‘சமூக நீதி’ கோரிக்கையாக மாற வேண்டிய நீதிக்கான கோஷங்கள்

மலையகத்தில் மக்களால் முன்வைக்கப்பட்ட ‘நீதி வேண்டும்’ கோஷம், அரசியல் – பணபலங்களைக் கொண்டு மறைக்கப்பட்டிருக்கக்கூடிய மரணத்தை நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்தி இருக்கிறது. சம்பவம் நடந்து பத்து நாட்களாக உயிருக்குப் போராடிய குழந்தையை வைத்தியசாலைக்குச் சென்று பார்க்கத் துணியாத, அப்போது விசாரணையைத் துரிதப்படுத்துங்கள் என காவல் துறையைத் தூண்டத் துணியாத, மரணத்துக்குப் பின் நீதி கேட்டாலும் அதற்காக பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பாக சட்டத்தரணிகளை நியமிக்காத மலையக அரசியல் பிரதிநிதிகள் மத்தியில் அந்த சிறுமிக்காக தன்னார்வமாக முன்வந்து மன்னறில் ஆஜரான மலையக சட்டத்தரணிகள், இந்த வழக்கிற்கு வெளியே ஒன்றை ஆழமாக உணர்த்தி நிற்கிறார்கள்.

அது மலையகம் எனும் ‘உணர்வு’. உணர்ச்சி நிலையில் ஓங்கி நிற்கும் சமூகத்தை உணர்வுநிலையில் புரிந்து கொண்டு செயற்படும் தலைமைக்கான வெற்றிடம் தாராளமாகவே வெளிப்பட்ட தருணம் இது.

இந்தப் பிரச்சினைகளின் பின்னணிகளை நீதிமன்றம் ஆராய்வதற்கு முன்னமே தீர்ப்பெழுதிய தனிநபர்கள், நிறுவனங்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு, பிரச்சினைக்கு பின்னணியாக இருந்திருக்கக் கூடியதான காரணங்களைக் கண்டறிவதும் அவற்றுக்கான தீர்வைத் தேடுவதன் ஊடாக இது போன்றதோர் இன்னுமொரு அவலமும், மரணமும் மலையகத்தில் நேராதிருப்பது எவ்வாறு என சிந்திப்பதே சமூகத்தின் பொறுப்பாகிறது.

ஒட்டு மொத்த இலங்கையுமே சிறுவர் தொழிலாளர்களை அனுமதித்துக் கொண்டிருப்பதாக பல புள்ளிவிபரங்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக வெளி வந்து கொண்டிருக்கிறது. அவற்றை இங்கே அலசி ஆராயாவிட்டாலும் அந்த புள்ளி விபரங்கள் சொல்லும் தகவல் முக்கியமானது.
மலையகத்தில் மட்டுமல்ல மலையகத்துக்கு வெளியேயும் இலங்கையில் இத்தகைய பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது அந்தச் செய்தி.

மலையகத்தில், இப்போது நடந்திருப்பதுதான் முதலாவது சம்பவமும் அல்ல. இதற்கு முன்னர் நடந்தபோது ‘நீதி வேண்டும்’ கோஷங்கள் மலையகத்தில் எழும்பாமலும் இல்லை. இப்போது மலையகம் நிற்கும் புள்ளியும் அப்போது நின்ற புள்ளியும் ஒன்று தான். இது மலையகம் நிற்க வேண்டிய புள்ளியல்ல, அசைய வேண்டிய புள்ளி என்ற நிலையில் இருந்து விடயங்களை அலசி ஆராய வேண்டியது சமூகக் கடமையாகிறது.

இவ்வாறு சிறுவர்கள், பெண்கள் வீட்டு வேலைக்குச் செல்லும் நிலை ஏன் உருவாகிறது என்பதற்கு பொதுவானதும் உண்மையானதுமான ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அது வறுமை. மலையகப் பெருந்மோட்டப் பகுதிகளில் வறுமை நிலவுகிறது என்பதற்கான குறிகாட்டியாக சிறுமியின் மரணம் இருந்துவிட முடியாது. இலங்கைத் தொகை மதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம், மத்தியவங்கி அறிக்கைகள் தமது விபரப்பட்டியலை துறைசார்ந்து மூன்றாக வகுத்துக்கொண்டுள்ளன. அவை நகரம் (Urban), கிராமம் (Rural), தோட்டம் (Estate) என்பதாகும்.

