இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகிய இருவரும், இன்று தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் மனித உரிமையை நிலைநாட்டும் நீதிபதிகளாகவும் உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் என்ன என்பதைப் பொலிஸாருக்கு அறிவுறுத்தும் நீதிபதிகளாகவும் புகழ் பெற்று, உயர்ந்து நிற்கிறார்கள்.
மனித உரிமை ஆர்வலர்கள் பாராட்டும் நீதிபதிகளான இவர்கள், இந்த வழக்கில் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள், நீதி தேடிப் போராடிய மக்களுக்குப் பெரிய ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. பொது அமைதி மீண்டும் தென் மாவட்டங்களில் மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டத்திலும் வழமைக்குத் திரும்பியிருக்கிறது.
“ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணங்களில், கொலை வழக்காகப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருக்கிறது என்பது, பின்வரும் நடவடிக்கைகள் மூலம் உணர்ந்தகொள்ள முடியும்.
பொலிஸ் நிலையத்துக்கு விசாரிக்கப் போன நீதிபதியைப் பணி செய்ய விடாமல் தடுத்த அதிகாரிகளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக வைக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை, பொலிஸ் அதிகாரிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, வருவாய் துறையின் கட்டுப்பாட்டின் கொண்டு வரப்பட்டது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை மாற்றி, அது காலதாமதம் ஆகும் என்றும், உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணையை, ஒரு நிமிடம் கூடத் தாமதம் ஆகாமல் எடுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
பொலிஸ் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டமை குறித்துச் சாட்சி சொன்ன, அந்த நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரேவதியுடன், உயர்நீதிமன்ற நீதிபதிகளே நேரடியாக அலை பேசியில் தொடர்புகொண்டு, பாதுகாப்பு, லீவு, சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது.
மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் எல்லாமே, மனித உரிமையை நிலைநாட்டுவதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் போட்ட உத்தரவுகள். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற பொலிஸ் நிலைய மரணம், நீதிமன்றக் காவல் மரணம் போன்றவற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு முன்னுதாரணமாக, இந்த உத்தரவுகள் அமைந்துவிட்டன.
இனியொரு முறை, இப்படியொரு தாக்குதல் சம்பவமோ, மரணமோ பொலிஸ் நிலையத்தில் நடக்கக் கூடாது என்பது இந்த உத்தரவுகளில் மேலோங்கியுள்ளது. அந்த வகையில், சட்டத்தின் ஆட்சியை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
அதே சமயத்தில், பொலிஸ் நிலைய நிர்வாகக் கட்டுப்பாட்டை பொலிஸ் துறையிடமிருந்து வருவாய்த்துறைக்கு மாற்றியமையானது, வரலாறு காணாத உத்தரவு. இந்திய வரலாற்றில், இது முதல் உத்தரவாகவே போலிஸ் அதிகாரிகளால் பேசப்படுகிறது.
குறிப்பாக, பொலிஸ் துறை, முதலமைச்சரின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. பொலிஸ் நிலைய நிர்வாகத்தை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்தே, வேறு ஒரு துறைக்கு மாற்றியமை, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில், எப்போதுமே முன்னணிக் கள வீரர்களாக நிற்போம் என்பதை வெளிக்காட்டும் விதத்தில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் செயற்பட்டுள்ளார்கள். இந்த உத்தரவு, இந்திய மக்கள் அனைவராலும் வரவேற்கப்படுகிறது; வாழ்த்தப்படுகிறது.
இந்த இரு மரணங்களும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதற்கு, அவர்கள் அளித்துள்ள உத்தரவில் உள்ள வாசகங்களே போதுமான ஆதாரங்களாக இருக்கின்றன. இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமாரை நியமித்த உத்தரவில், “இறந்த இருவரின் குடும்பத்தினரின் கண்களில் ஆறாக ஓடும் கண்ணீரைத் தன் முன் நிறுத்தி,- பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கண்ணீரைத் துடைக்கும் விதத்தில், புலனாய்வு செய்வார் என்று நம்புகிறோம்” என்று உருக்கமாகத் தெரிவித்த குறிப்பிட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு விசாரணையை, உயர்நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கிறது என்பதை, புலனாய்வு அதிகாரி மனதில் கொள்ள வேண்டும்” என்றும், எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள்.
பொலிஸ் நிலையங்களில் இது போன்று சித்திரவதைகள், மனித நேயமற்ற விசாரணை முறைகள் (Third Degree Methods) இருக்கக் கூடாது என்று, பலமுறை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் எச்சரித்து வந்துள்ளன. இதன் உச்சக்கட்டமாக, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களே இதைத் தடுக்கும் வகையில், சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று, குரல் எழுப்பி வந்துள்ளனர்.
