ஆரம்பத்தில் தற்கொலை முயற்சி என்று கூறப்பட்டாலும், முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் பணிபுரியும் சிறுமியின் கைக்கு, மண்ணெண்ணெயோ அல்லது ஏதோவோர் எரிபொருளோ எப்படிக் கிடைத்தது என்று ஆரம்பித்து, பல சந்தேகங்கள் தொடர்ச்சியாக எழுந்தன. அந்தச் சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, மரண விசாரணை அறிக்கையும் வெளியாகி இருக்கின்றது. சிறுமி, பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொண்டிருந்தமை, அதில் வெளிப்பட்டிருக்கின்றது.
இலங்கையில், 16 வயது வரையில் அனைவரும் கட்டாயக் கல்வியைப் பெற வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், 14 வயது நிரம்பியவர்கள் வேலைக்குச் செல்லலாம் அல்லது அமர்த்தப்படலாம் என்றும் இன்னொரு முரணான விடயத்தை, சட்டம் தன்னுள்ளே வைத்திருக்கின்றது.
இந்த முரணைச் சரிசெய்யும் நோக்கில், வேலைக்கு செல்லும் வயதை, 16ஆக அதிகரிக்கும் சட்டமூலத்துக்கான அமைச்சரவைப் பத்திரத்தை, 2020ஆம் ஆண்டு அரசாங்கம் ஏற்றிருந்தது. ஆனால், அந்தச் சட்டமூலம் கொவிட்-19 பெருந்தோற்றுக் காலத்தில் நிறைவேற்றப்படாமல் காணாமற்போனது.
பாராளுமன்றத்தில் தங்களுக்குத் தேவையான அனைத்துச் சட்டத்திருத்தங்களையும் நிறைவேற்றிய அரசாங்கம், இந்தவிடயத்தில் தவறியது. அதுதான், 15 வயது நிரம்பிய ஹிஸாலினியை வீட்டுப் பணிப்பெண்ணாகச் சேர்த்துக் கொள்வதற்கான சட்டத் தடையை இல்லாமல் செய்திருக்கின்றது.
இவ்வாறான கவனயீனங்களும், பொறுப்பற்ற தனங்களாலும் கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கான சிறுமிகள் பணிப்பெண்களாக அனுப்பப்படுகிறார்கள். அங்கு அவர்கள் தங்களுடைய வயதுக்கு மீறிய பணிச்சுமையையும் உடல் ரீதியான வன்முறைகளையும் எதிர்கொள்கிறார்கள்.
சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்று, அங்கு கொடூரமாக மரண தண்டனையை எதிர்கொண்ட ரிஷானா நபீக்குக்கு அப்போது 17 வயது. ஆனால், உள்நாட்டிலேயே, அதுவும் மக்கள் பிரதிநிதி ஒருவர் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து மரணித்திருக்கின்ற ஹிஸாலினியின் வயது 16. இங்கு இருவரும் சிறுமிகளே. வயதுக்குப் பொருந்தாக சூழலில் பணிக்கு அமர்த்தப்பட்டு பலிவாங்கப்பட்டு இருக்கின்றார்கள்.
ரிஷானா நபீக் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதுவேகூட மனித உரிமைகளின் தடத்தில் அணுகப்படாத நிகழ்வு. கிட்டத்தட்ட அதுவும் ஒரு படுகொலையே. ஆனால், ஹிஸாலினியின் மரணத்தில் அயோக்கியத்தனமான கரங்கள் நீண்டிருப்பதற்கான காட்சிகள் வெளிப்படுகின்றன.
“…எனது மகள் நெருப்புக்கு பயப்பிடுபவர். அவர் தீமூட்டிக் கொள்ளவில்லை; தீமூட்டியுள்ளனர். ‘இங்கு வேலை செய்ய முடியாது அழைத்துச் செல்லுங்கள்; இங்கு வேலை செய்பவர் என்னைத் தும்புத்தடியால் தாக்குகிறார்’ என மகள் இறுதியாகக் கூறினார். அவர் சிறிய பிள்ளை; தாக்க வேண்டாமெனக் கூறுங்கள் என்று மெடத்திடம் (ரிஷாட்டின் மனைவியிடம்) கூறினேன். மகளே ஏதேனும் செய்திருப்பார் எனக் கூறுவதாக இருந்தால், அந்தவீட்டில் ஏதோ நடந்துள்ளது…” என்று ஹிஸாலினியின் பெற்றோர் கூறியிருக்கின்றனர்.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில், சிறுமி ஹிஸாலினி தாக்கப்பட்டமை தொடர்பில், ரிஷாட்டின் மனைவியிடம் முறையிட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் கூறுகின்றனர். அப்படியானால், சிறுமி மீதான வன்முறை தொடர்பில், ஏற்கெனவே அறிந்திருந்த ரிஷாட்டின் மனைவி, அது குறித்து எந்த நடவடிக்கையையாவது எடுத்தாரா? எடுத்திருந்தால், அந்தச் சிறுமியின் மரணம் நிகழாமல் தடுக்கப்பட்டிருக்கும் இல்லையா? என்ற கேள்விகள் நிராகரிக்க முடியாதவை.