இதில் பொருளாதார பிரதிகள் தோட்டத்துறையில் உயர்வான பதிவுகளைச் செய்ய சமூகக் குறிகாட்டிகள் மோசமான பிரதிகளைச் சுட்டிக்காட்டுவதனை அவதானித்தல் வேண்டும். நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் சுதந்திரத்துக்கு முன்பு இருந்த காலம் தொட்டே உயர்வான பதிவுகளைக் காட்டிவரும் தோட்டத்துறை தேயிலை ஏற்றுமதி இன்றுவரை கணிசமான பெறுமதியைக் கொண்டே காணப்படுகிறது. இலங்கைத் தேயிலை ஏற்றுமதி 2021 இல் 650 மில்லியன் அமெரிக்க டொலர் என பதிவாவதுடன், இலங்கையின் விவசாய ஏற்றுமதிப் பொருட்களில் 52வீதத்துக்கும் அதிகமாக தேயிலையே இடம்பெறுகிறது. இவை சிறுதோட்டம், பெருந்தோட்டம் இரண்டும் கலந்த ஏற்றுமதிப் பெறுமதிதான் என்றாலும் இலங்கையில் இன்று சிறுதோட்டங்களாக பகிரந்தளிக்கப்பட்டவையும் பெருந்தோட்டங்களாக இருந்தவையே. அதுவும் இந்த இருநூறு வருடகால வரலாற்றின் பகுதிதான்.

இலங்கைக்கு இலவசக்கல்வி, இலவச சுகாதாரம், ரயில்போக்குவரத்து, பாதை வலையமைப்பு, வங்கிக் காப்புறுதி துறை அபிவிருத்தி வலைபின்னல், உட்கட்டுமான அபிவிருத்தி என காலனித்துவ காலத்தில் இருந்தே அதற்கான அடிப்படையைக் கொடுத்தது பெருந்தோட்டத் துறையே என்பதனை யாராலும் மறுக்க முடியாது. விவசாயத்துறை தொழிற்படையில் 62.6 வீதம் தோட்டத்துறை உழைப்பாளர்களே உள்ளனர் என்றும் பதிவாகிறது.

இந்த தொழிற்படையின் இருநூறு வருடகால உழைப்புக்கு மாற்றீடாக பெருந்தோட்டத் துறை உழைப்பாளர் சமூகத்துக்கு இலங்கை வழங்கியுள்ள பரிசு வறுமையில் உயர் இடத்தில் இருக்கிறார்கள் என்பதே. தலைக்கான வறுமைச் சுட்டி எனும் தரவுகளில் நகரத்துறை 1.9 ஆகவும் கிராமத்தில் 4.3 ஆகவும் உள்ள தகவல்கள் தோட்டத்துறையில் 8.8 புள்ளியாக அமைந்து தோட்டத்துறையில் வறுமை உச்சம் என காட்டி நிற்கிறது. எனவே தோட்டத்துறை என்பதை பொருளாதார ‘செழுமையும்’ சமூக ‘வறுமையும்’ கொண்ட துறையாக பேணுவதில் இலங்கை அரசு இருநூறு வருட காலத்தில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.

இந்த பின்னணியில், சிறுமியின் மரணத்தில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக்கியபோது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக ஆஜரான பிரதி மன்றாடிகள் நாயகம் கூறியுள்ள விடயம் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. ‘பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வீட்டு வேலைக்கு சிறுவர்களைக் கொண்டுவருவது ஒரு ஆட்கடத்தல் வியாபாரம் போலவே நடைபெற்று வருகிறது’.

இந்தக் கூற்று யாரால் யாருக்குச் சொல்லப்பட்டது என்பது வரலாற்று முக்கித்துவத்துமிக்கது. இலங்கையின் சட்ட வழிகாட்டலுக்கு பொறுப்பான சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு மலையகச் சிறுவர்கள் ஆள்கடத்தல் முறையில் தலை நகருக்கு அழைத்து வருவது தெளிவாகத் தெரிந்தும் அதனைத் தடுப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்காமலேயே இருந்து வருகிறது என தெளிவான பொருள் கொள்ளலாம்.