அதன் விளைவாக, 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இருந்த போது, 1975இல் ஐ.நா சபை கொண்டு வந்த, ‘சித்திரவதைக்கு எதிரான பிரகடனம்’ அதிகமாகப் பேசப்பட்டது. இந்தப் பிரகடனத்தில் 1997இல் இந்தியா கையெழுத்திட்டாலும், அதை ஏற்று உள்ளூர் சட்டங்களில் சித்திரவதைக்கு எதிரான, சட்டத் திருத்தங்கள் கொண்டு வரவில்லை என்ற குரல் எழும்பியது.
உச்சநீதிமன்றமே சில வழக்குகளில், “ஏன் ஐ.நா பிரகடனத்தில் கையெழுத்திட்டும் இதுவரை சித்திரவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரவில்லை” என்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே, இதைச் சமாளிக்க, சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலம் -2010 இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில், ஒன்றான மக்களவையில் 2010 ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டு, மே மாதம் நிறைவேற்றப்பட்டது.
அது, இன்னோர் அவையான மாநிலங்களவையில் நிறைவேறி இருக்க வேண்டிய நேரத்தில், அந்தச் சட்டமூலத்தில் சித்திரவதைகளைத் தடுக்கும் வலுவான பிரிவுகள் இல்லை என்று கூறி, அன்றைய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் தலைமையிலான 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக்குழுவுக்கு ஓகஸ்ட் 2010 இல் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்தக் குழு, இந்தச் சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலத்தை ஆய்வு செய்வதற்காக, ஒன்பது கூட்டங்கள் நடத்தியது. கைதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி, இறுதியில் ஒரு சட்டமூலத்தை 2010 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தயாரித்தது.
அந்தச் சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலத்தில், பொலிஸ் காவலில் சட்டவிரோதமாகச் சித்திரவதை செய்தால், மூன்று வருட சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடும் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து, பாதிக்கப்பட்டவர் இரண்டு வருடங்களுக்குள் புகார் அளித்திருக்க வேண்டும் எனவும் இது போன்ற சித்திரவதை வழக்கில், ஒரு வருடத்துக்குள் விசாரித்துத் தீர்ப்பளித்து விட வேண்டும் என்பன போன்ற முக்கிய பிரிவுகள், சேர்க்கப்பட்டு இருந்தன. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சி இழந்ததால், அந்தச் சட்டமூலம் அப்படியே காலாவதியானது.
பின்னர், 2014இல் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்துக்கும் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அஸ்வணி குமார், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இந்திய சட்ட ஆணைக்குழுவுக்கு இந்த விடயம் அனுப்பப்பட்டு, ஐ.நா பிரகடனத்தை ஏற்று, உள்ளூர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆராயுமாறு பணிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், 273ஆவது சட்ட அறிக்கை அளிக்கப்பட்டு, அதில் புதிதாக ‘சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலம் 2017’ தயார் செய்யப்பட்டது. இந்தப் புதிய அறிக்கையில், 2010 சட்டமூலத்தில் இருந்த மூன்றாண்டு சிறைத்தண்டனை, ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டமை மிக முக்கியமான பரிந்துரையாகும்.
அதேபோல், ஒருவரைச் சித்திரவதை செய்யவில்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு, பொலிஸ் நிலைய அதிகாரியின் மீது சுமத்தப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் சமூக, பொருளாதார இழப்புகளை அடிப்படையாக வைத்து, நீதிமன்றமே நட்ட ஈட்டை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்தச் சித்திரவதைச் சட்டம் 2017இல் நடைமுறைக்கு வந்திருந்தால், பொலிஸ் நிலைய மரணங்கள் நிகழ்ந்திருக்காது.
1975இல் வெளிவந்த ஐ.நா பிரகடனத்துக்கு, 22 வருடங்களுக்குப் பிறகு கையெழுத்திட்டும் இன்றுவரை, சித்திரவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, உள்ளூர் குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 1973, இந்திய தண்டனைச் சட்டம் 1872 ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் கொண்டு வரவில்லை என்ற கோரிக்கை அலை நாடு முழுவதும் பரவியிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷாவே, “சட்ட விரோத சித்திரவதைகளுக்கு முடிவுரை எழுதும் காலம் வந்து விட்டது” என்று தன் ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகவே, சித்திரவதைத் தடுப்புச் சட்டம் விரைவில் வருவதற்கு, சாத்தான்குளம் பொலிஸ் நிலைய மரணங்கள் முன்னுரை எழுத வேண்டும் என்பது, சட்டத்தின் ஆட்சியை விரும்பும் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.