அரசியல் ரீதியான நெருக்கடிகளை, ரிஷாட் பதியுதீன் தற்போது எதிர்கொண்டிருக்கின்றார். சிறுபான்மை இனமொன்றின் தலைவராக அவர் மீதான ஜனநாயக மீறல்களை, சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்ப்பதும், போராடுவதும் அனைவரதும் கடமை.
அதேபோல, அவரது வீட்டுக்குள் சிறுமி ஒருவருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் தொடர்பிலும், மரணத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிவதும் அவசியமானது. அதனை, எந்தக் காரணம் கொண்டும் தவிர்த்துவிட முடியாது. அப்படியான நிகழ்வுகளுக்கு அல்லது பொய் பித்தலாட்டங்களுக்கு யாராவது துணை போகிறார்கள் என்றால், அவர்கள் சிறுமியின் மரணத்தின் பங்காளிகளாவார்கள்.
இன்றைக்கு நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியோ, அதன் பங்காளிகளோ சிறுமி ஹிஸாலினியின் மரணம் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான முஜிபூர் ரஹ்மான், சிறுமியின் மரணத்தை ரிஷாட்டுக்கு எதிரான சதி வலை எனும் நோக்கில் பேசுகிறார்.
இந்த மரணத்தை வைத்து, அரசாங்கமோ, வேறு எந்தத் தரப்போ தனிப்பட்ட நலன்களை அடைய முயற்சிக்கலாம். அதை நிராகரிக்க முடியாது. ஆனால், அதற்காக சிறுமியின் மரணத்தை அப்படியே விட்டுவிட்டு நகர முடியாது. அது, தொடர்ச்சியாக இவ்வாறான மரணங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகும்.
பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான வீட்டு வன்முறையை, வாழ்வின் ஓர் அம்சமாகவே இலங்கை போன்ற நாடுகள் கொண்டு சுமக்கின்றன. எவ்வளவு சட்டங்களை இயற்றினாலும், வீட்டு வன்முறைகளை, பாரம்பரிய நெறியாகக் கருதி முன்னெடுக்கின்றவர்கள் இன்னமும் ஏராளம் பேர் உண்டு. தன்னுடைய மனைவி, பிள்ளைகள் மீதே இவ்வாறான வன்முறைகளைப் புரிபவர்களை தண்டிக்காத சமூக மனநிலை, வீட்டுப் பணிப்பெண்கள் மீதான வன்முறைகளை எவ்வாறு கண்டுகொள்ளும் என்பது மேலான கேள்வியாகும்?
பெரிய வசதி வாய்ப்புகளுக்காக வீட்டுப் பணிப்பெண்களாக யாரும் செல்வதில்லை. வறுமையும் பசி நெருக்கடியும் இவ்வாறான பணிகளை நோக்கி, பெண்களைத் தள்ளுகின்றன.
வேலைக்குச் செல்லும் இடங்களில் ஒழுங்கான தங்குமிடம், உணவு, ஊதியம் இன்றி, சமயலறை, குளியலறை ஓரங்களில் படுத்துறங்கி உழைக்கும் ஆயிரக்கணக்கான சிறுமிகளும் பெண்களும், ஹிஸாலினி எதிர்கொண்டது மாதிரியான வன்முறைகளை நாளாந்தம் எதிர்கொள்கிறார்கள்.
இலங்கையில் வீட்டுப் பணிப்பெண்களின் மரணங்கள் அடிக்கடி பதிவாகின்றன. மாடியில் இருந்து குதித்து இறந்தவர்களாக, திருட்டை மறைப்பதற்காக தற்கொலை செய்தவர்களாக என்று அந்த உயிரிழப்புகள் சட்டத்தின் முன்னால் கட்டப்பட்டு அல்லது, பெரும் பணத்தின் முன்னால் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுமிருக்கின்றன.
சிறுமி ஹிஸாலினியின் மரணத்தையும் அவ்வாறான ஒழுங்கொன்றின் ஊடாகக் கடந்துவிட முடியும் என்று ரிஷாட் பதியுதீனின் தரப்பினர் நினைக்கலாம். அவ்வாறான முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டுகின்றார்.
அதனாலேயே, சிறுமியின் மரணத்தை விசாரிக்கும் பொலிஸ் அதிகாரியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழுப்பியிருக்கின்றார்.
அதிக தருணங்களில் வலியவர்களின் நீதி, அதிகாரத்தாலும் பணத்தாலும் வரையறுக்கப்படுகின்றன. அது, எளியோரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
இன்றைக்கு, சிறுமி ஹிஸாலினியின் மரணத்தை முறையாக விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதைத் தடுக்க முயற்சிக்கும் அனைத்துத் தரப்பினரும் வலியோருக்கான ஏவல் அடிமைகளே ஆவார்.