இப்படி அரசின்பக்கம் கவனிப்பாரற்ற சமூகமாக மலையகத் தோட்ட சமூகம் காலங்காலமாக இருந்துவரும் நிலையில், இந்த மக்களுக்காக முன்வைக்கப்படும் அரசியல் நிலைப்பாடு தோட்டத் தொழிலாளர்களுக்கு வெளியே தனது கவனத்தை பெரிதாக திருப்பாத நிலையிலேயே இயங்கி வந்துள்ளது.

தொழிற்சங்க அங்கத்தவர்களின் பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அரசியலாகவே அந்தக் கட்டமைப்பு இயங்கி வந்த நிலையில் அந்தத் தொழிற்சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனையோடு அரசியல் கட்சியைக் கட்டமைப்பதில் தாமதித்தே வந்துள்ளது.

1992 ஆம் ஆண்டுக்குப்பின்னரான தோட்டத் தொழில் கட்டமைப்பு மாறி வந்துள்ள நிலையில் அப்போதிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆறு லட்சமாக இருந்து 2020 ஆம் ஆண்டு ஆகும் போது ஒரு லட்சம் எனும் அளவுக்கு குறைந்துள்ளது. ஆனாலும் பெருந்தோட்ட நிறுவனங்களும் கட்டமைப்பும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றன. அப்படியாயின் அந்த தொழிற்படையில் சேரந்திருக்க வேண்டிய தோட்ட சமூகப்பிரிவினர் ஆண்டுக்கு சராசரியாக 15,000 வீதம் வேறு துறைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அடுத்த தலைமுறையினர் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை என வாதிட்டாலும் அந்த வாதம் சரி என்றாலும் கூட அவ்வாறு தோட்டத் தொழிலில் இணையாத அல்லது இணைய வாய்ப்பு வழங்கப்படாத எல்லோரும் கல்வித்துறையில் சாதித்தவர்களாக உயர் தொழிலுக்கு சென்றவர்கள் இல்லை. அதன் வீதாசாரம் குறைவானது. அவர்களில் முறைசாராத தொழில்களுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையே அதிகம். இந்த காலப்பகுதியில்தான் வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைப் பணிகளுக்கும், தலைநகர் கொழும்பில் வீட்டு வேலைப் பணிகளுக்கும் என பெண்கள் படை எடுக்கலாயினர். அதேபோல கடைச்சிப்பந்திகளாகவும் (இந்தத் துறையில் ஏற்கனவே ஒரு நாட்டம் மலையக இளைஞர்களிடையே இருந்துவந்தது) இன்னோரன்ன உடல் உழைப்பாளர்களாகவும் மலையக இளைஞர்கள் வெளியேறத் தொடங்கினர்.

இவர்கள் தமது பெற்றோருடன் தொடர்ந்தும் வாழ வகையற்றவர்களாக வீடுகளில் இருந்து வெளியேற நேர்ந்தது. சிறுக சிறுக ஆரம்பித்த இந்த முறைசாரா துறையில் ( informal sector) தொழில் செய்வோர் முறைசார் தோட்டத்துறையில் (formal Estate sector) தொழில் செய்வோர் எண்ணிக்கையை விட அதிகமாகும். அந்த அதிமான தொகையை ஒரு மதிப்பீட்டின் மூலம் ஊகிக்கலாமே தவிர அதன் சரியான தரவுகளைப் பெற்றுக்கொள்ள எந்த ஒரு பொறிமுறையும் இல்லை.

அதனால்தான் கொரொனா பரவல் தொடங்கியதும் 7000 பேர் லொறிகளில் ஏறி மலையகத்துக்கு வந்துவிட்டனர் என அரசியல் பிரதிநிதிகளால் கற்பனை கணக்கு காட்ட முடிந்தது அல்லது ஒட்டுமொத்த மலையக சனத்தொகையில் ஒரு லட்சமே தொழிலாளர்கள் ஏனையோர் தொழிலாளர்கள் இல்லை என வாய்ச்சவடால் விட முடிந்தது.

அந்த மிச்சம் பேர் என்ன செய்கின்றனர் என அறிய முடியாத கட்சிக் கட்டமைப்பைக் கொண்ட தலைவர்களால் அந்த வகுதியில் ஒருவராக இவ்வாறு அவலமாக இறந்துபோன சிறுமிகளுக்காக நியாயமான விசாரணையைக் கோர முடியுமே தவிர நல்வாழ்வுக்கான திட்டங்களைத் தீட்ட முடியாது. தரகர்களை கண்டால் தாக்கச் சொல்ல முடியுமே தவிர, அதனால் வரக்கூடிய விளைவுகளை உணரமுடியாது.

