உலகத்திலேயே பானை ஓடுகளில் 2 ஆயிரம் வருடத்திற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பானை ஓடுகளில் தமிழ் எழுத்துக்கள் கிடைக்கின்ற இந்தியாவின் ஒரே இடம் கீழடி என்பது நம் எல்லோருக்கும் பெருமை, நம்முடைய மதுரை க்கும் பெருமை. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான சங்க இலக்கியங்களும் உண்டு, சமஸ்கிருதம், கிரேக்கம் உள்ளிட்ட பழமையான இலக்கியங்களும் அதிகம் உள்ளன. பழமையான இலக்கியங்களை ஆராயும்போது பெண் கள் எவ்வளவு பேர் எழுத்தாளர்களாக விளங்கினார்கள் என்பது முக்கியம்.
சமஸ்கிருதத்தில் ஒரு பெண் புலவர் கூட இல்லை. உலகில் பழமையான இலக்கியம் என்று ஐரோப்பிய சமூகம் சொல்கின்ற கிரேக்கம், இலத்தீனில் 7 பெண்கள் எழுதியுள்ளனர். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்க இலக்கியத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களை கொண்ட ஒரே உலக மொழி தமிழ்மொழி என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். உலகத்திலே இதுபோன்ற சிறப்பு வேறு எந்த மொழிக்கும் கிடையாது.
ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லா மல், பேதம் இல்லாமல் கல்வி அறிவுகொண்ட சமூகமாக தமிழ்ச்சமூகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பது நமது மகத்தான பெருமைகளிலேயே மிக முக்கியமான பெரு மையாகும். இந்தியாவிலேயே பழமையான கல்வெட்டுகள் மதுரையில் மாங்குளத்திலும், தேனி மாவட்டம் புள்ளி மான்கோம்பையிலும் கி.மு.6-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
தங்கத்தில் எழுதப்பட்ட முதல் மொழி தமிழ்
அதாவது சமஸ்கிருத கல்வெட்டினையும், தமிழ் கல்வெட்டினையும் ஆராயும் பொழுது ஏறக்குறைய சமஸ் கிருத கல்வெட்டினை காட்டிலும் 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கல்வெட்டுகளில் எழுதியிருக்கின்றான். வைகைக் கறையில் இருக்கின்ற தேனூரில் 2014-ஆம் ஆண்டு புயல்காற்றின்போது ஊருக்கு நடுவில் உள்ள மரம் கீழே விழுந்து விட்டது. அந்த மரத்தின் வேர் பகுதிக்கு அடியில் மண்சட்டி கிடைத்தது. அந்த மண்சட்டிக்குள் 7 தங்கக் கட்டிகள் இருந்தன. அந்த தங்கக் கட்டியில் பிராமிய எழுத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணின் பெயர் கோதை என்று எழுதப்பட்டிருந்தது.
அன்புகன் என்ற வீரன்
சிந்துவெளி நாகரிக காலத்தில் தங்கம் என்ற ஒரு உலோ கம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு பின்தான் தங்கம் கண்டறியப்பட்டது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தங்கத்தில் எழுதப்பட்ட தெய்வத்தின் பெயரோ, சக்கரவர்த்தியின் பெயரோ இன்றைக்கு வரை கண்டுபிடிக்கப்படவில்லை. முதன்முதலில் தங்கத்தில் எழுதப்பட்ட மொழி தமிழ்மொழி, எழுதிய எழுத்து கோதை என்ற பெண்ணின் பெயராகும்.
சங்கத்தமிழ் என்பது மட்டும் நமது பெருமையல்ல, தங்கத்தமிழ் என்பதும் நமது மகத்தான பெருமைகளிலே ஒன்றாகும். இந்தியாவின் பழமையான கல்வெட்டினை விடுத்து அசோகச் சக்கரத்தின் கல்வெட்டு இந்தியா முழுவதும் இருக்கின்றது. ஆனால் அசோகர் காலத்து கல்வெட்டிற்கு 300 வருடத்திற்கு முன்பாகவே மதுரையில் மாங்குளம், தேனி புள்ளி மான்கோம்பை உள்ளிட்ட பல இடங்களில் கல்வெட்டு கிடைத்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள மிகப்பழமையான கல்வெட்டு மதுரையில் மாங்குளம், தேனி புள்ளி மான்கோம்பை கல்வெட்டாகும். இந்த கல்வெட்டுகளில் அன்றைய காலத்தில் பெரிய செல்வம் மாடுகளாகும். மாடு களை திருடும் ஒரு கூட்டம். திருடி செல்கின்ற கூட்டத்தை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து மாடுகளை மீட்பர். மாடுகளை மீட்கின்ற பொழுது ஒரு வீரன் இறந்தால், அந்த வீரனின் நினைவாக நடுகல் நடப்படுகிறது. அப்படி எழுதப்பட்ட வீரனின் பெயர் அன்புகன் ஆகும்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கே இருக்கின்ற நாக ரிகங்களெல்லாம் என்ன பேசிக்கொண்டிருந்தன? 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உதயமான செல்வச் செழிப் பான தமிழ் நாகரீகம் அறத்தைப் பின்பற்றியது, என்ன வாழ்வைப் பின்பற்றியது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சுதந்திரத்திற்கு பிறகு எத்தனையோ அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்பட்டு, அவற்றின் மூலம் நிறைய வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை யெல்லாம் இந்தியாவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கீழடி கண்டுபிடிப்புதான் ஒட்டுமொத்த இந்தியாவையும் அசைத்து பார்க்கும் கண்டுபிடிப்பாக மாறியதற்கு காரணம், இதுவரை எழுதப்பட்ட வரலாறெல்லாம் சிந்துவெளி காலத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கியம் இருந்ததாக கற்பனையாக சொல்லலாம். ஆனால் நகரநாகரிகம் இல்லை என்று வடஇந்தியாவில் இருந்த வரலாற்றாளர்கள் கூறியிருந்தனர்.
ஆனால் அவர்களின் கூற்றை பொய்யாக்கும் விதமாக 2500 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப்பெரிய நகரநாகரிகம் இருந்தது, செழிப்பான நகரநாகரிகமாக இருந்தது, கல்வியில் வளர்ச்சி, வணிகத்தில் வளர்ச்சி, உலோகக் கண்டுபிடிப்புகளில் வளர்ச்சி என்று இவ்வளவு செழிப்பான நகரநாகரிகம் இருந்தது என்பதை உலகத்திற்கு, இந்தியாவிற்கு மிகப்பெரிய உண்மையை விளக்கியதினால் கீழடி அகழாய்வு என்பது எல்லோரும் பெருமைப்படக்கூடியதாகும். 2500 ஆண்டு வரலாற்றின் தொடர்ச்சி, மரபின் வளர்ச்சியாகும்.
நாளைய சமூகத்தை சந்திக்கின்ற மாணவனாக நம்மு டைய பெருமிதமிக்க, முற்போக்கான, பகுத்தறிவான, சிந்திக்கின்ற ஆற்றல் கொண்ட அறிவியல் வயப்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகத்தை உருவாக்குகின்ற பெரும் கனவை மாணவர் சமூகம் கையில் ஏந்த வேண்டும்.
-மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க்கனவு எனும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் (CP-M) ஆற்றிய உரையில் இருந்து