சிவானந்தா தேசிய பாடசாலைப் போராட்டங்கள்: கற்றுத்தரும் அரசியல் பாடம்

பாடசாலை ஆரம்பித்து 2 வாரங்களேயான நிலையில் மட்டக்களப்பில் ஆரம்பித்த ஓர் ஆர்ப்பாட்டம் கல்வி அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள், மட்டக்களப்பு வரவேண்டிய நிலையை ஏற்படுத்தியது. இதனை வெறுமனே சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாதுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரை இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த 06ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதன் போது குறித்த ஆசிரியர் மீது 41 குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவித்திருந்தனர். அவ்வாறானால் அந்த ஆசிரியருக்கு இவ்வளவு குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்படும் வரை என்ன நடந்தது என்ற கேள்வி இந்த இடத்தில் தோன்றுகிறது.

அது அவ்வாறிருக்க, அந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களையோ ஆசிரியர்களையோ பாடசாலையின் உள்ளே நுழைய விடாது தடுக்கப்பட்டது. அவ்வேளையில் ஆசிரியை ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அந்தத் தாக்குதலையடுத்து அன்றைய தினம் பிற்பகலில் ஆசிரியர்களுடைய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

அத்துடன் பிரச்சினை முடிந்தது என்று இருக்க முடியாதபடி பாடசாலைக்குள் மாணவர்களை நுழையவிடாது, ஆசிரியை மீது தாக்குதல் நடத்தியவர்கள் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் 10ஆம் திகதி பிற்பகலில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பில் மாத்திரமல்ல உலகளவிலேயே சிவானந்தா தேசிய பாடசாலை குறித்து சிறந்ததொரு நற்பெயரும் நன்மதிப்பும் உள்ளது. இந்த நிலையில் ஒரு ஆசிரியரை இடமாற்றக் கோரி பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தினை நடத்தும் அளவுக்கு என்ன பிரச்சினை இருந்தது என்று இந்த இடத்தில்தான் ஆராய வேண்டியிருக்கிறது.

குறிப்பிட்ட ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவும், ஆசிரியர்கள் சார்ந்த பிரச்சினைகளில் முகம் கொடுப்பவராகவும் இருப்பதனால் இவர் ஒரு வேண்டாத நபராகவே நிர்வாக நிலைகளில் இருந்து வருகிறார். இது ஒரு பிரச்சினை.

அந்தப் பிரச்சினையை பெரிதாக்கி இது தூபமமிடப்பட்டிருக்கலாம் என்றே சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன. இருந்தாலும், ஓர் ஆசிரியரை இடமாற்றுவதாக இருந்தால் அதற்கான நடைமுறைகள், ஒழுங்குகள் காணப்படுகின்றன. அவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றாது ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளுமளவிற்கு பாரதூரமான பிரச்சினைகள் நடைபெற்றிருக்கவில்லை என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களது நலன் சார்ந்த பிரச்சினைகளையே உருவாக்கியிருக்கின்றன. சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தின் போது ஆசிரியர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன் அவமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஆசரியர்கள், பாடசாலையின் அபிவிருத்திக்குழுவின் செயலாளர் தனது தனிப்பட்ட நலனுக்காக ஒரு சிலரை இணைத்துக்கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

தனிப்பட்ட நலன்களுக்காக பாடசாலையினை குழப்புதல், கல்விசார் ஆளணியினரின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவித்தல், அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவை சட்டரீதியாகத் தவறானதாகும்.
ஆசிரியர்கள் என்பவர்கள் அழுத்தங்களோ நெருக்கடிகளே இன்றி பணியாற்ற வேண்டியவர்கள். அவர்களை நெருக்கடிகளுக்குள் தள்ளி எதிர்கால சந்ததியினரான மாணவ சமூகத்தினை வீணடிக்க முடியாது.
இந்த நிலையில், மாணவர்களின் கல்வியைப் பாதிப்புக்குள்ளாக்கும் செயற்பாடுகளை பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், கல்வி நிர்வாகத் தரப்பினர், அரசியல் சார்புடையவர்கள் மேற்கொள்வதானது பொருத்தமாக இருக்காது என்பதே கல்வித்துறை சார்ந்தவர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆனால், ஆசிரியர் சமூகத்தை அரசியல் அதிகாரம் கொண்டு அடக்க முனைவதான போக்கு காணப்படுவதானது நல்லதொரு சமிக்ஞையல்ல என்றே சொல்லாம். குறிப்பாக, ஒரு சிலருடைய கட்சி அரசியல் பின்புலங்கள் முழுக் கல்விச் சமூகத்தையும் பாதிக்கின்ற நிலைமையை உருவாக்கிவிடும்.

அந்த வகையில்தான் ஆசிரியர்களின் நேற்றைய போராட்டமானது, ஆசிரியர்களை அதிகார அரசியலைக்கொண்டு அடக்க முற்படுவது தடுக்கப்பட வேண்டும். சிவானந்தா தேசியப்பாடசாலை ஆசிரியை தாக்கப்பட்டமைக்கு சுதந்திர விசாரணை, சட்ட நடவடிக்கை கோரி நடத்தப்பட்டுள்ளது. இவை நிறைவேற்றப்படுமா என்பது பொறுத்திருக்க வேண்டியவையே.