தரகர்கள் உருவாகாமல் இருக்க வழி சொல்லவும் தெரியாது. வீதியில் இறங்கிப் போராடுவதற்கு மக்களே தலைவர்களுக்கு வழிகாட்டுகின்றனர் என்பதனை நன்கு அவதானித்தால் புரியும். மாறாக மக்களுக்கு வழிகாட்டும் தலைமைக்காக மலையகத் தமிழ் மக்கள் காத்திருக்கும் நிலையே உள்ளது. மலையகத்துக்கு வெளியே வந்த ‘நீதி வேண்டும்’ கோஷங்கள் எல்லாமே மலையக சமூகம் மீதான அக்கறையில் வந்ததில்லை என்ற கசப்பான உண்மையை உணர்ந்தவர்களாக மலையகத்துக்கு வெளியேயான நேச சக்திகளை சரியாக அடையாளம் காணுதலும் அத்தகைய தலைமையின் தகைமைகளில் ஒன்றாயிருத்தல் வேண்டும்.

இந்த நிலையிலேயே இறந்துபோன சிறுமிக்காக ‘நீதி வேண்டும்’ கோஷம் எழுப்பும் மலையகத்தின் இளைய தலைமுறையினர் ‘சமூக நீதிக்கான கோரிக்கையாக’ அதனை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை இலக்கு வைத்து செயற்படுபவர்களாக மாற வேண்டிய காலம் எழுந்துள்ளது.

சிறுமியின் அவல மரணத்துக்கு வறுமைதான் காரணமெனில் அந்த வறுமையை சரியாக அடையாளம் கண்டு அதற்கு தீர்வு தேடும் அரசியல் தலைமைத்துவத்தின் அவசியம் குறித்து சிந்தித்தல் வேண்டும். மலையகத்தில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமை எல்லையைக் கடந்தும் தோட்ட எல்லையைக் கடந்தும் வெளியேறிவிட்டனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் லட்சம் அளவினைக் கொண்டது. மலையகத் தோட்டப் பகுதியில் வாழ்வோர் எண்ணிக்கை 9 இலட்சம் அளவாக உள்ளது.

அவர்களுள் வறுமையின் எல்லையைக் கடந்து வெளியேறுவோர் 10 சதவீதமாகவும் வறுமைக்கு மத்தியிலும் போராடி முன்நகர்வோர் 30 சதவீமாகவும் வறுமை நிலையில் சமாளித்து வாழ்க்கை நடாத்துவோர் 40 சதவீதமாகவும் உள்ளநிலையில் வறுமையில் இருந்து மீளமுடியாத நிலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டோர் வீதம் 10 சதவீதம் மாத்திரமே (இது ஒரு தோட்டப்பிரிவு மட்டத்தில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு பொதுவாக பொருந்திவரக்கூடிய முடிவும் கூட).

ஆனால், இந்த பத்து சதவீத பகுதியையே ஒட்டமொத்த மலையகத் தோட்டத் துறைச் சமூகமாக சித்திரிக்கப்படுகிறது. இந்த பத்து சதவீத்தில் இருந்தே சிறுவர் தொழிலாளர்களும், முதியோர் தொழிலாளர்களும், என இக்கட்டான தொழில்களுக்குச் செல்லத் தள்ளப்படுகின்றனர்.

அவர்களை அடையாளம் காணவும் உதவிகள் செய்யவும் ஒரு பொறிமுறை தேவை அவ்வளவுதான். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இன்றைய ‘நீதி வேண்டும்’ கோஷம் ஒரே ஒரு சிறுமிக்காக எழுந்ததாக இருந்துவிடக் கூடாது. இதுபோன்ற இன்னுமொரு சிறுமிக்கு நேர்ந்துவிடாத ‘சமூக நீதிக்கான’ அரசியல் களம் குறித்த சிந்தனையும் செயற்பாடுகளுமே மலையகத்தின் அடுத்த கட்ட அரசியலாதல் வேண்டும். அதனை முன்னெடுக்கும் பாரிய பொறுப்பினை மலையக இளையத் தலைமுறையினர் தமது தலையில் சுமக்கத் தயாராதல் வேண்டும்.