சிறப்புரிமைக்குள் மறைந்து சீருயர் சபையில் கீழ்த்தரமாக நடத்தல்

ஒரு காலத்தில் புத்தகங்கள், நாற்காலிகள் மற்றும் மிளகாய்ப் பொடியால் தாக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன. அப்போதெல்லாம், அரசியல்வாதிகள் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்கிறார்கள். அத்தகைய அரசியல்வாதிகள் நாட்டிற்குத் தேவையில்லை என்று பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். 

அதேபோலவே, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவ்வாறான உறுப்பினர்களை மக்கள் நிராகரித்து இருந்தனர். உயரிய சபைக்குள், பொலிஸாரை வரவழைப்பதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு, அன்றைய சபாநாயகர் கடுமையான தண்டனையை, நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொடுத்திருந்தால் ஒரு பாடமாக அமைந்திருக்கும். எனினும், அவர் தவறிவிட்டார்.

இந்நிலையில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சபைக்கு உள்ளேயும், வெளியேயும், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, பல்வேறு சர்ச்சைக்குரிய மற்றும் இழிவான அறிக்கைகளை வெளியிட்டமையால், 2025 மார்ச் 20ஆம் திகதி முதல், ஏப்ரல் 08ஆம் திகதி வரை எட்டு நாட்களுக்கு ஊடகத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் அவர், நடந்துகொள்ளும் விதத்தை அவதானித்தே, இந்த தடை நீக்கப்படும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன, புதன்கிழமை(19) கட்டளையிட்டுள்ளார். 

தற்போதைய சட்ட சூழ்நிலையின்படி, கடுமையான ஒழுக்க மீறல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட எம்.பிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வாய்ப்பு இருக்கிறது. ஒழுக்க மீறல் ஏற்பட்டால், பிரதிநிதிகள் சபையில் இந்த விவகாரம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவிற்கு ஆய்வுக்கு அனுப்பப்படும்.சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சம்பந்தப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல சட்டப்பூர்வ அனுமதி இருக்கின்றது. 

சீருயர் சபைக்குத் தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பது அவர்களின் பொறுப்பு. மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க, பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். எனினும், மக்களுக்குப் பொறுப்புக்கூறாத பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் என்பதே மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாகும்.

கடந்த பாராளுமன்றங்களில், தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர், அந்தந்த பிரதேசங்களில் கசிப்பு விற்றவர்கள், மோசடியான செயல்களில் ஈடுபட்டவர்கள், பாலியல் வன்புணர்வு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றெல்லாம், சபைக்குள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமையை கேள்விப்பட்டிருக்கின்றோம். எனினும், இந்த பாராளுமன்றத்தில் பெரும்பாலானவர்கள், தங்களுடைய பெயர்களுக்கு முன்பாக பட்டங்களை வைத்திருக்கின்றனர். ஆகையால், சீருயர் சபையில் கண்ணியமாக நடத்தல் அவசியம்; அப்படி நடக்காதவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும். 

(Tamil Mirror)

Leave a Reply