தாவின் போரும் தேர்தலை நடத்திவிடத் துடிக்கும் செயற்பாடுகளும்
மார்ச் 2 இல் பாராளுமன்றத்தை கலைத்த சனாதிபதி கோத்தாபய அடுத்து வரும் 3 மாதத்திற்குள் புதிய பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென அரசியலமைப்புச் சொல்கிறது. ஆனால் ஏப்ரல் 25 இல் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட தேர்தலானது தேர்தல் ஆணையத்தால் கொரோனா தொற்றின் விளைவாகத் தள்ளிப்போடப்பட்ட தேர்தலை, கூடிய விரைவில் நடத்திக்காட்டி தனது ஆதரவலை சரிய முன்பாக பாராளுமன்றத் தேர்தலை 2/3 பெரும்பான்மையுடன் வெல்வதற்கு கோத்தாபய துடித்து வருகின்றார்.
அப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனின், கொரோனாவை சிறிலங்கா வென்று விட்டதாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதோடு, சிறிலங்கா சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தினதும் (Director General of Health Services) கொரோனா எதிர்பாரா பரவலைத் தடுப்பதற்கான தேசிய நடுவத்தின் தலைவரதும் (Head of the National Operation Centre for the Prevention of the Spread of the Corona Virus Outbreak) ஒப்புதல் அறிக்கைகள் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படல் வேண்டும்.
அதனாலேதான் தனக்கு மிகவும் ஆதரவானவர்களான மருத்துவர் அணில் ஜசிங்கவை சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகமாகவும், லெப்.ஜெனரல் சவேந்திரசில்வா என்ற சிறிலங்காவின் இராணுவத்தளபதியை கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய நடுவத்தின் தலைவராகவும் கோத்தாபய பதவியில் அமர்த்தினார்.
அத்துடன் கோத்தாபய கொரோனாவை வெற்றிகொண்டு விட்டதாக விடலைத்தனமாகன செய்தியறிக்கைகளை “லக்பிம” போன்ற சிங்கள நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. இதற்கும் ஒரு படி மேற்சென்று அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தனது நண்பர் மூலமாக எந்த ஒரு ஏற்புதலும் பெறப்படாத ஒரு அமைப்பை முதல் நாள் நிறுவி அடுத்த நாள் அறிக்கைவிடும் கணக்கில் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைமைத்துவத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலொன்று தரவரிசைக்குட்படுத்தி அதில் உலகளவில் சிறிலங்கா 9 ஆவது இடத்தைப் பிடித்ததாக அறிவிப்புச் செய்து, எவரும் கண்டுகொள்ளாத அந்த பம்மாத்து அறிக்கையை “டெய்லி மிரர்” நாளிதழிலும் வெளிவரச் செய்து உலகளவில் கொரோனாவை வென்ற பெருந்தலைவனாகத் தன்னை கோத்தாபாய காட்டி வருவது போன்ற கீழான தரங்கெட்ட பரப்புரையை வேறெங்கும் காணமுடியாது.
இதுவரை சிறிலங்காவில் கொரோனா சமூகப்பரவலடைந்துவிட்டதா இல்லையா என்பது கூடத் தெரியாது. ஏனெனில், இதுவரை 5000 வரையிலான கொரோனாத் தொற்றுச் சோதனைகளையே (PCR Testing) சிறிலங்கா மேற்கொண்டுள்ளது. இந்திய நடுவண் அரசின் அடிமை மாநிலமாக இருக்கும் தமிழ்நாடே ஒரு அரசில்லாமல் நடுவண் அரசின் முட்டுக்கட்டைகளையும் மீறி இதுவரை 50,000 கொரோனாத் தொற்றுச் சோதனைகளைச் செய்துள்ளது.
உலகளவில் கொரோனாத் தொற்று தொடர்பான சோதனைகளை மிகக் குறைந்தளவில் மேற்கொண்ட நாடுகள் வரிசையில் தான் சிறிலங்கா முதலிடத்தில் பட்டியற்படுத்தப்பட வேண்டும். செயற்கைச் சுவாசம் வழங்கும் கருவிகளை போதுமானளவு அதிகரிக்கும் முயற்சியில் கூட கோத்தாபய இல்லை எனலாம். சனவரி மாதம் நாட்டிற்குள் வந்த கொரோனாவிற்கு மார்ச் மாதம் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியதைத் தாண்டி கோத்தாபய வேறெந்த வேலைகளையும் செய்யாமல் இருந்துகொண்டு எப்படி கிட்லர் ஆவது? கோயாபல்சாக மட்டுமே கோத்தாபயவால் இருக்க முடியும்.