எந்தவொரு பிரச்சினையையும் சுமுகமாக பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். இருந்தாலும் அதற்காக முயல்வதற்கு யாரும் தயாராவதில்லை. ஒரு சிறிய பிரச்சினையை ஊதித் தூண்டி பெரிதாக்கிக்கொண்டே அப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாத நிலையினை ஏற்படுத்திவிடுவதே பலருடைய வழக்கமாகும். இலங்கையிலுள்ள இனப்பிரச்சினையும் அவ்வாறான அணுகுமுறையினால் தொடர்வதாகும் என்பது நல்லதோர் உதாரணமாகும்.

ஒரு பிரச்சினையை முடிவுக்குவர முடியாததாக மாற்றி இழுத்தடிப்பது அரசியலும் அதிகாரமுமாக இருந்து விடுகிறது. சில வழிநடத்தல்களின் அறிவு, அனுபவங்களும் இதில் தவறாக தாக்கம் செலுத்துகின்றன என்றும் சொல்லலாம். இது வீணடிப்புகளையே ஏற்படுத்துகின்றன.

சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான சட்ட அடிப்படைகள், இலங்கையின் அரசியலமைப்பும், நடைமுறைகள் எனப் பல இருந்தாலும் அவற்றினைக் கடைப்பிடிப்பதற்கு பலர் விரும்பாமைக்கு தவறுகளும், தவறான சிந்தனைகளுமே காரணமாகும்.

கல்விச் சமூகம் என்பது எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியதாகும். மாணவர்களுக்கு பெற்றோர்கள் முன்மாதிரியானவர்களாக இருப்பது முக்கியமாகும். மட்டக்களப்பு சிவானந்தா தேசியப்பாடசாலையின் ஆசிரியருடைய இடமாற்றம் குறித்து உருவான ஆர்ப்பாட்டம் சிறியதாக இருந்து தேசியளவான பிரச்சினையாக மாற்றம் பெற்றதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒரு சிலருடைய காழ்ப்புணர்ச்சிகளும் தனிப்பட்ட சில எண்ணப்பாடுகளுமே இதற்குக் காரணம் என வெளிப்படையாகத் தெரிகிறது.

இவ்வாறானவர்கள் தங்களுடைய விமர்சிப்புகளையும் வீண் வாதங்களையும், பிடிவாதங்களையும் களைந்து இப்பாடசாலை மாணவர்களினது எதிர்காலத்தில் மாத்திரமல்ல மாவட்டத்தின், மாகாணத்தின் மாணவ சமூகத்தினதும் எதிர்காலம் குறித்து கரிசனை கொள்ள வேண்டும். இன்றைய காலத்தில் கற்பிக்கப்படுவதும், அனுபவிக்கப்பண்ணப்படுவதும் எதிர்கால சந்ததிக்குக் கடத்தப்படுவதாக அமைந்து விடக்கூடாது. என்னிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக நான் சமூகத்திற்குப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதானது எதிர்காலத்தினைப் பாதித்துவிடக்கூடாது.

இவ்விடயமானது ஒரு முன்மாதிரியான செயற்பாடாக இனிவரும் காலங்களில் பார்க்கப்படக்கூடாது என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். நடைபெற்ற சம்பவங்கள் மறக்கப்படுபவையாக இருப்பது சிறப்பே. ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தினை எவ்வாறு உருவாக்குவது என்பதுதான் இந்த இடத்தில் நெருடல்.

பெற்றோர் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பவர்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொள்வது சரியானதே. ஆனால் வீதிக்கு இறங்குவதும், ஆசிரியர்களது உரிமைகளை மதிக்காது நடந்து கொள்வதும், ஏனைய மாணவர்களது கல்விக்கும் உரிமைக்கும் பாதிப்பினை ஏற்படுத்துவதும் பொருத்தமல்ல. இந்த நியாயத்தின்படி சிந்திக்கும் போது பல உண்மைகள் புலப்படும்.

யாரும் யாரையும் தூண்டிவிட முடியும் என்றால் அதனை எல்லோரும் நிகழ்த்திவிட முடியும். சற்றே நிதானமாக சிந்தித்துச் செயற்படும் சந்தர்ப்பத்தில் அது நல்ல முடிவையே தரும் என்பதற்கு சிவானந்தா தேசிய பாடசாலையின் கடந்த வார ஆர்ப்பாட்டம் நல்லதோர் உதாரணமாகும். இதன் அனுபவங்கள் எதிர்காலத்திலேனும் நிர்வாகமும் அதிகாரமும் ஆதிக்கம் செலுத்தாத வகையிலான இதயசுத்தியுடனான நிலைப்பாட்டினை கல்வித் துறையில் கொண்டுவர வேண்டும்.