பள்ளிக்கூடங்களை மே மாதம் 11 ஆம் தேதிக்கு மேல் திறக்கலாம் என்று அறிக்கைவிடப்பட்டுள்ளதன் மூலம் சிறிலங்கா கொரோனாவில் இருந்து தப்பித்துவிட்டதாக ஒரு பெரும் புளுகு அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
கொரோனாவால் உலகெங்கிலும் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும், தென்கொரியாவில் ஏப்ரல் 15 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தென்கொரியாவில் நடந்த தேர்தலை எடுத்துக்காட்டி சிறிலங்காவிலும் தேர்தலை தள்ளிப்போடாமல் நடத்தலாம் என இராயபக்ச குடும்பத்தின் இராசகுருவாக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அண்ணளவாக 5 கோடி மக்கள்தொகை உள்ள தென்கொரியாவில் 5 1/2 இலட்சம் கொரோனாத் தொற்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சமூகப்பரவலாக்கம் தடுக்கப்பட்டுள்ளமையை தென்கொரிய அரசு உறுதிப்படுத்திய பின்புதான் தேர்தலை நடத்தியது. தென்கொரியாவானது தனது நாட்டில் உள்ள 14,000 வாக்களிக்கும் நிலையங்களையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் கிருமிநீக்கம் செய்வதற்கு 14.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்து சிறப்பாக அதனைச் செய்து முடித்ததோடு, அனைத்து வாக்காளர்களுக்கும் 2 சோடி முகவுறைகளையும் கையுறைகளையும் வழங்கியே தேர்தலை நடத்தி முடித்துள்ளது.
மருத்துவப் பணியாளர்களுக்கு தற்காப்பு அணிகலன்களைக் கூட வழங்க முடியாததும் இதுவரை 5000 கொரோனாத் தொற்றுச் சோதனைகளை மட்டுமே செய்ததுமான வக்கற்ற சிறிலங்கா அரசு தென்கொரியாவைப்போல தேர்தலை நடத்தலாம் எனச் சொல்ல வருவதன் மூலம் ஜி.எல்.பீரிஸ் என்ற இந்த பேராசிரியர் ஆனவர் கோயாபல்சாகி விடுகிறார்.
இப்படியாக கொரோனா தொடர்பாக எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்காமல், தேர்தலை நடத்தித் தமக்குவப்பான சூழலில் வெற்றிபெறத்துடிக்கும் கோத்தாபய, அரசியலமைப்பின் படி தேர்தல் நடத்தி வருகின்ற யூன் மாதம் 2 ஆம் தேதிக்கு முன்னர் புதிய பாராளுமன்றம் கூடியேயாக வேண்டுமெனக் கூறுகிறார்.
அதாவது, நாட்டு மக்களின் உயிர்களை பணயமாக வைத்தேனும் தேர்தலை நடத்தி 2/3 பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தை வெல்ல எத்தகைய இழிநிலைக்கும் செல்ல புளுகுமூட்டைகளுடன் அணியமாகி நிற்கிறார் கோத்தாபய. உண்மையில் அரசியலமைப்பின் படி இப்படி ஒரு சூழலில், நாட்டு மக்களின் நலன் கருதி தேர்தலை நடத்த முடியாதுள்ள சூழலில் உச்ச நீதிமன்றத்தை கோத்தாபய அணுகியிருக்க வேண்டும். அங்குள்ள சூழல் அவருக்கு ஏற்புடையதாயில்லை என்பதால் உச்ச நீதிமன்றத்தை கோத்தாபய நாடவில்லை. அப்படியெனின், மார்ச் 2 இல் பாரளுமன்றத்தை கலைக்க தான் கொண்டு வந்த அரசானையை (Gazette) விலக்கி மீண்டும் பழைய பாராளுமன்றத்தைத் தற்போதைக்குக் கூட்டி எல்லாச் சிக்கல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, கொரோனாவை கட்சி வேறுபாடின்றி எதிர்கொள்ள வேண்டும்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட இச்சூழலைத் தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி அரச வழங்களையெல்லாம் தனது சொந்த வீட்டுப் பணம் போல பயன்படுத்தி வாக்கறுவடைக்கு அணியமாகி நிற்கும் கோத்தாபய எப்படியெனிலும் கூடுதலான விரைவில் தேர்தலை நடத்தப் பல பக்கங்களுக்கும் அழுத்தத்தைக் கொடுப்பதோடு இந்தக் காலப்பகுதியை தமிழர்களை வென்ற, முசுலிம்களை ஒடுக்குகின்ற கொரோனாவை வென்ற தலைவராகக் காட்டுவதற்கான பரப்புரைகளைச் செய்து சிங்கள மக்கள் மனதில் துட்டகெமுனுவாக நிலைகொள்ளவே பயன்படுத்துவார்.
அவருக்கு இருப்பது சிங்கள பௌத்த பேரினவெறி மட்டுமல்ல. அதையும் விஞ்சியயளவுக்கு அதிகாரவெறி அவருக்குண்டு. இந்த அதிகாரவெறி நரபலிவெறிக்கு ஒப்பானது. அது அவரை கொரோனாவிலும் கொடியவராக வரலாற்றில் பதிவுசெய்துவிடும்.
-முத்துச்செழியன்-
2020-04-22